You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை பெற்றோரே கங்கையில் மூழ்கடித்து கொன்றதாக பரவும் காணொளி போலியானது - காவல்துறை
- எழுதியவர், ராஜேஷ் டோப்ரியால்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
ஹரித்துவாரில் ஏழு வயது சிறுவன் ஒருவர் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
இதில், அச்சிறுவனின் தாய் சிறுவனை கங்கையில் மூழ்க வைப்பதைக் காணலாம். அவருடன் இரண்டு ஆண்களும் உள்ளனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, அங்கிருந்தவர்கள் சிறுவனை நீருக்கடியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே எடுத்தனர். அப்போது சிறுவனிடம் எந்த அசைவும் இல்லை.
இதனால், சிறுவனை நீரில் மூழ்கடித்துக் கொன்றதாக குற்றம்சாட்டி, பெற்றோரை அங்கிருந்த பொதுமக்கள் தாக்கினர்.
மற்றொரு காணொளியில், சிறுவனின் சடலத்துடன் அமர்ந்திருக்கும் அப்பெண் அமர்ந்து வெறித்தனமாக சிரிக்கிறார். மேலும், "குழந்தை விரைவில் எழுந்திருக்கும்” என்று அந்த காணொளியில் கூறுகிறார்.
இதையடுத்து, அப்பெண்ணையும் உடனிருந்தவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், இறந்த சிறுவனின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என முதல்கட்ட விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணொளியைப் பகிர வேண்டாம் என்று எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் வைரலான காணொளியில், குழந்தையைக் கொன்றதாக குற்றம்சாட்டி, குழந்தையின் பெற்றோரை மக்கள் சாடுவதைக் காணலாம்.
இந்த காணொளிகள் வைரலானதை அடுத்து, ஹரித்துவார் காவல் கண்காணிப்பாளர் ஸ்வதந்த்ர குமார், சிறுவன் நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டதாக கூறுவது தவறானது என்று ஊடகங்களிடம் கூறினார்.
ஹரித்துவார் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அந்த சம்பவத்தில், அப்பெண் தனது குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றதாகக் கூறுவது தவறானது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இறந்த அச்சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். புற்றுநோய் கடைசி கட்டத்தில் உள்ளதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுவனை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து, கடைசி நம்பிக்கையாக, சிறுவனின் பெற்றோர், ஹரித்துவாருக்கு அழைத்துச் சென்றனர்” என்கின்றனர்.
இச்சம்பவத்திற்கு பின்னர், மாலை 5 மணியளவில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில், சிறுவனின் நுரையீரலில் நீர் இல்லை என்றும், நீரில் மூழ்கியதால் அவர் இறக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் உடல் விறைத்திருந்தது என போலீசார் தெரிவிக்கின்றனர். இருப்பினும், விரிவான தகவல்களுக்காக பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.
குழந்தை சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஹரித்துவார் போலீசார் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாக விசாரித்து வருகின்றனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். பல்வேறு தளங்களில் வைரலாகி வரும் காணொளிகளை உண்மை இல்லாமல் பகிரக்கூடாது என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
"வழியிலேயே இறந்துவிட்டார்"
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதாகவும், பிரேதப் பரிசோதனையில் நீரில் மூழ்கி மரணம் ஏற்படவில்லை என்று தெரியவந்ததையடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
டெல்லி சோனியா விஹாரில் வசிக்கும் ரஞ்சித் குமார் டாக்சி ஓட்டுனராக உள்ளார். இவர்தான் அச்சிறுவனின் பெற்றோரை டெல்லியில் இருந்து ஹரித்துவாருக்கு அழைத்து வந்துள்ளார்.
சிறுவன் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், காரில் அமர்ந்த சிறிது நேரத்திலேயே உடலில் அசைவுகள் இல்லையென்றும் ரஞ்சித் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
சம்பவத்தன்று, காலை ஏழு மணியளவில், சிறுவனின் தாய் மாமா (பக்கத்து வீட்டுக்காரர்) தன்னை ஹரித்துவாருக்குச் செல்ல அழைத்ததாக அவர் கூறினார். 9.15-க்கு அவர்கள் டெல்லி புறப்பட்டனர். சிறுவனுடன் அவரது பெற்றோரும் அத்தையும் இருந்துள்ளனர். அப்போது, சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து குழந்தையின் மூச்சு நின்றதால் அச்சிறுவன் தூங்கிக்கொண்டிருப்பதாக தாய் கூறியுள்ளார்.
மதியம் 1.15 மணியளவில் ஹரித்துவாரை அடைந்த பிறகு, பெற்றோர்கள் அவரை மடியில் வைத்துக்கொண்டு கங்கையில் குளிக்கச் சென்றனர். இரண்டரை மணிநேரம் கழித்து போலீசார் ரஞ்சித்தை அழைத்து விசாரித்தனர்.
முன்பே இறந்த சிறுவன்
டெல்லி சோனியா விஹார் காலனியில் உள்ள இந்தக் குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரர் மதன் ராய்.
குழந்தையின் தந்தை ராஜ் குமார் பூக்கடையில் வேலை செய்வதாகவும், அவரது மனைவி இல்லத்தரசி எனவும் அவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.
குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததாகவும், அவர் உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கையை மருத்துவர்கள் கைவிட்டதாகவும் அவர் கூறுகிறார். அவர் ஹரித்துவாருக்குச் சென்றால், ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையிலும் கங்கா அன்னையின் ஆசீர்வாதத்தால் மகன் குணமடையலாம் என்ற நம்பிக்கையிலும் அங்கு சென்றுள்ளனர்.
மதன் ராய் கூறுகையில், "கடவுள் மனதில் வேறு ஏதோ இருந்தது. காஜியாபாத்தை கடக்கும் போது குழந்தை உயிரிழந்துவிட்டது. மருத்துவர்களும் அதையே தான் சொன்னார்கள்" என்றார்.
பிரேத பரிசோதனைக்குப் பின், குடும்பத்தினர் இரவு தாமதமாக டெல்லி திரும்பினர்.
மதன் ராய் ஊடகங்களின் நடத்தையால் கோபமடைந்து, "விசாரணை இல்லாமல் இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறீர்களா? குழந்தையின் பெற்றோர் ஏற்கனவே சோகத்தில் உள்ளனர்” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)