பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகனின் சொத்துப்பதிவில் முறைகேடா? ரத்து செய்யப்பட்டது ஏன்?

நயினார் பாலாஜி
படக்குறிப்பு, நயினார் பாலாஜி
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சென்னையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஒன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் பெயரில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது. அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு விற்பதாக கிரையப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது.

இதில் முறைகேடு இருப்பதாக சென்னையிலிருந்து செயல்படும் அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு புகார் அளித்தது. இதை விசாரித்த ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு தலைவர், இந்தப் பதிவை ரத்து செய்துள்ளார்.

பிரச்னையின் பின்னணி என்ன?

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஒரு மல்டி ப்ளக்ஸ் திரையரங்கத்திற்கு எதிரில் சுமார் 1.3 ஏக்கர் நிலம் உள்ளது. அறப்போர் இயக்கம் தரும் தகவல்களின்படி இந்த நிலம் முதலில் சரஸ்வதி உள்ளிட்ட ஆறு பேரின் பெயரில் இருந்துள்ளது.

பிறகு அவர்களிடமிருந்து சுந்தரமகாலிங்கம் - வசந்தா ஆகியோருக்கு 2006இல் விற்கப்பட்டுள்ளது. அவர்களே இந்த நிலத்தின் தற்போதைய உரிமையாளராக உள்ள நிலையில், இந்த நிலத்தின் உரிமை தொடர்பாக கௌரி அம்மாள் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த நிலம், தங்களுக்கே உரியது என சுந்தரமகாலிங்கம் - வசந்தா ஆகியோர் வாதாடி வருகின்றனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில், குலாப்தாஸ் நாராயணதாஸ் என்பவரின் பேரன் ஜெயேந்திர வோரா என்பவர், இந்த நிலம் தொடர்பான ஆவணங்களைத் தயார் செய்து அதை இளையராஜா என்பவருக்கு விற்பனை செய்யக்கூடிய உரிமத்தை (Power of attorney) செய்து தருகிறார். இதற்கிடையில், குலாப்தாஸ் நாராயணதாஸ் பெயரில் பட்டா மாற்றமும் நடந்திருக்கிறது.

அதற்கு முன்பாக, இந்த நிலம் ஜெயேந்திர வோராவுக்கே சொந்தமானது என அரசு வழக்கறிஞர் ஒருவரும் சான்றிதழ் ஒன்றை அளித்துள்ளார்.

இதற்குப் பிறகு, இளையராஜாவிடம் இருந்து முன்னாள் அமைச்சரும் தற்போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி இந்த நிலத்தை 46 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக அதே ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது.

நயினார் பாலாஜி

பட மூலாதாரம், Nainar Nagenthran/Facebook

இந்த நிலையில்தான், நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கம் தலைமைச் செயலர், சென்னை நகர காவல்துறை, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர், பத்திரப் பதிவுத்துறை செயலர் ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் அனுப்பி வைத்தது.

அதாவது, விருகம்பாக்கம் சார் பதிவாளர் அதிகார எல்லைக்குள் உள்ள நிலத்தை, ராதாபுரத்தில் பதிவு செய்தது, 2006இல் வேறொருவர் பெயரில் பதிவுசெய்யப்பட்ட நிலத்தை இன்னொருவருக்குப் பதிவு செய்து தந்தது ஆகிய முறைகேடுகளைக் குறிப்பிட்டு இந்தப் புகார் அளிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு திருநெல்வேலி மாவட்ட மண்டல துணை பதிவுத்துறை தலைவர் இந்தப் பதிவை ரத்து செய்தார்.

நடந்த விதிமீறல் என்ன?

கடந்த 1908ஆம் ஆண்டின் பதிவுச் சட்டத்தின் பிரிவு 28, ஒருவருக்கு பல்வேறு இடங்களில் சொத்துகள் இருந்தால், இந்தச் சொத்துகளில் ஏதாவது ஒன்றைப் பதிவுசெய்ய அதிகாரமுள்ள ஏதாவது ஒரு சார்பதிவாளர் அலுவலகங்களில் எல்லாச் சொத்துகளையும் பதிவுசெய்ய அனுமதிக்கிறது. ஆனால், இந்த சொத்துகளின் உரிமையாளர் ஒருவராக இருக்கவேண்டும்.

தற்போதைய விவகாரத்தில், இதற்காகவே ராதாபுரத்தில் சில நாட்களுக்கு முன்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கு நிலம் ஒன்று இளையராஜா பெயரில் வாங்கப்பட்டு, அந்த நிலமும் விருகம்பாக்கம் நிலமும் ஒன்றாகச் சேர்ந்து ராதாபுரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த 28வது பிரிவை வைத்து முறைகேடுகள் நடப்பதால், இந்த விதியை மிகக் கவனமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த ஆண்டு பத்திரப் பதிவுத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. இருந்தபோதும், அந்த விதி மீறப்பட்டு பத்திரம் பதிவுசெய்யப்பட்டதால், தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

"பிரிவு 28இன் கீழ் வேறோர் இடத்தில் உள்ள சொத்து இன்னொரு சார்பதிவாளர் அலுவலத்திற்கு பதிவிற்காக வந்தால், அந்த சார் பதிவாளர், சம்பந்தப்பட்ட சொத்து உள்ள இடத்தின் சார்பதிவாளருக்கு குறிப்பு ஒன்றை அனுப்பி, பதிவுக்கு வந்துள்ள சொத்து அரசுக்கோ, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கோ சொந்தமானதா, வில்லங்கம் ஏதும் உள்ளதா என்ற கேள்விகளை எழுப்பவேண்டும். அந்த சார்பதிவாளரிடமிருந்து உரிய பதில் வந்த பிறகே சொத்து மற்றொரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்.

நான்கைந்து சொத்துகளை ஒன்றாக விற்க விரும்பும் ஒருவர் வெவ்வேறு இடங்களுக்கு அலைய வேண்டாம் என்பதற்காக இந்த விதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், சில நேரங்களில் இது தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது," என்கிறார் பதிவுத் துறையின் முன்னாள் கூடுதல் தலைவரான ஆ. ஆறுமுக நயினார்.

நயினார் பாலாஜி
படக்குறிப்பு, நயினார் பாலாஜி

நயினார் பாலாஜி சொல்வது என்ன?

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன்மீது வீண் பழி சுமத்தப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் பாலாஜி, 46 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்குவதற்காக கிரைய ஒப்பந்தம் மட்டுமே செய்திருக்கும் நிலையில், 100 கோடி ரூபாய் நிலத்தை மோசடியாகப் பதிவுசெய்திருப்பதாகக் கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக் கூறியுள்ளார்.

"இந்த நிலம் குறித்த ஆவணங்களை தமிழக அரசின் வழக்கறிஞர் ஒருவர் மூலம் சட்டரீதியாக சரி பார்த்து உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அதை வாங்குவதாக ஒப்பந்தம் செய்தோடம். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.46 கோடி.

ஆனால், அதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என்றும் நிலத்தை மோசடியாக பத்திர பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். 77 - A பிரிவை (மோசடியாக நிலம் பதிவுசெய்யப்பட்டிருந்தால் அந்தப் பதிவையே ரத்து செய்ய அதிகாரமளிக்கும் பிரிவு) தவறாகப் பயன்படுத்தி எனது பத்திரப் பதிவை ரத்து செய்துள்ளனர்.

நாங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆவணங்களுடன் இது தொடர்பாக மனு அளித்தபோது, ஆவணங்களைச் சரி பார்த்தவர் நீதிமன்றத்திற்குச் செல்லும்படி கூறினார். எட்டு மாதங்களுக்குப் பிறகு அதே அதிகாரி 77 -A பிரிவைப் பயன்படுத்தி பத்திரப் பதிவை ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லவிருக்கிறோம்," என்கிறார் நயினார் பாலாஜி.

பதிவு ரத்து செய்யப்பட்டது குறித்து தனக்கு அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் நயினார் பாலாஜி குறிப்பிட்டார்.

அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு

இதுபோன்ற பத்திரப் பதிவுகள் பல விதங்களில் பொதுமக்களின் சொத்துகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.

"ஒரு நிலம் விற்பனை செய்யப்பட்டு, பதிவு செய்யப்படுவதற்காக வந்தால் அந்த நிலத்தை யார் விற்கிறார்களோ அவர்களது பெயரில் பட்டா இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டாமா?

மிகச் சாதாரணமாகப் பார்த்தாலே, நிலம் வேறொருவர் பெயரில் இருப்பது தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் இந்த நிலத்தை சார்பதிவாளர் பதிவு செய்திருக்கிறார். வேறொரு முறைகேட்டில், அவர் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, ஒரு சனிக்கிழமை நாளில் இது நடந்திருக்கிறது.

இரண்டு சொத்துகள் ஒரே அதிகார எல்லையின்கீழ் வந்தால் ஏதாவது ஒரு அதிகார எல்லையைக் கொண்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பது சரிதான். ஆனால், அப்படிச் செய்யும்போது முதல் நாள் நிலத்தை வாங்கி, அடுத்த நாள் விற்கிறார்களே என்று பார்த்திருக்க வேண்டாமா?

மேலும் ஒரு சொத்தின் மதிப்பு அவர்கள் வாதப்படியே பார்த்தாலும் 46 கோடி ரூபாய். மற்றொரு சொத்தின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய். இது முறைகேட்டிற்காகத்தான் செய்யப்படுகிறது என்பதை அப்போதாவது யோசிக்க வேண்டாமா?

இதுபோன்று தொடர்ந்து நடக்க அனுமதித்தால், யார் சொத்தை யார் வேண்டுமானாலும் எங்கேயாவது போய் விற்றுவிடுவார்கள்," என்கிறார் ஜெயராமன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: