நைஜீரியா: போகோ ஹராம் தீவிரவாதிகளால் 10 ஆண்டுக்கு முன் கடத்தப்பட்ட 276 பள்ளிச் சிறுமிகள் என்ன ஆயினர்?

    • எழுதியவர், யெமிசி அடெகோக்கே
    • பதவி, பிபிசி செய்திகள், வடக்கு நைஜீரியா

உள்ளூர் நைஜீரிய அதிகாரிகள் தன்னை பத்திரிகையாளர்களுடன் பேசவிடாமல் தடுக்க முயற்சிப்பதாக லிசு கூறியதால் நாங்கள் அவரை ரகசியமாக சந்திக்க வேண்டியிருந்தது.

சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு சிபோக் நகரில் உள்ள பள்ளியிலிருந்து கடத்தப்பட்ட 276 சிறுமிகளில் இவரும் ஒருவர். இந்த கடத்தல் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. #BringBackOurGirls என்ற உலகளாவிய பிரசாரத்தை அது தூண்டியது. அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி மிஷெல் ஒபாமாவும் இதில் பங்கேற்றார்.

180க்கும் மேற்பட்டோர் தப்பித்தனர் அல்லது விடுவிக்கப்பட்டனர், இதில் லிசுவும் அடங்குவார். போகோ ஹராம் தீவிரவாதிகளின் பிணைக்கைதியாக இருந்த போது இரண்டு குழந்தைகளை அவர் பெற்றெடுத்தார். சம்பிசா காட்டில் ஒரு மறைவிடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

தப்பித்த பிறகு லிசு (இது அவருடைய உண்மையான பெயர் அல்ல) அரசு மறுவாழ்வுத் திட்டத்தில் இணைக்கப்பட்டார். பின்னர் அவர், தப்பித்த மற்றவர்களுடன் குழு வீடுகளில் தங்க வைக்கப்பட்டார்.

"நான் திரும்பி வந்ததற்கு வருந்துகிறேன்," என்று அவர் கூறினார். அதிகாரிகள் பெற விரும்பும் செய்தி கண்டிப்பாக இது இல்லை.

இவர்களின் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தவில்லை என்று போர்னோ மாகாண அரசு கூறியுள்ளது.

'தற்போதைய வாழ்க்கை மோசமாக உள்ளது'

இப்போது தான் நடத்தப்படும் விதம் முன்பு தான் வாழ்ந்த வாழ்க்கையைவிட மோசமாக இருப்பதாக லிசு நினைக்கிறார்.

"சில நேரங்களில் எனக்கு ஞாபகம் வரும் போது நான் அழுகிறேன். நான் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்: 'நான் ஏன் சம்பிசாவை விட்டு நைஜீரியாவுக்கு வந்தேன். மீண்டும் இங்கு வந்து இதுபோன்ற அவமானத்தை ஏன் எதிர்கொள்கிறேன். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நான் அவமானப்படுத்தப்படுகிறேன். நான் சம்பிசாவில் இருந்தபோது இதுபோன்ற மன வேதனையை அனுபவித்ததில்லை," என்றார் அவர்.

அரசு பராமரிப்பின் கீழ் ஏதோ உயிருடன் இருக்கிறேன் என்று லிசு கூறுகிறார். உணவு மற்றும் சோப்பு போன்ற அடிப்படை வசதிகள் கூட போதுமானதாக இல்லை. அவரது நடமாட்டங்கள் காவலர்களால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் குழு வீட்டில் உள்ள ஊழியர்கள் அவரை திட்டவும் செய்கிறார்கள்.

"அவர்கள் எப்பொழுதும் என்னைப்பார்த்து கத்துகிறார்கள். நான் மிகவும் சோகமாக இருக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

"இங்கிருந்ததை விட போகோ ஹராம் முகாமில் எனக்கு அதிக சுதந்திரம் இருந்தது."

இது போர்னோ மாகாண அரசால் அங்கீகரிக்கப்படாத அம்சமாகும். இளம் பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களைத் தவிர, தன் பராமரிப்பில் உள்ள இளம் பெண்களின் நடமாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என்று பிபிசிக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிணைக்கைதிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு போதிய உணவு மற்றும் ஊட்டச்சத்தை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தப்பியோடிய அல்லது விடுவிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் வேறுபட்டாலும், அவர்கள் அனைவரும் புனர்வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் இருந்தாலும், நாங்கள் பேசியவர்களிடையே நிலவும் பொதுவான கருத்து என்னவென்றால், பல ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன என்பதுதான்.

2016 ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட உடனேயே தப்பித்த சிபோக் கைதிகளில் முதன்மையானவர் அமினா அலி.

அவரும் தான் நடத்தப்படும் விதம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்.

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த கடத்தல்

இப்போது தனக்கு முன்னே நிற்கும் அதே பிரமாண்டமான பள்ளி வளாகம் தீப்பற்றி எரிவதை அவர் கண்டார். அது நடந்தது 2014 ஏப்ரல் 14 இரவு.

"ஆஹா, இந்தப் பள்ளி இன்னும் இருக்கிறது," என்று அவர் மெதுவாகச் சொல்கிறார். புதிதாக புதுப்பிக்கப்பட்ட, கிரீம் நிற கட்டடங்களைப் பார்த்து. "எங்களுக்கு நடந்த எல்லாவற்றுக்கும் பிறகு அது இன்னும் இங்கே இருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் அந்த மரத்தடியில் அமர்ந்திருப்போம்," என்று வளாகத்தின் மூலையில் உள்ள ஒரு உயரமான, மொட்டை மரத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அவர் சுற்றிலும் பார்த்து எல்லா மாற்றங்களையும் குறிப்பிடுகிறார்.

புல் அதிகமாக வளர்ந்துள்ளது, நடைபாதைகளில் டைல்கள் புதியவை. துருப்பிடித்த மெயின் கேட் அகற்றப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் இல்லை. மைதானம் புனரமைக்கப்பட்ட பின்னர் 2021 இல் பகல் பள்ளியாக அது மீண்டும் திறக்கப்பட்டது.

பள்ளியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்றாலும், வாயிலுக்கு வெளியே சிபோக்கில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை.

பாதுகாப்பின்மை இப்போதும் அதிகமாக உள்ளது. ஆயுதம் தாங்கிய போகோ ஹராம் தீவிரவாதிகள் அப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்திய தாக்குதல் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது.

மோசமாக பராமரிக்கப்படும் சாலைகளில் சோதனைச் சாவடிகள் உள்ளன. மேலும் நகரத்தில் அதிக ராணுவ இருப்பு உள்ளது. மொபைல் தகவல்தொடர்பு மோசமாக உள்ளது. ஒரு தொலைத்தொடர்பு கம்பம் சாலைக்கு அருகில் விழுந்து கிடக்கிறது. ஒருவேளை பயங்கரவாதிகளால் இது வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு உள்ளூர் சக ஊழியர் கூறினார்.

ஆயினும் உணர்வுப்பூர்வமான காயங்கள் உள்ளன.

அமினா சம்பிசாவில் பிணைக்கைதியாக இரண்டு வருடங்கள் கழித்தார்.

பல கைதிகளைப் போலவே அவரும் ஒரு போராளியை "திருமணம்" செய்து இஸ்லாத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

காட்டில் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட வழக்கத்தை கொண்டிருந்தது ; சமைப்பது, சுத்தம் செய்வது, குரான் கற்றுக் கொள்வது. ஆனால் ஒரு நாள் தப்பிப்பேன் என்ற நம்பிக்கையை அமினா கைவிடவில்லை.

"நான் 10 வருடங்கள் (பிணைக்கைதியாக) கழித்தாலும் ஒரு நாள் தப்பித்து விடுவேன் என்று நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார்.

ஒரு நாள் அவர் அதைச்செய்தார்.

கடுமையான வெப்பம், சிறிது உணவு மற்றும் முதுகில் இரண்டு மாதக் குழந்தையை கட்டிக்கொண்டு அடர்ந்த புதர் வழியாக மலையில் ஏறிச்செல்ல அவருக்கு வாரக்கணக்கில் தேவைப்பட்டது, ஆனால் அவர் அதில் வெற்றி பெற்றார்.

ஆனால் 90க்கும் மேற்பட்ட சிறுமிகளை இன்னமும் காணவில்லை. அவரது தோழி ஹெலன் நெக்லாடாவும் அதில் ஒருவர். அமினாவும் ஹெலனும் வகுப்புத் தோழிகள். ஹெலன் தலைமையிலான சர்ச் இசைக்குழுவில் அவர்கள் இருவரும் பாடகர்கள்.

கடத்தலுக்குப் பிறகு இருவரும் சம்பிசா காட்டில் நெருக்கமாகி முடிந்தவரை ஒன்றாகவே நேரத்தை கழித்தனர். ஹெலனுடன் அமினாவின் கடைசி உரையாடல், சிபோக் மற்றும் அவர்கள் அங்கு திரும்பிச் செல்ல எவ்வளவு விரும்புகிறார்கள் என்பது பற்றியது.

நிறைவேற்றப்படாத அரசின் வாக்குறுதிகள்

ஹெலன் திரும்பி வராததால் ஏற்பட்ட மனவேதனை அவளது பெற்றோர்களான சரது மற்றும் இப்ராஹிமின் முகங்களில் பதிந்துள்ளது, பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள தங்களுடைய ஒரு சாதாரண வீட்டிற்கு வெளியே அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

ஹெலன் மற்றும் அவரது சகோதரியின் இரண்டு புகைப்படங்களை அவரது தாயார் இறுக்கமாகப் பிடித்திருந்தார்.

"என் தோழி திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவளுடன் மகிழ்ச்சியை நான் பகிர்ந்து கொள்ளமுடியும்," என்று அமினா கூறுகிறார்.

சரது தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் போராடுகிறார்.

"நீ எங்கள் வீட்டிற்கு வந்து நான் உன்னைப் பார்க்கும் போதெல்லாம், என் மனம் என் மகளைத்தான் நினைக்கிறது," என்று அவர் அமினாவிடம் கூறினார்.

சரது அழத் தொடங்குகிறார். அமினா அவருக்கு ஆறுதல் கூற அவருடைய தோளில் கையை வைத்தார்.

"எங்கள் (மாகாண) ஆளுநர் ஏதாவது செய்து எங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று இப்ராஹிம் மெதுவாக கூறுகிறார். "மற்ற குழந்தைகளைக் காப்பாற்ற அவர்கள் அதிகம் முயற்சி செய்ய வேண்டும்."

2016 இல் அமினா தப்பி வந்தது பெரும் ஆரவாரத்தையும் நிம்மதியையும் அளித்தது.

ராணுவத்தால் முழுவதுமாக விசாரிக்கப்பட்ட பின்னர் அவர் அப்போதைய அதிபர் முஹம்மது புஹாரி உட்பட பல அரசு அதிகாரிகளை சந்தித்தார். அவரது வாழ்க்கையின் பாதை சிறப்பாக மாறும் என்று அதிபர் அப்போது கூறினார்.

"எங்களை கவனித்துக் கொள்வதாகவும், எங்களையும் எங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதாகவும் அதிபர் கூறினார்" என்று அமினா நினைவு கூர்ந்தார்.

"அந்த சூழ்நிலையில் தள்ளப்பட்டது எங்கள் தவறல்ல. குழந்தைகளின் தவறும் அல்ல. எனவே அவர் எங்களை கவனித்துக் கொள்வார்."

வாக்குறுதி அளிக்கப்பட்டது போல இன்றைய வாழ்க்கை காணப்படவில்லை.

அமினா இப்போது சிபோக்கிலிருந்து சாலை வழியாக ஐந்து மணிநேர பயண தூரத்தில் உள்ள யோலாவில் தனது மகளுடன் ஒரு சிறிய அறையில் வசிக்கிறார். அவர்கள் அண்டை வீட்டாருடன் வெளிப்புற குளியலறையை பகிர்ந்து கொள்கிறார்கள். வெளியே விறகுகளை பயன்படுத்தி அவர் சமைக்கிறார்.

பணத் தட்டுப்பாடு

அவர் தினசரி செலவுகளை ஈடுகட்ட மாதத்திற்கு 20,000 நைரா (17 டாலர்கள்) பெறுகிறார். அரசின் வாக்குறுதிகள் இருந்த போதிலும் அவரது மகளின் கல்விக்காக எதுவும் கொடுக்கப்படுவதில்லை. விவசாயம் செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் அவர் மகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தி வருகிறார்.

"என் மகளை கவனித்துக் கொள்வது எனக்கு கடினமாக உள்ளது. நான் என்ன செய்ய முடியும், எனக்கு யாரும் இல்லாததால் நான் இதைச் செய்ய வேண்டும்."

பிரபல தனியார் கல்வி அமைப்பான நைஜீரியாவின் அமெரிக்கன் யுனிவர்சிட்டி ஆஃப் நைஜீரியாவில் (ஏயூஎன்- AUN), அவர் தனது படிப்பைத் தொடர்கிறார். கூடவே தனது மகளையும் வளர்த்து வருகிறார்.

”படிப்பை தொடர ஏயூஎன் தவிர எங்களுக்கு வேறு தேர்வு ஏதும் கொடுக்கப்படவில்லை. பலர் அதில் தொடர சிரமப்பட்டனர் மற்றும் சிலர் படிப்பை விட்டுவிட்டனர்.”

”நாங்கள் இதை தேர்வு செய்யவில்லை. ஏனென்றால் பள்ளியின் கல்வித் தரம் எங்களுக்கு கடினமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் ஏழ்மை பின்னணியில் இருந்து வரும் பெண்கள்," என்று அவர் கூறுகிறார். "முன்னாள் அமைச்சர் எங்களை இந்தப் பள்ளிக்கு வர வற்புறுத்தினார்." என்றார் அவர்.

எங்கு படிக்கலாம் என்பதை தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு அதிக சுதந்திரம் அளித்திருக்கலாம். ஏயூஎன்-இன் உயர் கட்டணத்திற்காக செலவு செய்த அரசுப் பணத்தைக் கொண்டு நேரடியாக எங்களுக்கு உதவியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமினா 2017 முதல் ஏயூஎன்-இல் படிக்கிறார். ஆனால் பட்டப்படிப்பின் முடிவை அவர் இன்னும் முன்னாள் கைதிகளில் ஒருவர் மட்டுமே பட்டம் பெற்றுள்ளார்.

சிபோக் சிறுமிகள் மற்றும் அவர்களின் கல்விக்காக அரசு கடந்த ஆறு ஆண்டுகளாக ஏயூஎன்-க்கு ஆண்டுக்கு 350,000 டால்ர்களை செலுத்துகிறது என்று நைஜீரியாவின் மகளிர் விவகார அமைச்சர் உஜூ கென்னெடி – ஒஹானன்யே கூறுகிறார்.

இது மறுபரிசீலனைக்கு உட்பட நடைமுறையாகும் என்று அவர் தெரிவித்தார்.

ராக்கியா கலி மற்றொரு சிபோக் பெண் - அவர் 2017இல் போகோ ஹராமிடமிருந்து தப்பித்தார். அவர் சில காலம் ஏயூஎன்-இல் மாணவியாக இருந்தார். ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படிப்பை நிறுத்திவிட்டார்.

தனக்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை என்றும் அரசின் வாக்குறுதிகள் இருந்தபோதிலும், அமினாவைப்போல தானும் தனது மகனின் கல்விக்காக விவசாயத்தில் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து கட்டணம் செலுத்துவதாக ராக்கியா கூறுகிறார்.

"அரசு எங்களுக்கு அநீதி இழைக்கிறது," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் சம்பிசா காட்டிற்கு கடத்தி செல்லப்பட்டோம். அவர்களால் எங்களுக்கு உதவ முடியாவிட்டால், எங்களுக்கு உதவுவது யார்?" என்று அவர் வினவினார்.

தனது நகரம் இப்போதும் போகோ ஹராம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், ராக்கியா அச்சத்தில் வாழ்கிறார். தீவிரவாதிகள் சமீபத்தில் தனது மகனின் பள்ளியை எரித்ததாக அவர் கூறுகிறார்.

"நான் ஏதாவது ஒரு சத்தத்தை கேட்கும் போதெல்லாம் அது ஒரு புல்லட் என்று நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

ராக்கியா தனது வாழ்க்கையைத் தொடர விரும்புகிறார். தன் மகனுக்கு சிறந்த கல்வியை உறுதிசெய்ய விரும்புகிறார். ஆனால் ஆதரவு இல்லாததால் விஷயங்கள் சாத்தியமற்றதாகத் தெரிகிறது.

தானும், தப்பியோடியவர்களும் முகாமுக்கு வெளியே எப்படி வாழ்கிறார்கள் என்பதை சிறைபிடிக்கப்பட்ட சிபோக் பெண்கள் பார்த்தால் அவர்கள் போகோ ஹராமுடன் தங்கவே விரும்புவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

"இந்தப் பிரச்னைகளையெல்லாம் கடந்து செல்வதை விட, குழந்தையுடன் (சம்பீசா காட்டில்) தங்கி தந்தையின் ஆதரவைப் பெறுவது நல்லது என்று நான் நினைக்கிறேன்."

சிபோக் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் போகோ ஹராம் போராளியான முஹம்மது அல்லி இப்போது எட்டு குழந்தைகள் உட்பட தனது குடும்பத்துடன் மைதுகுரியில் வசித்து வருகிறார்.

அவர் 13 ஆண்டுகளாக போராளிக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார் மற்றும் தளபதி பதவிக்கு உயர்ந்தார். சிபோக் சிறுமிகளில் ஒருவரை வலுக்கட்டாயமாக "திருமணம்" செய்தார்.

"நான் அவரை மணந்த நேரத்தில் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இருக்கவில்லை. ஆனால் நான் சரணடைய முடிவு செய்தபோது அவர்கள் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்று உணர ஆரம்பித்தேன்,” என்றார் அவர்.

ஆயிரக்கணக்கான மற்ற போராளிகளைப் போலவே, முஹம்மதுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அவர் மாகாண அரசின் மறுவாழ்வுத் திட்டத்தை நிறைவு செய்தார். அவர் ஒரு பண்ணை வைத்திருக்கிறார். கூடவே கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்க ராணுவத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்.

நைஜீரியாவில் தொடரும் கிளர்ச்சி

"நாங்கள் அவர்களைக் கண்டபோது அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தனர்," என்று அவர் கூறுகிறார். "நான் அவர்களைப் பார்த்த போது அழுதேன்,"என்றார் அவர்.

முகமது போன்ற முன்னாள் பயங்கரவாதிகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர்கள் செய்த பல குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் சிலர் கூறுவதால் பொது மன்னிப்பு திட்டம் குறித்து சர்ச்சை நிலவுகிறது.

இதற்கு பதிலளித்த முகமது, “நான் வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன். நாங்கள் வைத்த தீயை அணைப்பதற்கான வழிகளைத் தேடுகிறேன். சரணடைந்த மற்றவர்களுடன் சேர்ந்து இதை செய்கிறேன். கிளர்ச்சியின் விளைவுகளை பலவீனப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். செய்கிறோம்," என்றார்.

ஆனால் நைஜீரியாவில் கிளர்ச்சி தொடர்கிறது மற்றும் பிணை பணத்திற்காக கடத்தல் என்பது மிகவும் பரவலாகிவிட்டது.

இந்தக் கதையை நான் எழுதும் இந்த நேரத்தில் வடகிழக்கு நைஜீரியாவில் மூன்று தனித்தனி கடத்தல்கள் நடந்தன. அவற்றில் ஒன்று பள்ளிக்கூடத்தில் நடந்தது. 2021 க்குப் பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது.

சிபோக் கடத்தலின் "வெற்றி" இத்தகைய தாக்குதல்களை ஊக்குவித்ததாக முகமது கூறுகிறார்.

"அந்த சம்பவம் முழு நாட்டையும் முழு ஆப்பிரிக்காவையும் உலுக்கியது என்பதை நாங்கள் உணர்ந்தோம்," என்று அவர் கூறுகிறார். “(குழுத் தலைவர்) அபுபக்கர் ஷெகாவுக்கான போகோ ஹராமின் முக்கிய பணி, எங்கள் செயல்பாடுகள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதை உறுதி செய்வதாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த நடவடிக்கைகளில் சில அவர்களுக்கு பணத்தையும் கொண்டு வந்தது. இது போக்குவரத்து மற்றும் உணவுக்கு பணம் செலுத்த உதவியது, அதனால்தான் அவர்கள் கடத்தலைத் தொடர்ந்தனர்."

நைஜீரியாவின் ராணுவம் மற்றும் பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த, பத்தாண்டுகளுக்கும் மேலாக நிலவும் கிளர்ச்சியைக் கையாள்வதில் அதன் திறன் குறித்தும் கேள்விகள் உள்ளன.

நைஜீரியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் கிறிஸ்டோபர் குவாபின் மூசா, ராணுவம் எதிர்கொண்டுள்ள "பெரிய" சவால்களை ஒப்புக்கொண்டார், மேலும் நாட்டின் தற்போதைய பாதுகாப்பின்மை நிலையை "பயங்கரமான அடி" என்று அழைத்தார். ஆனால் நிலைமை மாறி வருகிறது என்று அவர் நம்புகிறார்.

இன்னமும் போகோ ஹாராமிடம் சிக்கியுள்ள 91 சிபோக் சிறுமிகளைப் பொறுத்தவரை, அவர்கள் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ராணுவம் கைவிடவில்லை என்று ஜெனரல் மூசா கூறுகிறார்.

தற்போதைய நிலை குறித்து அதிருப்தி இருந்தாலும், அமினாவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

ஒரு நாள் பத்திரிக்கையாளராக, கடத்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவராக, தன்னால் ஆகமுடியும் என்று அவர் நம்புகிறார். மேலும் தனது மகள் தனது கல்வியை முடித்து ஒளிமயமான, பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெறுவாள் என்றும் அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக தனது எல்லா வகுப்பு தோழிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் நம்புகிறார்.

"இப்போதும் பிடித்து வைக்கப்பட்டுள்ள என் சகோதரிகளை விடுவிக்க அரசு உதவ வேண்டும். எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

"ஏனென்றால் அவர்கள் உயிருடன் இருந்தால் (நம்பிக்கை உள்ளது) அவர்கள் ஒரு நாள் திரும்பி வருவார்கள்."

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)