ஒரே வங்கியில் ரூ.3.30 லட்சம் கோடி கடன் வாங்கி இந்த தொழிலதிபர் ஏமாற்றியது எப்படி?

    • எழுதியவர், பிபிசி வியட்நாம்
    • பதவி, பாங்காக்கில் இருந்து

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள காலனித்துவ கால நீதிமன்றத்தில், ஒரு அதிசயக் காட்சி அரங்கேறியது. அப்போது நீதிமன்ற அறை முழுவதும் ஒரு பெயர் எதிரொலித்தது. அது ட்ரூங் மை லான்.

வியட்நாமின் மிகவும் பரபரப்பான வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, உலகின் மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றைத் திட்டமிட்டதற்காக செவ்வாயன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட 67 வயதான வியட்நாமிய ரியல் எஸ்டேட் அதிபரின் சுரண்டல்களை வெளிப்படுத்தியது.

அத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனையாகும். வியட்நாமில் ஒயிட் காலர் (White collar crime) குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மிகச் சில பெண்களில் ட்ரூங் மை லானும் ஒருவர். முடிவை மேல்முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்பு உள்ளது.

ட்ரூங் மை லான், சைகான் வணிக வங்கியில் (Saigon Commercial Bank- எஸ்சிபி) 11 வருடங்களாக சுமார் 44 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 3,30,000 கோடிகள்) கடனாகப் பெற்றதற்காக தண்டிக்கப்பட்டார். இதில் 27 பில்லியன் டாலர்களை திரும்பப் பெற முடியாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இது 2023இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%க்கு சமம்.

பொதுவாக மெத்தனமாக இருக்கும் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் இந்த வழக்கை வெளிப்படையாக விவாதித்து, ஊடகங்களுக்கு சிக்கலான விவரங்களை அளித்து பலரை ஆச்சரியப்படுத்தினர்.

சாட்சியமளிக்க 2,700 பேர் அழைக்கப்பட்டதாகவும், 10 அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சுமார் 200 வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மொத்தம் 6 டன் எடையுள்ள 104 பெட்டிகளில் ஆதாரம் இருந்தது. 85 பிரதிவாதிகள் ட்ரூங் மை லானுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. நால்வர் ஆயுள் தண்டனை பெற்றனர். மீதமுள்ளவர்களுக்கு 20 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ட்ரூங் மை லானின் கணவர் மற்றும் மருமகள் முறையே ஒன்பது மற்றும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர்.

வியட்நாமில் நீண்டகால அனுபவமுள்ள ஓய்வுபெற்ற அமெரிக்க அரசுத் துறை அதிகாரி டேவிட் பிரவுன் கூறுகையில், "கம்யூனிஸ்ட் காலத்தில் இதுபோன்ற ஒரு விசாரணை இதுவரை இருந்ததில்லை. இந்த அளவில் நிச்சயமாக எந்த வழக்கும் விசாரிக்கப்பட்டது இல்லை" என்றார்.

ஆனால் இந்த நீதிமன்ற வழக்கின் மைய நபரைப் பற்றி நமக்கு தெரிந்த விவரங்கள் என்ன?

ஏழ்மையிலிருந்து உச்சத்திற்கு...

ஹோ சி மின் நகரில் ஒரு சீன-வியட்நாமிய குடும்பத்தில் ஒரு எளிய பின்னணியில் இருந்து நிதி ஊழலின் மையத்திற்குச் சென்ற ட்ரூங் மை லானின் பயணம், பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது.

வியட்நாமின் டோய் மோய் என்று அழைக்கப்படும் பொருளாதார சீர்திருத்த சகாப்தத்தின் போது அவர் தனது தாயுடன் சந்தை விற்பனையாளராக ஒரு சாதாரண பின்னணியில் இருந்து, ரியல் எஸ்டேட் துறையில் இறங்கினார். 1990களில், அவர் கணிசமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விற்பனையில் ஈடுபட்டிருந்தார், இது அவரது புத்திசாலித்தனமான வணிகச் செயல்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

இருப்பினும், சைகான் வணிக வங்கியுடனான அவரது ஈடுபாடு தான் அவரை கவனத்தில் கொள்ளச் செய்தது. ஷெல் நிறுவனங்கள் மற்றும் ப்ராக்ஸிகள் மூலம், வங்கியின் 90 சதவீதத்தை திறம்பட கட்டுப்படுத்தி, தனிப்பட்ட உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை ட்ரூங் மை லான் மீறியதாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த வங்கி சாம்ராஜ்ஜியத்திற்குள் தான் மோசடி நடந்துள்ளது எனவும், ட்ரூங் மை லான் தனிப்பட்ட லாபத்திற்காக திகைக்க வைக்கும் அளவுக்கு பணத்தை மோசடி செய்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. அவரது கடன்கள் வங்கியின் மொத்த கடன்களில் 93% ஆகும். வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, பிப்ரவரி 2019 முதல் மூன்று ஆண்டுகளில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது டிரைவருக்கு 108 டிரில்லியன் வியட்நாமிய ரூபாயை, இந்திய மதிப்பில் 30,000 கோடி ரூபாய் ரொக்கத்தை வங்கியில் இருந்து எடுத்து, அதை தனது வீட்டின் அடித்தளத்தில் சேமிக்க உத்தரவிட்டார்.

அவ்வாறு சேமிக்கப்பட்ட மொத்த வியட்நாமிய ரூபாய் நோட்டுகளின் எடை இரண்டு டன்களாக இருக்கும், இது பல வியட்நாமியர்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக, தனிநபர்கள் கடன் வாங்கும்போது ஒரு சிக்கலான செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் அத்தகைய நிதிகளின் ஒரு பகுதியை அணுகுவதற்கு இணை (Collateral) வழங்கப்பட வேண்டும்.

தனது கடன்கள் ஒருபோதும் ஆராயப்படாமல் இருக்க தாராளமாக லஞ்சம் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் மத்திய வங்கியின் தலைமை ஆய்வாளராக இருந்தார், அவர் சுமார் 37.5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

‘என்னுடைய உலகம் சரிந்தது’

ட்ரூங் மை லான், பண மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், பத்திர மோசடி உட்பட மற்ற குற்றச்சாட்டுகளில் குறைந்தது இரண்டு கூடுதல் வழக்குகளுக்கான விசாரணை இன்னும் அவருக்கு காத்திருக்கிறது.

42,000க்கும் மேற்பட்ட நபர்கள், 27 முதல் 60 வயது வரை மற்றும் பல்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள், இந்த திட்டங்களுக்கு பலியாயினர். எஸ்சிபி வங்கியின் மூலம் விற்கப்பட்ட மோசடி பத்திரங்களை வாங்கினர்.

அவர்களில் ஒருவர் 48 வயதான டாங் ட்ரூங் லாங் (Dang Trung Long). வியட்நாமின் பரபரப்பான ஹோ சி மின் நகரில், ரியல் எஸ்டேட் துறையில் சொத்துகளை விற்பதில் முடிவில்லாத பல மணிநேரங்களை அவர் அர்ப்பணித்தார்.

இரண்டு தசாப்தங்களாக இடைவிடாத உழைப்பால், அவர் 1.7 பில்லியன் வியட்நாமிய டாங்குகளை (இந்திய மதிப்பில் 52.5 லட்சம்) சேமித்தார். சராசரி மாத வருமானம் 25,000 ரூபாயைத் தாண்டாத ஒரு நாட்டில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

"எனது ஒரே மகளுக்கு சிறந்த கல்வியைத் தருவதற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமித்தேன், ஆனால் இந்த மோசடியால், நான் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

"என் உலகம் சரிந்துவிட்டது, என் மகளின் கனவு உடைந்துவிட்டது. எல்லாவற்றையும் மீண்டும் கட்டியெழுப்பும் அளவுக்கு எனக்கு உடலில் வலு இருக்கிறதா எனத் தெரியவில்லை" என்றார்.

பதிலில்லா கேள்விகள்

ட்ரூங் மை லானின் முதல் வழக்கு விசாரணை வெளிவந்த போது, இதுபோன்ற ஒரு திட்டம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கண்டறியப்படாமல் நீடிக்க முடிக்க முடிந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன.

சிங்கப்பூரில் உள்ள ஐஎஸ்இஏஎஸ்- யூசப் இஷாக் இன்ஸ்டிட்யூட்டில் வியட்நாம் ஆய்வுத் திட்டத்தை நடத்தும் லே ஹாங் ஹிப், "நான் குழப்பத்தில் இருக்கிறேன்" என்கிறார்.

"ஏனென்றால் அது ஒரு ரகசியம் அல்ல. ட்ரூங் மை லானும் அவரது வான் தின் பாட் குழுவும் எஸ்சிபி வங்கியை தங்கள் சொந்த உண்டியலாகப் பயன்படுத்தி, மிக முக்கியமான இடங்களில் ரியல் எஸ்டேட் சொத்துகளை பெருமளவில் கையகப்படுத்திய விஷயம் சந்தையில் நன்கு அறியப்பட்ட ஒன்றாக இருந்தது.

அவருக்கு எங்கிருந்து பணத்தைப் பெற வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏனென்றால் அது மிகவும் பொதுவான நடைமுறை. எஸ்சிபி மட்டும் இந்த நடைமுறையைப் பயன்படுத்தப்படும் வங்கி அல்ல. எனவே இதுபோன்ற பல வழக்குகள் இருப்பதால் அரசாங்கம் குழப்பம் அடைந்திருக்கலாம்" என்கிறார் அவர்.

வணிகம் மற்றும் அரசியலில் உள்ள சக்தி வாய்ந்த நபர்கள் ட்ரூங் மை லானை சட்டத்தில் இருந்து பாதுகாத்து, நாட்டின் வங்கித் துறையை பாதித்த உள்ளூர் ஊழலைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என்று ஊகிக்கிறார் டேவிட் பிரவுன்.

ஆயினும்கூட, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஒரு பரந்த கதை வெளிப்பட்டது. விசாரணையானது ட்ரூங் மை லானின் குற்றச் செயல்களைப் பற்றியது மட்டுமல்ல, வியட்நாமின் அரசியல் நிலப்பரப்பில் அதிகாரத்திற்கான ஒரு பெரிய போராட்டத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்தியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நுயென் பு ட்ரோங் (Nguyen Phu Trong), ஊழலுக்கு எதிரான பிரசாரத்திற்கு தலைமை தாங்கி, ஹோ சி மின் நகரத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை கட்டுப்படுத்த முயன்றார்.

இந்த பிரசாரத்தால் இரண்டு ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு துணைப் பிரதமர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அதிகாரப் போராட்டத்தில் ட்ரூங் மை லானை வழக்கு விசாரணை ஒரு போர்க்களமாக மாறியது. இது கட்சியின் பழமைவாத கொள்கைகள் மற்றும் வியட்நாமின் பொருளாதார அபிலாஷைகளின் உண்மைகளுக்கு இடையிலான பதற்றத்தின் அடையாளமாகும்.

தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு நாடு மாற முற்பட்டபோது, ​​ஊழலை எதிர்த்துப் போராடும் முரண்பாடு, பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் போது, ​​வியட்நாமின் எழுச்சியைத் தூண்டிய இயந்திரத்தையே சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

"அதுதான் முரண்பாடு" என்கிறார் லு ஹாங் ஹிப். "அவர்களின் வளர்ச்சி மாதிரி நீண்ட காலமாக ஊழல் நடைமுறைகளை நம்பியிருக்கிறது. ஊழல் என்பது இங்கு இயந்திரங்களை வேலை செய்ய வைக்கும் கிரீஸ் போல. அவர்கள் கிரீஸ் போடுவதை நிறுத்தினால், அரசு இயந்திரங்கள் இனி வேலை செய்யாமல் போகலாம்" என்கிறார் அவர்.

ட்ரூங் மை லானின் சோதனையானது, வேகமாக மாறிவரும் வியட்நாமில் அதிகாரம், லட்சியம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளின் அடையாளமாகும்.

நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், ட்ரூங் மை லானின் கதை நீதிமன்றத்தின் சுவர்களுக்கு அப்பால் எதிரொலித்தது. வியட்நாம் தேசம் அதன் மோசமான கடந்த காலத்தையும் அதன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் பற்றி கவலைப்பட அது ஒரு காரணமாக அமைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)