லால் சலாம் இசை விழாவில் விஜய், காக்கா - கழுகு குட்டிக்கதை பற்றி ரஜினி பேசியது என்ன?

லால் சலாம் இசை விழாவில் விஜய், காக்கா - கழுகு குட்டிக்கதை பற்றி ரஜினி பேசியது என்ன?

“ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நான் சொன்ன காக்கா – கழுகு கதையை விஜயை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியதாக சமூக ஊடகங்களில் பலர் கருத்து பதிவிட்டனர்.

உண்மையில் அது எனக்கு மிகுந்த வருத்தமளித்தது. விஜய் என் கண்ணுக்கு முன்னாள் வளர்ந்த பையன். விஜய்க்கு போட்டி விஜய்தான். இதை இத்தோடு விடுங்கள்,” என ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

ரஜினி – விஜய்: சூப்பர் ஸ்டார் சர்ச்சையின் தொடக்கப்புள்ளி

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய்தான் என நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பேச, அதைத் தொடர்ந்து சர்ச்சை உருவெடுத்தது.

ரஜினி – விஜய் ரசிகர்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் பெரும் விவாதம் கிளம்பியது.

அந்த சர்ச்சையும் அதையொட்டிய விவாதங்களும் ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் எதிரொலித்தது. அப்போது சன் பிச்சர்ஸ் கலாநிதிமாறன், “சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான், தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்,” எனத் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு பேசிய ரஜினிகாந்த், காகா- கழுகு கதை ஒன்றைக் கூறினார். ஏற்கெனவே ரஜினி – விஜய் ரசிகர்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் விவாதம் சூடுபிடித்திருந்த நிலையில் காகா – கழுகு கதை சினிமா வட்டாரங்களில் பேசுபொருளானது.

விஜய் கூறிய குட்டி கதை

இதைத் தொடர்ந்து லியோ திரைப்பட வெற்றி விழாவில் விஜய்யும் ஒரு குட்டி கதையைச் சொல்ல, அதிலும் காகா – கழுகு இடம்பெற்றிருந்தது.

“ஒரு காட்டுக்கு 2 பேர் வேட்டைக்குப் போனாங்க. அந்தக் காட்டுல மான், மயில், முயல், காக்கா, கழுகு என எல்லாம் இருக்கும்,” எனச் சொன்னதும் மொத்த அரங்கமும் அதிர்ந்தது. ரசிகர்களின் செயலைப் புரிந்துகொண்ட விஜய் புன்னகையுடன், “காடு என இருந்தால் இதெல்லாம் இருக்கும்தானே அதற்காகச் சொன்னேன்” எனக் கூறித் தனது குட்டி கதையைத் தொடர்ந்தார்.

விஜய் காகா கழுகு என குறிப்பிட்டதும் ரசிகர்களின் ஆரவாரமும், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன, கதைக்கான பதிலடிதான் எனப் பலரும் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடத் தொடங்கினர்.

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் என்ன நடந்தது?

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்த் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் லால் சலாம் திரைப்படத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்றது. செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், “காக்கா- கழுகு கதை வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நான் விஜயை குறிப்பிட்டு பேசியதைப் போன்று சமூக ஊடகங்களில் பேசிக்கொண்டு இருந்தார்கள். உண்மையில் அது எனக்கு மிகுந்த வருத்தமளித்தது.

விஜய் என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பில் நான் இருக்கும்போது விஜய்க்கு 13-14 வயதிருக்கும். அப்போது சந்திரசேகர், தனது மகன் எனக் கூறி விஜயை என்னிடம் அறிமுகப்படுத்தினார்.

மேலும், ‘நடிப்பில் ஆர்வம் இருக்கிறது. இருந்தாலும் படித்துவிட்டு நடிக்குமாறு நீங்கள் கொஞ்சம் விஜய்க்கு அறிவுரை சொல்லுங்கள் என சந்திரசேகர் கேட்டுக்கொண்டார். முதலில் படி, பிறகு நடிகராகலாம் என நான் விஜய்யிடம் சொன்னேன்,” என்று ரஜினிகாந்த் கூறினார்.

அதன் பிறகு அவர் நடிக்க வந்து படிப்படியாகத் தனது திறமை, உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்றும் இப்போது அவர் அரசியல், சமூக சேவைக்கு ஆகியவற்றிலும் ஈடுபடப் போவதாகத் தான் கேள்விப்பட்டதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த நிலையில் தனக்கும் - விஜய்க்கும் போட்டி எனச் சொல்வது “மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

மேற்கொண்டு பேசியவர், “அவருக்கு போட்டி அவர்தான் என்று விஜயே சொல்லியிருக்கிறார். விஜய் எனக்கு போட்டி என நான் நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை, கெளரவம் இல்லை. விஜய் என்னை போட்டியாளராக நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை. இரண்டு பேரின் ரசிகர்களும் இந்த விவாதத்தைத் தவிர்த்துவிடுங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்,” எனக் கூறி தனது உரையை முடித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)