உத்தரபிரதேசத்தில் பட்டியல் பிரிவு ஆசிரியர், மனைவி, 2 குழந்தைகள் சுட்டுக் கொலை - என்ன நடந்தது?

உத்தரபிரதேசம், தலித், கொலை

பட மூலாதாரம், X/AMETHI POLICE

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட சந்தன் வர்மாவுடன் அமேதி போலீசார்
    • எழுதியவர், சையத் மோஜிஸ் இமாம்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அக்டோபர் 3-ஆம் தேதி, உத்தரபிரதேசத்தின் அமேதி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் உதவி ஆசிரியராக இருந்த சுனில் பார்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக அமேதி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, டெல்லிக்கு அருகில் உள்ள கவுதம் புத்த நகர் மாவட்டத்தின் ஜெவர் டோல் பிளாசாவில் சந்தன் வர்மா என்ற நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை காதல் விவகாரம் தொடர்பானது என்று தெரியவந்திருப்பதாக அமேதி போலீசார் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரபிரதேச மாநில அரசு நான்கு போலீஸ் குழுக்களை நியமித்தது. இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மர்ம நபர்கள், சுனில் மீது மூன்று குண்டுகளையும், அவரது மனைவி பூனம் மீது இரண்டு குண்டுகளையும் சுட்டுள்ளனர். அவர்களது மகள்களின் உடலில் இருந்து மருத்துவர்கள் தலா ஒரு தோட்டாவை அகற்றியுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, 4 பேரின் உடல்களும் பலத்த பாதுகாப்புடன் ரேபரேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தடயவியல் குழு முதலில் சம்பவ இடத்தை ஆய்வு செய்து சில முக்கிய ஆதாரங்களை சேகரித்தது என்று அயோத்தி ஐ.ஜி. பிரவீன் குமார் கூறினார். “ஆனால், அதை இப்போது பகிரங்கப்படுத்துவது சரியாக இருக்காது. நாங்கள் நான்கு குழுக்கள் ஈடுபட்டுள்ளோம், விரைவில் முழு தகவல்கள் வெளிவரும்," என்றார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உத்தரபிரதேசம், தலித், கொலை

பட மூலாதாரம், Deepak Singh

படக்குறிப்பு, சுனில் பார்தி, கொல்லப்பட்டவர்

என்ன நடந்தது?

இறந்த சுனில் பார்தியின் தந்தை ராம் கோபால், அமேதியின் பன்ஹவுனாவில் உள்ள கூட்டுப் பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

சுனில் பார்தி, அஹோர்வா பவானி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

போலீசாரின் கூற்றுப்படி, ஆயுதம் ஏந்திய சிலர் அக்டோபர் 3-ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்று, சுனில் குமாரையும் அவரது குடும்பத்தினரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில், சுனில் குமார், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். அவரது மகள்களுக்கு ஐந்து மற்றும் ஒன்றரை வயது என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.

சுனில் குமார் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் வீட்டின் குழாய் அருகே கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறிது தூரத்தில் அவரது இரண்டு மகள்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

தடயவியல் நிபுணர்கள் அங்கே ஆதாரங்களை ஆய்வு செய்தனர். சம்பவ இடத்தை அமேதி எஸ்.பி அனூப் சிங் நேரில் பார்வையிட்டார்.

உத்தரபிரதேசம், தலித், கொலை

பட மூலாதாரம், Deepak Singh

படக்குறிப்பு, வீட்டுக்குள் யாரும் வருவதையோ, செல்வதையோ யாரும் பார்க்கவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்

உள்ளூர் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

சம்பவத்தன்று நவராத்திரி பூஜை நடந்து கொண்டிருந்த போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். ஆனால், முதலில் அது பட்டாசு சத்தம் என்றே நினைத்ததாகச் சொல்கிறார்கள்.

"அந்த வீட்டில் இருந்து சத்தம் வந்ததை அருகில் இருந்த கடைக்காரர்கள் உணர்ந்து, அவரது வீட்டுக்குள் ஓடினர்" என்று அழகுசாதனப் பொருள் கடை நடத்தி வரும் ராம்பால் ஜெய்ஸ்வால் கூறினார். வீட்டின் காம்பவுண்டிற்குள் 4 பேரின் உடல்களும் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டன.

வீட்டுக்குள் யாரும் வருவதையோ, செல்வதையோ யாரும் பார்க்கவில்லை என்றும், அதற்கு முன் வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.

இந்தக் கொலை வழக்கில் சந்தன் வர்மா என்பவர் மீது சுனில் பார்தியின் தந்தை புகார் அளித்திருந்தார். அதன்பிறகு தலைமறைவாக உள்ளதாகக் கூறப்பட்ட சந்தன் வர்மாவை போலீசார் தேடி வந்தனர்.

சுனில் பார்தியின் மனைவி பூனம் பார்தி, ஆகஸ்ட் 18-ஆம் தேதி ரேபரேலி காவல் நிலையத்தில் சந்தன் வர்மா மீது எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் ஒரு புகாரும், பாலியல் வன்கொடுமை புகாரும் கொடுத்திருந்ததாக அமேதி காவல் கண்காணிப்பாளர் அனூப் சிங் கூறினார். "ரேபரேலி போலீசார் அவரது புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட சந்தன் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்" என்று அவர் கூறினார்.

இந்த வழக்கின் விசாரணையில், சந்தன் வர்மாவுக்கும், பூனத்துக்கும் இடையே நடந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சில புகைப்படங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு வேறு யாருடனாவது தகராறு ஏற்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் போலீசார் முதலில் விசாரணை நடத்தினர்.

சந்தன் வர்மா கைது செய்யப்பட்ட பிறகு, இறந்த பூனத்தின் தாய் பி.டி.ஐ செய்தி முகமையிடம் பேசினார். சந்தன் வர்மாவைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று அவர் கோரினார். அவரது மகன் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் சந்தன் வர்மா மற்றும் அவரது குடும்பத்தினரின் கருத்தைப் பெற முடியவில்லை.

உத்தரபிரதேசம், தலித், கொலை

பட மூலாதாரம், Deepak Singh

படக்குறிப்பு, விசாரணை நடத்த உத்தரபிரதேச மாநில அரசு நான்கு போலீஸ் குழுக்களை நியமித்தது

அரசியலாக்கப்படும் சம்பவம்

அமேதியில் நடந்த இந்தச் சம்பவம், உத்தரபிரதேச மாநிலத்தில் அரசியலாக்கப்பட்டிருக்கிறது.

உத்தரபிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது 'எக்ஸ்' பக்கத்தில் இறந்தவர்களின் உடல்களின் வீடியோவைப் பகிர்ந்து, “யாராவது இருக்கிறீர்களா? எங்காவது இருக்கிறீர்களா? பாஜக நமக்குத் தேவையில்லை," என்று பதிவிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதியும் இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, இச்சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவரும், அமேதி முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, அமேதியின் தற்போதைய நாடளுமன்ற உறுப்பினர் கே.எல்.சர்மாவிடம் பேசி, சம்பவம் குறித்து தகவல் பெற்றார். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் ராகுல் காந்தி பேச கே.எல்.சர்மாவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, உத்தரபிரதேச காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "யோகி அரசு இரவும் பகலும் கடுமையாக உழைத்து நிறுவிய இந்த சட்டமில்லாத காட்டில் இதுபோன்ற சம்பவங்கள் எப்போது நிறுத்தப்படும் என்பது கடவுளுக்கே தெரியும்," என்று பதிவிட்டுள்ளது.

நாகினா தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினரும், ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர், அமேதி மாவட்டத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்று குவித்த சம்பவம் தான் உத்தரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கின் உண்மையான நிலவரம் என்று தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)