மருத்துவ காப்பீடு: இனி ஒரு ரூபாய் செலவின்றி நாடு முழுக்க சிகிச்சை பெறலாம் - புதிய விதிகள்

    • எழுதியவர், அருண் சாண்டில்யா
    • பதவி, பிபிசி செய்திகள்

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதார காப்பீட்டுதாரர்களுக்குகு 100 சதவீத பணமில்லா சிகிச்சையை வழங்குவதற்கான இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) பரிந்துரையைச் செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில், ஜனவரி 25 முதல் நாடு முழுவதும் பணமில்லா சேவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த கவுன்சில் நாட்டிலுள்ள அனைத்து பொது மற்றும் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கும் நிறுவனங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறது.

'எல்லா இடங்களிலும் பணமில்லா வசதி’ அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், சுகாதார காப்பீட்டுதாரர்கள் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எந்தவொரு நோயாளிக்கும் முன்கூட்டியே பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற முடியும்.

அதாவது சில மருத்துவமனைகளில் மட்டுமே பணமில்லா காப்பீட்டு முறை இருக்கும் என்ற நிலை மாறி அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வசதியை மருத்துவ காப்பீடு பெற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு பாலிசியின் வரம்பு எவ்வளவோ அந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை மட்டுமே பாலிசிதாரர்களிடம் இருந்து மருத்துவமனைகள் வசூலிக்க முடியும்.

இதுவரை, இதுபோன்ற வசதி அந்தந்த காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை உள்ள நடைமுறைப்படி, காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யாத மருத்துவமனைகளில் பாலிசிதாரர்கள் சிகிச்சை பெற்றிருந்தால், அவர்கள் முதலில் பில் தொகையைச் செலுத்த வேண்டும். பின்னர் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து அந்தக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு கோர வேண்டும்.

சில நேரங்களில் இந்தத் தொகை குறைவாகவோ, தாமதமாகவோ கிடைக்கக் கூடும். இந்தப் புதிய அறிவிப்பின்படி, காப்பீட்டு நிறுவனங்களுடன் மருத்துவமனைகளுக்கு ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் பணமில்லா சிகிச்சை பெற முடியும்.

48 மணிநேர விதி

காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடாத மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சைகளைப் பெற விரும்பும் பாலிசிதாரர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

காப்பீடு பொருந்தினால் மட்டுமே பணமில்லா சிகிச்சை

காப்பீட்டு பாலிசி விதிகளின்படி பாலிசிதாரர் பெற்ற சிகிச்சைக்கு காப்பீடு கவர் ஆனால் மட்டுமே இந்த பணமில்லா வசதி பொருந்தும்.

ஒரு நெட்வொர்க் மருத்துவமனையில்கூட, பாலிசியின்படி சிகிச்சையை காப்பீடு உள்ளடக்கினால் மட்டுமே பணமில்லா சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இப்போது அதே விதி மற்ற மருத்துவமனைகளின் சிகிச்சை விஷயத்திலும் பொருந்தும்.

இதுவரை, 63% பேருக்கு மட்டுமே பணமில்லா சிகிச்சை கிடைத்தது.

நூறு சதவீத பணமில்லா சேவை அறிவிப்பின்போது, 'தி ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில்' தலைவர் தபன் சிங்கேல், நாட்டில் இதுவரை 63 சதவீத சுகாதார காப்பீட்டு பாலிசிதாரர்கள் மட்டுமே பணமில்லா சேவைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் இனி 100 சதவீத மக்களுக்குப் பணமில்லா சிகிச்சைக்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.

கடந்த 2022-23 நிதியாண்டிற்கான ஐஆர்டிஏஐ ஆண்டறிக்கையின்படி, அந்த நிதியாண்டில் முழுமையாக பணமில்லா சேவைகளைப் பெற்றவர்களின் சதவீதம் 63.62 சதவீதம்.

யாருக்கு லாபம்?

சில காப்பீட்டு நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் நெட்வொர்க் மருத்துவமனைகள் இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற நேரத்தில், கடந்த காலங்களில் நெட்வொர்க் மருத்துவமனைகள் இல்லாத இடங்களில் சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இருந்தபோது சிரமம் இருந்தது.

இனிமேல் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணமில்லா சிகிச்சை பெற வாய்ப்பு இருப்பதால் இந்தப் பிரச்னை தீர்க்கப்படும். குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், முன்பெல்லாம் நெட்வொர்க் மருத்துவமனைகளைத் தவிர வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதன் மூலம் திருப்பிச் செலுத்துவதற்கான கோரிக்கையை முன்வைக்கும்போது வயதானவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தேவையான பில்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிப்பதிலும், சிரமங்கள் இருந்தன. புதிய நடைமுறையில், அதற்கான தேவை இல்லை என்பதால் இதுபோன்ற சிரமங்கள் தவிர்க்கப்படும்.

அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும்போது சரியான நேரத்தில் பணம் திரட்டுவது கடினமாக இருக்கலாம். எந்தவொரு மருத்துவமனையிலும் பணமில்லா சிகிச்சைப் பெற முடிந்தால், அவசரமாகப் பணம் திரட்ட வேண்டிய அவசியமில்லை.

இந்த நடைமுறை, காப்பீட்டாளர்கள் சேவைகளைப் பெறுவதை எளிதாக்குவதால் காப்பீட்டாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரீமியத்தை குறைக்கும் என்று காப்பீட்டுத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மருத்துவக் காப்பீடு உள்ளவர்களுக்கு சிகிச்சை பெறும்போது நிதிச் சுமையைக் குறைப்பதைத் தவிர, சிகிச்சைகள் பணமில்லா முறையில் எளிதாக சாத்தியமாகும். இதன் மூலம் காப்பீட்டின் நன்மைகளில் மக்களின் ஆர்வம் அதிகரிக்கும்.

ஹைதராபாத்தை சேர்ந்த காப்பீட்டு ஆலோசகர் ஸ்ரீனிவாஸ், “இதன்மூலம் வரும் ஆண்டுகளில் காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். காப்பீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பாகவே பாலிசிகளின் பிரீமியத்தை குறைக்கும்,” என்று கருத்து தெரிவித்தார்.

இருப்பினும், "கார்ப்பரேட் மருத்துவமனைகளைப் போல சிறிய மருத்துவமனைகளில் காப்பீட்டு அலுவல்களை மேற்கொள்ள வசதிகள் இருக்காது. எனவே, இதுபோன்ற 100 சதவீத பணமில்லா சேவையைப் பெறுவதில் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து எல்லா இடங்களிலும் இந்த வசதி கிடைக்கச் செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)