போர்ச்சுகல் அணியின் வெளியேற்றம் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா?

ronaldo

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கிறிஸ் பேவன்
    • பதவி, பிபிசி ஸ்போர்ட்ஸ்

போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

போட்டியிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியவுடன் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதா?

போர்ச்சுக்கல் அணி காலிறுதி போட்டியில் இருந்து வெளியேறியவுடன் ரொனால்டோவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

தனது அணியின் பயிற்சியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவரது தகுதி குறைக்கப்பட்டு ஒரு மாற்று வீரராக அதாவது சப்ஸ்டியூட் ஆக ஆட்டத்தில் இறக்கப்பட்டார் ரொனால்டோ. 37 வயதாகும் ரொனால்டோவால் இன்னும் உலகக் கோப்பை வெற்றி என்ற மகுடத்தை சூட முடியவில்லை. கடந்தமாதம் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பில் இருந்து அவர் கோபமாக வெளியேறினார். எனவே அவரின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தாலும் திரும்பி சென்று ஆடுவதற்கு எந்த கிளப்பும் காத்திருக்கவில்லை. ஆனால் அவரது ரசிகர்கள் ரொனால்டோ அடுத்து எந்த கிளப்பில் விளையாடப் போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

போர்ச்சுகல் மக்கள் இன்னும் ரொனால்டோவை கொண்டாடிக் கொண்டு இருப்பதால் அவரின் எதிர்காலம் குறித்து அவர்கள் கவலை கொள்கின்றனர்.

ஒரு கோல், ஒரு கோபமான வெடிப்பு, பின்னர் நீக்கம்

உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு சிறிதுகாலம் முன்பு யுனெடெட் கிளப்பில் இருந்து ரோனால்டோ வெளியேறினார். ஆனால், கத்தாரில் அவரது தொடக்க ஆட்டங்கள் சிறப்பாகவே இருந்தன.

கானாவுக்கு எதிரான முதல் குழு போட்டியில் போர்ச்சுகல் அணியின் சர்ச்சைக்குரிய பெனால்டியில் அவர் வென்றார். ஃபிஃபா, அது முழுமையான நுண்ணறிவுத் திறனுடன் அடிக்கப்பட்ட கோல் என்று பாராட்டியது. ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பையும் ரொனால்டோ பெற்றார்.

ஆனால் அவரது பாதை ஒரே சீராக செல்லவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் எந்த கோலையும் அடிக்கவில்லை. அதற்குள் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. பின் தென் கொரிய அணியுடனான போட்டியில் மாற்று வீரராக பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

அதன் பின் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 16ஆவது இடத்தில் அவரின் பெயர் இருந்தது. 2008ஆம் ஆண்டு ரொனால்டோ முக்கிய போட்டிகளை விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்து அவ்வாறு அவர் அமர வைக்கப்பட்டது இதுவே முதல்முறை. அதேசமயம் அவருக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட கான்காலோ ரோமாஸ் ஹாட் ரிக் கோல் அடித்து அசத்தினார்.

அதேபோலதான் மொராக்கோ அணியுடனான போட்டியிலும் நடத்தப்பட்டார் ரொனால்டோ. ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் அதாவது 51ஆவது நிமிடத்தில் களமிறங்கினார் ஆனால் அப்போது ஏற்கனவே மொராக்கோ அணி ஒரு கோல் அடித்து முன்னனியில் இருந்தது.

கோல் ஏதும் அடிக்கவில்லை என்றாலும் சர்வதேசப் போட்டிகளில் 196வது முறையாகத் தோன்றி குவைத் கால்பந்து வீரர் பதார் அல் முடாவாவின் சாதனையை சமன் செய்தார். ஆனால் இதை மறக்கமுடியாத ஒரு தருணமாக மாற்ற தவறவிட்டார் ரொனால்டோ. சர்வதேச அளவில் ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளில் 118 கோல் அடித்து சாதனை புரிந்திருந்தாலும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க அவரால் முடியவில்லை.

ronaldo

பட மூலாதாரம், Getty Images

விருப்பம் கொண்டவர், ஆனால், இறுதியான முடிவாக இல்லை

நேற்றைய ஆட்டத்தில் வெறும் பத்து முறை மட்டுமே பந்தை தொட்டார் ரொனால்டோ. 91ஆவது நிமிடத்தில்தான் அவர் ஒரு ஷாட்டை அடிக்க முற்பட்டார். ஆனால், மொராக்கோ கீப்பர் போனோவை தாண்டி அது கோலாக மாறும் சக்தியை கொண்டிருக்கவில்லை. ரொனால்டோ களத்தில் சரியான பந்துக்காக எப்போதுமே தயாராக காத்திருந்தார், ஆனால் ஒருபோதும் அது நிகழவே இல்லை.

இறுதி விசில் ஒலிக்கப்பட்டதும் எதிரணியில் இருந்த சிலருடன் கைகுலுக்கி விட்டு, மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

ரொனோல்டோ தனது உணர்ச்சிகள் மேலோங்கும் முன்பு டனலுக்குள் நுழைந்து விட்டார். இந்த போட்டியை விட்டு வெளியேறும்போது இந்த உலகக் கோப்பை போட்டி எவ்வாறு சிறப்பாக அவரது நினைவில் இருக்கும் என்பதையும், அதே போல் பயிற்சியாளருடனான சலசலப்பையும் அவரது கண்கள் சிந்திய கண்ணீர் வெளிப்படுத்தியது.

அணியின் பயிற்சியாளர் சாண்டோஸ் இருவருக்கும் இடையேயான சர்ச்சையை வெளிப்படுத்திக் கொள்ளாமல், "கிறிஸ்டியானோ மீது வைக்கப்பட்ட விமர்சனம் அவரது விளையாட்டில் தாக்கம் செலுத்தியது என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் ஒரு ஒருங்கிணைந்த அணியாக இருக்கின்றோம்," என்றார்.

ronaldo

பட மூலாதாரம், Getty Images

ரசிகர்களின் ஆதரவு

அவர்கள் ஒற்றுமையாக இருக்கலாம், எனினும், தங்களது அணி சிறந்த அணியா இல்லையா என்பது குறித்து நிறைய விவாதங்களுக்குப் பிறகு கோப்பை கனவை தவறவிட்டு நாடு திரும்புகிறது போச்சுகல் அணி.

முக்கிய இறுதிப் போட்டிகளில் எந்த ஒரு அணிக்கும் ஆச்சரியமான தோல்விகளைத் தொடர்ந்து புதிய சகாப்தங்கள் மற்றும் புதிய தொடக்கங்கள் வரும். ஆனால், சாண்டோஸ், அணியின் பயிற்சியாளாரக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, அவர்கள் இப்போது ரொனால்டோவை நிராகரிக்க வாய்ப்பில்லை.

யூரோ 2016 போட்டியில் வென்று, முதன்முறையாக போர்ச்சுகல் சர்வதேச போட்டி ஒன்றில் வெற்றிப் பெற்றுள்ளது என்ற சிறப்பை தேடி தந்தவர் ரொனால்டோ. இப்போதும் இதை போர்ச்சுகல் மக்கள் மறக்கவில்லை.

சனிக்கிழமையன்று அல் துமாமா ஸ்டேடியத்திற்கு வெளியே 'ரொனால்டோ 7' சட்டைகளை அணிந்திருந்த போர்ச்சுகல் ரசிகர்களின் எண்ணிக்கையே அதற்கு சான்று.

அடுத்த உலக் கோப்பை போட்டி தொடங்கும்போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகியிருக்கும். ஆனால், அவர் விரும்பினால், நிச்சயமாக யூரோ 2026 ஆம் ஆண்டு கோப்பை போட்டிக்கு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. அதற்குள் அவர் யாருக்காக விளையாடப்போகிறார் என்பது முற்றிலும் வேறு விஷயமாக இருக்கிறது. ஜனவரி 1 ஆம் தேதி அணிகளுக்கு இடையே வீரர்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு தொடங்கும்போது ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய பல கிளப்புகள் ஆர்வமாக உள்ளன, சவுதி அரேபிய தரப்பில் அல்-நாஸ்ர் அவரை ஒரு பெரிய தொகையுடன் ஒப்பந்தம் செய்வதாக கடந்த வாரம் கூறியிருக்கிறார். தற்போதைய இந்தப் போட்டியில் மத்திய கிழக்கு மைதானம் அவருக்கு மகிழ்ச்சியை வழங்காமல் இருந்திருக்கலாம் - ஆனால் அடுத்ததாக அவர் களம் இறங்கும் இடமாகவும் இருக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: