பிறந்ததும் பிரிந்து போன இரட்டையர்களை 21 ஆண்டுக்குப் பின் ஒன்று சேர்த்த 'டிக்டாக்' - எப்படி தெரியுமா?

ஏமி, ஆனோ இருவரும் ஒத்த தோற்றம் கொண்ட இரட்டை சகோதரிகள். இருவரும் பிறந்த உடனேயே தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு, வெவ்வேறு குடும்பங்களிடம் விற்கப்பட்டனர். பல ஆண்டுகள் கழித்து, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் டிக்டாக் வீடியோ மூலமாக தற்போது இந்த இரட்டை சகோதரிகள் ஒன்றிணைந்துள்ளனர்.

ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 2005 மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் கடத்தி, விற்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளில் இவர்களும் அடங்குவர். இதைத் தற்போதுதான் இவர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களது மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஆயிரம் கேள்விகளுக்கு விடை தேடிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெர்மனியில் உள்ள லீப்சிக் நகர ஹோட்டலில் முன்னும் பின்னுமாக நடந்துகொண்டே பேசினார் ஏமி. அவர் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். “நான் மிகவும் பயத்தில் இருக்கிறேன். இந்த வாரம் முழுவதும் நான் தூங்கவே இல்லை. இறுதியாக எங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த கேள்விகளுக்கு விடை கிடைக்கப் போகிறது.”

இவரது சகோதரியான ஆனோ, சோபாவில் அமர்ந்து தனது மொபைலில் டிக்டாக் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். "இந்தப் பெண்தான் எங்களை விற்றிருக்க வேண்டும்" என்று தனது கண்களால் சைகை செய்தார்.

நீண்ட பயணத்தின் முடிவு இது. காணாமல் போன புதிரின் பகுதியை ஜெர்மனியில் கண்டுபிடிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவர்கள். இறுதியாகத் தங்கள் சொந்த தாயை(biological mother) சந்திக்கப் போகிறார்கள்.

இந்த விஷயத்தில் என்ன நடந்துள்ளது என்பதைக் கண்டறிய இதுவரை பல விசாரணைகள் நடந்துள்ள போதிலும்கூட, இதற்கு யார் பொறுப்பு என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

ஒரே தோற்றம் கொண்ட சகோதரிகள்

ஏமியும் ஆனோவும் ஒருவரையொருவர் எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற கதை அவர்களின் 12 வயதில் இருந்து தொடங்குகிறது.

கருங்கடலுக்கு அருகில் உள்ள தனது வளர்ப்புத் தாயின் வீட்டில் இருந்தபடி, தனக்குப் பிடித்த 'ஜார்ஜியாஸ் காட் டேலண்ட்' நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஏமி.

அந்தப் போட்டியின் மேடையில் தோன்றிய சிறுமி ஏமியை போலவே இருந்தார். அது ஏதோ பார்க்க இவரை போல் இருக்கிறார் என்பதல்ல, அவரது முக ஜாடை உள்ளிட்ட அடையாளங்கள் அனைத்துமே ஏமியை போல் இருந்துள்ளது.

“பலரும் எனது அம்மாவை தொடர்புகொண்டு, ஏன் ஏமி வேறு பெயரில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறாள் என்று கேட்டனர்.”

இதுகுறித்து தனது குடும்பத்திடம் ஏமி தெரிவித்த போது, அவரது தாய் அது குறித்து எதுவுமே சிந்திக்காமல், “இங்கு எல்லோரையும் போல் இன்னொருவர் எங்கோ ஓரிடத்தில் இருப்பார்,” என்று கூறியுள்ளார்.

ஏழு ஆண்டுகள் கழித்து, 2021 நவம்பர் மாதம் ஏமி, டிக்டாக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் நீலநிற முடியுடனும், புருவத்தில் அணிகலனோடும் காணப்பட்டார்.

320 கி.மீ தொலைவில் உள்ள திபிலிசியில் இருந்த மற்றொரு 19 வயது பெண்ணான ஆனோ சர்தானியாவுக்கு, இந்த வீடியோ ஒரு நண்பர் மூலமாகக் காண கிடைத்துள்ளது. அதைப் பார்த்த ஆனோ “இவள் என்னைப் போலவே இருக்கிறாள்,” என்று நினைத்தார்.

அதன்பிறகு இணையத்தில் பார்த்த அந்தப் பெண் எந்த இடத்தை சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார் அவர். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், தன்னுடைய பல்கலைக்கழக வாட்ஸ் ஆப் குழுவில் அந்த வீடியோவை பகிர்ந்து யாராவது உதவி செய்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஏமிக்கு தெரிந்த நபர் ஒருவர் அந்தத் தகவலைப் பார்த்துவிட்டு முகநூல் வழியாக அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். தான் பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் பார்த்த அந்தச் சிறுமி ஆனோ தான் என்று அதன் பிறகுதான் ஏமிக்கு புரிந்துள்ளது.

“நீண்ட நாட்களாக உன்னைத் தான் தேடி கொண்டிருக்கிறேன்,” என்று ஆனோவுக்கு மெசேஜ் செய்தார் ஏமி. “நானும்தான்” என்று பதிலளித்தார் ஆனோ.

கடந்த கால புதிர்களுக்கான விடைகள்

அடுத்தடுத்த நாட்களில் இருவரும் தங்களுக்குள் பல விஷயங்கள் ஒத்துப் போவதைக் கண்டுபிடித்தனர். ஆனால் அவை அனைத்திற்கும் சரியான விளக்கங்கள் பிடிபடவில்லை.

இருவருமே மேற்கு ஜார்ஜியாவில் இருந்த, தற்போது செயல்பாட்டில் இல்லாத கட்ஸ்கி மருத்துவமனையில் பிறந்தவர்கள். ஆனால், அவர்களது பிறப்புச் சான்றிதழ்களின்படி அவர்களது பிறந்த தேதி ஒரு சில வாரங்கள் முன்னும் பின்னும் உள்ளன.

இந்த ஆவணங்களின்படி, இவர்கள் சகோதரிகளாகவோ அல்லது இரட்டையர்களாகவோ இருக்க முடியாது. ஆனால், அவர்களுக்குள் பல ஒற்றுமைகள் இருந்தன.

அவர்கள் இருவருக்கும் ஒரே பாடல் மற்றும் நடனமாடுவது பிடித்திருந்தது. அவர்களது தலை முடியின் ஸ்டைல்கூட ஒரே மாதிரியானதாக இருந்தது. இவர்கள் இருவருக்கும் ஒரே மரபணு நோயான டிஸ்ப்ளாசியா இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

அவர்கள் இருவரும் இணைந்து தங்களது உருவ ஒற்றுமை குறித்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தனர். “ஒவ்வொரு முறையும் ஆனோவை பற்றி புதிய விஷயத்தை தெரிந்து கொள்ளும் போதும், நிலைமை இன்னும் விசித்திரமானதாக மாறத் தொடங்கியது," என்று கூறுகிறார் ஏமி.

ஒரு வாரம் கழித்து திபிலிசியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல்முறையாக ஆனோவும், ஏமியும் சந்தித்துக் கொண்டனர்.

“அது ஏதோ கண்ணாடியைப் பார்ப்பது போல் இருந்தது. அப்படியே அதே முகம், அதே குரல். நான்தான் அவள், அவள்தான் நான்,” என்று கூறுகிறார் ஏமி. அதற்குப் பிறகு தாங்கள் இரட்டை சகோதரிகள் என அறிந்துகொண்டார் அவர்.

“எனக்கு கட்டித் தழுவுதல் பிடிக்காது, ஆனால், ஏமியை அணைத்துக் கொண்டேன்” என்கிறார் ஆனோ.

ஒரே கதை

இந்த விஷயம் குறித்து இருவரும் தத்தம் குடும்பங்களிடம் வெளிப்படையாகப் பேச முடிவு செய்தனர். அதன் மூலமாகத்தான் அவர்கள் தங்களைப் பற்றிய உண்மைகளை முதல் முறையாகத் தெரிந்துகொண்டனர். 2002இல் வெவ்வேறு வார காலத்தில் இவர்கள் தனித்தனியாகத் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதை அறிந்து மனமுடைந்து போன ஏமி, தனது ஒட்டுமொத்த வாழ்க்கையுமே பொய்யாகிப் போனதைப் போல் உணரத் தொடங்கினார்.

“இது ஒரு பைத்தியக்காரத்தனமான கதை, ஆனால் உண்மை” என்றார் அவர்.

ஆனோ தனது குடும்பத்தின் மீது கோபத்துடனும், வருத்தத்துடனும் இருந்தார். “ஆனால் இந்தக் கடினமான உரையாடல்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்படி நடந்துவிட்டால் இதை விரைவில் கடந்த செல்ல முடியும்,” என்று கூறினார்.

அவர்கள் மேற்கொண்டு விசாரித்தபோது, இரட்டையர்களின் அதிகாரபூர்வ பிறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் தவறானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்த நேரத்தில் தனது நண்பர் ஒருவர் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் ஆதரவற்ற குழந்தை இருப்பதாகக் கூறியதாகத் தெரிவித்தார் ஏமியின் வளர்ப்பு தாய்.

மருத்துவர்களுக்குப் பணம் கொடுத்துவிட்டு அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்ளலாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கதைதான் ஆனோவின் வளர்ப்புத் தாய்க்கும் சொல்லப்பட்டுள்ளது.

அவர்களைத் தத்தெடுத்த இரு குடும்பங்களுக்குமே இவர்கள் இரட்டையர் என்பது தெரியாது. அவர்களைத் தத்தெடுக்க அதிக பணம் கொடுக்க வேண்டியிருந்த போதிலும்கூட, இது சட்டவிரோதமானது என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த நேரத்தில் ஜார்ஜியாவில் கொந்தளிப்பான சூழல் நிலவி வந்தது. மேலும் இந்தச் சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளதால் இது சட்டப்பூர்வமானது என்று அவர்கள் நினைத்துள்ளார்கள். இரண்டு குடும்பங்களுமே எவ்வளவு பணம் கைமாறியது என்பதைத் தெரிவிக்கவில்லை.

தேடல் (Vedzeb)

"தங்களது சொந்த பெற்றோர்களே தங்களை பணத்திற்காக விற்றுவிட்டார்களா?" அவர்கள் இருவராலும் இப்படி சந்தேகிக்காமல் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.

அதைத் தெரிந்துகொள்ள தங்களைப் பெற்றெடுத்த தாயைக் கண்டுபிடிக்க விரும்பினார் ஏமி. ஆனால் ஆனோ அதில் உறுதியாக இல்லை.

ஆனோ, “உனக்கு துரோகம் செய்த ஒரு நபரைப் பார்க்க ஏன் விரும்புகிறாய்?” எனக் கேட்டார்.

ஜார்ஜியாவில் பிறப்பின்போது கடத்தப்பட்டு சட்டத்திற்குப் புறம்பாக விற்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குழந்தைகளை அவர்களது குடும்பத்தோடு சேர்த்து வைக்கும் முகநூல் குழு ஒன்றைக் கண்டறிந்து அதில் தனது கதையைப் பகிர்ந்துக் கொண்டார் ஏமி.

அதன் பிறகு ஏமியை தொடர்புகொண்ட இளம் ஜெர்மானிய பெண் ஒருவர், தனது தாய் 2002ஆம் ஆண்டு கட்ஸ்கி மகப்பேறு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகவும், ஆனால் குழந்தைகள் இறந்துவிட்டதாக அவருக்குச் சொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர் மரபணு சோதனையின் மூலம் முகநூலில் தொடர்புகொண்ட பெண் தங்களது தங்கைதான் எனவும், அவரது தாயார் ஆசாவுடன் ஜெர்மனியில் வசித்து வருவதும் அவர்களுக்கு உறுதியாகத் தெரிய வந்தது. ஆசாவை சந்திக்க ஏமி மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார். ஆனால் அதில் முழு உடன்பாடு இருக்கவில்லை.

“அவர் உன்னை விற்றவர், அதனால் அவர் உண்மையை சொல்லப் போவதில்லை” என்று ஆனோ ஏமியை எச்சரித்தார். ஆனாலும் ஏமிக்கு ஆதரவாக அவருடன் ஜெர்மனிக்கு சென்றார்.

இவர்கள் இருவரும் பயன்படுத்திய முகநூல் குழுவின் பெயர் வெட்ஸெப் (Vedzeb). இதற்கு ஜார்ஜிய மொழியில் “நான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று அர்த்தம்.

பல ஆண்டுகளாக நடந்து வந்த குழந்தை கடத்தல்

இந்தக் குழுவில் 23,000த்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், இதில் டிஎன்ஏ தரவுகளுக்கான இணையதளங்களின் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு தானும் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்று அறிந்துகொண்ட பத்திரிகையாளர் தமுனா மியூசரைட்ஸ் இந்தக் குழுவைத் தொடங்கியுள்ளார். தமுனா, தன்னுடைய காலஞ்சென்ற வளர்ப்புத் தாயின் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது தனது பிறப்பு குறித்து தவறான விவரங்கள் அடங்கிய பிறப்பு சான்றிதழ் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

அதன் பிறகே தனது சொந்த குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக இந்தக் குழுவை அவர் தொடங்கினார். ஆனால் இறுதியில் இந்தக் குழு ஜார்ஜியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த குழந்தைக் கடத்தல் குழுவை அம்பலப்படுத்துவதில் முடிந்தது.

இவர் இதுவரை நூற்றுக்கணக்கான குடும்பங்களை மீண்டும் இணைத்துள்ளார். ஆனால், இன்னமும் தனது சொந்த குடும்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் 1950களில் இருந்து 2005 வரை ஜார்ஜியாவில் செயல்பட்டு வந்த தத்தெடுத்தலுக்கான கள்ளச்சந்தை ஒன்றைக் கண்டுபிடித்தார் தமுனா.

“இந்தக் குற்றத்தின் அளவு கற்பனைக்கு அப்பாற்பட்டது. 10,000 குழந்தைகளுக்கும் மேல் இதில் கடத்தப்பட்டுள்ளனர். மேலும் இது ஒருங்கிணைக்கப்பட்ட குற்றமாக நடைபெற்றுள்ளது" என்கிறார் அவர்.

ஒரு குழந்தையை பணத்திற்கு வாங்குவது அதிக செலவு மிக்கது என்று கூறும் தமுனா அது ஓராண்டு சம்பளத் தொகைக்குச் சமம் என்று தெரிவிக்கிறார். சில குழந்தைகள் அமெரிக்கா, கனடா, சைப்ரஸ், ரஷ்யா, யுக்ரேன் போன்ற வெளிநாட்டு குடும்பங்களுக்கு விற்கப்பட்டுள்ளதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டில், ஜார்ஜியா தனது தத்தெடுப்பு சட்டத்தை திருத்தியமைத்தது. மேலும் 2006இல் மனித கடத்தலுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்தியது. இதன் மூலம் சட்டவிரோத தத்தெடுப்புகளை மிகவும் கடினமாக்கியது.

அவர்கள் இறக்காமல் இருந்தால்?

இவர்களைப் போலவே தனது குழந்தைகள் குறித்த கேள்விகளுக்கான பதில்களைத் தேடிக்கொண்டிருக்கும் மற்றுமொரு நபர் இரினா ஒட்டராஷ்விலி. 1978ஆம் ஆண்டில், ஜார்ஜியாவின் காகசஸ் மலைகளுக்கு அடிவாரத்தில் இருக்கும் குவாரேலியில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் இவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

அங்கிருந்த மருத்துவர்கள் தனது குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக அவரிடம் கூறியுள்ளனர். ஆனாலும், அவரது குழந்தைகளைக் கண்ணில் காட்டவில்லை, அதற்கு எந்தக் காரணத்தையும் சொல்லவில்லை.

பின்னர் அவர்கள் பிறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு திடீரென அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அவரது இரட்டைக் குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருந்ததாகவும் மருத்துவர்கள் இறப்புக்கான காரணத்தைக் கூறியுள்ளனர்.

மருத்துவர்கள் அப்படிக் கூறினாலும், அதில் எந்த அர்த்தமும் இல்லையென்று இரினாவும் அவரது கணவரும் உணர்ந்துள்ளனர். ஆனால் அன்றைய சூழலில், குறிப்பாக சோவியத் காலகட்டத்தில் "அதிகாரிகளை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்கிறார் அவர். எனவே அவர்கள் சொன்னதையெல்லாம் இவர்கள் நம்பியுள்ளனர்.

குழந்தைகளின் உடலை கல்லறை அல்லது வீட்டின் பின்புறம் புதைப்பதற்காக சவபெட்டிகளைக் கொண்டு வருமாறு அவர்களிடம் மருத்துவர்களால் சொல்லப்பட்டுள்ளது. அதோடு, உடல்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அந்தப் பெட்டியைத் திறக்கவே கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் சொன்னபடியே இரினாவும் செய்தார். ஆனால் 44 ஆண்டுகள் கழித்து இரினாவின் மகள் நினோ, தமுனாவின் முகநூல் குழுவைப் பார்த்த பிறகு அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. “எங்களது சகோதரர்கள் உண்மையில் இறக்காமல் இருந்தால்?” என்று அவர் யோசித்தார். எனவே நினோ மற்றும் அவரது சகோதரி நனா அந்தப் பெட்டியைத் தோண்டியெடுக்க முடிவு செய்தனர்.

அதுகுறித்து விவரித்தவர், “என்னுடைய இதயம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு மைல் வேகத்தில் அளவிற்குத் துடித்தது. அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் எலும்புகள் எதுவும் இல்லை. வெறும் குச்சிகள் மட்டுமே இருந்தன. அதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா என்றுகூடத் தெரியவில்லை” என்று கூறினார்.

அதில் இருந்தவை ஒரு மரக்கிளை என்றும் அதில் மனித எச்சங்கள் இருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை என்றும் உள்ளூர் காவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கஷ்டங்களில் இருந்து விடுதலை

ஏமியும் ஆனோவும் லிப்சிக்கில் உள்ள ஒரு ஹோட்டலில், தங்களைப் பெற்றெடுத்த தாயைச் சந்திப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், தான் அவரைப் பார்க்க வரவில்லை என்று இறுதி நொடியில் ஆனோ கூறிவிட்டார். ஆனால் அது அந்தநேரத்து தயக்கம் மட்டுமே. அதன் பிறகு அதிலிருந்து கடந்து போக முடிவு செய்தார். அவர்களின் சொந்த தாயான ஆசா மற்றொரு அறையில் பதற்றத்துடன் இவர்களுக்காகக் காத்திருந்தார்.

ஏமி தயக்கத்துடன் கதவைத் திறந்து உள்ளே போக அவரை அறைக்குள் தள்ளிக்கொண்டே பின்தொடர்ந்தார் ஆனோ. அவர்களைப் பார்த்த ஆசா இறுக்கமாக இருவரையும் அணைத்துக் கொண்டார். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. மூவரும் கலவையான உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டிருந்தனர்.

ஏமியின் முகத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆனால் ஆனோவோ அசைவற்று இருந்தார். சிறிது எரிச்சலாகவும் காணப்பட்டார். மூவரும் தனியாக அமர்ந்து பேசத் தொடங்கினர்.

பிறகு, பிரசவத்திற்குப் பிறகு உடல்நிலை மோசமாகி தான் கோமாவுக்கு சென்றுவிட்டதாகத் தங்கள் தாய் கூறியதாக இருவரும் தெரிவித்தனர். மேலும் அவர் விழித்தபோது, அங்கிருந்த மருத்துவமனை பணியாளர்கள் பிறக்கும் போதே குழந்தைகள் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்களது தாய் ஏமி, ஆனோவை சந்தித்தது தனது வாழ்விற்குப் புதிய அர்த்தத்தை தந்துள்ளதாகக் கூறினார். அவர்கள் அவ்வளவு நெருக்கமாக இல்லை என்றாலும்கூட, தொடர்பில் இருக்கின்றனர். ஜார்ஜிய அரசாங்கம் 2022ஆம் ஆண்டு குழந்தைகள் கடத்தல் குறித்த விசாரணையை அறிவித்தது.

ஆனால், 40க்கும் மேற்பட்ட மக்களோடு இதுகுறித்துப் பேசியதாகவும், இந்த வழக்குகள் மிகவும் பழையவை என்பதால் அதன் தகவல்கள் தொலைந்துவிட்டதாகவும் பிபிசியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக பத்திரிகையாளர் தமுனா மியூசரைட்ஸ் கூறும் நிலையில், அரசாங்கம் அதன் அறிக்கையை எப்போது வெளியிடும் என்று தெரிவிக்கவில்லை. என்ன நடந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள நான்கு முறை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில், பல கைதுகளுக்கு வழிவகுத்த 2003ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைக் கடத்தல் பற்றிய விசாரணையும் ஒன்று. ஆனால் இது பற்றி மிகக் குறைந்த தகவல்களே பொதுவெளியில் கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் 2015இல் நடந்த மற்றுமொரு விசாரணையில், ருஸ்தாவி மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநர் அலெக்ஸாண்ட்ரே பரவ்கோவி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினார் என்றும் ஜார்ஜிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதுபோன்ற தனிப்பட்ட வழக்குகள் குறித்த கூடுதல் தகவல்களுக்காக பிபிசி, ஜார்ஜிய உள்துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டது. ஆனால் "தரவுப் பாதுகாப்பின் காரணமாக குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படாது" என்ற பதில் கிடைத்தது.

தமுனா தற்போது மனித உரிமை வழக்கறிஞர் லியா முகாஷவ்ரியாவுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை ஜார்ஜிய நீதிமன்றங்களுக்குக் கொண்டு வந்துள்ளார். அவர்களுக்குத் தற்போது ஜார்ஜிய அரசாங்கம் அனுமதிக்காத தங்களின் பிறப்புச் சான்றிதழ்களைக் கையாள உரிமை வேண்டும்.

இதன் மூலம் நீண்ட கால கஷ்டங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

“நான் எப்போதுமே ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் இல்லாமல் இருப்பது போலவே உணர்ந்தேன். எப்போதும் எங்கேயும் கருப்பு உடையில் என்னைப் பின்தொடர்ந்து வந்து, எனது நாளைப் பற்றி விசாரிக்கும் ஒரு பெண் குறித்து கனவு காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்,” என்று கூறுகிறார் ஆனோ.

ஆனால், ஏமியை கண்டுபிடித்த பிறகு அவருக்கு இருந்த அந்த உணர்வு காணாமல் போய்விட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)