மேட்டூர் அணை: காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடியை காப்பாற்ற முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால், இந்த ஆண்டு நெல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என அச்சத்தில் உள்ளனர் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள். கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் முறையாகக் கிடைக்காததால் குறுவை சாகுபடியைத் தொடங்கிவிட்டுப் போதிய நீர் இல்லாமல் தவிப்பதாகச் சொல்கின்றனர் காவிரி டெல்டா விவசாயிகள்.
தமிழ்நாட்டில் பாசனத்திற்குத் தேவையான நீர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு, பாசனத்துக்கான காலம் வரும்போது நீர் திறந்து விடப்படும்.
தமிழ்நாட்டில் பெரியவை, சிறியவை என மொத்தம் 90 அணைகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 224.297 மில்லியன கன அடி. தற்போது இந்த அணைகளில் மொத்தம் 87.604 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. அதாவது இந்த அணைகளின் மொத்த கொள்ளளவில் 39% மட்டுமே நிறைந்திருக்கிறது.
காவிரி டெல்டா பகுதி என்பது காவிரி நீர் கடலில் கடக்கும் முன் விரிந்து பல கிளைகளாகச் செல்லும் பகுதி. இப்பகுதி விவசாயத்துக்கு மிகவும் உகந்தது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகியன காவிரி டெல்டா மாவட்டங்கள்.

பட மூலாதாரம், Getty Images
குறைந்த அளவே இருக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்
டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்குத் தேவையான காவிரி நீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பெரிய அணையாகும். இந்த அணையின் 120 அடி ஆழம் கொண்டது. இதில் தற்போது 73.9 அடி வரை நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் அணையின் முழு கொள்ளளவும் நிரம்பியிருந்தது. அதாவது கடந்த ஆண்டு இதே நேரத்தில் 94,670 மில்லியன் கன அடி நீர் இருந்தது. ஆனால் தற்போது 36,145 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது.
டெல்டா விவசாயிகளுக்கு தற்போது 10 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படுகிறது. இதே அளவில் திறந்து விடப்பட்டால் ஆகஸ்ட் முதல் வாரம் வரை நீர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திறந்துவிடப்படும் நீர் போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள்

பட மூலாதாரம், Getty Images
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலம் குறுவை சாகுபடிக்கான காலம்.
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்குப் பருவ மழை தான் அதிக மழை தருவதாகும். எனவே குறுவை காலத்தில் குறுகிய கால பயிர்கள் விளைவிக்கப்படும். இவை 100-120 நாட்களில் விளையக்கூடிய பயிர்கள்.
தமிழ்நாட்டில் நெல் விளைவிக்கும் பகுதியான டெல்டா மாவட்டங்கள், குறுவை சாகுபடிக்குக் காவிரி நீரையும் மேட்டூர் அணையில் மழையின் காரணமாக தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீரையும் நம்பியே உள்ளன.
குறுவை பயிர்கள் கடந்த ஆண்டு 4.75 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டன. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் வரை பயிரிடப்பட்டுள்ளன.
‘பயிர்களைக் காப்பாற்ற முடியுமா எனத் தெரியவில்லை’

பட மூலாதாரம், P R Pandian
குறுவை சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும்.
கடந்த ஆண்டு நீர் வரத்து அதிகமாக இருந்ததால் மே 24ஆம் தேதியே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது கடைமடை வரை தண்ணீர் சென்றடையவில்லை. கர்நாடகாவிலிருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை.
தண்ணீர் கிடைக்கும் என நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தற்போது பயிர்களை காப்பாற்ற முடியுமா இல்லையா என தெரியாமல் தவித்து வருவதாகக் கூறுகிறார் தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
“ஐந்து லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நிலத்தில் 1.5 லட்சம் ஏக்கர் அளவுக்கு மோட்டார் மூலம் நீர் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட நீர் பாசன வசதிகள் உள்ளன. மீதமுள்ள சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யும் விவசாயிகள் காவிரி நீரை நம்பி தான் இருக்கிறார்கள். மேட்டூர் அணையிலிருந்து எப்போதும் போல் தண்ணீர் திறந்து விடப்பட்டதை நம்பி, விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கிவிட்டனர். ஆனால் தற்போது நீர் வரத்து போதவில்லை,” என்கிறார் அவர்.
மேலும் பேசியவர், "சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்களைக் கைவிட்டுவிட்டனர், என்கிறார். “நான் கூட 20 ஏக்கரில் சாகுபடி தொடங்கினேன். பயிர்கள் முளைத்துள்ளன. அடுத்து உரம் தெளிக்க வேண்டும். அதற்கு தண்ணீர் இல்லாததால் அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை,” என்கிறார்.
காவிரி நீர் மேலாண்மை உத்தரவின் படி, கர்நாடகாவிலிருந்து கிடைக்க வேண்டிய நீட் கிடைக்காததால் பயிர்களை இழக்க வேண்டிய சூழல் உள்ளது என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி. நடராஜன். இந்த நீரை பெற்று தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரும் 25 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர் என்றும் கூறுகிறார்.
தமிழ்நாட்டுக்குக் காவிரியிலிருந்து எவ்வளவு நீர் கிடைக்க வேண்டும்?

பட மூலாதாரம், SAMY NATARAJAN
காவிரி நீர் மேலாண்மை உத்தரவின் படி தமிழ்நாட்டுகு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி நீர் கிடைத்திருக்க வேண்டும். ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி நீர் கிடைக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் 45.95 டி.எம்.சி நீர் கர்நாடகாவில்லிருந்து கிடைக்க வேண்டும். ஆனால் ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய நீரே இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு 2.8 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைத்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கர்நாடகாவில் தென்மேற்குப் பருவ மழை தாமதமாகத் தொடங்கியதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர முடியவில்லை என கர்நாடகா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் சாமி. நடராஜன். “நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அந்த நேரத்தில் நீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை வாரியம் கூறியுள்ளது. பற்றாக்குறை காலங்களில் 60% நீரை தமிழ்நாட்டுக்கும் 40% நீரை கர்நாடகாவுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.
நீர் இல்லாமல் தவிக்கும் கடைமடை

பட மூலாதாரம், Getty Images
காவிரி நீர் சென்றடையும் கடைமடை பகுதிகளில் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம். அம்மாவட்டத்தில் கீழ்வேளூரில் உள்ள சாத்தியக்குடி கிராமத்தில் வசிக்கும் அம்பிகாபதி என்ற விவசாயி தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் வயல் நிலங்கள் காய்ந்து போகின்றன என்கிறார்.
“காவிரி, பெண்ணாறு என இரண்டு ஆறுகளின் மூலம் குறுவை சாகுபடிக்கு நீர் விடுவிக்கப்படும். கடந்த ஆண்டு இரண்டு ஆறுகளிலும் சமமாக நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இப்போது ஐந்து நாட்கள் பெண்ணாற்றிலும், ஐந்து நாட்கள் காவிரியிலும் திறந்து விடுகிறார்கள். இதனால் தண்ணீர் இல்லாமல் ஐந்து நாட்கள் நிலங்கள் காய்ந்து விடுகின்றன. இப்படியே செய்தால், பயிர்களை வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் போது தான் அறுவடை செய்ய முடியும். அப்போது ஒரு நாள் கன மழை பெய்தால் கூட பயிர்கள் நாசமாகிவிடும்,” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், THANGA JAYARAMAN
ஐந்து லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படிருக்கும் குறுவை பயிர்களில் கிட்டத்தட்ட சரி பாதி பறிபோகும் அபாயம் இருப்பதாகக் கூறுகிறார் திருவாரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் தங்க. ஜெயராமன்.
மயிலாடுதுறை , கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் இருப்பதால் பாதிப்பு சற்று குறைவாக இருக்கும் என தெரிவிக்கும் அவர், காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள திருவாரூர் கிழக்கு, நன்னிலம் கிழக்கு, நாகப்பட்டினம், மன்னார்குடி கிழக்கு, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் தீவிர பாதிப்பு இருக்கும் எனச் சுட்டிக் காட்டுகிறார் .
“டெல்டா பகுதியில் ஒரு விவசாயிக்கு சராசரியாக 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். ஐந்து லட்சம் ஏக்கரில் சாகுபடி என்றால் சுமார் 2 லட்சம் விவசாயிகள் இதை நம்பியுள்ளனர்,” என்கிறார்.
மேலும் பேசிய அவர், டெல்டா பகுதியின் சில மாவட்டங்களில் சமீபத்தில் லேசான மழை பெய்தது. அதனால் பயிர்கள் தப்பித்து வருகின்றன, என்கிறார். “நிலத்தடி நீர் இல்லாத இடங்களில் மேட்டூர் அணை திறந்த பிறகு சாகுபடி தொடங்கியிருப்பார்கள். அந்தப் பயிர்கள் தற்போது முளைக்கத் தொடங்கும் காலம். இளம் பயிர்களுக்கு தண்ணீர் மிக அவசியம்,” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
கர்நாடகா நீர் தரவில்லையெனில் தமிழகத்துக்கு என்ன வழிகள் உள்ளன?
கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை வழங்கவில்லை என்றால், தமிழ்நாடு காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்லவேண்டும். காவிரி நீர் மேலான்மை வாரிய உத்தரவை கர்நாடகா பின்பற்ற வேண்டும். இல்லை என்றால், மத்திய அரசின் தலையீட்டை கோரலாம். மத்திய அரசு உரிய நிவாரணம் தரவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.
தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை கர்நாடகா தராதது குறித்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவாத்தை கடந்த ஜூலை 5-ம் தேதி நேரில் சந்தித்தார்.
"தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.19 டி எம் சி நீர் கிடைக்க வேண்டும். ஆனால் 2.83 டி எம் சி நீர் மட்டுமே கிடைத்துள்ளது," என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்துக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












