You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தனை மீட்க இந்தியா எடுத்த ரகசிய நடவடிக்கைகள் என்ன?
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை தனது காவலில் எடுத்துக்கொண்டது.
அதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ராஜ்ஜீய மற்றும் எல்லைப் பதற்றம் புதிய எச்சத்தை எட்டியது.
பிப்ரவரி 27 அன்று என்ன நடந்தது என்பது மீண்டும் தற்போது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த இரவு பற்றிய சில புதிய விஷயங்கள் வெளிவந்துள்ளன.
இதற்குக் காரணம், அப்போது பாகிஸ்தானில் பதவியேற்றிருந்த இந்தியாவின் முன்னாள் தூதர் அஜய் பிசாரியாவின் ‘ஆங்கர் மேனேஜ்மென்ட்’ என்ற புத்தகம்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜோஹ்ரா பலோச் வியாழக்கிழமையன்று தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் இந்தக் கூற்றுகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது அவர், “இந்தப் புத்தகம் பிப்ரவரி 2019 பற்றிய இந்தியாவின் இட்டுக்கட்டப்பட்ட கதையைப் பரப்ப முயல்வதைப் போல் தெரிகிறது,” என்று கூறினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமரை சந்திக்க விரும்பியதாகவும், அதை இந்தியா மறுத்து விட்டதாகவும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த கேட்ட போது, புல்வாமா சம்பவத்தை இந்தியா அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியது என்று மும்தாஜ் கூறினார்.
ஆனால், பிப்ரவரி 2019இல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது தெளிவாகிறது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ‘நெவர் கிவ் அன் இன்ச்’ என்ற புத்தகத்தில்கூட, இந்தப் பதற்றம் இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போர் அச்சம் உண்டாகும் அளவுக்கு அதிகரித்ததாகக் கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் குஜராத்தில் நடந்த கூட்டத்தில், போர் விமானியைத் திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. அது நடக்கவில்லையெனில், “தாக்குதல் நடத்த மோதி 12 ஏவுகணைகளுடன் தயாராக இருந்தார். அது நடந்திருக்கும்.”
பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நரேந்திர மோதியின் அறிக்கை பொறுப்பற்றது, போர் வெறி அடிப்படையிலானது என்று விவரித்தது. “பாலகோட் தாக்குதலுக்கு உடனடியாக, பயனுள்ள பதிலடி கொடுத்து, விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, விமானியைக் கைது செய்தது ஆகியவை தமது ஆயுதப் படைகளின் தீர்மானம், திறன் மற்றும் தயார்நிலைக்குச் சான்று,” என்று பாகிஸ்தான் கூறியது.
இந்திய விமானி அபிநந்தன் கைது செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தைக் குறைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச விரும்பினார். ஆனால், அதற்கு “எந்தவொரு ஆர்வமும் காட்டப்படவில்லை” என்று பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அஜய் பிசாரியா தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
இந்த மோதலின் தீவிரத்தைக் கண்டு பாகிஸ்தான் உண்மையில் “பயந்ததாகவும்” அவர் கூறினார்.
இதுதொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை.
ஆனால், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜோஹ்ரா பலோச் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், “அபிநந்தன் திரும்பியதன் மூலம் பதற்றங்களைக் குறைப்பதில் பாகிஸ்தான் பொறுப்பான அணுகுமுறையைக் காட்டியது. அதேநேரத்தில் இந்தப் புத்தகம் “பிப்ரவரி 2019 பற்றிய இந்தியாவின் புனையப்பட்ட கதையைப் பரப்ப முயல்கிறது,” என்று கூறினார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)