You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.யாக பங்கேற்கும் தமிழக பழங்குடி தம்பதி - என்ன சாதித்தனர்?
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை மாவட்டம் வால்பாறையில் தங்கள் நில உரிமைக்காக அகிம்சை வழியில் போராடி வென்ற பழங்குடியின தம்பதியை, டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க விவிஐபியாக அழைத்துள்ளது மத்திய அரசு. அவர்கள் சாதித்தது என்ன?
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையில், காடர், மலசர், மலை மலசர், எறவலர், புலயர் மற்றும் முதுவர் ஆகிய, 6 வகை பழங்குடியின மக்கள் உள்ளனர். இதில், காடர் சமுதாயத்தினர் கல்லார், கவர்க்கல், உடுமன்பாறை, நெடுங்குன்றா உள்ளிட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்லார் கிராமத்தில், 2019ல் பெய்த கனமழையில் வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து வசிப்பதற்கு இடம் கேட்டு கல்லார் பழங்குடியினர் போராட்டம் நடத்தினர். காடர் இன மக்களின் பிரதிநிதிகளாக கல்லாரை சேர்ந்த பழங்குடியின விவசாயி ஜெயபால் – ராஜலட்சுமி தம்பதியினர் முன்னின்று இந்த போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர்.
அகிம்சை வழியில் போராட்டம்!
மாவட்ட ஆட்சியரை சந்திப்பது வனத்துறை அதிகாரிகளை சந்திப்பது என எங்கு சென்றும் தங்களுக்கான மாற்று இடம் கிடைக்காததால், இந்த பழங்குடியின மக்கள் 2020ல் வால்பாறையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நடைபயண போராட்டத்தை துவங்கினர்.
அதன்பின் பலவித போராட்டங்களைத் தொடர்ந்து, 2021ல் இறுதியாக இவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது, காடர் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகள் அரசின் பார்வைக்குச் சென்றன.
குடியரசு தினத்தில் விவிஐபியாக அழைப்பு!
இந்த தம்பதியின் தொடர் அகிம்சை வழி போராட்டத்தின் வெற்றியாக, கல்லார் தெப்பக்குள மேடு பகுதியில் இந்தத்தம்பதி உள்பட 26 பழங்குடியின குடும்பங்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்கியது. கல்லார் மட்டுமின்றி கவர்க்கல், உடுமன்பாறை, நெடுங்குன்றா, எருமைப்பாறை என பல காடர் இன கிராமங்களில், 120க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்கியது.
காடர் இன மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து அகிம்சை வழியில் போராடி வென்றுள்ள ஜெயபால் – ராஜலட்சுமி தம்பதியை கெளவுரவிக்கும் விதமாக, வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க விவிஐபியாக அழைத்துள்ளது மத்திய அரசு.
‘எங்கள் வீடுகளை அகற்றிய வனத்துறை’
கல்லார் கிராமத்தில் இருந்து தலைநகர் டெல்லி செல்வது குறித்து மகிழ்ச்சியை பிபிசி தமிழிடம் பகிர்ந்துள்ளனர் ஜெயபால் – ராஜலட்சுமி தம்பதியினர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர்கள், ‘‘கல்லாரில் 30 குடும்பங்களாக காடர் இன மக்கள் வசித்து வருகிறோம். கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமும் 1 –1.5 ஏக்கர் நிலத்தில் பல தலைமுறைகளாக ராகி, நெல், மிளகு சாகுபடி செய்து வாழ்ந்து வருகிறோம்.
2019ல் கல்லார் பகுதியில் எங்க மக்களின் வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட போது வேறு வழியின்றி எங்கள் கிராமத்துக்கு அருகே நாங்கள் தற்காலிக குடிசைகள் அமைத்து வசித்தோம். அங்கு வந்த வனத்துறையினர், அனுமதியின்றி குடிசை அமைக்கக் கூடாது எனக்கூறி எங்கள் குடிசைகளை அடித்து நொறுக்கி அகற்றினர்,’’ என்கிறார்கள் அவர்கள்.
‘நிலத்துக்காக 3 ஆண்டு போராட்டம்’
மேலும் தொடர்ந்த ஜெயபால் மற்றும் ராஜலட்சுமி, ‘‘குடிசைகள் அகற்றப்பட்டதால் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் போராடிய பின், எஸ்டேட்டில் 26 குடும்பத்தை வெறும் 4 வீடுகளில் தங்க வைத்தனர். அங்கு எங்களால் வாழ முடியாததால், நடைபயணம், காட்டில் குடியேறும் போராட்டம், 2021ல் சுதந்திர தினத்தில் காட்டில் உள்ளிருப்பு போராட்டம், காந்தி ஜெயந்தி அன்று தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.
தொடர்ந்து 3 ஆண்டுகள் போராட்டத்தின் விளைவாக, 120 காடர் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கியதுடன், வனத்தில் நாங்கள் மலை இடுபொருட்கள் சேகரிக்கும் எங்களின் பாரம்பரிய உரிமையையும் அரசு வழங்கியுள்ளது,’’ என தங்களின் போராட்டத்தை விவரித்தனர்.
டெல்லி செல்வது மிகவும் மகிழ்ச்சி...
டெல்லி பயணம் குறித்து பேசிய அவர்கள், ‘‘எங்களின் அமைதியான அகிம்சை வழிப் போராட்டத்தால், காடர் இன மக்களின் பெருமை குடியரசுத்தலைவர் வரையில் சென்றுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத்தலைவர் அனுமதியுடன் நாங்கள் காடர் மக்களின் முகமாக டெல்லி செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்கிறார்கள் அவர்கள்.
மேலும், நிலத்துக்கான பட்டா பெற்றாலும், வீடு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வலியுறுத்தி இன்னமும் போராடி வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கல்லார் மட்டுமின்றி கவர்க்கல் பகுதியில் பட்டா பெற்றுள்ள பழங்குடியின மக்கள் தாங்களாகவே மண்ணில் வீடுகள் அமைத்துள்ளதை பிபிசி தமிழிடம் இருவரும் காண்பித்தனர்.
அனுதினமும் இன்னலில் நகரும் வாழ்க்கை!
நாம் பார்த்த வரையில், வனத்தினுள் மழைநீர் அடித்துச் செல்லாத இடங்களில், 3 – 4 அடிக்கு ஒரு மரக்கட்டை, குச்சிகளை ஊன்றி அதன் மத்தியில் கிடைக்கின்ற கற்களை களிமண் கரைசலில் கலக்கி, மரக்கட்டைகளின் மத்தியில் நிரப்பி வீடுகள் அமைத்துள்ளனர். மேற்கூரையாக தார்பாலின் ஷீட் மற்றும் தகரங்களை மேற்கூரையாக அமைத்திருந்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய அங்குள்ள பழங்குடி மக்கள், ‘‘எங்களின் காட்டில் எங்களுக்கே இடமில்லை என்றதும் போராடித்தான் அனைவரும் பட்டா பெற்றோம். பட்டா வழங்கி இருந்தாலும் அரசு இன்னமும் எங்களுக்கு வீடு கட்டித்தரவில்லை. மற்ற மக்களை ப்போல் எங்களுக்கு கான்கிரீட் மேற்கூரை கொண்ட வீடு கூட நாங்கள் கேட்கவில்லை.
6 அடிக்கு சுவர் அமைத்து தகரம் அல்லது சிமெண்ட் ஷீட் மேற்கூரையில் சிறிய வீடும், சோலார் மின் விளக்கு வசதியும் அமைத்துக் கொடுத்தாலே போதும். ஆனால் இதுவரை அரசு எங்களை கண்டுகொள்ளவே இல்லை. எங்கள் கோரிக்கையும் நிறைவேறவில்லை. தற்போதுள்ள வீட்டில் பாதுகாப்பும் இல்லை, மழைநீர் வீடுகளுக்குள் கசிவதால் உறங்கக்கூட முடியவில்லை. வெளிச்சமின்றி வனப்பகுதியில் சிரமத்தை சந்தித்து வருகிறோம்,’’ என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)