பிரிட்டனின் அடுத்த பிரதமராகப் போகும் கியர் ஸ்டாமர் யார்?

பட மூலாதாரம், Getty Images
கியர் ஸ்டாமர் பற்றிய முக்கியத் தகவல்கள்
- வயது : 61
- கல்வி : ரெய்கேட் கிராமர் பள்ளி, லீட்ஸ் பல்கலைகழகம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம்.
- குடும்பம் : பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் பணியிட சிக்கல்களுக்கான மனநல ஆலோசகரான விக்டோரியா அலெக்ஸாண்டரை திருமணம் செய்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
- நாடாளுமன்ற தொகுதி : 2015ம் ஆண்டு முதல் ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ்
கியர் ஸ்டாமர் யார்?
தொழிலாளர் கட்சியின் தலைவரான கியர் ஸ்டாமர் அடிக்கடி தன்னை, “உழைப்பாளி வர்க்கப் பின்னணி" கொண்டவர் என்று கூறிக் கொள்பவர். அவர் வளர்ந்து வந்த ஆக்ஸ்டட், சர்ரே என்ற சிறு நகரத்தில் உள்ள “pebble-dash semi” எனப்படும் சாதாரண வீடுகளை அடிக்கடி குறிப்பிடுவார்.
அவரது தந்தை தொழிற்சாலைகளுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். அவரது தாய் செவிலியராக பணிபுரிந்தார். அவரது தாய் ‘ஸ்டில்ஸ்’ என்ற உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியே உடலை தாக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவரால் பேசவும் நடக்காமலும் போய்விட்டது.
கியர் ஸ்டாமர் பயின்று வந்த ரெய்கேட் கிராமர் பள்ளி, அவர் அங்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் தனியார் நிர்வாகத்துக்கு மாறிவிட்டது. அவருக்கு 16 வயது ஆகும் வரை உள்ளூர் நிர்வாகம்தான் அவரது கல்விக் கட்டணத்தை செலுத்தியது.
பள்ளிப்படிப்பு முடித்து பல்கலைக் கழத்துக்கு செல்லும் தனது குடும்பத்தின் முதல் நபரானார் கியர் ஸ்டாமர். லீட்ஸ் பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார், பின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் மேற்படிப்பு முடித்தார்.
1987-இல் அவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றார் (வழக்கறிஞர்). மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணராகி வந்தார். கரீபியன், ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத் தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.
1990களின் இரண்டாவது பாதியில், 'மெக் லைபல்' செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக கட்டணமின்றி வாதாடினார். 'மெக் லைபல்' செயற்பாட்டாளர்கள் மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் .
2008-ல் பிரிட்டன் மற்றும் வேல்ஸ்-ல் அரசு வழக்கறிஞர்களுக்கான இயக்குநர் என்ற பொறுப்பை பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
அவர் அதிகாரத்தை நெருங்கியது எப்படி?
அவர் 2015-இல் வடக்கு லண்டனில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு நெருக்கமாக இருந்த கியர் ஸ்டாமர், அவரது நிழல் அமைச்சரவையில் பிரெக்சிட் அமைச்சராக இருந்தார். இரண்டாவது முறையாக பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர்களின் கட்சி படுதோல்வி அடைந்தது. அதையடுத்து, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றார்.
அப்போது உரையாற்றிய அவர், தொழிலாளர் கட்சியை, “நம்பிக்கையும் ஊக்கமும் கொண்ட புதிய சகாப்தத்துக்கு இட்டுச் செல்வேன்” என்று உறுதி அளித்தார்.

கியர் ஸ்டாமர் கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் என்ன?
கியர் ஸ்டாமர் வழங்கியுள்ள முக்கிய வாக்குறுதிகள்:
சுகாதாரம் : ஒவ்வொரு வாரமும் 40 ஆயிரம் கூடுதல் பார்வை நேரங்களை (Appointments) அளித்து தேசிய சுகாதார சேவையின் காத்திருப்பு நேரத்தை குறைப்பது (பிரிட்டனில் மருத்துவரை காண்பதற்கு சில வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்).
குடியேற்றம்: எல்லைப் பாதுகாப்புக் கவுன்சில் அமைத்து, சிறிய படகுகள் மூலம் எல்லை தாண்டி மக்களை கடத்தும் குழுக்களை தடுப்பது.
வீட்டு வசதி : திட்டமிடல் சட்டங்களை திருத்தி, புதிதாக 15 லட்சம் வீடுகளை கட்டுவது. புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு, சில முன்னுரிமைகள் வழங்குவது.
கல்வி : தனியார் பள்ளிகளுக்கு வரி செலுத்தாக் காலத்தை ரத்து செய்து விட்டு, 6500 ஆசிரியர்களை புதிதாக பணியமர்த்துவது.
தனது கொள்கை மாற்றத்தின் ஒரு பகுதியாக, பல்கலைகழக கட்டணத்தை ரத்து செய்வது, எரிசக்தி மற்றும் தண்ணீர் நிறுவனங்களை தேசியமாக்குவது என்ற வாக்குறுதிகளை கைவிட்டார் .
அவரது கட்சியில் இடதுசாரி கருத்துள்ளவர்கள், அவர் துரோகம் செய்து விட்டதாக விமர்சித்தனர்.
கடைசியாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சிக்கு 205 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












