நனவானது இந்தியக் கிரிக்கெட் பெண்களின் 'கனா' - U19 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images
19 வயதுக்கு உள்பட்டோருக்கான முதலாவது பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
டைட்டஸ் சாது உள்ளிட்ட இந்தியப் பந்துவீச்சாளர்களும் த்ரிஷா உள்ளிட்ட பேட்டர்களும் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார்கள்.
பந்துவீச்சாளர் டைட்டஸ் சாது ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
காத்திருந்த தருணம் வந்துவிட்டது, இனி வருங்காலம் நமக்குத்தான் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் நூஷுன் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.
இந்தியப் பந்துவீச்சில் திணறிய இங்கிலாந்து வீீராங்கனைகள், குறுகிய இடைவெளியில் ஆட்டமிழந்தார்கள்.
20 ஓவர் கொண்ட போட்டியில் 18-ஆவது ஓவரிலேயே இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் இந்திய அணி சார்பில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே ஸ்வேதாவின் விக்கெட்டை பறிகொடுத்தது. எநினும் ஷபாலி வர்மா, சௌம்யா, த்ரிஷா ஆகியோர் கணிசமாக ரன்களைச் சேகரித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
69 ரன்கள் என்ற இலக்கை எட்ட இந்திய அணிக்கு 13.5 ஓவர்களே தேவைப்பட்டன.
சீனியர் அணியில் இடம்பெற்றிருக்கும் கேப்டன் ஷபாலி வர்மா அடித்த சிக்சர்தான் இந்தப் போட்டியில் அடிக்கப்பட்ட ஒரே சிக்சர்.
த்ரிஷா 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களை சேர்த்தார்.
4 ஓவர்களில் வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து அணியைத் தடுமாறச் செய்த டைட்ஸ் சாது சிறந்த வீராங்கனை விருது கிடைத்தது.
பெண்களுக்கான ஜூனியர் டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் 3 வெற்றி, சூப்பர் சிக்ஸ் பிரிவில் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஆனால், இங்கிலாந்து அணியோ, ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஒப்பிட்டளவில் இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால், இன்றைய இறுதிப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி
தென்னாப்ரிக்காவின் போர்செப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரீவன்ஸ் - லிபெர்டி ஹிப் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தித்தாஸ் சாது 4வது பந்திலேயே லிபெர்டி ஹிப்பை ஆட்டமிழக்க செய்தார்.
இதையடுத்து, ஸ்க்ரீவன்ஸ் உடன் இணைந்த ஹோலண்ட் 2 பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோர் தேக்கமடையாமல் பார்த்துகொண்டார். இந்த ஜோடியை அர்ச்சனா தேவி பிரித்தார். அவர் வீசிய பந்தை ரிவர்ஸ்கிப்பில் ஆட முயற்சித்த ஹோலண்ட் போல்ட் ஆகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 3.3 ஓவர்களுக்கு 15 ஆக இருந்தது.
அதே ஓவரின் கடைசி பந்தில் இங்கிலாந்தின் நட்சத்திர ஆட்டக்காரர் கிரேஸ் ஸ்க்ரீவன்ஸும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் 289 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் சுவேதா செராவத்க்கு ((292) அடுத்த இடத்தில் ஸ்க்ரீவன்ஸ் இருந்தார். கடைசி 5 ஆட்டங்களில் அவர் 4 ஆட்டங்களில் அரை சதம் அடித்திருந்த நிலையில், இந்த போட்டியில் 4 ரன்களிலேயே அவர் வெளியேறியது இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அர்ச்சனா தேவி பிடித்த அசத்தலான கேட்ச்

பட மூலாதாரம், Getty Images
அடுத்து வந்த செரன் ஸ்மேல் 4 ரன்களின் தித்தாஸ் சாது பந்தில் ஃபோல்ட் ஆகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 6.2 ஓவர்களில் 22 ஆக இருந்தது. இங்கிலாந்து தரப்பில் மெக்டொனால்ட் கே மட்டுமே இந்திய அணியில் பந்துவீச்சை ஓரளவு சமாளித்து ஆடினார். மற்றவர்கள் ஒருசில பந்துகளிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். பார்ஷவி சோப்ரா வீசிய 10வது ஓவரின் கடைசி பந்தில் சாரிஸ் பாவ்லி (2 ரன்கள்) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
பார்ஷவி சோப்ரா வீசிய 12வது ஓவரின் முதல் பந்தை மெக்டோனால்ட் கே அடித்து ஆட முயன்றபோது பந்து மேலே எழும்பியது. அப்போது, அர்ச்சனா தேவி பாய்ந்துவந்து ஒற்றை கையால் பந்தை கேட்ச் பிடித்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதை தொடர்ந்து மெக்டோனால்ட் கேவும்(19 ரன்கள்) வெளியேறினார்.
அடுத்த வந்த ஜோசி க்ரூவ்ஸ் சௌமியா திவாரி மூலம் ரன் அவுட் செய்யப்பட்டும், ஹன்னா பேக்கர் ஸ்டம்பிங் செய்யப்பட்டும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி 68 ரன்களை மட்டுமே எடுத்தது.
தித்தாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஒருசில கேட்ச்களை விட்டதை தவிர்த்து பார்க்கும்போது இந்திய அணியின் ஃபீல்டிங்கும் பந்துவீச்சும் சிறப்பாக இந்த ஆட்டத்தில் வெளிப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












