12 ஆண்டுகள் காத்திருந்து ‘வில்லன்’ சுவாரெஸை பழிவாங்கியதா கானா?

சுவாரெஸ்

பட மூலாதாரம், Getty Images

அழுகை, ஆனந்தம், கோபம், வெறுப்பு என அனைத்தையும் காண முடிந்தது கானாவுக்கும் உருகுவேக்கும் இடையேயான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில்.

போட்டியில் வென்றபோதும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனதால் அந்த அணியின் நட்சத்திர வீரரும் உலகின் மிகச் சிறந்த முன்கள வீரர்களுள் ஒருவருமான லூயிஸ் சுவாரெஸ் கண்ணீர் வடித்து அழுதார். 

உருகுவே வீரர்கள் பலர் போட்டி முடிந்ததும் கள நடுவரைச் சூழ்ந்துகொண்டு ஆவேசமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஒருவர் காணொளி நடுவருக்கான திரையை தள்ளிவிட்டுச் சென்றார்.

இந்தப் போட்டிக்கு முன்பே ‘பழிவாங்குவது’ என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியின்போதே இரு நாடுகளுக்குமான பகை தொடங்கிவிட்டது.

போட்டியில் தோற்ற கானாவும், வென்ற உருகுவேயும் கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறிவிட்டன. புள்ளிகள் அடிப்படையில் போர்ச்சுகல் அணியும் கோல் எண்ணிக்கை அடிப்படையில் தென்கொரியாவும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

சுவாரெஸ்

பட மூலாதாரம், Getty Images

உருகுவே - கானா இடையே என்ன பகை?

2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியின்போது காலிறுதிப் போட்டியில் கானாவும் உருகுவேயும் மோதின. அந்த அணியில் சுவாரெஸ் இடம்பெற்றிருந்தார்.

இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்த நிலையில் கடைசி நிமிடங்களில் கானா அணிக்கு இரண்டாவது கோல் அடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. டொமினிக் அடியியா தலையால் முட்டி உருகுவேயின் கோல்வலையை நோக்கி பந்தை அடித்தபோது, சுவாரெஸ் அதை கையால் தடுத்துவிட்டார். 

சுவாரெஸ் கையால் பந்தைத் தட்டியதால் அவருக்கு சிவப்பை அட்டை வழங்கப்பட்டதுடன், கானாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் பெனால்ட்டி வாய்ப்பை கானாவால் கோலாக்க முடியவில்லை.. பெஞ்ச்சில் இருந்த சுவாரெஸ் அதைக் கொண்டாடினார். 

ஆட்ட நேர இறுதிவரை இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், கடைசியாக வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பெனால்ட்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் உருகுவே அணி 4-2 என்ற கணக்கில் வென்றது. 

சுவாரெஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2010-ஆம் ஆண்டு கானாவுக்கு எதிரான போட்டியில் கோலை நோக்கிச் சென்ற பந்தை சுவாரெஸ் கையால் தடுத்தார்

போட்டிக்குப் பிறகு பேசிய சுவாரெஸ், ‘தன்னுடையது கடவுளின் கை’ என்று மாரடோனாவின் 1986-ஆம் ஆண்டு கோலை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்தப் போட்டி கானாவுக்கும் உருகுவேக்கும் இடையே பெரும் பகையை உருவாக்கியது. போட்டியின் முடிவில் பேசிய கானா பயிற்சியாளர் சுவாரெஸை ‘வில்லன்’ எனக் குறிப்பிட்டார். உருகுவே ஏமாற்றிவிட்டதாகவும், அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

உருகுவே தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. தாங்கள் விதிப்படியே நடந்ததாக அவர்கள் கூறினார்கள்

ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஓர் அணி அரையிறுதிக்குச் செல்லும் முதல் வாய்ப்பை சுவாரெஸ் தட்டிப் பறித்துவிட்டதாக கானா கால்பந்து ரசிகர்கள் கருதினார்கள். அது தேசியப் பிரச்னை போலப் பேசப்பட்டது. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற குரல்கள் கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து எழுந்துவந்தன. ஆனால் சுவாரெஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 

12 ஆண்டுகளுக்குப் பிறகு கானா அணி உருகுவே அணியை உலகக் கோப்பை போட்டியில் சந்தித்ததால் பகையைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக இந்தப் போட்டியை பலர் சித்தரித்தார்கள்.

கானா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2010-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஓர் அணி அரையிறுதிக்குச் செல்லும் முதல் வாய்ப்பை சுவாரெஸ் தட்டிப் பறித்துவிட்டதாக கானா கால்பந்து ரசிகர்கள் கருதினார்கள்.

கானாவுக்கு ‘பழிவாங்கக்’ கிடைத்த வாய்ப்பு

ஏற்கெனவே தென்கொரிய அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றிருந்த கானா அணி, உருகுவேயுடனான போட்டியை அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பாகப் பார்த்தது. கூடுதலாக 2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்க வேண்டும் என்ற வேட்கையும் இருந்திருக்கலாம்.

2010-ஆண்டு ஆடிய உருகுவே அணியில் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கும் ஒரே வீரராக சுவாரெஸ் இருந்தார். அவரை கானா அணிக்கு எதிராகக் களமிறக்க மாட்டார்கள் என்ற கருத்து முதலில் இருந்தது. அப்படி நடக்கவில்லை. அவர் களமிறங்கியதுமே சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானார்.

ஆட்டத்தின் 16-ஆவது நிமிடத்தில் கானாவுக்கு ஓர் அருமையான வாய்ப்புக் கிடைத்தது. கானா வீரர் குடுஸ் பந்தை பெனால்ட்டி பகுதிக்குள் கொண்டு சென்றபோது உருகுவே கோல்கீப்பர் செர்ஜியோ ரோஷே அவர் மீது மோதினார். இருவருமே நடுவரிடம் முறையிட்டார்கள். முதலில் அது பெனால்ட்டி இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும். காணொளி நடுவரின் உதவியுடன் கானாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

12 ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட பெனால்ட்டி வாய்ப்பு மீண்டும் கிடைத்தது போன்ற உணர்வுடன்தான் அந்த நேரத்தில் கானா ரசிகர்கள் இருந்திருப்பார்கள். ஆனால் இந்த முறையும் கானாவால் கோல் அடிக்க முடியவில்லை. குடுஸ் அடித்த பந்தை உருகுவே கோல் கீப்பர் பாய்ந்து சென்று தடுத்துவிட்டார்.

சுவாரெஸ்

பட மூலாதாரம், Getty Images

அந்தக் கோல் அடிக்கப்பட்டிருந்தால் போட்டியின் போக்கு மாறியிருக்கக்கூடும். புள்ளி பட்டியலின் வரிசையும் மாறியிருக்கும்.

பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்ட கானா அணிக்கு 26 ஆவது நிமிடத்திலும் 32-ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. உருகுவேயின் அர்ராஸ்கேட்டா அடுத்தடுத்து இரு கோல்களை அடித்தார். இவ்விரு கோல்களுக்கும் சுவாரெஸ் அற்புதமாக உதவி செய்தார். இதனால் போட்டியில் உருகுவேயின் ஆதிக்கம் அதிகமானது. அடுத்தடுத்து கோல் அடிக்கும் முயற்சிகளில் அந்த அணி ஈடுபட்டது.

உருகுவே

பட மூலாதாரம், Getty Images

உருகுவே வென்றாலும் வெளியேறியது ஏன்?

உருகுவே - கானா ஆட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் வலிமையான போர்ச்சுகல் அணியை தென்கொரிய அணி சந்தித்துக் கொண்டிருந்தது. இந்தப் போட்டியில் தென் கொரிய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. 

இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை பெற்றிருந்த நிலையில், கடைசி சில நிமிடங்களில் தென்கொரிய அணி மற்றொரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்தச் செய்தி நேரலையாக உருகுவே-கானா ஆட்டம் நடந்து கொண்டிருந்த மைதானத்தில் காட்டப்பட்டது.

அதே நிலை நீடித்தால் புள்ளிகள் அடிப்படையிலும், கோல் வேறுபாட்டிலும் இரு அணிகளும் சமநிலையில் இருந்தாலும் மொத்தம் அடித்த கோல்களின் அடிப்படையில் தென்கொரியா வென்றுவிடும் நிலை இருந்தது.

அதனால் கடைசி நிமிடங்களில் உருகுவே அணி மிகத் தீவிரமாக ஆடியது. ஆனால் கடைசி வரை அந்த அணியால் கூடுதலாகக் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. அதனால் வெற்றி பெற்றாலும்கூட அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.

சுவாரெஸ்

பட மூலாதாரம், Getty Images

அழுகையும் ஆனந்தமும்

கானா - உருகுவே போட்டி முடிவில் இரு அணிகளுமே போட்டியில் இருந்து வெளியேறிவிட்டன. உருகுவே வீரர்கள் நடுவருடன் ஆவேசமாக வாக்குவாதம் செய்தனர். 

அதே நேரத்தில் கானா ரசிகர்கள் சிலர் கவலையுடனும் அதே நேரத்தில் உருகுவேயை போட்டியில் இருந்து வெளியேற்றிவிட்ட மகிழ்ச்சியிலும் இருப்பதைக் காண முடிந்தது. சமூக வலைத்தளங்களிலும் இதுபோன்ற கருத்துகள் காணப்பட்டன.

போட்டியின் கடைசி நேரத்தில் வெற்றி பெறுவதற்குத் தேவையான கோல்களை அடிக்க வேண்டும் என்ற முனைப்பு இல்லாமல் காலதாமதம் செய்ததாக கானா அணி மீது விமர்சனமும் எழுந்தது. 

சுவாரெஸ்

பட மூலாதாரம், Getty Images

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் போட்டியில் கடைசி நிமிடங்களில் பெஞ்சில் அமர்ந்திருந்த சுவாரெஸ் முகத்தை மூடி அழுது கொண்டிருந்த காட்சிகளே அதிகமாகக் கவனத்தைப் பெற்றன. 

உலகின் மிகத் திறமையான முன்கள வீரர்களுள் ஒருவரான சுவாரெஸுக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எதிரணி வீரர்களைக் கடித்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் அவர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: