You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு ராவணனை கொண்டாட தொடங்கியது எப்போது, யாரால் தெரியுமா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ராமர் பக்தியோடு வணங்கப்படுவதைப் போலவே, ராவணனை அங்கீகரிக்கும் போக்கும் இருக்கிறது. இது எவ்வளவு காலமாக இருக்கிறது? இதற்குக் காரணம் என்ன?
ஜனவரி 22ஆம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட தினத்தன்று நாடு முழுவதும் ராமர் குறித்தும், ராமர் கோவில் குறித்தும் உற்சாகமாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. ஆனால், நாட்டின் தென் பகுதியான தமிழகத்தில், #ராவணன் என்ற ஹாஷ்டாகின் கீழ் பதிவுகள் வெளியாகின. அதில் ராவணனை முன்னிறுத்தி பலர் பதிவுகளை வெளியிட்டனர்.
ராமாயணத்தின் பிரதான எதிர் கதாபாத்திரமான ராவணன் போற்றப்படுவது இந்தியாவுக்கு புதிதல்ல. இந்தியாவின் பல கோவில்களில் ராவணனின் உருவம் வணங்கப்படுகிறது. அதற்குக் காரணம், மிகப் புனிதமான ஒரு இதிகாசத்தின் அங்கமாக ராவணன் இருப்பதுதான்.
ஆனால், தமிழ்நாட்டில் ராவணன் போற்றப்படுவதற்கான காரணங்கள் முற்றிலும் மாறானவையாக இருக்கின்றன.
ராமாயணம் தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது எப்போது?
தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காப்பியங்களில் கம்பரின் ராமாயணம் மிக முக்கியமானது. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 12ஆம் நூற்றாண்டிற்குள் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் கம்ப ராமாயணம், இயற்றப்பட்ட காலத்திலிருந்து தமிழில் பெரும் செல்வாக்கைச் செலுத்திவரும் இதிகாசமாக இருக்கிறது.
ஆனால், கம்பரால் ராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்பே தமிழில் ராமாயணக் கதை நிலவிவந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். சிலப்பதிகாரத்தில் வரும்
"அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்/
பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்றதும்"
என்ற வரிகளைச் சுட்டிக்காட்டி, சிலப்பதிகார காலத்திலேயே ராமாயணக் கதை தாக்கம் செலுத்தியது என தனது தமிழர் பண்பாடு நூலில் குறிப்பிடுகிறார் எஸ். வையாபுரிப்பிள்ளை.
இது தவிர, புறநானூறு, அகநானூறு, மதுரைக் காஞ்சி, பரிபாடல் ஆகியவற்றிலும்கூட ராமாயண பாத்திரங்களை, சம்பவங்களை உவமானமாகக் காட்டும் போக்கையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்திலும் "இராவணன் மேலது நீறு" என குறிப்பிடப்பட்டு, அவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராகச் சுட்டிக்காட்டப்படுகிறார்.
ராவணனை கொண்டாட தொடங்கியது யார், எப்போது?
19ஆம் நூற்றாண்டில்தான் ராவணனை மிக முக்கியமான அடையாளமாக தூக்கிப்பிடிக்கும் போக்கு துவங்கியது என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். "19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தத்துவவிவேசினி இதழில் மாசிலாமணி முதலியார் சில இடங்களில் ராவணனை உயர்த்திச் சொல்கிறார். அதேபோல அயோத்தி தாசரின் எழுத்துகளிலும் ராவணன் பற்றிய நேர்மறையான குறிப்புகள் தென்படுகின்றன. இதற்குப் பிறகு 20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தினர் ராவணனை மிகுந்த நேர்மறைத் தன்மை கொண்டவராக சித்தரிக்க ஆரம்பித்தனர்" என்கிறார் அவர்.
திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசன் எழுதிய "தென்றிசையைப் பார்க்கின்றேன்" என்று துவங்கும் பாடல் முழுக்க முழுக்க ராவணனைப் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது.
"குள்ளநரிச்
செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை!
என்தமிழர் பெருமான் இராவணன்காண்!" என அந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.,
இதற்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் மிக முக்கியத் தலைவரான அண்ணாவின் காலத்தில் ராவணனின் அடையாளம் மிக நேர்மறையான ஒன்றாக, ராமனுக்கு மாற்றாக முன்வைக்கப்பட ஆரம்பித்தது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
"ஆரம்ப காலத்தில் மையநீரோட்ட மரபுகளோடு தொடர்புபடுத்தப்படாமல், மாறுபட்ட சித்தாந்தங்களோடுதான் ராவணன் தொடர்புபடுத்தப்பட்டார். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் நடந்த தமிழ் மறுமலர்சிக்குப் பிறகு, ராவணன் திராவிட - தமிழ் மரபைச் சேர்ந்தவராக முன்னிறுத்தப்பட ஆரம்பித்தார்" என்கிறார் அவர்.
ஆனால், தமிழ் இலக்கிய மரபைப் பொறுத்தவரை ராவணனைத் தூக்கிப் பிடிக்கும் மரபு கிடையாது என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி. இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தப் போக்கு துவங்கியது என்பதை அவரும் வலியுறுத்துகிறார்.
"தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் இயக்கம் வலுப்பெற்றபோது, தமிழ்நாட்டில் கம்ப ராமாயணம் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது. ராமன் ஒரு முக்கிய அடையாளமாக முன்வைக்கப்பட்டார். ஆகவே, அதனை எதிர்கொள்ள திராவிட இயக்கம் ராவணனை முக்கிய அடையாளமாக முன்வைத்தது. ராமனை எதிர்மறைக் கதாபாத்திரமாக்கி, அதனைத் தாக்க ஆரம்பித்தார்கள்" என்கிறார் பொ. வேல்சாமி.
1950களின் துவக்கத்தில் திராவிட நாடு இதழில், ராம லீலாவுக்குப் பதில் ராவண லீலா நடத்தி, ராமன் உருவத்தைக் கொளுத்தினால் என்ன செய்ய முடியும் என ஒரு கட்டுரையில் கேள்வி எழுப்பினார் சி.என். அண்ணாதுரை. இதற்குப் பிறகு தென்னாட்டில் ராவண லீலா நடத்தும் காலம் வந்தே தீரும் எனக் குறிப்பிட்டார் மு. கருணாநிதி. அதற்கு முன்பே அண்ணா எழுதிய 'கம்ப ரசம்' நூல், ராமாயணத்திற்கு எதிரான திராவிட இயக்க உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஆனால், ராமன் என்ற அடையாளத்தைக் கடுமையாக எதிர்த்த பெரியார் அதற்கு மாறாக ராவணன் என்ற அடையாளத்தை தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கவில்லை என்பதையும் ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக்காட்டுகிறார்.
பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் மணியம்மையார் தலைமையிலான திராவிடர் கழகம் ராவண லீலாவை நடத்தப்போவதாக அறிவித்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையிலும் சென்னையில் உள்ள பெரியார் திடலில் ராவண லீலா நடத்தப்பட்டது. அதற்குப் பிறகும் அவ்வப்போது ராவண லீலாவை பெரியார் இயக்கங்கள் ஆங்காங்கே நடத்தி வருகின்றன.
இதற்கு நடுவில் திராவிட இயக்கப் பேராசிரியரான புலவர் குழந்தை எழுதிய 'ராவண காவியம்' 1946ல் வெளியானது. இது ராவணனை நேர்மறைப் பாத்திரமாகவும் ராமன், லக்ஷ்மணன் ஆகியோரை எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நூல் 1948ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டது. 1972ஆம் ஆண்டில்தான் இந்தத் தடை நீக்கப்பட்டது. ராவணன் மிக நல்ல குணங்களை உடையவாரகவும், போற்றத்தக்கவராகவும் ஒரு கருத்தை உருவாக்கியதில் இந்த புத்தகத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
2010ஆம் ஆண்டில் ராமாயணக் கதையைத் தழுவி மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான ராவணன் திரைப்படம், ராவணனை நல்ல பண்புகளை உடையவனாகக் காட்டியது.
"ஆனால், சாதாரண மக்கள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் வழக்கம் போலவே ராமாயணத்தை அணுகினார்கள்" என்கிறார் பொ. வேல்சாமி.
1980களின் பிற்பகுதியில் உருவான பா.ஜ.கவின் எழுச்சி, புதிய பொருளாதாரக் கொள்கை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள், மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அமலாக்கம் ஆகியவற்றிற்கு மத்தியில் ராவணனை மாற்று அடையாளமாக முன்னிறுத்துவதற்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இப்போது ராமர் கோவில் திறக்கப்பட்டதை ஒட்டி, மீண்டும் ராவணனின் அடையாளம் கவனத்திற்கு வந்திருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)