You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை: மீரா சாலையில் முஸ்லிம்களின் கடைகளை இடித்த அரசின் புல்டோசர்கள் - பிபிசி கள ஆய்வு
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ளது மீரா சாலை. அங்குள்ள நயா நகர் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி நகராட்சி நிர்வாகம் போலீசார் பாதுகாப்பு மற்றும் புல்டோசர் உதவியுடன் அகற்றியுள்ளது.
ஜனவரி 22ஆம் தேதியன்று, அயோத்தியில் குடமுழுக்கு நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஜனவரி 21 இரவு, மும்பையின் மீரா சாலையில் இருந்த வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக சொல்லப்பட்டது.
கல்வீச்சு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்தார். இதன் பின்னணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நயா நகர் பகுதியிலுள்ள ஹைதாரி சௌக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாலையோரம் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 15-20 கடைகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 21ஆம் தேதியன்று காவிக்கொடி கட்டப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு வாக்குவாதம் நடந்ததாகவும் அதைத் தொடர்ந்து 22ஆம் தேதி நடந்த பேரணியில் சர்ச்சை ஏற்பட்டதாகவும் கூறிய காவல்துறை துணை ஆணையர் ஜெயந்த் பஜ்பலே கல்வீச்சு எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில், போலீசார் இதுவரை வாரன்ட் இன்றிக் கைது செய்யக்கூடிய பிரிவில் 10 குற்றங்களும் வாரன்ட் இன்றிக் கைது செய்ய முடியாத பிரிவில் 8 குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்து, முஸ்லிம் இரு தரப்பில் இருந்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பு தெளிவுபடுத்தியது.
சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவே இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார் வஞ்சித் பகுஜன் அகாடியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர். மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான மனோஜ் ஜாரங்கேவின் அணிவகுப்பைச் சீர்குலைப்பதற்காகவே இந்தப் பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக எம்.ஐ.எம் கட்சியின் எம்.பி இம்தியாஸ் ஜலீல் குற்றம் சாட்டியுள்ளார்.
‘ராம் ராஜ்ஜிய ரத யாத்திரை’
ஜனவரி 21, 2024 அன்று மாலை, சிவசேனாவை (ஷிண்டே குழு) சேர்ந்த மீரா பயந்தரின் சட்டமன்ற உறுப்பினர் விக்ரம் பிரதாப் சிங், ‘ராம ராஜ்ஜிய ரத யாத்திரை’ என்ற பேரணிக்கு ஏற்பாடு செய்தார்.
அன்று மாலை ஐந்து மணிக்கு பேரணி முடிந்ததாக விக்ரம் பிரதாப் சிங் கூறுகிறார். “எங்கள் பேரணியில் அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். கிறிஸ்தவம், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். சுமார் 500 முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். மொத்தம் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். பேரணி அன்று மாலை ஐந்து மணிக்கு நிறைவடைந்தது.”
மேற்கொண்டு பேசியவர், “இரவில் ஒரு குடும்பம் வெளியே சென்றுகொண்டிருந்தபோது, வேறு சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்துதான் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.
பின்னர் மீண்டும் 22ஆம் தேதி அங்கு அதற்கு எதிர்வினையாக சில இடங்களில் நாசவேலைகள் நடந்தன,” என்கிறார் அவர்.
ஆனால், “மீரா பயந்தரில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. நயா நகர் பகுதியைச் சேர்ந்த மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இது வெளியாட்களின் வேலை. போலீசார் விசாரிக்க வேண்டும்,” என்றார் விக்ரம் பிரதாப் சிங்.
இந்த சர்ச்சைகள் அதோடு ஓயவில்லை. ஜனவரி 23ஆம் தேதியன்று மாலை, முஸ்லிம் சமுதாய மக்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
மீரா சாலை பகுதியிலுள்ள நயா நகரில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புப் பணி நடைபெற்றது. அதில், பல ஆண்டுகளாக அங்கு தொழில் நடத்தி வந்தவர்களின் கடைகள் அகற்றப்பட்டன.
அயோத்தியில் குடமுழுக்கு நடந்ததற்கு அடுத்த நாளில் இது மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜனவரி 21ஆம் தேதியன்று இரவு இரு குழுக்களிடையே தகராறு ஏற்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
இந்தக் கடைகள் மீது ஓரிரு முறை நடவடிக்கை எடுக்கப்பட்டு, நோட்டீஸ்களும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அங்குள்ள கடைக்காரர்கள் பிபிசி மராத்தியிடம் பேசுகையில், பல ஆண்டுகளாகத் தாங்கள் கடைகள் நடத்தி வருவதாகவும், தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நடவடிக்கை இடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
‘பெயர்களைக் கேட்டு டெம்போவை உடைத்தனர்’
மீரா சாலையில் வசிக்கும் ஒருவர் பிபிசி மராத்தியிடம் அவர்களுக்கு என்ன நடந்தது எனக் கூறினார்.
ஜனவரி 23 அன்று மாலை 7:30 மணியளவில் மீரா சாலையிலுள்ள செக்டார் எண் 3-இன் அருகே கார்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவரும், பாதிக்கப்பட்டவருமான அப்துல் ஹக் சௌத்ரி பிபிசியிடம் பேசியபோது, “பயந்தரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது கார் திடீரென தாக்கப்பட்டது. நீங்கள் இந்துவா, முஸ்லிமா என்று கேட்டனர். அது டெம்போவிலும் எழுதப்பட்டிருந்தது.
பின்னர் அவர்கள் டெம்போவை தாக்கினார்கள். அவர்கள் கையில் வாட்களும் இருந்தன. நாங்கள் அங்கிருந்து ஓடாமல் இருந்திருந்தால் எங்களையும் கொன்றிருப்பார்கள். அவர்கள் ஜெய் ஸ்ரீராம் எனவும் முழக்கமிட்டனர்,” என்றார்.
தாக்குதலில் அப்துல் ஹக் சௌத்ரியின் ஓட்டுநர் காயமடைந்து தையல் போடப்பட்டு, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அவர். மேலும் பேசியவர், “அவர்கள் எங்கள் காரை மட்டுமல்ல, சுற்றியுள்ள கார்களையும் தாக்கினார்கள். ரிக்ஷாவை கூடத் தாக்கினார்கள்,” என்றார்.
22 ஆண்டுகளாக இருந்த கடை மீது திடீர் நடவடிக்கை
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கேரேஜ் உரிமையாளர் முகமது ஷேக் பேசியபோது, “நாங்கள் கடையில் இருந்ததால், எங்களை கைகளால் வெளியே தள்ளிவிட்டு, புல்டோசரை நேரடியாக கடைக்குள் ஓட்டிச் சென்றார்கள். எதற்காக கடை இடிக்கப்படுகிறது எனச் சொல்லவில்லை, அதைக் கேட்கவும் வாய்ப்பு தரவில்லை. 22 ஆண்டுகளாக இங்கு கேரேஜ் வைத்துள்ளோம். ஆனால், இப்படியொரு நடவடிக்கையைப் பார்த்ததே இல்லை. எங்களுக்கு சுமார் 5, 6 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இங்கு எதுவுமே நடக்கவில்லை. அப்படியிருந்தும் கேரேஜ் ஏன் இடிக்கப்பட்டது என்றே தெரியவில்லை. இப்போது மீண்டும் அதைக் கட்டிக்கொள்ள அனுமதிப்பார்களா என்றும் தெரியாமல் நிற்கிறோம்,” என்றார்.
மேலும், அங்குள்ள வெங்காயம், பூண்டு விற்பனைக் கடை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிபிசி மராத்தியிடம் பேசிய கடை உரிமையாளர் தமது உடைமைகள் அனைத்தும் உடைக்கப்பட்டதாகக் கூறினார்.
“கடந்த இரண்டு நாட்களில் மீரா சாலையில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்கள். நான் 40 ஆண்டுகளாக இங்குதான் இருக்கிறேன்,” என்கிறார் அவர்.
மேற்கொண்டு பேசியவர், “போலீசார் எங்களை வெளியேற்றி, கடைகளை இடித்துத் தள்ளினார்கள். நான் இங்கு 40 ஆண்டுகளாகக் கடை வைத்துள்ளேன். என்னிடம் மின்வாரிய மீட்டர் உள்ளது. மின் கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் எதுவும் சொல்லப்படவில்லை. சொல்லியிருந்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. பணத்தைக்கூட வெளியே எடுக்க அனுமதிக்கவில்லை. எனது கடைக்கு சுமார் 50,000 ரூபாய் வரை நஷ்டம் ஆகியிருக்கும்,” என்றும் கூறினார்.
எதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தனக்குப் புரியவில்லை என்றும் நிர்வாகத்திடம் எதுவும் பேசவில்லை என்றும் கூறிய அவர், அடுத்து என்ன செய்வதென்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
முஷ்டாக் என்ற கடை உரிமையாளர் பிபிசியிடம் பேசியபோது, “நாங்கள் இந்தக் கடையை நம்பித்தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். ஆனால், தற்போது கடை இடிக்கப்பட்டுவிட்டது. எதற்காக என்றுகூடச் சொல்லப்படவில்லை. தினசரி சம்பாதித்தால்தான் நாங்கள் சாப்பிட முடியும். இன்று வேலை இல்லையென்றால் நாளைய தினம் எப்படிப் போகும் என்று அனைவரும் அச்சத்தில் இருக்கிறோம்,” என்றார்.
சம்பவம் குறித்து விவரித்தவர், “நாங்கள் கடையில் அமர்ந்திருந்தோம். அவர்கள் வந்து எங்களை வெளியே வரச் சொன்னார்கள். எல்லா கடைகளையும் இடித்தார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. பதற்றம் மற்றும் சர்ச்சைகள் நிலவியது வேறு இடத்தில், இங்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால், இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார் முஷ்டாக்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)