போர் நடக்கும் நிலையிலும் வேலைக்காக இஸ்ரேல் செல்வதற்கு அதீத ஆர்வம் காட்டும் இந்திய இளைஞர்கள்

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

கடந்த வாரம் ஒரு குளிர் மிகுந்த காலை வேளையில், நூற்றுக்கணக்கான ஆண்கள், கம்பளி மற்றும் போர்வைகளைப் போர்த்திக் கொண்டு இந்தியாவின் வட மாநிலமான ஹரியாணாவில் உள்ள ஒரு பெரிய பல்கலைக்கழக வளாகத்திற்குள் வரிசையில் நின்றனர்.

ஆண்கள், பைகள் மற்றும் மதிய உணவுப் பைகளை எடுத்துக்கொண்டு, இஸ்ரேலில் கட்டுமான வேலைகள் - ப்ளாஸ்டெரிங் தொழிலாளர்கள், ஸ்டீல் ஃபிக்ஸர்கள், டைல்ஸ் செட்டர்கள் போன்ற வேலைகளுக்கான நடைமுறைத் தேர்வுகளை எதிர்கொள்ள வரிசையில் நின்றனர்.

ரஞ்சித் குமார் போன்றவர்களுக்கு - ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த, தகுதிவாய்ந்த ஆசிரியர் என்றாலும் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பெயிண்டர், ஸ்டீல் ஃபிக்ஸ் செய்பவர், ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப் டெக்னீஷியன், மற்றும் லாபநோக்கமற்ற ஒரு அமைப்பின் சர்வேயர் என பல வேலைகளைச் செய்துகொண்டிருப்பவர்- ஒரு நல்ல வேலைக்குச் செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு.

31 வயதான இவர், படித்து இரண்டு பட்டங்களைப் பெற்றுவிட்டு, "டீசல் மெக்கானிக்காக" அரசு "டிரேட் டெஸ்டில்" தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஒரு நாளைக்கு 700 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியவில்லை. இதற்கு நேர்மாறாக, இஸ்ரேலில் உள்ள வேலைகள் தங்குமிடம் மற்றும் மருத்துவப் பலன்களுடன் சேர்த்து மாதம் 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ரூபாய் ($1,648; £1,296) கொடுக்கின்றன.

இதே போல் கடந்த ஆண்டு பாஸ்போர்ட் பெற்ற குமார், தனது ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இஸ்ரேலில் ஸ்டீல் ஃபிக்ஸராக வேலை பெற செய்ய மிகுந்த ஆர்வமாக உள்ளார்.

"இங்கே பாதுகாப்பான வேலைகள் இல்லை. விலைவாசி உயர்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பு முடித்த பிறகும் நான் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு வரமுடியவில்லை," என்று அவர் கூறினார்.

அதிகாரிகளை மேற்கோள் காட்டும் பல்வேறு தரவுகளின்படி , அக்டோபர் 7 அன்று நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் போராடி வரும் இஸ்ரேல், அதன் கட்டுமானத் துறையை மேம்படுத்துவதற்காக சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து 70,000 தொழிலாளர்களை அழைத்துவரத் திட்டமிட்டுள்ளது. அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 80,000 பாலத்தீனிய தொழிலாளர்களை இஸ்ரேல் தடை செய்ததை அடுத்து அங்கே கடும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என இந்தத் தரவுகள் மேலும் கூறுகின்றன.

இந்தியாவில் இருந்து சுமார் 10,000 தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இந்த வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்நிலையில், ஹரியானாவின் ரோஹ்தக் நகரில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் நாடு முழுவதும் இருந்து சில ஆயிரம் விண்ணப்பதாரர்களை வரவழைத்து தேர்வுகளை நடத்துகிறது. (டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.)

குமாரைப் போலவே வேலை தேடுபவர்களும் இந்தியாவின் பரந்த மற்றும் ஆபத்தான முறைசாரா பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். முறையான ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் இல்லாமல் அவர்கள் வேலை செய்கிறார்கள். மேலும், அவரைப் போலவே, பலர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், பாதுகாப்பான வேலைகளைப் பெறுவதற்காக போராடுகிறார்கள். இதுமட்டுமின்றி சாதாரண கட்டுமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, மாதத்திற்கு சுமார் 15-20 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 700 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் பயோடேட்டாக்களை எடுத்துச் சென்று அங்கே தேர்வுக்காகக் காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர், "என்னால் நன்றாக வேலை செய்யமுடியும்," என்று கூறினார்.

வருவாயைப் பெருக்க பலர் பல வேலைகளைத் தேடி அலைகின்றனர். சிலர் இந்தியாவின் 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் 2020 ஆம் ஆண்டு எதிர்கொண்ட கோவிட் லாக்டவுன் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், தங்களின் நிதிப் பின்னடைவுகள் மற்றும் போதுமான வாய்ப்புகளின் பற்றாக்குறையை இதற்குக் காரணம் காட்டுகின்றனர். மற்றவர்கள் அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளால் தங்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.

அமெரிக்காவிலும், கனடாவிலும் சட்டவிரோதமாக நுழைவதற்கு ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றதாக பலர் கூறுகின்றனர். ஆனால் அந்தப் பணத்தை சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தும், "போர் நடக்கும் ஒரு நாட்டில் பணிபுரியும் ஆபத்தைப் பொருட்படுத்த வேண்டாம்," என்று அவர்களை எண்ணத்தூண்டுவதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த முடிவு அவர்களை, அதிக லாபம் தரும் வெளிநாட்டு வேலையைத் தேடத் தூண்டியது என்று கூறினர்.

2014 இல் பட்டம் பெற்ற சஞ்சய் வர்மா, தொழில்நுட்பக் கல்வியில் டிப்ளோமா பெற்றார். மேலும் போலீஸ், துணை ராணுவம் மற்றும் ரயில்வேயில் பதவிகளுக்கான பத்துக்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற ஆறு ஆண்டுகள் முயன்றுள்ளார். ("மிகக் குறைவான வேலைகள் மட்டுமே உள்ளன. ஆனால், வேலை தேடுவோர் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விட 20 மடங்கு அதிகம்" என்று அவர் கூறினார்). 2017 ஆம் ஆண்டில், இத்தாலியில் ஒரு மாதத்திற்கு 900 யூரோ சம்பளத்துடன் பண்ணை வேலையில் சேர்வதற்காக அவர் ஒரு முகவருக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை செலுத்தத் தவறிவிட்டதால் அந்த வேலை கிடைக்கவில்லை.

பணமதிப்பிழப்பு மற்றும் தொற்றுநோய் பொதுமுடக்கம் ஆகியவற்றின் இரட்டை பாதிப்புக்களுக்குப் பிறகு மீண்டும் நிச்சயமற்ற நிலைக்குச் சென்றுவிட்டதாக பர்பத் சிங் சவுகான் கூறினார். ராஜஸ்தானை சேர்ந்த 35 வயதான இவர், அவசர கால ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து, தினசரி 12 மணி நேர வேலைக்கு மாதம் 8,000 ரூபாய் சம்பாதித்துள்ளார். அவர் தனது கிராமத்தில் சிறிய கட்டுமான ஒப்பந்தங்களையும் மேற்கொண்டார் என்பதுடன் வாடகைக்கு ஓட்டும் வகையில் ஆறு கார்களை வாங்கினார்.

சவுகான், பலரைப் போலவே, உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு தனது பயணத்தைத் தொடங்கினார். அவர் பள்ளியில் செய்தித்தாள் வியாபாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதில், மாதம் 300 ரூபாய் சம்பாதித்தார். அவருடைய அம்மா இறந்த பிறகு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். சரியான வேலை கிடைக்காத போது, ​​மொபைல் போன் பழுது பார்க்கும் கோர்ஸ் படித்தார். "ஆனால் அது பெரிதாக உதவவில்லை," என்று அவர் கூறினார்.

2016 வரை ஐந்து முதல் ஏழு ஆண்டுகள், அவரது அதிர்ஷ்டம் ஓரளவுக்கு உதவியது: அவர் ஆம்புலன்ஸ் ஒன்றில் ஓட்டுனராக வேலைக்குச் சேர்ந்தார். சிறிய கிராம கட்டுமான ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு நிறைவேற்றிவந்தார். இத்துடன் அவரது டாக்சிகளையும் இயக்கிவந்தார்.

"ஆனால் லாக்டவுன் [2020 இல்] என்னை அழித்துவிட்டது. சொத்துக்களை அடமானம் வைத்து, அவற்றை மீட்கமுடியாமல் போனதால் எனது கார்களை விற்க வேண்டியிருந்தது. இப்போது நான் மீண்டும் ஆம்புலன்ஸ் ஓட்டி சிறிய அரசாங்க கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து செய்து வருகிறேன்," என்று அவர் கூறினார்.

இரண்டு தசாப்த கால அனுபவமுள்ள ஹரியாணாவைச் சேர்ந்த 40 வயது ஓடு (டைல்ஸ்) பதிக்கும் ராம் அவதார் போன்றவர்களும் உள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் தேங்கி நிற்கும் ஊதியம் போன்ற சவால்களை எதிர்கொண்டு, அவர் தனது குழந்தைகளின் உயர் கல்விக்கு பணம் செலவழிக்க முடியாத நிலையைப் பற்றி கவலைப்படுகிறார். அவரது மகள் இளம் அறிவியல் பட்டப்படிப்பு படிக்கிறார். அதே நேரத்தில் அவரது மகன் பட்டயக் கணக்காளராக மாற விரும்புகிறார். அவர் துபாய், இத்தாலி மற்றும் கனடாவில் வேலைக்காக முயன்றார். ஆனால் முகவர்களால் கோரப்பட்ட அதிகப்படியான கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. வாடகை, குழந்தைகளுக்கான செலவு மற்றும் உணவுக்கான செலவுகளுடன், அவர் மிகவும் சிரமப்படுவதாக கூறுகிறார்.

"இஸ்ரேலில் போர் நடப்பது எங்களுக்குத் தெரியும். நான் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை. இங்கேயும் வாழ்க்கை யாருக்கும் நிரந்தரமல்ல என்ற நிலையில் தான் அனைவரும் வாழ்ந்து வருகின்றனர்," என்று அவர் கூறினார்.

இதே போன்ற நிலைமையில் சிக்கித் தவிப்பவர்களில் 28 வயதான ஹர்ஷ் ஜாட், 2018 இல் சமூகசேவைத் துறையில் பட்டம் பெற்றார். ஆரம்பத்தில் கார் தொழிற்சாலையில் மெக்கானிக்காகப் பணிபுரிந்த அவர், பின்னர் இரண்டு வருடங்கள் போலீஸ் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்தார். அப்போது தேவையின்றி பலர் அவசரகாலச் சேவையைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கையாள்வதில் சோர்வடைந்தார். இதையடுத்து, குர்கானின் மேல்தட்டு புறநகர் பகுதியில் ‘பப் பவுன்சராக’ (மதுபான விடுதிக் காவலராக) 40,000 ரூபாய் சம்பாதித்தார். "இந்த வேலைகள், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே உதவுகின்றன. அதற்குப் பிறகு வேலையிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படுகிறது. பணிப்பாதுகாப்பு இல்லை," என்று அவர் என்னிடம் கூறினார்.

ஹர்ஷ் ஜாட், வேலையில்லாமல், தனது குடும்பத்திற்குச் சொந்தமான எட்டு ஏக்கர் வேளாண் நிலத்தில் வேலை செய்யத் தொடங்கினார். "ஆனால் இப்போது யாரும் விவசாயம் செய்ய விரும்பவில்லை," என்று அவர் கூறினார். அவர் எழுத்தர், போலீஸ்காரர் போன்ற அரசாங்க வேலைகளில் சேர முயன்று அவற்றில் வெற்றி பெறவில்லை. தனது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் சட்டவிரோதமாகச் செல்வதற்கு முகவர்களிடம் தலா 60 லட்சம் ரூபாவை செலுத்தியுள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வீட்டிற்கு அனுப்பும் பணத்தை அனுப்பி வருகின்றனர். அவர்களின் குடும்பங்கள் ஆடம்பரமான கார்களை வாங்குவது உள்ளிட்ட செயல்களுக்கு பணம் கொடுத்துவருகின்றனர்.

"நான் வெளிநாட்டிற்குச் சென்று நல்ல சம்பளமுள்ள வேலையைப் பெற விரும்புகிறேன். ஏனென்றால் எனது குழந்தை ஒரு நாள், 'நம் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஏன் ஒரு விலை உயர்ந்த கார் உள்ளது; ஏன் அந்தக் கார் நம்மிடம் இல்லை' என்று கேட்கும்," என்று ஜாட் ஆதங்கத்துடன் கூறினார்.

"நான் போருக்கு பயப்படவில்லை," என்றார் அவர்.

இந்தியாவில் வேலை வாய்ப்புகள் ஒரு கலவையான காட்சியைக் கொடுக்கின்றன. அதன் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் அரசாங்கத் தரவு , வேலையின்மை குறைந்து வருவதைக் காட்டுகிறது - 2017-2018 இல் 6% இலிருந்து 2021-2022 இல் 4% ஆக உள்ளது. வளர்ச்சிப் பொருளாதார நிபுணரும், பாத் பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியருமான சந்தோஷ் மெஹ்ரோத்ரா, அரசாங்கத் தரவுகளில் ஊதியம் இல்லாத வேலைகளை வேலைகளாகச் சேர்ப்பதே இதற்குக் காரணம் என்று கூறுகிறார்.

"வேலைகள் நடக்கவில்லை என்று இல்லை. ஒழுங்கமைக்கப்பட்ட வேலைகள் அரிதாகவே வளர்ந்து வருகின்றன. அதே நேரத்தில் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது," என்று பேராசிரியர் மெஹ்ரோத்ரா கூறினார்.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஸ்டேட் ஆஃப் ஒர்க்கிங் இந்தியா அறிக்கையின்படி, வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து வருகிறது. ஆனாலும் அது ஒரு பெரிய பிரச்னையாகவே தொடர்கிறது. 1980 களில் இருந்து தேக்கமடைந்த பிறகு, 2004 இல் வழக்கமான ஊதியம் அல்லது ஊதியம் பெறும் தொழிலாளர்களின் பங்கு அதிகரிக்கத் தொடங்கியது - அந்த அதிகரிப்பு ஆண்களுக்கு 18 முதல் 25% மற்றும் பெண்களுக்கு 10 முதல் 25% என்று அறிக்கை கூறுகிறது. இருப்பினும், 2019 முதல், "வளர்ச்சி மந்தநிலை மற்றும் தொற்றுநோய்" காரணமாக வழக்கமான ஊதிய வேலைகளை அளிக்கும் வேகம் குறைந்துள்ளது.

15% க்கும் அதிகமான பட்டதாரிகளுக்கும் - 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் 42% பேருக்கும் - தொற்றுநோய் பொதுமுடக்கத்துக்குப் பிறகு நாட்டில் வேலை இல்லை என்று ஒரு அறிக்கை கண்டறிந்துள்ளது. "இந்தக் குழு அதிக வருமானம் பெற வேண்டும் என்ற அபிலாஷைகளைக் கொண்டுள்ளது. மேலும் அவர்கள் பணிப்பாதுகாப்பற்ற வேலைகளைச் செய்ய விரும்பவில்லை. அதுமட்டுமின்றி, இந்தக் குழு அதிக வருமானம் என்பதுடன் சில நேரங்களில் குறைவான பணிப் பாதுகாப்பிற்காக தீவிர ஆபத்தை எதிர்கொள்கிறது. அதன் ஒரு பகுதியாகவே இது போல் வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆர்வம் நிலவுகிறது," என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் பொருளாதார நிபுணரான ரோசா ஆபிரகாம் கூறினார்.

இது போல் வெளிநாடு செல்ல விரும்புபவர்களில் ஒருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அங்கித் உபாத்யாய். அவர் ஒரு முகவருக்கு பணம் செலுத்தி, விசா பெற்று, குவைத்தில் ஸ்டீல் ஃபிக்ஸராக எட்டு ஆண்டுகள் பணியாற்றிய போது தொற்று நோய் பொதுமுடக்கத்தின் காரணமாக தனது வேலையை இழந்தார்.

"எனக்கு எந்த பயமும் இல்லை. நான் இஸ்ரேலில் வேலை செய்ய விரும்புகிறேன். அங்குள்ள ஆபத்துகளை நான் பொருட்படுத்தவில்லை. வீட்டில் வேலை பாதுகாப்பு இல்லை," என்பதே அவரது கூற்றாக இருந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)