வங்கி லாக்கர், சிம் கார்டு: புத்தாண்டு முதல் புதிய விதிகள் - நாளைக்குள் இதை செய்ய தவறினால் என்ன சிக்கல்?

நடப்பாண்டு முடிய இன்னும் ஒரு நாள் தான் உள்ளது.

2024-ம் ஆண்டு தொடங்கியவுடன் வங்கிகள், வருமான வரி, முதலீடுகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான புதிய விதிகள் அமலுக்கு வரும்.

சில மாற்றங்களைச் செய்வதற்கு முன் டிசம்பர் 31, 2023 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தேதிக்குள் மாற்றங்கள் தொடர்பான இந்தப் பணிகளைச் செய்து முடித்துவிடுங்கள். நாளைக்குள் இந்த பணிகளை செய்ய தவறினால் நீங்கள் சில சிக்கல்களையும், சிரமங்களையும் சந்திக்க நேரிடலாம்.

2022-23 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2023-24) வருமான வரிக் கணக்கை நீங்கள் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31ஆம் தேதி வரை அதைத் தாக்கல் செய்யலாம்.

ஆனால், வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால், 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் ரூ.1,000 மட்டுமே அபராதமாகச் செலுத்த வேண்டும்.

ஏற்கெனவே வருமான வரி தாக்கல் செய்து, அதில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், இதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2023 வரை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் மாற்றம் செய்தல்

பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், கட்டணம் ஏதுமின்றி இதைச் செய்வதற்கான கடைசித் தேதி 31 டிசம்பர் 2023 ஆகும்.

ஜனவரி 1, 2024 முதல் இது போன்ற மாற்றங்களைச் செய்ய ரூ..50 கட்டணம் செலுத்தவேண்டும்.

டிமேட் கணக்கு, மியூச்சுவல் ஃபண்டில் வாரிசுதாரர் பெயரைப் புதுப்பித்தல்

ஆன்லைன் பங்கு வர்த்தகம் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் (MF) முதலீடு செய்பவர்களுக்கு, தங்கள் வாரிசுதாரரின் நியமனத்தை (டிமேட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு வைத்திருப்பவர் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாரிசுதாரரின் பெயர்) புதுப்பிக்கும் கடைசி தேதியை ஜூன் 30, 2024 வரை செபி (SEBI) நீட்டித்துள்ளது.

முன்னதாக கடைசி தேதி டிசம்பர் 31, 2023 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

லாக்கர் தொடர்பான திருத்தப்பட்ட விதிகளில் கையொப்பமிடுதல்

இந்திய ரிசர்வ் வங்கி, திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிசம்பர் 31ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது.

லாக்கரை வைத்திருப்பவர் இதில் கையொப்பமிட தவறினால் குறிப்பிட்ட அந்த லாக்கர் முடக்கப்படும். இதனால், அதில் உள்ள நகை, பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க முடியாது.

ரிசர்வ் வங்கி இதற்கான புதிய வழிகாட்டுதல்களை 18 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிட்டது.

இதன் கீழ், பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களின் உரிமைகள் உள்ளிட்ட திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை தயாரித்திருந்தன.

இதில் வாடிக்கையாளரின் கையொப்பம் அவசியம். பெரும்பாலான மக்கள் தங்களுடைய வங்கி லாக்கரில் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை வைத்திருப்பார்கள்.

புதிய சிம் கார்டிற்கான டிஜிட்டல் கேஒய்சி (KYC) செய்தல்

சிம் கார்டுகளுக்கான காகித அடிப்படையிலான கேஒய்சி ஜனவரி 1 முதல் ரத்து செய்யப்படுவதாக தொலைத்தொடர்புத் துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

புதிய சிம் கார்டைப் பெற வாடிக்கையாளர்கள் இனி காகிதப் படிவங்களை நிரப்ப வேண்டியதில்லை.

புதிய சிம் கார்டைப் பெற, இனி அனைவரும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் கேஒய்சி செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.

கொள்கை விதிகள் எளிமையான மொழியில் வழங்கப்பட வேண்டும்

பாலிசிதாரர்கள் தொழில்நுட்ப தீர்வுகளைக் கண்டறியவும், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சட்டப்பூர்வமாகவும் சிறந்த முறையில் புரிந்துகொள்ளவும், ஜனவரி 1 முதல் பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் முக்கிய அம்சங்களை காப்பீட்டு நிறுவனங்கள் பரிந்துரைக்க வேண்டும்.

இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ) இந்த நிபந்தனைகளை தெளிவுபடுத்த, தற்போதுள்ள அறிவிப்புகளை திருத்தியுள்ளது.

பார்சல் அனுப்புவதற்கு கூடுதல் கட்டணம்

ப்ளூ டார்ட் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் லாஜிஸ்டிக்ஸ் பிராண்டுகளை இயக்கும் டிஹெச்எல் (DHL) குழுமம், ஜனவரி 1 முதல் பார்சல்களை அனுப்புவதற்கான சாதாரண கட்டணத்தில் ஏழு சதவீதம் அதிகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதனால், ஷிப்பிங் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்கள் பார்சல்களை அனுப்புவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.

கார் விலை அதிகரிக்கும்

மாருதி சுஸுகி, ஹூண்டாய், மெர்சிடிஸ் மற்றும் ஆடி போன்ற நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி கார்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளன.

புத்தாண்டில் இந்நிறுவனங்கள் தயாரிக்கும் கார்களின் விலைகள் அதிகரிக்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)