You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவில் மாணவர்களுக்கு எதிராக திடீரென சாலையில் அமர்ந்து போராடிய ஆளுநர் - என்ன நடந்தது?
- எழுதியவர், பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இடதுசாரி மாணவர் அமைப்பை (SFI) கண்டித்து, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ரோட்டோர கடைக்கு முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கே என்ன நடந்தது? கேரள ஆளுநரின் இந்த திடீர் போராட்டம் ஏன்?
என்ன செய்தார் கேரள ஆளுநர்?
தமிழகத்தில் தி.மு.க அரசுக்கும் – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே இருக்கும் உறவைப்போலத்தான், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் அம்மாநில ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் அரசுக்கும் இடையே அனுதினமும் ‘பனிப்போர்’ நடக்கிறது.
கேரள கம்யூனிஸ்ட் அரசு தொடர்ச்சியாக ஆளுநர் ஆரிப் முகமது கானின் செயல்பாடுகளை விமர்சித்து வருவதுடன், கேரள ஆளுநர் பா.ஜ.கவின் கொள்கைகளை அமல்படுத்தும் நபராக செயல்படுகிறார் என்று பகிரங்க குற்றச்சாட்டையும் முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறான சூழலில், நவம்பர் மாதம் கேரள பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களாக இருவரை ஆளுநர் ஆரிப் முகமது கான் நியமனம் செய்திருந்தார். ஆனால், ஆளுநர் தேர்வு செய்த இருவரும் ஏ.பி.வி.பியை சேர்ந்தவர்கள், சங் பரிவார் பின்னணி கொண்டவர்கள் என்று கூறி, அதனை எதிர்த்து மாணவர் அமைப்பினர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஆர்.ரவி, ஆளுநர் தேர்வு செய்த இரண்டு செனட் உறுப்பினர் தகுதி பெறாதவர்கள் என்று கூறி, ஆளுநரின் நியமனங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
கேரள பல்கலை கழகம் மட்டுமின்றி கோழிக்கோடு பல்கலை கழகத்திலும் ஆளுநர் ஆரிப் முகமது கான் செனட் உறுப்பினர்களை தேர்வு செய்ய முயற்சித்தார்.
உருவபொம்மை எரிப்பு – கருப்புக்கொடி போராட்டம்!
ஆளுநரின் செனட் உறுப்பினர் தேர்வை கண்டித்து, ‘‘கேரள ஆளுநர் வலதுசாரி சிந்தனையாளர்கள், சங் பரிவார் பின்னணி கொண்டவர்களை பல்கலைக் கழக செனட் உறுப்பினர்களாகவும், துணை வேந்தர்களாகவும் நியமித்து பல்கலைக் கழகங்களை காவிமயமாக்கி வருகிறார்,’’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு ஐ (SFI) தொடர்ச்சியாக ஆளுநருக்கு எதிராக மாநிலம் முழுவதிலும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு, கண்ணூர் மாவட்ட பகுதியில் ஆளுநர் ஆரிப்பின் 30 அடி உயரம் கொண்ட உருவபொம்மையை தீயிட்டு எரித்து, அதை புத்தாண்டாக கொண்டாடி தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.
சாலையில் அமர்ந்து ஆளுநர் 2 மணிநேரம் போராட்டம்
இந்த நிலையில், இன்று ஜனவரி 27ம் தேதி மதியம் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒரு நிகழ்ச்சிக்காக கொல்லம் மாவட்டம் கொட்டாரகரா நோக்கி பயணித்தார். இதை அறிந்த கேரள மாணவர் அமைப்பு நிலமேல் என்ற பகுதியில், கருப்புக்கொடி காண்பித்து ஆளுநருக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் செய்தோர் ஆளுநரின் காருக்கு அருகே வந்ததாகக் கூறி, ஆளுநர் திடீரென காரை விட்டு கீழே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆளுநரின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனடியாக ஆளுநரைச் சுற்றி மனிதச்சங்கிலி அமைத்தனர். இந்திய மாணவர் அமைப்பினரை அப்புறப்படுத்திய போலீசார், ஆளுநரை சமாதானப்படுத்தினர். இதில் சமாதானம் அடையாத ஆளுநர் அங்கிருந்த சாலையோர தேநீர்க் கடையில் பிளாஸ்டிக் சேர் ஒன்றை வாங்கி அமர்ந்து கொண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
‘‘போராட்டக்காரர்களை கைது செய்யும் வரையில் நான் இங்கிருந்து நகர மாட்டேன். மாநிலத்தின் ஆளுநரான எனக்கே பாதுகாப்பு இல்லை. போலீஸார் மாணவர்களை காப்பாற்றமுயல்கின்றனர்,’’ என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஆளுநர், போராட்டக்காரர்களை கைது செய்ய வலியுறுத்தி 2 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த விவகாரம் பெரும் பேசுபொருளான நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்து எப்.ஐ.ஆர் நகலை போலீஸார் காண்பித்த பிறகு தான், ஆளுநர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
கம்யூனிஸ்ட் அரசை சாடிய ஆளுநர்!
புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், ‘‘மாணவர் அமைப்பு என்ற பெயரில் குண்டர்கள் என் காரின் அருகே வந்து தாக்க முயன்றனர். ஆனால், கேரள போலீஸார், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறையே அதைச் செய்யவில்லை எனில் சட்டத்தை யார் காப்பது? இதுவே முதல்வருக்கு நடந்திருந்தால் போலீஸார் இப்படியா செயல்பட்டிருப்பார்கள்?
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவில் தான் மாணவர் அமைப்பு என்ற பெயரில் இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. ஒட்டுமொத்த காவல்துறையும் முதல்வரின் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இவை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவேன்,’’ எனக்கூறினார்.
ஆளுநர் புறப்பட்ட சில மணி நேர;jpjல், கேரள ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய ரிசர்வ் படையைக் கொண்ட இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆளுநரே சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம், கேரளா மட்டுமின்றி தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.
‘ஆளுநர் கல்வி நிலையங்களை காவிமயமாக்க முயல்கிறார்’
‘கேரள அரசு மீது ஆளுநர் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், இதற்கு அரசின் விளக்கம் என்ன?’ என்ற கேள்வியை, பிபிசி தமிழ் கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்துவிடம் முன்வைத்தது.
பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் ஆர்.பிந்து, ‘‘கேரள உயர்கல்வித்துறையில் ஆளுநரின் தலையீடு மிக அதிகமாக உள்ளது. ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது பதவியை வைத்து, கேரள பல்கலைக்கழகங்களை, கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார்.
சங் பரிவார பின்னணியை கொண்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக தகுதியற்றவர்களையும் செனட் உறுப்பினர்களாக சட்ட விரோதமாக நியமிக்கிறார். தொடர்ந்து இந்துத்துவாவை, சங்பரிவார சித்தாந்தத்தை பல்கலைக் கழகங்களில் கட்டமைக்க முயற்சிப்பதால் தான், அவருக்கு எதிராக போராட்டங்கள் நடக்கிறது. நாங்கள் எந்த போராட்டக்காரர்களையும் ஆதரிக்கவில்லை, ஆளுநரின் செயலை கண்டித்து மாணவர்கள் தாமாக முன்வந்து போராடுகின்றனர்,’’ என விளக்கமளித்தார்.
‘இந்துத்துவத்தை கட்டமைக்கிறார் ஆளுநர்’
பிபிசி தமிழிடம் பேசிய இந்திய மாணவர் அமைப்பின் கேரள மாநில செயலாளர் ஆர்ஷோ, ‘‘கேரளாவில் ஆளுநர் தொடர்ந்து கல்வி நிலையங்களில் இந்துத்துவத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். செனட் உறுப்பினர், துணை வேந்தர் என அனைத்திலும் சங்கபரிவார் அமைப்பை சேர்ந்தவர்களை நுழைக்கும் முயற்சியை அவர் தொடர்ந்து செய்து வருவதால், இந்திய மாணவர் அமைப்பு மட்டுமின்றி கேரளாவின் அனைத்து மாணவர் அமைப்பு இணைந்து போராட்டம் நடத்தி வருகிறது,’’ என்றார் சுருக்கமாக.
‘ஆளுநர் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது’
பிபிசி தமிழிடம் பேசிய கேரள பா.ஜ.க மாநில துணைத்தலைவரும் வழக்குரைஞருமான பி.கோபாலகிருஷ்ணன், ‘‘கடந்த மாதம் திருவனந்தபுரத்தில், மாணவர் அமைப்பு என்ற பெயரில் குண்டர்கள் இதேபோன்று ஆளுநர் ஆரிப் முகமது கான் வாகனத்தை நெருங்கி அவரை தாக்க முயன்றனர். அப்போது, உயிருக்கு பயந்து ஆளுநர் வாகனத்தை விட்டு வெளியேறி தப்பினார். இன்றும் அதேபோன்று அவரை தாக்க முயன்றுள்ளனர்.
மக்களுக்கு விரோதமாக செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் ஆதரவுடன் மாணவர் அமைப்பு என்ற பெயரில் குண்டர்கள் ஆளுநரை தாக்க முயற்சிப்பது தொடர்ந்து நடக்கிறது. இவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
கேரளாவில் சட்டம் ஒழுங்கு தோற்றுப்போய், காவல்துறையும் நீதித்துறையும் கம்யூனிஸ்ட் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதற்கு இந்தச்சம்பவங்களே சாட்சி,’’ என, கம்யூனிஸ்ட் அரசை கடுமையாக சாடுகிறார் அவர்.
‘சட்டம்-ஒழுங்கு தோற்றுள்ளது’
‘பல்கலைக் கழகங்களை காவிமயமாக்கும் முயற்சியில் ஆளுநர் ஈடுபடுகிறார்,’ என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே? என்ற கேள்வியை, கோபாலகிருஷ்ணனிடம் முன்வைத்தோம்.
அதற்கு பதிலளித்த அவர், ‘‘பல்கலைக்கழகங்களை ஆளுநர் காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை செனட் உறுப்பினர் ஆக்குகிறார் என்ற குற்றச்சாட்டெல்லாம் முற்றிலும் முட்டாள்தனமானது, பொய்யானது. தகுதியான நபர்களை ஆளுநர் தேர்வு செய்கிறார் அவ்வளவு தான்.
ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லையே? இந்த அமைப்பில் இருந்து தகுதியான நபர்கள் வந்தால் பொறுப்புகளில் ஏற்றுக்கொள்வதில் தவறு ஏதுமில்லை. ஆளுநருக்கு பா.ஜ.க துணை நிற்கும், இந்த விவகாரங்களை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்,’’ என விளக்கமளித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)