You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொலைக் குற்றவாளிக்கு நைட்ரஜனை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றிய அமெரிக்கா
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் மரணதண்டனை முறைகளின் கிராஃபிக் விளக்கங்கள் உள்ளன, இது சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் கொலைக் குற்றவாளி கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக், 58 வயதான ஸ்மித் தனக்கு எதிரான மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளில் தோல்வியடைந்தார்.
2022 ஆம் ஆண்டில், ஸ்மித்துக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்தது.
மரண தண்டனை தகவல் மையத்தின்படி, உலகில் எங்கும் நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் ஸ்மித் ஆவார்.
முகமூடி மூலம் நைட்ரஜனை செலுத்தினால் அவர் வாந்தியில் மூச்சுத் திணறல் ஏற்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அது சித்திரவதைக்கு சமம் என்று ஐ.நா. தெரிவித்திருந்தது.
இதுவரை பரிசோதனை செய்யப்படாத இந்த புதிய மரணதண்டனை முறை குறித்த எண்ணங்களால் நிம்மதியில்லாமல் தவிப்பதாக ஸ்மித் பிபிசியிடம் கூறியிருந்தார்.
கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு முதல்முறையாக தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்த போது, அலபாமா சிறையின் மரணதண்டனை நிறைவேற்றும் ஊழியர்களுக்கு அவரைக் கொல்ல பல மணிநேரம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
'டெத் சேம்பர்' எனப்படும் மரண அறை
ஹோல்மன் கரெக்ஷனல் ஃபெசிலிட்டி எனப்படும் அலபாமா சிறையின் 'டெத் சேம்பர்' என்று அழைக்கப்படும் அறையில், மரணதண்டனை விதிக்கப்பட்ட ஸ்மித்தைக் கட்டி வைத்து, அவரது உடலில் ஒரு கொடிய ரசாயன கலவையை செலுத்த முயன்றனர்.
ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. காரணம், ஸ்மித்தின் உடலில் ரசாயனத்தை செலுத்த சரியான நரம்பை கண்டறிய முடியவில்லை. நேரம் நள்ளிரவைத் தாண்டியதால், அரசின் மரண உத்தரவு காலாவதியானது. ஊழியர்கள் முயற்சியைக் கைவிட்டனர். நரம்பைக் கண்டறிய எடுக்கப்பட்ட முயற்சிகளால், ஸ்மித்தின் உடலில் பல வெட்டுகள் ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.
இது நடந்தது நவம்பர் மாதம், 2022ஆம் ஆண்டில். இப்போது அலபாமா சிறை நிர்வாகம் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்ற முயற்சி செய்தது.
ஸ்மித்தின் முகத்தில் காற்று புகாத முகமூடியை மாட்டி, அதன் மூலம் நைட்ரஜன் வாயுவை செலுத்தி சுவாசிக்க வைப்பது தான் திட்டம். நைட்ரஜன் வாயுவை சுவாசிப்பதன் மூலம், உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத் திணறி மரணமடையும் திட்டத்தை அங்கீகரித்துள்ளது அமெரிக்க அரசு.
ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் இதைப் பற்றி பேசுகையில், "இதுவரை பயன்படுத்தப்படாத இந்த தண்டனை முறை மிகவும் கொடூரமான, மனிதாபிமானமற்ற ஒரு இழிவான நடத்தையாகும், இது நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.
மரண தண்டனையை தடை செய்ய ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் வைத்த கோரிக்கையை அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் நிராகரித்தது.
ஸ்மித் செய்த குற்றம் என்ன?
1989-இல் ஒரு போதகரின் மனைவியான எலிசபெத் சென்னட்டைக் கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற இருவரில் ஸ்மித்தும் ஒருவர். கூலிப்படை மூலமாக 1,000 டாலர்கள் கூலிக்காக கொலை செய்யப்பட்டார் எலிசபெத் சென்னட்.
அமெரிக்காவில் மரணதண்டனைக்கு இரண்டு முறை அழைத்துச் செல்லப்பட்ட ஒரே கைதி ஸ்மித். நைட்ரஜன் வாயு மூலம் மரணத்தை சந்தித்த முதல் நபரும் இவரே.
"உடலும் மனதும் மிகவும் பலவீனமாக, நொறுங்கி கிடப்பதைப் போல உணர்கிறேன். தொடர்ந்து எடை குறைந்து வருகிறது," என ஒரு இடைத்தரகர் மூலம் பிபிசி கேட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் ஸ்மித்.
அலபாமாவில் மரணதண்டனைக் கைதிகளை பத்திரிகையாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் நாங்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம், ஆனால் அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் நேர்காணலைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
"எனக்கு எப்பொழுதும் குமட்டல் உணர்வு இருக்கிறது. பேரச்சத் தாக்குகள் (Panic attacks) தொடர்ந்து உருவாகின்றன. இது நான் தினசரி எதிர்கொள்ளும் துன்பங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அடிப்படையில் இதுவே விகப்பெரிய சித்திரவதை," என்று அவர் எழுதினார். நிலைமை மேலும் மோசமாகும் முன் இந்த குறிப்பிட்ட மரணதண்டனை முறையை நிறுத்த அலபாமா அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
நைட்ரஜன் வாயுவை உடலில் செலுத்துவது விரைவில் சுயநினைவை இழக்கச் செய்யும் என்று அரசு கூறுகிறது, ஆனால் அதற்கு எந்த நம்பத்தகுந்த ஆதாரத்தையும் அரசு முன்வைக்கவில்லை.
நைட்ரஜன் கசிவின் அபாயங்கள்
இந்த மரணதண்டனை மூலம் பேரழிவு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதைக் குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் எச்சரித்தனர். வலிப்பு ஏற்பட்டு உயிர் போகாமல், கோமா நிலைக்குள் செல்வது முதல் முகமூடியிலிருந்து வாயு கசிந்து, ஸ்மித்தின் ஆன்மீக ஆலோசகர் உட்பட அறையில் உள்ள மற்றவர்களைக் கொல்லும் வாய்ப்பு கூட இருக்கிறது என எச்சரித்தனர்.
"ஸ்மித் இறப்பதற்கு பயப்படவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த மரண தண்டனை முறையின் மூலமாக தான் மேலும் சித்திரவதை செய்யப்படுவோமோ என அவர் பயப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்," என்று அவரது ஆன்மீக ஆலோசகர் மற்றும் ரெவ் டாக்டர், ஜெஃப் ஹூட் கூறுகிறார். நைட்ரஜன் கசிவின் அபாயங்களை பட்டியலிடும் மாநிலத்தின் சட்டப்பூர்வ பொறுப்புத் துறப்பு அறிக்கையில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
"நான் அவரிடமிருந்து பல அடி தூரத்தில் இருப்பேன், என் உயிரைப் பணயம் வைத்து இதைச் செய்கிறேன் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். குழாயில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், நைட்ரஜன் அறைக்குள் பரவுவதற்கு அது வழிவகுக்கும்" என்று டாக்டர் ஹூட் பிபிசியிடம் கூறினார்.
இந்த மரண தண்டனை முறை குறித்து விசாரணைக் குழு ஒன்று ஐ.நா.வுக்கு அறிக்கை அனுப்பியது. அதில் உறுப்பினராக உள்ள இணை ஆசிரியர் ஒருவர் இந்த முறை மிகவும் ஆபத்தானது என்று கூறுயிருந்தார்.
எமோரி யுனிவர்சிட்டியின் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மயக்கவியல் துறையில் இணைப் பேராசிரியரான டாக்டர் ஜோயல் சிவோட், "அலபாமா சிறைச்சாலை அதிகாரிகள் 'கொடூரமான' மரணதண்டனைகள் மற்றும் அதன் மூலம் கிடைத்த 'பயங்கரமான' சாதனைகளுக்கு பெயர் போனவர்கள்" என்று குற்றம் சாட்டினார்.
"மொத்த அமெரிக்காவில் கென்னத் ஸ்மித் தான் மிக மோசமான மனிதர் என நாமே கற்பனை செய்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஏனென்றால் அலபாமா சிறைச்சாலை அவரைக் கொல்வதில் மிகவும் முனைப்பாக உள்ளது. அவரைக் கொல்லும் முயற்சியில் அவர்கள் மற்றவர்களைக் கொல்லக் கூட தயாராக இருக்கிறார்கள்" என்று டாக்டர் ஜோயல் பிபிசியிடம் கூறினார்.
"துப்பாக்கிச் சூடு மூலம் மரணதண்டனை பெறப்போகும் நபருக்கு அருகில் அனைத்து சாட்சிகளையும் அதிகாரிகளையும் வரிசையாக நிற்க வைப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அனைவரையும் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்று சொல்லி பொறுப்புத் துறப்பு பாத்திரத்தில் கையெழுத்திட சொல்கிறார்கள்"
"ஏனென்றால் துப்பாக்கியால் சுடப்போகும் நபர்களுக்கு சரியாகத் சுடத் தெரியாது. அதனால் அவர்கள் உங்களையும் சுட்டுக் கொல்லும் வாய்ப்பு உள்ளது என்று சொன்னால் எப்படி இருக்கும். இதுவே நைட்ரஜன் வாயு தண்டனை முறையில் நடக்கிறது" என்று அவர் கூறினார்.
"நைட்ரஜன் வாயுவைப் பற்றி நாம் அறிந்தது என்னவென்றால், ஆரோக்கியமான தன்னார்வலர்கள் கொண்டு நடத்தப்பட்ட தொடக்க ஆய்வில், கிட்டத்தட்ட அனைவருக்கும், வாயுவை சுவாசித்த 15 முதல் 20 வினாடிகளில் ஒரு வலிப்பு ஏற்பட்டது," என்று அவர் கூறினார்.
தோல்வியில் முடிந்த மரண தண்டனை முயற்சிகள்
அமெரிக்காவில் அதிகபட்ச தனிநபர் மரணதண்டனை விகிதங்களை உடைய மாகாணங்களில் அலபாமாவும் ஒன்றாகும், தற்போது அங்கு 165 பேர் மரணதண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர்.
2018ஆம் ஆண்டு முதல், வெவ்வேறு கைதிகளுக்கு மூன்று முறை விஷ ஊசி மூலமாக மரணதண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு அரசு பொறுப்பேற்றுள்ளது. இத்தோல்விகள் ஒரு உள் ஆய்வுக்கு வழிவகுத்தது, அதன் முடிவில் கைதிகள் மீதே குற்றம் சாட்டப்பட்டது.
கடைசி நேரத்தில் மரண தண்டனையை நிறுத்தி வைப்பதற்காக, அவசர நீதிமன்ற மேல்முறையீடுகள் மூலம் கைதிகளின் உயிரைக் காப்பாற்ற வழக்கறிஞர்கள் முயன்றதாகவும் அந்த ஆய்வு கூறியது. இத்தகைய செயல்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஒரு 'தேவையற்ற காலக்கெடு அழுத்தத்தை' சிறை ஊழியர்களுக்கு ஏற்படுத்தியதாக கூறியது.
நீதித்துறை கொலைகளை நிறுத்தும் அதிகாரம் கொண்ட அலபாமா ஆளுநர் கே ஐவி, நிபுணர்கள் எச்சரிக்கைகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஐ.நா.வின் கவலைகள், கைதி ஸ்மித்தின் கவலைகள் போல் ஆதாரமற்றவை என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கூறியிருக்கிறது.
அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணை நீதிமன்றம் ஸ்மித்தின் கேள்விகளை ஆராய்ந்தது, பல மருத்துவ நிபுணர்களிடமிருந்து கருத்து கேட்டது, மேலும் நைட்ரஜன் ஹைபோக்ஸியா பற்றிய ஸ்மித்தின் கவலைகள் 'வெறும் ஊகம்' மற்றும் 'கோட்பாட்டு ரீதியிலானது' மட்டுமே என்று தீர்மானம் எடுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நைட்ரஜன் வாயு மூலம் மரணதண்டனையை அங்கீகரிக்க ஆதரவாக வாக்களித்த குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர் ரீட் இங்க்ராம், ஐ.நாவின் விமர்சனத்தை நிராகரித்தார்.
"இழிவுபடுத்துவது பற்றி எனக்குத் தெரியாது, மனிதாபிமானமற்றது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் தண்டனை முறையை நாங்கள் மேம்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன். கொல்லப்பட்ட பெண்ணிற்கு அவர் செய்ததை விட இந்த தண்டனை முறை சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
மேலும், "எங்கள் ஆளுநர் ஒரு கிறிஸ்தவர். அவர் இந்த முழு விஷயத்தை குறித்தும் தீவிரமாக விவாதித்தார். இது சரியான முறை தான் என அவர் நினைக்கிறார். இது சற்று மனதை உலுக்கும் கனமான முடிவு தான், ஆனால் அது தானே சட்டம்" என்று கூறினார் ரீட் இங்க்ராம்.
எலிசபெத் சென்னட்டின் குடும்பத்தினரை பிபிசி அணுகியது, ஆனால் வியாழக்கிழமை வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.
1996இல் ஒரு நடுவர் மன்றம் ஸ்மித்திற்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனையை பரிந்துரைத்தது, ஆனால் நீதிபதி அதை நிராகரித்து அவருக்கு மரணதண்டனை விதித்தார். வழக்கு விசாரணையில், எலிசபெத் கொல்லப்பட்டபோது உடனிருந்ததை ஒப்புக்கொண்ட ஸ்மித், ஆனால் அந்த கொலையில் தான் பங்கேற்கவில்லை என்று கூறியிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)