ஸ்பெயினில் பிறந்த தெருவோர வியாபாரியின் மகன் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது ஏன்?

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

மொராக்கோ வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி தனது பெனால்டியை நேராக கோல் போஸ்டுக்குள் அனுப்பி இந்த வெற்றியை உறுதி செய்தபோது, ஓர் அற்புதமான வரலாற்றை கால்பந்து உலகில் உருவாக்கினார்.

அதன்மூலம், ஸ்பெயினுக்கு எதிரான உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் ஸ்பெயினை வெளியேற்றி, மொராக்கோ முதல்முறையாகக் காலிறுதிக்குள் நுழைந்தது.

தனது நாட்டுக்காக ஒரு காவிய வெற்றியை வழங்கிய பிறகு, அவர் தனது தாயுடன் பகிர்ந்துகொண்ட அன்பு நிறைந்த தருணம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மொராக்கோவை வெற்றியின் பக்கம் கைப்பிடித்து அழைத்துச் சென்ற பிறகு, 24 வயதான அந்த வீரர் ரசிகக் கூட்டத்திற்கு நடுவே தனது தாயைத் தேடினார். தாயைக் கண்டுபிடித்து, அவரிடம் ஓடி வந்து, பார்ப்பவர் இதயத்தைத் தொடும் வகையில் வெற்றி அரவணைப்பைப் பகிர்ந்துகொண்டார்.

ஸ்பெயின் உடனான ஆட்டத்தில், ஹக்கிமி அடித்த அந்த வெற்றிகரமான பெனால்டி மூலம், தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார்.

இதில் ஸ்பெயின் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் என்னவெனில், ஹக்கிமி ஸ்பெயினின் மேட்ரிட்டில் பிறந்து வளர்ந்தவர். ஃபிரான்ஸ் கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனில் விளையாடியவர்.

ஸ்பெயினில் பிறந்த மொராக்கோ வீரர்

“என்னுடைய அம்மா வீடுகளைச் சுத்தம் செய்தார். அப்பா தெருவோரத்தில் வியாபாரியாக இருந்தார். நாங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய ஒரு சராசரி குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.

அவர்கள் எனக்காகத் தங்களைத் தியாகம் செய்தார்கள். இன்று அவர்களுக்காக நான் தினசரி போராடுகிறேன்,” என்று ஒருமுறை ஹக்கிமி ஸ்பானிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மொராக்கோ வீரர் அச்ரஃப் ஹக்கிமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்பெயினை வீழ்த்திய ஆட்டத்தின் இறுதியில் மொராக்கோ வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி கூட்டத்தில் தனது தாயைத் தேடிச் சென்று அரவணைத்தார்.

ஹக்கிமி ஸ்பெயினில் பிறந்து, வளர்ந்திருந்தாலும் அவருடைய தாய்நாடான மொராக்கோவை பிரதிநிதித்துவப்படுத்த முடிவு செய்தார். அவர் 2018 முதல் அட்லஸ் லயன்ஸ் என்றழைக்கப்படும் மொராக்கோ அணியில் முக்கியப் பங்கு வகித்து விளையாடி, ஸ்பெயினை வீழ்த்த உதவினார்.

அவர் ரியல் மேட்ரிட் அணியில் விளையாடினார். 2017ஆம் ஆண்டில் அவர்களுக்காக லா லிகா போட்டிகளில் அறிமுகமானார்.

அவரது வளர்ச்சி ஸ்பெயினில் உள்ள இளைஞர்களுக்கான தேசிய அணிகளின் கண்களைக் கவர்ந்தன. அவரைத் தம் பக்கம் ஈர்க்க அவர்கள் முயன்றனர். ஆனால், ஹக்கிமியின் விசுவாசம் மொராக்கோவுடன் இருந்தது.

குறிப்பாக எதுவும் இதற்குக் காரணமில்லை. என் வீட்டில் இருந்தது அரபுக் கலாசாரம், மொராக்கோ. ஆகையால் நான் இங்கே இருக்க விரும்புகிறேன்,” என்று ஹக்கிமி 2022 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டிகள் தொடங்குவதற்குச் சில நாட்கள் முன்பு மார்சா என்ற ஸ்பானிய தேசிய ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ராயல் மொராக்கோ சம்மேளனத்தின் கண்களில் பட்ட ஹக்கிமி

ஹக்கிமி இந்த உலகக்கோப்பையில் மொராக்கோவின் வெற்றிக்காக கோல் அடித்த பெனால்டி ஷாட், மிக நெடும் பயணப் பின்புலத்தைக் கொண்டது. அவர் சிறு வயதிலிருந்தே நட்சத்திர வீரராகக் கவனிக்கப்பட்டிருக்கிறார். ரியல் மாட்ரிட்டில் இருந்து அவர் தனது ஆட்டத்தைத் தொடங்கினார்.

தனது 8 வயதில் ஐரோப்பாவின் வெற்றிகரமான, பிரபலமான கால்பந்து கிளப்பில் சேர்ந்தாலும், அவருடைய பாதையில் ஒவ்வொரு வெற்றியையும் போராடிப் பெற வேண்டியிருந்தது.

ஸ்பெயினில் வாழும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மொராக்கோ புலம்பெயர்ந்தோர்களில் ஒருவர் தான் ஹக்கிமி. அவர் மாட்ரிட்டின் தொழில்துறை புறநகர்ப் பகுதியான கெட்டாஃபில் வளர்ந்தார்.

அவர் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பதின்பருவ வீரராகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அது அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, ராயல் மொராக்கோ கால்பந்து சம்மேளனத்தின் கண்ணிலும் அவர் பட்டார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பா முழுவதும் மொராக்கோ புலம்பெயர்ந்தோர் மிகப் பெரிய அளவில் இருப்பதால், ஸ்பெயின், பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அவர்களில் திறமையானவர்கள் பலரும் இருக்கின்றனர்.

ஆகையால், அங்கெல்லாம் ராயல் மொராக்கோ சம்மேளனம் சென்று திறமைகளைத் தேடி, அத்தகைய திறமை வாய்ந்தவர்களைத் தங்களுக்காக ஆட வைக்க முயலும்.

அப்படி ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடிக் கொண்டிருந்தபோது அவர்களுடைய கண்ணில் பட்ட ஹக்கிமி, ராயல் மொராக்கோ சம்மேளனத்துடனும் ஆடத் தொடங்கினார்.

ஹக்கிமி பல்வேறு இளம் வீரர்கள் பிரிவு போட்டிகளில் மொராக்கோவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அக்டோபர் 2016இல் அவர்களுக்காக சீனியர் பிரிவில் அறிமுகமானார்.

தனது 24வது வயதில், அவர் மொராக்கோ சீனியர் அணிக்காக 58 முறை ஆடியுள்ளார். அதில் 8 கோல்களை அடித்துள்ளார், 8 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

2021ஆம் ஆண்டு ஆப்பிரிக்கன் கப் ஆஃப் நேஷன்ஸ் போட்டியில், மொராக்கோ கோல் அடிக்கப் போராடியபோது, டிஃபண்டராக ஆடிய ஹக்கிமி முன்னேறி ஈடுகொடுத்து, கடுமையாக ஓடி, இரண்டு முக்கியமான கோல்களை அடித்தார்.

அணிக்குத் தேவைப்படும்போது முன்னேறி ஆடும் அவருடைய திறமை மீது மொராக்கோ நம்பிக்கை வைப்பது வழக்கமாகத் தொடங்கியது. அதனால் தான், ஸ்பெயின் உடனான முக்கியமான பெனால்டியை அவர் எடுத்துக் கொண்டதைக் கண்டு யாரும் ஆச்சர்யப்படவில்லை.

அந்த பெனால்டியை போலவே, அவர் தனது ஆட்டத்தின் மூலம் மொராக்கோவை உலகக் கோப்பை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வார் என்று மொராக்கோ ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மொராக்கோவால் உலகக் கோப்பையை வெல்ல முடியுமா?

இந்த உலகக் கோப்பை பல எதிர்பார்க்காத வரலாறுகளையும் திருப்புமுனைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆகையால், பொறுத்திருந்து பார்ப்போம்.

காணொளிக் குறிப்பு, போர்ச்சுகல் அணிக்குத் தேவையில்லாமல் போன ரொனால்டோ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: