You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியாவுக்கு அணு ஆயுதங்களை தயாரித்தவர் தென் கொரியாவில் எம்.பியானது எப்படி?
- எழுதியவர், ஃபிரான்சஸ் மாவோ, சங்மி ஹான்
- பதவி, பிபிசி
பார்க் சூங்-குவோன் ஓர் இளைஞராக, தனது தாயகமான வட கொரியா, மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வெடிக்கச் செய்த அணு ஏவுகணைகளை உருவாக்க உதவினார்.
இப்போது அவர் அதன் ஜனநாயக அண்டை நாடான தென் கொரியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்கள் சர்வாதிகார ஆட்சியிலிருந்து தாராளவாத ஜனநாயக நாடுகளுக்கு இடம்பெயரும்போது, அவர்கள் சிறந்த வாழ்க்கை, வாய்ப்புகள் பற்றி கனவு காண்கிறார்கள். ஓர் அகதி எம்.பியாக முடியுமா அல்லது ஒருநாள் அதிபராகத்தான் முடியுமா? அது சாத்தியமானது தான்.
ஆனால் ஒரு வட கொரியருக்கு இது அசாதாரணமானது. 37 வயதான பார்க், வட கொரியாவிலிருந்து தப்பித்து, தென் கொரியாவில் நாடாளுமன்ற உறுப்பினரான நான்காவது நபராவார்.
"நான் ஒன்றுமே இல்லாமல் தென் கொரியாவிற்கு வந்தேன். இப்போது நான் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளேன்" என்று அவர் இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் கூறினார்.
"இவை அனைத்தையும் நமது தாராளவாத ஜனநாயகத்தின் சக்தியாக நான் பார்க்கிறேன். எங்கள் குடிமக்களால் இது சாத்தியமானது என்று நான் நினைக்கிறேன். இது ஓர் அதிசயம் மற்றும் ஆசீர்வாதம்.”
வட கொரியாவை உற்றுநோக்குபவர்களுக்கு இது முன்னேற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
"சட்டப்படி எதற்கும் அனுமதிக்கப்படாத நாட்டில் வாழ்ந்தவர்களை விட ஜனநாயக பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை யார் புரிந்துகொண்டிருப்பார்கள்?" என, வட கொரிய வாழ்க்கை குறித்து ஆய்வு செய்த கார்ல்ட்டன் பல்கலைக்கழக இணை பேராசிரியர் சாண்ட்ரா ஃபாஹி தெரிவித்தார்.
வட கொரியாவிலிருந்து தப்பித்தது எப்படி?
தன் 23 வயதில், ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்பு வட கொரிய அரசின் பிடியில் இருந்து பார்க் தப்பினார். பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடம் தனது திட்டங்களைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட அவர் மூச்சுவிடவில்லை. அது மிகவும் ஆபத்தானது என்றும் குடும்பத்தினர் இதுகுறித்து அறிந்திருந்தால் அது அவர்களை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் தனது கடைசி மூன்று ஆண்டுகளை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கழித்தார். வட கொரியாவின் அணு ஆயுத தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அடுத்த தலைமுறையாகக் கருதப்படும் உயர்நிலை மாணவர்களில் அவர் ஒருவர்.
அவர் 1990-களில் வட கொரியாவில் வளர்ந்தார். பல லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் உயிரிழந்த, குடிமக்கள் நம்பிக்கையற்ற நிலையில் கறுப்புச் சந்தையை நாடிய காலமாக அது இருந்தது.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சமயத்தில், “வட கொரியா ஆட்சி எப்படி முற்றிலும் தவறாகவும் ஊழல் நிறைந்ததாகவும் உள்ளது என உணர்ந்ததாக" கொரிய ஊடகத்திடம் அவர் தெரிவித்தார்.
எனவே தன் திட்டத்தை வெளிப்படுத்தாமல் காத்திருந்தார்.
ஏப்ரல் 2009-ல் ஒருநாளில் தன்னை வெளிப்படுத்தினார். அந்த நாளில் தான், தன் பல ஆண்டு கடின உழைப்பால் அவர் உருவாக்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக செலுத்தியது. ஒட்டுமொத்த நாடும் “கொண்டாட்ட மனநிலையில் இருந்தது"; கொண்டாட்ட கூச்சல்களுக்கு நடுவே அவர் சத்தமின்றி வெளியேறினார்.
அங்கிருந்து அவர் வெளியேறுவது நிச்சயமாக கடினமான முடிவுதான். அங்கிருந்து சீனாவுக்கு செல்ல மிக வேகமான, ஆனால் செலவுகரமான வழியை அவர் தேர்ந்தெடுத்தார். அதற்கு 10 மில்லியன் வான் (5,800 பவுண்ட்; 7,300 டாலர்கள்) செலவானது. செலவைவிட தரகரால் அவருக்கு வழங்கப்பட்ட போலி பாஸ்போர்ட் முறைகேடானதாக இருந்தது.
ஆனால், அச்சமயத்தில் தான் விடுதலையடைந்ததாக உணர்ந்ததாக அவர் என்.கே. நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்தார். அந்நாட்களில் சீனாவின் பக்கத்தில் உள்ள துமன் நதிக்கரையில் சுதந்திரம் மற்றும் இழப்பு என இரண்டு உணர்வுகளையும் அவர் கொண்டிருந்தார். அந்த உணர்வு, அவரை “சர்வதேச அநாதையாக" உணரச் செய்தது.
அவருடைய வாழ்க்கையை மாற்றிய மற்றொரு தருணம், அவர் தென் கொரியா பாஸ்போர்ட்டை பெற்றது. தன் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களுள் ஒன்று என அவர் அதை குறிப்பிடுகிறார்.
எம்.பியானது எப்படி?
1990களில் இருந்து வடகொரியாவிலிருந்து சுமார் 35,000 பேர் தென் கொரியாவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருடன் ஒப்பிடுகையில், பார்க் தன் புதிய வாழ்க்கையை மிக வேகமாக தழுவிக்கொண்டார், தன் மேல்தட்டு பின்னணி மற்றும் கல்வி காரணமாக அவர் சவாலை பிரச்னைகள் இன்றி சமாளித்தார்.
தென் கொரியாவின் மிகவும் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகமான சியோல் தேசிய பல்கலைக்கழகத்தால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் பொருளறிவியல் மற்றும் பொறியியலில் பிஹெச்.டி பட்டம் பெற்றார். பின்னர், தென்கொரியாவின் அதிகாரம் வாய்ந்த தொழில் நிறுவனமான ஹூண்டாய் ஸ்டீல் நிறுவனத்தில் உயர்மதிப்பு மிக்க பணியில் சேர்ந்தார்.
பின்னர், தென் கொரியா அதிபரின் கட்சியிலிருந்து அவருக்கு வாய்ப்பு கதவைத் தட்டியது.
தான் அரசியலில் இணைவது குறித்து சிந்தித்ததே இல்லை என பார்க் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், மக்கள் அதிகார கட்சி (People Power Party) தன்னிடம் வந்தபோது மக்கள் சேவை மூலம் திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்ததாக அவர் கூறினார்.
விகிதாச்சார வாக்களிப்புப் பதவிகளுக்கான ஆளுங்கட்சியின் பட்டியலில் இரண்டாம் பிரதிநிதியாக அவர் இருந்தார். வாக்குப்பதிவு எவ்வளவு சாதகமற்றதாக இருந்தாலும், அவர் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் உறுதியான இடத்தைப் பெற்றார். ஆனால், அக்கட்சிக்கும் அதிபர் யூன் சுக்-யோலுக்கும் தேர்தல் முடிவுகள் மோசமானதாக இருந்தது.
ஆனால், பார்க் தேர்தலில் முன்னிலையில் இருந்தார். இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியாக அவருக்கு பல பெரிய திட்டங்கள் உள்ளன.
தென் கொரியாவின் முந்தைய நாடாளுமன்றங்களில் வட கொரியாவைச் சேர்ந்த இருவர் பதவியில் இருந்தனர். அவர்களுள் தே யாங்-ஹோ, ஆடம்பரமான கங்நாம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் முன்பு, பிரிட்டனுக்கான வட கொரியா தூதராக இருந்தார். அவர் 2016-ம் ஆண்டில் லண்டனில் இருந்த போது வடகொரியாவிலிருந்து வெளியேறினார்.
மற்றொரு நபர் வலதுசாரி செயற்பாட்டாளர் ஜி சியோங்-ஹோ. 1996-ம் ஆண்டில், இளைஞராக அவரும் பசியால் வாடிய அவருடைய குடும்பத்தினரும் ரயிலில் இருந்து நிலக்கரியை திருடியபோது தன் இடது கையையும் காலையும் இழந்தார். அச்சமயத்தில் பசியால் மயக்கமடைந்த அவர் ரயில் பெட்டிகளுக்கிடையே விழுந்தார்; ரயில் சக்கரங்கள் அவர் மீது ஏறியது. பின்னர், அவர் ஊன்றுகோல் உதவியுடன் வடகொரியாவிலிருந்து தப்பினார்.
வடகொரியாவிலிருந்து தப்பியவர்களின் நிலையை மேம்படுத்த அவர்கள் நீண்டகாலமாக பணியாற்றியுள்ளனர்.
வட கொரியா குறித்த நிலைப்பாடு
தென் கொரியாவுக்கு வந்தவுடன் தங்களின் வாழ்க்கை புதிதாக மாறியுள்ளதாக பெரும்பாலானோர் கூறினாலும், அங்கு இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக கருத்தும் நிலவுகிறது.
அதுதான் 2020-ம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட ஜி சியோங்-ஹோ-வை ஊக்கப்படுத்தியது. அவர் வட கொரிய மக்களின் உரிமைகளை நிறைவேற்றுவதாக பிரசாரத்தில் ஈடுபட்டார். வடகொரியாவிலிருந்து தப்பியவர்கள் கடத்தலில் ஈடுபட்டதாக தென் கொரிய அதிகாரிகள் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பிய சமபவமும் நடைபெற்றுள்ளது.
ஓராண்டுக்கு முன் வறுமையில் இருந்த வடகொரிய தாய் மற்றும் மகள், சியோலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் பசியால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
தென் கொரியாவுக்கு வரும் வடகொரிய மக்களுக்கான ஆதரவை மேம்படுத்துவதே தன் முதல் இலக்கு என பார்க் தெரிவித்தார். மேலும், நீண்ட கால இலக்குகளையும் அவர் கொண்டுள்ளார். தென் கொரியாவுக்கு வரும் வடகொரியர்களின் எண்ணிக்கை, கொரோனா கால எல்லை மூடலால் கணிசமாக குறைந்துள்ளதால், அவர்களுக்கான பட்ஜெட்டை மறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என அவர் கூறுகிறார்.
வடகொரியா-தென் கொரியா மக்களுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதிலும் தன் அடையாளத்தைப் பதிக்க அவர் நினைக்கிறார்.
கிம் ஜோங் உன் ஏவுகணை சோதனைகளை அதிகரித்துள்ள நிலையில், வட கொரியாவை ராணுவ ரீதியிலான தென் கொரிய அதிபரின் அணுகுமுறையை அவர் மனதார ஆதரிக்கிறார்.
தென் கொரிய அதிபர் யூன் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் நெருங்கிய உறவுகளை பேணி வருவதால், வட கொரியா எதிர்வினையாற்றுவதாக சிலர் கூறினாலும், பார்க் அக்கருத்தை நிராகரிக்கிறார்.
“யூன் அரசாங்கம் வந்ததிலிருந்து, போர் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல - முந்தைய நிர்வாகத்தின் கீழ் அச்சுறுத்தல்கள் வலுவாக இருந்தன,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
முன்னாள் அதிபர் மூன் ஜே-இன் நிர்வாகத்தின் போது வட கொரியாவின் ஏவுகணை சோதனைகள் மற்றும் ஆயுத மேம்பாடு அதிகரித்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"வட கொரியாவின் ஆத்திரமூட்டல்களைத் தடுப்பது மிக முக்கியமானது, அது போர் அச்சுறுத்தலைக் குறைக்க வழிவகுக்கும்" என்கிறார் அவர்.
தீபகற்பத்தின் இரு பகுதிகள் மீண்டும் ஒன்றிணையும் என அவர் நம்புகிறார். இந்த ஆண்டு கிம் ஜோங்-உன் அந்த வாய்ப்பை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்த போதிலும் இவ்வாறு அவர் கருதுகிறார்.
ஆனால் பார்க் தயங்கவில்லை. தென் கொரிய அரசாங்கத்தில் "ஒரு பாலமாக திகழும் ஒரு பாத்திரத்தை வகிக்க" அவர் உறுதியாக இருக்கிறார்.
"தென் கொரியர்கள் வட கொரியாவின் ஆட்சியையும் அதன் மக்களையும் தனித்தனியாகப் பார்க்கவும் ஒற்றுமைக்கு உகந்த மனநிலையை வளர்க்கவும் உதவ விரும்புகிறேன்." என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)