மிஸ்டர் பீஸ்ட்: எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரே வீடியோவில் 2.7 கோடி ரூபாய் வருமானம் பெற்றது எப்படி?

உலகின் மிகவும் பிரபலமான யூட்யூபரான மிஸ்டர்.பீஸ்ட் எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றிருப்பதாக கூறி உலகை ஆச்சரிய பட வைத்துள்ளார்.

முன்னதாக எக்ஸ் நிறுவனம் தங்களது விளம்பர வருமானத்தில் இருந்து சிறிய பகுதியையே பகிர்ந்து கொள்வதால் அந்த தளத்தில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் எந்த பலனும் இல்லை என்று கூறியிருந்தார் அவர்.

ஆனால், கடந்த வாரம் எக்ஸ் குறித்த தனது கருத்தை மாற்றி கொண்டார். காரணம் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பழைய வீடியோ ஒன்று இது வரை 16 கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.

2022 அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அந்நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற பல்வேறு உத்திகளை செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க்.

அதில் உயர்நிலையில் உள்ள க்ரியேட்டர்ஸ்களுடன் விளம்பர வருவாயை பகிர்ந்து கொள்ளும் திட்டமும் அடங்கும். யூட்யூப் போன்ற இதர தளங்களும் இதை ஏற்கனவே செய்து வருகின்றன.

ஆனால், எக்ஸ் தளத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் மஸ்க் இந்த திட்டத்தை செயல்படும் ஒன்றாக பார்க்கவில்லை.

போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தொடர்ந்து விளம்பரதாரர்களிடம் மஸ்க் உரசல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாயும் வீழ்ச்சி நிலையில்தான் இருக்கிறது.

யார் இந்த மிஸ்டர் பீஸ்ட்?

மிஸ்டர் பீஸ்ட்டின் உண்மையான பெயர் ஜிம்மி டொனால்ட்சன். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் யூட்யூப் வழியாக மில்லியன்கணக்கான டாலர்களை சம்பாதித்து வருகிறார். அதே சமயம் அதில் ஒரு பகுதியை நன்கொடையாகவும் தருகிறார்.

இவரது பிரதான யூட்யூப் சேனலான ‘மிஸ்டர் பீஸ்ட்’ - க்கு 23 கோடியே 40 லட்சம் பின்தொடர்பவர்கள் (Subscribers) உள்ளனர். இவருக்கு மேலும் நான்கு சேனல்களும் உள்ளது.

அதில் ‘மிஸ்டர் பீஸ்ட்’-க்கு 3 கோடியே 63 லட்சம், ‘பீஸ்ட் ரியாக்ட்ஸ்’ - க்கு ஒரு கோடியே 19 லட்சம், ‘மிஸ்டர் பீஸ்ட் கேமிங்’ சேனலுக்கு 4 கோடியே 14 லட்சம் மற்றும் ‘பீஸ்ட் பிலான்த்ரோபி’-க்கு 2 கோடியே 12 லட்சம் பின்தொடர்பவர்கள் வீதம் உள்ளனர்.

மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 4 கோடியே 93 லட்சம் மற்றும் எக்ஸ் தளத்தில் 2 கோடியே 71 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

எக்ஸ் தளத்தில் இவரது பதிவுகளை 100 கோடி பார்வையாளர்கள் பார்த்தாலும் , அவருக்கு சரியாக வருமானம் கிடைப்பதில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் அவர்.

ஆனால் பின்னதாக அவரது வீடியோக்களில் ஒன்று எக்ஸ் தளத்தில் எவ்வளவு சம்பாதிக்கும் என்று பார்க்க ஆர்வமாக உள்ளதாக கூறி ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

அதன் பின்பு அந்த வீடியோவின் பார்வையாளர்கள் மற்றும் வருவாய் குறித்து பதிவிடப் போவதாக தெரிவித்திருந்தார் அவர். அப்படி அவர் வெளியிட்ட உண்மைதான் உலகையே உலுக்கியுள்ளது. அந்த வீடியோவால் தனக்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதை அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில். “விளம்பரதாரர்கள் இந்த வீடியோ மக்களின் கவனத்தை ஈர்ப்பதை பார்த்திருக்க வேண்டும். அதற்கு பின் இதில் முதலீடு செய்துள்ளார்கள். அதனாலேயே நான் இவ்வளவு சம்பாதித்திருக்கலாம்” என்றும் எழுதியுள்ளார்.

மேலும் அவர் ஏற்கெனவே செய்தது போல, இந்த வருவாயையும் 10 அறிமுகமில்லாத நபர்களுக்கு பிரித்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதுவே மிஸ்டர் பீஸ்ட்டாக இல்லாமல், வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருவாய் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

“2.79 கோடி வருவாய் பெற்றுள்ளதாக அவர் கூறுகிறார். வீடியோவுக்கு இந்த வருவாய் நல்லதுதான். ஆனால், இந்தளவுக்கு வருவாய் பெறுவதற்கு, உங்கள் பதிவுக்கு பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் (Traffic) கொண்டிருக்க வேண்டும்” என்று கூறுகிறார் W மீடியாவின் கார்ஸ்டென் வைட்.

இன்ஃப்ளூயன்ஸர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இணைய பிரபலங்கள் இணையம் வழியாக அதிக பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், அது அவர்களின் பிரபலத்தன்மையை பொறுத்தது. அனைவராலும் இந்தளவு பணத்தை சம்பாதிக்க முடியாது.

அவர்களின் வருவாய் குறித்த தகவல் பொதுவெளியிலும் கூட கிடைப்பதில்லை. இணைய நிறுவனங்களும் தனித்துவமான கன்டன்டுகளுக்காக இவர்களுக்கு சிறப்பு கட்டணம் வழங்குவதாக நம்பப்படுகிறது.

இந்த வருவாயால் ஏற்படும் தாக்கம் என்ன?

மிஸ்டர் பீஸ்ட் ஓர் ஆண்டில் 54 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 440 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டியுள்ளதாக நவம்பர் 2022இல் செய்தி வெளியிட்டது போர்ப்ஸ் இதழ்.

அதிலிருந்து மிஸ்டர் பீஸ்ட்டை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்துள்ளது. தற்போது அவரது ஆண்டு வருமானம் 233 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இவர் மிகவும் பிரபலமாக இருப்பதால் பல நிறுவனங்களும் இவருடன் இணைந்து பணியாற்றுகின்றன. தான் வீடியோக்களை உருவாக்க கோடிகளில் பணம் செலவழிப்பதாக கூறுகிறார் அவர்.

இவர் இந்த முறை அவர் பெரிய ஸ்ட்ரீமிங் தளத்தோடு முக்கியமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட போவதாகவும் கூறப்படுகிறது.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, செப்டம்பர் 2023-லேயே யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் வெவ்வேறு கார்களின் விலை குறித்து அவர் பேசியுள்ளார்.

தற்போது வரை, அந்த வீடியோவை யூட்யூபில் 22 கோடி பேர் பார்த்துள்ளனர். இவரது பெரும் பகுதி வருமானம் இது போன்ற யூட்யூப் வீடியோக்கள் வழியாகவே வருகின்றன.

இது போன்ற இன்ஃப்ளியுன்ஸர்களின் வருமானத்தை மதிப்பிடும் தளமான Vierism, யூடியூபில் பதிவிடப்படும் மிஸ்டர் பீஸ்ட்டின் ஒரு வீடியோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் ஈட்டுவதாக மதிப்பிட்டுள்ளது.

ஆனால், புதிய கன்டென்ட்டுகள் மட்டுமே எக்ஸ் தளத்தில் வருவாய் ஈட்ட முடியும்.

"எதிர்காலத்தில் எக்ஸ் தளத்தின் வருவாய் எங்கு செல்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது" என்று கூறுகிறார் Vierism தளத்தின் நிறுவனர் ஜென்னி சாய்.

தற்போது வரையில் எக்ஸ் தளத்தில் உள்ள 'இம்ப்ரெஷன்' என்றால் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறுகிறார் நெபுலாவின் தலைமை நிர்வாகி டேவ் விஸ்குல். நெபுலா என்பது உலகின் பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும்.

ஆனால், தற்போது இன்ஃப்ளியுன்ஸர்கள் எக்ஸ் தளத்தையும் முக்கியமானதாக எடுத்து கொள்ள முடியும் என்கிறார் அவர்.

“நீங்கள் ஏற்கனவே யூட்யூபுக்காக வீடியோக்களை உருவாக்குகிறீர்கள் என்றால், தற்போது அதை எக்ஸ் தளத்திலும் பதிவேற்ற முடியும். அதில் என்ன ஆகி விடப்போகிறது?” என்று கேட்கிறார் டேவ் விஸ்குல்.

ஆனால், இணையத்தில் பிரபலமாக இல்லாதவர்கள் பெரும்பணம் ஈட்டுவது எளிதல்ல என்றும் கூறுகின்றார் அவர்.

பிபிசி தொழில்நுட்ப ஆசிரியர் ஜோய் க்ளீன்மேன் கூறுவது என்ன?

இணையத்தில் உள்ள பெரும்பான்மையான க்ரியேட்டர்களால் மிஸ்டர் பீஸ்ட்டின் வருவாய்க்கு அருகில் கூட வர முடியாது. அவரை போல் உலகளவிலான ஊடகங்களின் வெளிச்சத்தையும் பெற முடியாது.

தனது வருமானத்திற்கும் எக்ஸ் தளத்தில் உள்ள பயனர்களின் அனுபவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மிஸ்டர் பீஸ்ட்டே கூறுகிறார்.

ஆனால் இந்த எண்ணிக்கை எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லிண்டா யாச்சரினோவை நிச்சயம் மகிழ்விக்கும். விளம்பர வணிக உலகில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்த பிறகு கடந்த வருடம் எக்ஸ் தளத்தில் இணைந்தார் அவர்.

தனிப்பட்ட முறையில் எக்ஸ் தளத்தின் மீதான பிம்பத்துடன் அவர் போராட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தளத்திலும் விளம்பரங்கள் சிறப்பாக செயலாற்ற தொடங்கியதன் பிறகு அவர் உற்சாகமடைந்திருப்பார்.

யூத மக்களுக்கு எதிரான கன்டன்டுகளை எக்ஸ் தளம் எவ்வாறு கையாள்கிறது என்று உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் சமயத்தில், கடந்த வாரம் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ஆஷ்விட்ஸ் முகாமுக்கு பயணம் சென்றுள்ளார்.

இதுவே எக்ஸ் தளத்தின் முக்கியமான விளம்பரதாரர்கள் பலரும் கவலைப்படும் விஷயம். மேலும் மஸ்க் உடனடியாக சரி செய்ய வேண்டிய பிரச்னையும் கூட.

சமீப காலமாகவே ஒரு பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனத்துடன் தனது நிகழ்ச்சிக்காக மிஸ்டர் பீஸ்ட் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அது மட்டும் உண்மையென்றால், தற்போது எக்ஸ் தளத்தில் அவர் செய்திருக்கும் இந்த சோதனை, அவருக்கு அதிகமான வருவாயை பெற்றுத்தர வாய்ப்புள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)