அயோத்தி ராமர் கோவில் பற்றி இஸ்லாமிய நாடுகள் கூறுவது என்ன?

இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு(OIC) அயோத்தியில் ராம் கோவில் கட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஓஐசி செவ்வாயன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், "இந்திய நகரமான அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் 'ராமர் கோவில்' கட்டப்பட்டது கவலைக்குரியது,” என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் கூறியுள்ளன.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோவிலை ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், பாலிவுட்டின் பிரபல நடிகர், நடிகைகள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு ஒரு நாள் கழித்து, ஜனவரி 23 அன்று மசூதிக்கு பதிலாக ராமர் கோவில் கட்டப்படுவதற்கு ஓஐசி கண்டனம் தெரிவித்துள்ளது. அதுகுறித்த தனது அறிக்கையில், "ஓஐசி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலின் முந்தைய கூட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டிற்கு ஏற்ப, பாபர் மசூதி போன்ற முக்கியமான இஸ்லாமிய தளங்களை அழிக்கும் இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்தியா தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)