தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது எப்போது? சட்டமியற்றி 18 ஆண்டாகியும் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"எங்கள் குடும்பத்திற்கு விவசாயம் தான் பிரதான தொழில். இந்தப் படிப்பை விரும்பித் தான் தேர்வு செய்தேன். 2023 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகர் படிப்பை முடித்தேன். சான்றிதழ் வாங்கும்போது கூட நம்பிக்கை இருந்தது. இப்போது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது" என்கிறார், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதா.
ரஞ்சிதா மட்டுமல்ல, கடலூர் மாவட்டம் மேல் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரம்யாவின் கருத்தும் இதையொட்டியே இருக்கிறது.
ஒரே காரணம், தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான்.
"சட்டரீதியான தடைகளை நீக்கிவிட்டு அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு போதிய முயற்சியை மேற்கொள்ளவில்லை" என்பது அர்ச்சகர் படிப்பை முடித்த மாணவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மறுத்துள்ளார்.
யுவான் சுவாங் வந்த போது தமிழ்நாடு எப்படி இருந்தது? போதி தர்மர், சோழர் போர் முறை பற்றிய அரிய தகவல்கள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
'கோவில் கருவறைகளில் தீண்டாமை கூடாது' என்று கூறி தமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை ஆகிய இடங்களில் சைவ முறைப்படியும் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் வைணவ முறைப்படியும் ஆகம பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன.
அர்ச்சகர் ஆக விரும்பும் எவரும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பயிற்சியில் சேரலாம்; பயிற்சி முடித்த உடன் அர்ச்சகர் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
பயிற்சியின் போது, தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தமிழ் இலக்கணம், தமிழக கோவில்கள் வரலாறு, அனைத்துக் கடவுளுக்குமான மந்திரங்கள்; ஆகம கோவில்களில் பூஜை, அலங்காரம், வீதி உலா ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன.

பட மூலாதாரம், TN Government
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 'இந்த சட்டம் செல்லும்' என 2015 ஆம் ஆண்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் தீர்ப்பளித்தனர். ஆனால், 'பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வு' எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது. அதே ஆண்டு ஜூலை மாதம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியானது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் தேதி பல்வேறு கோவில்களில் அனைத்து சாதிகளையும் சேர்ந்த 28 பேரை அர்ச்சகர்களாக அரசு நியமித்தது. இவர்களில் நான்கு பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
ஓராண்டாக நடந்த இந்த வழக்கில், 'தமிழ்நாடு அரசு வகுத்த விதிகள் செல்லும் எனவும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்' எனவும் 2022 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
"உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஆதிசைவ சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்றமும், 'தற்போதைய நிலையை அப்படியே தொடரலாம்' (Status Quo) எனக் கூறிவிட்டது. இதன் காரணமாக, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அர்ச்சகர்கள் படிப்பை முடித்தும் சுமார் 380க்கும் மேற்பட்ட மாணவர்களால் பணியில் சேர முடியவில்லை" என்கிறார், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன்.

"சாதி பிரதானமாக இல்லை"
"இந்த வழக்கில் சாதியை முக்கியமானதாக நீதிமன்றம் பார்க்கவில்லை. ஆனால், ஒவ்வொரு கோவிலுக்கும் ஆகமம் உள்ளது. அதன்படியே மரபும் பழக்கவழக்கமும் உள்ளதால், அவை கடைபிடிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது" என்கிறார் வா.ரங்கநாதன்.
ஆனால், இன்று வரையிலும் 90 சதவிகித்துக்கும் மேல் பரம்பரை அர்ச்சகர்கள் மட்டுமே கோவிலில் பூஜை செய்வதாகக் கூறும் ரங்கநாதன், "தகுதி, திறமை இருந்தாலும் எங்களால் ஏன் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
"கோவில் அனைவருக்கும் சமமானதாக இருக்கிறது. ஆனால், மரபும் பழக்கவழக்கமும் எங்களை ஒதுக்குவதற்கு காரணமாக உள்ளது. உச்ச நீதிமன்றத் தடையை நீக்குவதற்கு தமிழக அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை" என்கிறார் ரங்கநாதன்.
வழக்கு தொடர்ந்தவர் சொல்வது என்ன?
"சிவாச்சாரியார்களும் பட்டாச்சாரியார்களும் பூஜை செய்யக் கூடிய கோவில்களில் மட்டும் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதர சாதியினர் அர்ச்சகர்களாக உள்ள கோவில்களில் இந்தப் பிரச்னை இல்லை" என்கிறார் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவரான டி.ஆர்.ரமேஷ்குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அரசியல் அமைப்புச் சட்டத்தின் 16(5) பிரிவு, மத சம்பிராதாயத்தில் குறிப்பிட்ட பிரிவினரே வழிபாடு செய்ய வேண்டும் என்றால் அதைப் பின்பற்ற வேண்டும்; அதில் மாற்றங்களை கொண்டு வரக் கூடாது என்கிறது. இதையே ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கிலும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது" என்கிறார்.

உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 'எது ஆகமக் கோவில், அந்தக் கோவிலில் என்ன ஆகமம் பின்பற்றப்படுகிறது?' என்பதைக் கண்டறிய ஐவர் கமிட்டியை நியமிக்குமாறு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர நாத் பண்டாரி உத்தரவிட்டார்.
"இந்தக் குழுவை அமைப்பதில் அரசு அலட்சியம் காட்டுகிறது" எனக் கூறும் டி.ஆர்.ரமேஷ்குமார், "உச்ச நீதிமன்ற உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, புதிய நியமனங்களையும் தமிழ்நாடு அரசு தவிர்க்கிறது" என்கிறார்.
"கோவிலில் உடல்நலக் குறைவால் பட்டாச்சாரியார் இறந்துவிட்டால் வேறு ஒருவரை நியமிப்பது தான் நடைமுறை. ஆனால், அவ்வாறு நியமிக்காமல் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரிகள் பிடிவாதம் காட்டுகின்றனர்" என்கிறார், டி.ஆர்.ரமேஷ்குமார்.
உதாரணமாக, ராமேஸ்வரம் கோவிலில் 21 சன்னதிகளில் அர்ச்சகர்கள் இல்லை என அண்மையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையும் டி.ஆர்.ரமேஷ்குமார் மேற்கோள் காட்டினார்.
அமைச்சர் சேகர்பாபு சொல்வது என்ன?
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "அர்ச்சகர் நியமனத்தில் தற்போதைய நிலையையே தொடருமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்ற தடையை நீக்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன" என்று மட்டும் பதில் அளித்தார்.
மற்ற கேள்விகளை எழுப்பும் முன், இந்த விவகாரத்தில் போதிய விளக்கங்களை தான் அளித்துவிட்டதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. "2021 ஆம் ஆண்டு பிராமணர் அல்லாத 24 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். நவம்பர் 27ஆம் தேதி இந்த வழக்கு வரும்போது, எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்புகிறோம்" என்றார்.
புதிய நியமனங்களை தவிர்ப்பது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் மேற்கொண்டு பேச விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

பட மூலாதாரம், Sekar Babu
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது எப்போது?
பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பலரும் உரிய வேலை கிடைக்காததால், தங்களுக்குக் கிடைக்கும் வேலைகளைச் செய்து வருவதாக கூறுகிறார், வா.ரங்கநாதன்.
"சிலர் தனியார் கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். சிலர் கூலி வேலையை செய்து வருகின்றனர். அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கனவுடன் வந்தவர்கள், மாற்று வேலைகளைத் தேடி நகரத் தொடங்கிவிட்டனர். இதுதொடர்பான வழக்கு இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் வரவுள்ளது. அதற்குள் சட்டரீதியான முயற்சிகளை துரிதப்படுத்தி அரசு உரிய தீர்வைக் கொடுக்க வேண்டும்" என்கிறார் வா.ரங்கநாதன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












