ராஜீவ் ஆட்சியில் இந்திய அரசு ரகசியங்களை திருடி 6 நாடுகளுக்கு விற்ற கோவை தொழிலதிபர் - சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Bloomsbury India
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி இந்தி
கடந்த 1985-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பிரதமர் ராஜீவ் காந்தியின் முதன்மை செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் ராஜினாமா செய்தார்.
இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரான்ஸ் டெல்லியில் இருந்து தனது தூதரை திரும்பப் பெற்றது. செக்கோஸ்லோவாகியா, போலந்து மற்றும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த தூதர்கள் டெல்லி தூதரகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
உளவு ரீதியிலான முறைகேடு ஒன்று, இதன் பின்னணியில் இருந்தது. அந்த முறைகேடு, இந்தியாவின் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பானது. ‘பிரதமர் அலுவலகத்தில் இதுவொரு கரும்புள்ளி’ என இந்திய ஊடகங்கள் எழுதின.
இதில், ராஜீவ் காந்தியின் முதன்மைச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டரின் தனிச் செயலாளர் என்.டி.கேர், பி.ஏ. மல்ஹோத்ரா மற்றும் அவரது பணியாள் கூட சம்பந்தப்பட்டிருந்தனர்.
யுவான் சுவாங் வந்த போது தமிழ்நாடு எப்படி இருந்தது? போதி தர்மர், சோழர் போர் முறை பற்றிய அரிய தகவல்கள்

ஜனவரி 16-17 அன்றைய தின இரவு, புலனாய்வுப் பணியகத்தின் (IB) 'உளவு பார்த்தலை தடுக்கும் பிரிவு' (Counter Intelligence Department) என்.டி.கேரை முதலில் கைது செய்தது.
காலையில், பிஏ மல்ஹோத்ரா மற்றும் பிரதமர் அலுவலக பணியாள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டின் கோவையில் பிறந்தவரான தொழிலதிபர் குமார் நாராயண் மூலம் ரகசிய அரசு ஆவணங்களை வெளிநாட்டு ஏஜெண்டுகளுக்கு அனுப்பியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பட மூலாதாரம், kallol bhattacherjee
சுருக்கெழுத்தர்கள், தனிச் செயலாளர்களிடம் ஏராளமான தகவல்கள் இருந்தன
கடந்த 1925 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த குமார் நாராயண் 1949 ஆம் ஆண்டு டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் சுருக்கெழுத்தராக தனது பணியைத் தொடங்கினார்.
பின்னர் அவர் ராஜினாமா செய்து பொறியியல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான எஸ்எம்எல் மானெக்லால் (SML Maneklal) நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட’எ சிங்குலர் ஸ்பை தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் குமார் நாராயண்’ (A Singular Spy The Untold Story of Kumar Narayan) என்ற புத்தகத்தில், எழுத்தாளர் கல்லோல் பட்டாச்சார்ஜி, "உரிம அனுமதி ஆதிக்கத்தின் போது (லைசென்ஸ் பெர்மிட் ராஜ்), அரசாங்கத்தின் பின்னணியில் பணிபுரியும் சுருக்கெழுத்தர்களுக்கு பல்வேறு அமைச்சகங்களில் ரகசியத் தகவல் கிடைத்தது" என எழுதியுள்ளார்.
மேலும், "சுருக்கெழுத்தர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை விற்பனை செய்யத் தயாராக இருந்தால், அவர்கள் வெறும் தட்டச்சு செய்பவர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள் என்பதை நாராயண் அறிந்திருந்தார்" என எழுதுகிறார்.
குமார் நாராயணுக்கு முக்கிய அமைச்சகங்களில் நட்பு

பட மூலாதாரம், kallol bhattacherjee
கடந்த 1959 இல் அரசு வேலையை விட்டு வெளியேறிய பிறகு, குமார் அரசாங்கத்தில் சிறிய பதவிகளில் பணிபுரியும் நபர்களின் ரகசிய வலையமைப்பை உருவாக்கினார்.
இதுமட்டுமின்றி, பிரான்ஸ், கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவாகியா, சோவியத் யூனியன் மற்றும் போலந்து ஆகிய ஆறு நாடுகளின் தூதரகங்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு ரகசிய மற்றும் முக்கிய ஆவணங்களை வழங்கத் தொடங்கினார்.
ஜனவரி 28, 1985 இன் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தித்தாளில் குமார் நாராயண், "வெளிநாட்டில் ரகசிய தகவல்களை சேகரிப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1985 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள பல்வேறு கார்பரேட் நிறுவனங்களின் தொடர்பு அதிகாரிகளாக சுமார் இரண்டாயிரம் பேர் பணிபுரிந்தனர், அவர்களில் குமார் நாராயணும் சேர்க்கப்பட்டார்.
“குமாருக்கு பிரதமர் மற்றும் குடியரசு தலைவரின் அலுவலகங்கள் உட்பட ஒவ்வொரு முக்கிய அமைச்சகத்திலும் நண்பர்கள் இருந்தார்கள். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு பல சொத்துக்களை வாங்கினார். அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்குவார்” என, கல்லோல் பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.
இந்த வழக்கு விசாரணையில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் பி.கோபாலன், அவரிடம் ஒரு தந்தையை போன்று நடந்துகொண்டதாக கண்டறியப்பட்டது.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில், தான் இறந்தால், அதுகுறித்து குமார் நாராயணுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார் அவர்.

பட மூலாதாரம், kallol bhattacherjee
தகவல் கசிவு வெளியே வந்தது எப்படி?
டெல்லியில் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் கூட்டம் நடந்த போதுதான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் கசிந்ததாக முதல் தகவல் கிடைத்தது.
கூட்டம் தொடங்கியவுடன், இலங்கை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் ‘ரா’ உளவு முகமையின் மிக ரகசிய ஆவணத்தை காண்பித்தனர். அதில், இலங்கை பற்றி இந்திய அரசு என்ன நினைக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
வினோத் சர்மா மற்றும் ஜி.கே. சிங் ஆகியோர், பிப்ரவரி 17, 1985 இல் 'தி வீக்' இதழில், “இந்தியாவுக்கு அதுவொரு சங்கடமான ஆவணம். இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களுக்காக எழுதப்பட்ட ஆவணம், எப்படி இலங்கையை சென்றடைந்தது என புலனாய்வு அதிகாரிகள் திகைத்துப் போயிருந்தனர்” என எழுதினர்.
அந்த ஆவணம் மூன்று பிரதிகள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தன. இரண்டு பிரதிகள் ரா உயர் அதிகாரிகளிடம் இருந்தது, ஒரு பிரதி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
அந்த உயர் ரகசிய ஆவணம் எப்படி கொழும்புவை அடைந்தது என்பதை அறிய உளவுத்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டினர்.
வினோத் சர்மா மற்றும் ஜி.கே. சிங், "பிரான்ஸ் அதிகாரி ஒருவர் அந்த ஆவணத்தைப் பெற்று, நாராயணின் தொடர்புகள் மூலம் இலங்கைக்கு வழங்கியது பின்னர் விசாரணையில் தெரியவந்தது." என்று கூறுகின்றனர்.
குமார் நாராயணுக்கு பிரான்ஸ் உளவுத்துறையுடன் தொடர்பு

பட மூலாதாரம், Getty Images
கைது செய்யப்படும் வரை நாராயண், பிரான்ஸ் புலனாய்வு அமைப்பில் பணியாற்றி வந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் பிரான்ஸ் கார்ப்பரேட் மற்றும் பாதுகாப்பு நலன்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
“நாராயண் பிரான்ஸ் உளவு அமைப்பான டிஜிஎஸ்இ-யில் ஏழு ஆண்டுகள் பணியாற்றி வந்தார். டிஜிஎஸ்இ உடனான அவரது தொடர்பு அலெக்ஸாண்ட்ரே டி மராஞ்சேவின் காலத்தில் தொடங்கியது. 1981-82 இல் அதன் உச்சத்தை எட்டியது. அப்போது பியர் மரியோ அதன் தலைவராக ஆனார்" என கல்லோல் பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.
கடந்த 1982 ஆம் ஆண்டில், பிரான்ஸ் 46 மிராஜ் 2000-H மற்றும் 13 மிராஜ் 2000-TH போர் விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. மேலும், 110 விமானங்களை வாங்குவதற்கான வாய்ப்பும் இருந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, பியர் மரியோ தனது தலைமையின் கீழ், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் ஊடுருவியதே தனது மிகப்பெரிய சாதனை எனவும், இது இந்தியாவிற்கு மிராஜ் போர் விமானத்தை விற்பனை செய்வதில் பிரான்சின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றும் கூறினார்.
இந்த முழு நடவடிக்கைக்கும் 'ஆபரேஷன் நிகோபார்' என்று பெயரிடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை பிரான்ஸுக்கு வழங்கியதில் இந்த உளவு ஊழலுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
இந்தியாவிற்கும் பிரான்ஸுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு முன்னர், சோவியத் ஒன்றியம் அதன் பாதுகாப்பு அமைச்சர் டிமிட்ரி உஸ்டினோவை டெல்லிக்கு அனுப்பியது. பிரான்ஸ் விமானங்களுக்கு பதிலாக சோவியத் விமானங்களை வாங்க இந்தியாவை சமாதானப்படுத்தியது. ஆனால், அதில் சோவியத் ஒன்றியம் வெற்றிபெறவில்லை.
தற்செயலாக சந்தேகிக்கப்பட்ட குமார் நாராயண்

பட மூலாதாரம், Getty Images
இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, டெல்லியில் உச்சக்கட்ட உஷார் நிலை செயல்பாட்டில் இருந்தது. அதிகாரத்திற்கு கீழ் உள்ள ஒவ்வொரு நபரும் சந்தேகத்திற்குரியவர்களாக இருந்தனர்.
பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும் காலம் தொடங்கியது.
ஆனால், அதையும் மீறி பிரதமர் அலுவலகத்துடன் குமார் நாராயணின் தொடர்பு வெளியே தெரியவரவில்லை. குமார் நாராயண் தற்செயலாக போலீசாரிடம் சிக்கினார்.
சிபிஐயில் பணிபுரிந்த வேத் பிரகாஷ் சர்மா, தனது நண்பர் சுபாஷ் சர்மாவின் புகைப்பட நகல் எடுக்கும் கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
கடையில் வெளிச்சம் அதிகமாக இருந்தது. திடீரென அவரது கண்கள் மத்திய புலனாய்வுப் பணியகம் என்று எழுதப்பட்டிருந்த ஒரு பக்கத்தின் நகலை பார்த்தது.
புலனாய்வுப் பணியகம் அதன் ஆவணங்கள் எதையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்காது என்பதை வேத் பிரகாஷ் தனது அனுபவத்தில் அறிந்திருந்தார்.
புலனாய்வுப் பணியகத்தின் முக்கியமான ஆவணங்களின் நகல்கள்
“வேத் பிரகாஷ் அறையின் மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அதனை நகலெடுத்த சுபாஷ் ஷர்மா அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார். உளவுத்துறையின் ஆவணங்களில் பிரதமர் அலுவலகம் மற்றும் குடியரசு தலைவர் மாளிகை என குறியிடப்பட்டிருப்பதை அவர் பார்த்தார். இந்த ஆவணங்கள் அசாம், காஷ்மீர், கனரக தொழில்துறை மற்றும் பாகிஸ்தான் தொடர்பானவை” என கல்லோல் பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.
இதையடுத்து, அந்த ஆவணத்தை நகல் எடுத்தவரை சந்திக்கும் நம்பிக்கையுடன் தினமும் தனது நண்பரின் கடைக்கு செல்ல ஆரம்பித்தார் வேத் பிரகாஷ்.
இது பல நாட்களாக தொடர்ந்தது. இந்த ஆவணங்களில் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் பற்றிய உளவுத்துறையின் தகவல்கள் அடங்கியிருந்தன.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த ரகசிய ஆவணங்கள் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள கன்னௌட் பிளேஸ் எனும் பகுதியில் நகலெடுக்கப்பட்டன.
"வேத் பிரகாஷ் முழு நம்பிக்கையுடன் இருந்தபோது, புலனாய்வுப் பிரிவின் கூடுதல் இயக்குநருமான ஜே.என். ராயைத் தொடர்பு கொண்டு எல்லாவற்றையும் கூறினார்" என பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.
ராய், அதிகாரிகள் சிலரை அக்கடைக்கு விசாரணைக்காக அனுப்பினார். ஆனால் உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
உளவு மோசடியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் அடையாளம் காணுதல்

பட மூலாதாரம், x
இதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேத் பிரகாஷ் விரும்பினார். ஒருநாள் அந்த பணியாள் கொண்டு வந்த ஒரு தாளை திருடி தன்னுடைய மேல்சட்டையின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.
அந்த தாளை படித்தபோது அது புலனாய்வுப் பிரிவு பற்றியது என தெரிந்தது. இப்போது அவர் தனது சந்தேகம் சரியானது என்பதில் உறுதியாக இருந்தார்.
அங்கிருந்து நேராக தனது முன்னாள் உயரதிகாரி ஜே.என்.ராயிடம் சென்றார். இதைப் பார்த்து துள்ளிக் குதித்த ராய், முழு விஷயத்தையும் விசாரிக்க முடிவு செய்தார்.
அவர்களிடம் வேத் பிரகாஷ், 'கடையின் உரிமையாளர் இந்த பணியில் ஈடுபடவில்லை, எனவே அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று கூறினார். புலனாய்வுப் பிரிவினர் சாதாரண உடையில் அக்கடையைக் கண்காணிக்கத் தொடங்கினர்.
"அடுத்த நாள் பணியாள் நகலெடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறியபோது, வேத் பிரகாஷ் உளவுப் பணியகத்தை சேர்ந்த நபரை அவருக்குப் பின்னே அனுப்பினார்" என பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.
மேலும், “அந்த நபர் எஸ்.எல்.எம் மானெக் லாலின் ஹெய்லி ரோடு அலுவலகத்தில் இருந்து வந்துள்ளார் என்பது தெரிந்ததும், அந்த அலுவலகத்திலும் 24 மணிநேர கண்காணிப்பு போடப்பட்டது. பல நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்" என எழுதினார்.
நாராயணின் அலுவலகத்தில் ரெய்டு

பட மூலாதாரம், kallol bhacharya
இதையெல்லாம் அறியாத குமார் நாராயண், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் பி.கோபாலனுக்காக தனது அலுவலகத்தில் காத்திருந்தார். இரவு 11 மணியளவில் கோபாலன் ஒரு சிறு பெட்டியுடன் நாராயணனை சந்தித்தார்.
குமார் அவருக்காக ஒரு விஸ்கி பாட்டிலை திறந்து அவரிடம் பேச ஆரம்பித்தார். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“கதவு திறந்தவுடன், புலனாய்வுப் பணியகக் குழு அறைக்குள் நுழைந்து, குமாரின் மேசையில் ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் குறிப்புகளைக் கண்டது. குமாரையும், கோபாலனையும் அமர்ந்திருக்கச் சொல்லிவிட்டு, அலுவலகம் முழுவதும் தேடத் தொடங்கியது அக்குழு. இந்தத் தேடல் மறுநாள் விடியும் வரை தொடர்ந்தது” என கல்லோல் பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.
அக்குழு அங்கு 14 பாட்டில்களில் சிறந்த ஸ்காட்ச் விஸ்கியைக் கண்டுபிடித்தது. நாராயணும், கோபாலனும் விசாரணைக்காக செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜனவரி 17 இரவு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளிநாட்டினருடன் பகிர்ந்து கொண்ட எட்டு பேர் மீது திலக் மார்க் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
திகார் சிறையில் குமார் நாராயண்
கைது செய்யப்பட்டவர்களில் காஷ்மீரை சேர்ந்தவரான டி.என்.கேர், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.சி.அலெக்சாண்டருக்கு தனிச்செயலாளராக இருந்தவர். அலெக்சாண்டரின் தனிப்பட்ட செயலாளராக இருந்தவர் என்பதால், பிரதமர் அலுவலகம் முழுவதையும் டி.என்.கேரால் அணுக முடிந்தது.
உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு வேற்றுப்பணிக்காக (deputation) அனுப்பப்பட்ட மற்றொரு நபரான கே.கே.மல்ஹோத்ராவும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், குடியரசு தலைவரின் பத்திரிகை ஆலோசகர் தர்லோசன் சிங்கின் மூத்த தனி உதவியாளர் எஸ். சங்கரன் ஆவார். மதுரையைச் சேர்ந்த சங்கரன், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர். இவர், குடியரசு தலைவர் மாளிகையில் வசித்து வந்தார்.
சில நாட்கள் விசாரணைக்குப் பிறகு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் குமார். சிறைச்சூழல் குமாரின் உடல்நிலையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் அங்கேயே நோய்வாய்ப்படத் தொடங்கினார். சிறையில் தான் கொலை செய்யப்பட்டு விடுமோ என்று பயப்படத் தொடங்கினார், அதனால் இரவில் எழுந்து கத்த ஆரம்பித்தார்.
திகார் சிறையின் முன்னாள் செய்தியாளர் சுனில் குப்தா கூறும் போது, “குமார் எப்போதும் அழுது கொண்டே இருப்பார். கைது செய்யப்பட்ட முதல் இரண்டு மாதங்களில், அவரது எடை 20 கிலோ குறைந்தது. உடல் எடையை குறைப்பது நல்ல விஷயம் என்று நாங்கள் அவரிடம் கேலி செய்தோம்” என்றார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட குமார் நாராயண்

பட மூலாதாரம், Getty Images
இந்தக் கைதுகள் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன. ஆனால், 'தி இந்து'வின் ஜி.கே.ரெட்டிக்கு இதுபற்றித் தெரிந்து, இந்தச் செய்தியை முதலில் வெளியிட்டார்.
பிப்ரவரி 4, 1985 இல், குமார் நாராயணை எஸ்.எம்.எல் மானெக்லால் வேலையில் இருந்து நீக்கினார்.
குமார் நாராயண் தனது 15 பக்க வாக்குமூல அறிக்கையில், இந்த உளவு வழக்கில் குறைந்தது மூன்று நாடுகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக பணத்திற்கு ஈடாக அவர்களுக்கு ரகசிய ஆவணங்களை அளித்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
தான் கொடுத்த தகவலை தனது முதலாளி மானெக்லால் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக குமார் கூறினார்.
பி.சி. அலெக்சாண்டர் ராஜினாமா
இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமரின் முதன்மை செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
"ஜனவரி 18, 1985 முதன்மைச் செயலாளராக எனது பணிக்காலத்தின் இருண்ட நாள்," என்று அவர் தனது சுயசரிதையான 'தி காரிடார்ஸ் ஆஃப் பவர்' இல் (Through the Corridors of Power) எழுதினார்.
அதில், "என் அலுவலகத்தின் ரகசிய தகவல்களை சில வணிக நிறுவனங்களுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் எனது தனிப்பட்ட செயலாளரும் மூன்று தனிப்பட்ட கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி அன்று காலை என்னிடம் கூறப்பட்டது." என எழுதினார்.
"இந்த விஷயத்திற்கு தார்மீக பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்வதுதான் என்னுடைய உடனடி எதிர்வினையாக இருந்தது" என அவர் எழுதியுள்ளார்.
“நான் மூன்று மணிக்கு பிரதமரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவருக்கு அருகில் அவரது மூத்த சகாக்கள் நரசிம்மராவ், வி.பி.சிங், எஸ்.பி.சவான் ஆகியோர் அமர்ந்திருந்தனர். நான் ராஜீவ் காந்தியிடம் உங்களை தனியாகச் சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அவர்கள் சென்றவுடன், பிரதமரிடம் அனைத்தையும் கூறி, எனது ராஜினாமா குறித்து தெரிவித்தேன்” என்றார்.
தூதரை திரும்ப அழைக்குமாறு பிரான்ஸை கேட்டுக்கொண்ட டெல்லி

பட மூலாதாரம், Getty Images
பாரிஸில் உள்ள இந்திய தூதர் நரேந்திர சிங்குக்கு, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரை சந்தித்து, இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறும், டெல்லியில் உள்ள தங்கள் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கைக்கு சமமாக பாரிஸில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்றும் தகவல் அனுப்பப்பட்டது.
சின்மோய் கரேகான் தனது சுயசரிதையான 'சென்டர்ஸ் ஆஃப் பவர்' இல், "பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் மித்திராண்ட், ‘என்ன நடந்தாலும் அதை மறந்துவிடுங்கள். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு இடையூறாக இருக்க அனுமதிக்கப்படக் கூடாது’ என, ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22, 1985 அன்று ராஜீவ் காந்தியைச் சந்திக்க தனது சகோதரனை டெல்லிக்கு அனுப்பினார் மிட்டல். தான் வருத்தமாக இருப்பதை அவர் இந்த வழியில் கூறினார். ஆனால் அதை அவர் வார்த்தையாக கூறவில்லை.
இந்த மோசடியில் ஈடுபட்ட போலந்து, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் கிழக்கு ஜெர்மனியின் ஊழியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், நரசிம்ம ராவ் ஆலோசனையின் பேரில் சோவியத் தூதரகத்திற்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
குமார் நாராயணின் மரணம்
குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கும் எதிரான விசாரணை 17 ஆண்டுகள் நீடித்தது.
அவர்கள் அனைவரும் வெளிநாட்டு ஏஜெண்டுகளுக்கு ரகசிய தகவல்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள். அவர்களில் 4 பேர் பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால், குமார் நாராயண் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 20, 2000 அன்று இறந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












