பிகார்: 'பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் இன்று முதல்வராக பதவியேற்பார்' - முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி

    • எழுதியவர், அபினவ் கோயல்
    • பதவி, பாட்னாவிலிருந்து பிபிசி செய்தியாளர்

பிகாரில் நிலவும் அரசியல் குழப்பங்கள் மற்றும் ஊகங்களுக்கு மத்தியில், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு பதவியேற்பார் என்றும், ஆனால் அவரது அரசுக்கு பாஜக ஆதரவு இருக்கும் என்றும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி தெரிவித்துள்ளார்.

புதிய அரசில் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்தாலும், ஆட்சியின் பொறுப்பு பாரதிய ஜனதா கட்சியின் கையிலேயே இருக்கும் என்று அவர் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தானும், தனது கட்சியின் எம்எல்ஏக்களும் இந்த அரசில் இணைவார்கள் என்று ஜிதன் ராம் மஞ்சி கூறினார்.

எந்த அடிப்படையில் அவர் இத்தகைய கூற்றுகளை முன்வைக்கிறார், இது நடந்தால், நிதிஷ் குமாரின் உறவில் விரிசல் இருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்ற முடியுமா?

மேலும், பிகார் அரசியலில் திடீரென எப்படி பரபரப்பு ஏற்பட்டது? பிபிசிக்கு அளித்த பேட்டியில், பிகார் முன்னாள் முதல்வர் இதேபோன்ற வேறு சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

நிதிஷ் குமார் எப்போது வேண்டுமானாலும் ஆர்ஜேடியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கைகோர்க்க முடியும் என்று ஜிதன் ராம் மஞ்சி பிபிசியிடம் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்களுடன் பேசியதாகவும், அதன் பிறகு அவர்களும் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

"நிதிஷ் குமார் என்.டி.ஏ-வுடன் செல்ல விரும்புகிறார். அவர் செல்வது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. நாங்கள் நரேந்திர மோதியுடன் அதாவது என்.டி.ஏ-வுடன் இருப்போம் என்று எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது. நிதிஷ் குமார் ராஜினாமா செய்து என்.டி.ஏ-வில் இணைந்தால் நாங்கள் ஆதரிப்போம்," என்றார் ஜிதன் ராம் மஞ்சி.

ஞாயிற்றுக்கிழமை நிதிஷ் குமார் ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் ஒப்படைப்பார் என்றும், மாலை 3 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் முன்னாள் முதல்வர் கூறினார்.

அவர் கூறும் கூற்றுகள் உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் என்ன என்று கேட்டதற்கு, "இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 100 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன," என்றார் ஜிதன் ராம் மஞ்சி.

புதிய அரசாங்கத்தில் இரண்டு அமைச்சர் பதவிகள் கேட்ட ஜிதன் ராம் மஞ்சி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியதாகவும், அவரது கோரிக்கையின் பேரில் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிப்பதாகவும் ஜிதன் ராம் மஞ்சி தெரிவித்துள்ளார்.

"எங்கள் கட்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவின் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர். என்.டி.ஏ-வின் தாய்க்கட்சி பாஜக. அமித் ஷாஜி உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர்களும் நிதிஷ் குமாரை ஆதரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்," என்றார்.

ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், அதில் அவருக்கும் அவருடைய கட்சிக்கும் என்ன பங்கு இருக்கும் எனக் கேட்டதற்கு, அமையப் போகும் அரசில் இரண்டு அமைச்சர் பதவிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

"சுயேட்சை எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் பதவி வழங்கும்போது, ​​எங்கள் கட்சிக்கு நான்கு எம்.எல்.ஏ.க்களும், ஒரு எம்.எல்.சி.யும் உள்ளனர். அதற்கேற்ப இருவரை அமைச்சர்களாக்க முடிவு செய்தோம்," என்றார் மஞ்சி.

அவருக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதா என அவரிடம் கேட்டபோது, ​​'ஒப்பந்தம் எட்டப்பட்டதா இல்லையா என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால், இதுவே எங்களின் கோரிக்கை," என்றார்.

நிதிஷுடனான மோதலை உங்களால் மறக்க முடியுமா?

சமீபத்தில், பிகார் சட்டசபையில் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா மீதான விவாதத்தின்போது, ​​முதல்வர் நிதிஷ் குமார் ஜிதன் ராம் மஞ்சி மீது கோபமடைந்தார். தனது தவறு மற்றும் முட்டாள்தனத்தால் ஜித்தன் ராம் மஞ்சி பிகார் முதல்வராக ஆனார் என்றும் கூறினார் நிதீஷ் குமார்.

இதையடுத்து, நிதிஷ் குமார் குறித்து ஜிதன் ராம் மஞ்சி கூறுகையில், "அவரது மனம் சரியில்லை. அவர் வரம்பு மீறுகிறார். நாங்கள் அவரைவிட நான்கு வயது மூத்தவர்கள், அரசியல் வாழ்விலும் அவரைவிட மூத்தவர்கள்," என்று கூறியிருந்தார்.

"இத்தகைய கருத்துகள் மற்றும் கிண்டல்களுக்குப் பிறகு அவர் எவ்வாறு அரசாங்கத்தில் ஒன்றாக இருக்க முடியும்?" எனக் கேட்டதற்கு, "நிதீஷ் குமாரின் ஆட்சியாக இருந்தாலும், வழிகாட்டுதல் பாஜகவிடம் இருக்கும், நாங்கள் பாஜகவுடன் இருக்கிறோம்," என்றார்.

“முதலமைச்சர் ஆனால் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக்கொள்வார். இடையில் நாங்கள் ஒன்றாக டெல்லி செல்லும்போது நான் கேலி செய்தேன், அவர் மன்னிக்கவும் என்றார். அதனால் அரசியலில் இப்படித்தான் நடக்கிறது. கடந்த காலத்தை மறக்க வேண்டும்.."

பொது நலன் கருதி பல விஷயங்கள் புறக்கணிக்கப்படுவதாக மஞ்சி கூறினார். "இன்று பொதுநலன் சார்ந்த விஷயம். இன்று ஆட்சியை மாற்ற வேண்டியது அவசியம், இல்லையெனில் பிகார் மக்கள் அழிந்து கொண்டிருந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில் தனிப்பட்ட விஷயத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றார்.

ஆனால், 'அவரது வார்த்தைகள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த மாஞ்சி, "நித்கஷ் குமார் நிறைய செய்துள்ளார். பிரதமரை இரவு உணவிற்கு அழைத்தார், பின்னர் மறுத்துவிட்டார். ஆனால் அதை மறந்துவிட்டு நரேந்திர மோதி அவரை முதல்வர் பதவிக்கு ஏற்றுக்கொண்டார் என்றால், நாங்கள் யார்?," என்றார்.

ஜிதன் ராம் மஞ்சி பிகாரின் 23வது முதல்வராக 20 மே 2014 அன்று தனது 68வது வயதில் பதவியேற்றார். அந்த ஆண்டு ஒரு வியத்தகு வளர்ச்சியில், பிகார் முதலமைச்சரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் ராஜினாமா செய்த பிறகு தனது பெயரை முதலமைச்சராக முன்வைத்தார்.

கடந்த 2014 பொதுத் தேர்தலில் ஜேடியுவின் மோசமான செயல்பாடு காரணமாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலகினார். மேலும் முதல்வராக மஞ்சியின் பெயர் முன்வைக்கப்பட்டது.

அப்போது அவர் டம்மி முதல்வர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பத்து மாதங்களுக்குப் பிறகு, நிதிஷை மீண்டும் முதல்வராக்க கட்சி விரும்பியதால் அவரை ராஜினாமா செய்யும்படி ஜேடியு கேட்டுக் கொண்டது.

ஆனால் மஞ்சி பதவி விலக மறுத்துவிட்டார். அதன் எதிரொலியாக கட்சி அவரை வெளியேற்றியது. மறுபுறம், சட்டசபையில் மஞ்சிக்கு ஆதரவளிப்போம் என்றது பா.ஜ.க.

ஆனால் வேகமாக மாறி வந்த அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், மஞ்சி 20 பிப்ரவரி 2015 அன்று ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா என்ற கட்சியை உருவாக்கினார்.

என்ன நடக்கிறது பிகாரில்?

பிகாரில் கடந்த சில நாட்களாக அரசியல் முன்னேற்றங்கள் வேகமாக மாறி வருகின்றன. அனைத்து முக்கியக் கட்சிகள் இடையே ஒரு சுற்று கூட்டம் நடந்து வருகிறது.

நிறைய ஊகங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் நிதிஷ் குமாரிடம் இருந்தும் அவரது கட்சியில் இருந்தும் எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலைகள் ஏன் எழுந்தன?

இந்தக் கேள்விக்கு, ஜெடியு மற்றும் ஆர்ஜெடி இடையே பதற்றங்கள் ஏற்கெனவே அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாக ஜிதன் ராம் மஞ்சி கூறினார்.

கடந்த 2005ஆம் ஆண்டுக்கு முன் முதல்வராக இருந்தவர்களையும், அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளையும் மேற்கோள் காட்டி, 2005க்கு முந்தைய சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்று முதல்வர் கூறினால், அது மறைமுகமாக தேஜஸ்வி யாதவை குறிவைத்ததாக இருக்கும்.

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானபோதுதான் இந்த முழு விஷயத்திலும் திருப்புமுனை ஏற்பட்டதாக மஞ்சி நம்புகிறார்.

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டபோது, ​​கர்பூரி தாக்கூர் குடும்பவாதத்திற்கு எதிரானவர் என்றும், அவர் தனது குடும்பத்தை அரசியலுக்கு வர அனுமதிக்கவில்லை என்றும், நானும் அதைத்தான் செய்கிறேன் என்றும் நிதிஷ் குமார் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஒருவர் 75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்று ஜிதன் ராம் மஞ்சி கூறியிருந்தார்.

இந்தக் கூற்றைக் குறிப்பிட்டு, நீங்கள் 75 வயதைத் தாண்டியும் தேர்தலில் போட்டியிட்டீர்கள், இன்னும் அரசியலில் தீவிரமாக இருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து மஞ்சி கூறுகையில், 2020இல், நிதிஷ் குமாரின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிட்டேன். 2025இல் தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்ட மேலவை, ராஜ்யசபா தேர்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கேயே இருப்பதன் மூலம் நாங்கள் எதிர்காலத்திலும் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)