தலையைத் திருப்பாமல் மெஸ்ஸி அடித்த 'அற்புத பாஸ்’

பட மூலாதாரம், Getty Images
அர்ஜென்டினா ரசிகர்கள் அரையிறுதிக்குச் சென்றுவிட்டதாக இரண்டு முறை கொண்டாடி இருப்பார்கள். 73-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி பெனால்ட்டி மூலம் இரண்டாவது கோல் அடித்தபோது தங்களது அணி அரையிறுதிக்குச் சென்றுவிட்டது என நம்பியிருப்பார்கள்.
ஆனால் கடைசி நிமிடத்தில் அது இல்லை என்றாகிவிட்டது. அதன் பிறகு வெற்றிக்கான பெனால்ட்டியை மார்ட்டினஸ் வெற்றிகரமாக அடித்தபோது பெரும் நிம்மதியுடன் இரண்டாவது முறையாக அரையிறுதிக்குச் சென்றதை அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள்.
நெதர்லாந்துக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா இரு கோல்களை அடித்து சம நிலையில் இருந்ததால் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் நெதர்லாந்தின் முதல் இரண்டு பெனால்ட்டிகளைத் தடுத்து அர்ஜென்டினாவுக்கு உறுதியான முன்னிலையைத் தந்தார்.

பட மூலாதாரம், Getty Images
மெஸ்ஸியால் இந்தப் போட்டியில் ஆட்ட நேரத்தில் கள கோல் எதையும் அடிக்க முடியவில்லை. பெனால்ட்டியில் ஒரு கோலும், பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஒன்றும்தான் அவரால் அடிக்க முடிந்தது. ஆனாலும் அவர்தான் அர்ஜென்டினா வீரர்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற வீரர்.
அதற்கும் காரணம் உண்டு. போட்டியின் 35-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அற்புதமாக பந்தைக் கடத்தி மொலினா கோல் அடிக்க உதவினார். பந்தை முன்புறமாக கோலை நோக்கி கடத்திக் கொண்டு வந்து பின்னர் முகத்தைத் திருப்பாமலேயே வலது புறமாக சற்றுத் தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்த மொலினாவை நோக்கி பந்தைத் தட்டி விட்டார்.
அது நெதர்லாந்து வீரர்கள் பலரைக் கடந்து சரியாக மொலினாவைச் சென்றடைந்தது. இதனை அற்புதமான பாஸ் என்று சமூக வலைத்தளங்களில் கால்பந்து ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
அர்ஜென்டினா சறுக்கியது எங்கே?
தொடக்கத்தில் இருந்தே அர்ஜென்டினாவைவிட நெதர்லாந்தே அதிகமாகப் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 83-ஆவது நிமிடம் வரை மெஸ்ஸி நினைத்தது போலவே போட்டியின் போக்கும் இருந்தது. 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தது. ஆட்டம் முடிவதற்குச் சில நிமிடங்கள்தான் இருக்கின்றன என்பதால் போட்டியில் வெல்வது உறுதி என்றே அர்ஜென்டினா வீரர்களும் ரசிகர்களும் எண்ணியிருப்பார்கள்.
ஆனால் 83-ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெகரோஸ்ட் தலையால் முட்டி முதலாவது கோலை அடித்தார். 90 நிமிடங்கள் முடிந்த பிறகு இழப்பீடாக 10 நிமிடங்கள் தரப்பட்டன. அதன் கடைசி நொடிகளில் ப்ரீகிக் வாய்ப்பு மூலம் மற்றொரு கோலை அவர் அடித்ததால் ஆட்டம் சமநிலைக்குச் சென்றது.
ப்ரீகிக்கை அடிக்கும்போது பந்து கோலுக்குள் செல்லாமல் தடுப்பதற்காக அர்ஜென்டினா வீரர்கள் அமைத்திருந்த அரணை வித்தியாசமான முறையில் ஏமாற்றி கோலாக்கினர் நெதர்லாந்து வீரர்கள். இதன் பிறகு வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கடைசியாக பெனால்ட்டி ஷூட் அவுட் மூலமாக வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் நெதர்லாந்தின் முதல் இரண்டு பெனால்ட்டிகளையும் அர்ஜென்டினாவின் கோல் கீப்பர் எமி மார்ட்டினஸ் அபாரமான முறையில் தடுத்துவிட்டார். ஆனால் அடுத்த மூன்று பெனால்ட்டிகளையும் நெதர்லாந்து வீரர்கள் கோலுக்குள் அடித்தனர்.
அதே நேரத்தில் அர்ஜென்டினாவுக்கான 4-ஆவது பெனால்ட்டியை என்ஸோ பெர்னான்டஸ் தவறவிட்டார். ஆனால் வெற்றிக்கான கடைசி பெனால்ட்டியை மார்ட்டினஸ் கோலாக்கியதால் 4-3 என்ற பெனால்ட்டி ஷூட் அவுட் புள்ளிகளின் அடிப்படையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.
எளிதாகப் பெற இருந்த வெற்றி கைநழுவிப் போய் மீண்டும் கிடைத்தபோது அர்ஜென்டினா ரசிகர்கள் கூடுதலாகவே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டியில் குரோஷியாவை எதிர்த்து ஆடும் வாய்ப்பு அர்ஜென்டினாவுக்குக் கிடைத்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
மெஸ்ஸியின் சாதனை
நெதர்லாந்துடனான போட்டியில் பெனால்ட்டி முறையில் ஒரு கோல் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பை போட்டிகளில் 10 கோல்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மெஸ்ஸி.
அர்ஜென்டினாவுக்காக அதிக உலகக் கோப்பை கோல்களை அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவின் சாதனையை அவர் எட்டிப் பிடித்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக அர்ஜென்டினாவுக்காக அவர் ஆடிய 169 போட்டிகளில் 94 கோல்களை அடித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












