டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் முதல் போட்டியே பாகிஸ்தானுடன் - எகிறும் எதிர்பார்ப்பு

மகளிர் டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. மகளிர் உலகக் கோப்பையின் 8வது பதிப்பான இத்தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகிறது. 

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது.

2012ஆம் ஆண்டுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2014இல் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டது. 

இதுவரை 7 முறை மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. 

எந்தப் பிரிவில் எந்த அணிகள் இடம்பெற்றுள்ளன?

10 அணிகளும் தலா 5 அணிகளாக 2 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் உள்ளன. 

குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

அணிகளின் தரவரிசை

பெண்கள் டி20 அணிகளைப் பொருத்தவரை 299 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 2வது இடத்திலும் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளன.

இந்திய அணி 267 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், அயர்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

கேப் டவுனில் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில், தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்காவை இலங்கை அணி எதிர்கொள்கிறது.

லீக் ஆட்டங்களை தொடர்ந்து முதலாவது அரையிறுதி ஆட்டம் பிப்ரவரி 23ஆம் தேதியும் 2வது அரையிறுதி ஆட்டம் பிப்ரவரி 24ஆம் தேதியும் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம்

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி கேப் டவுனில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய மகளிர் அணி கடைசியாக விளையாடியுள்ள 5 டி20 ஆட்டங்களில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்துள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 1 வெற்றியையும் 4 தோல்வியையும் சந்தித்துள்ளது. 

இந்திய அணி ஆட்டக்காரர்கள் விவரம்

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிகஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா சிங் தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் ஷிகா பனிக்வாட். 

மாற்று ஆட்டக்காரர்கள்: மேக்னா, சினே ராணா, மேக்னா சிங்.

இந்தியாவின் ரேணுகா சிங்கை ஆண்டின் சிறந்த வளர்ந்துவரும் வீராங்கனையாக ஐசிசி கடந்த ஜனவரி 25, 2023 அன்று தேர்வு செய்தது. எனினும், தனிப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் பந்துவீச்சாளர் பட்டியலில் ரேணுகா சிங் 7வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான தீப்தி ஷர்மா 3வது இடத்தில் உள்ளார். சினே ராணா 9வது இடத்தில் இருக்கிறார். 

பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3வது இடத்திலும் ஷெபாலி வர்மா 8வது இடத்திலும் உள்ளனர். மற்றபடி முதல் பத்து ஆட்டக்காரர்களுக்கான பட்டியலில் 7 வீராங்கனைகளுடன் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது. 

ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்தியாவின் தீப்தி ஷர்மா 2வது இடத்தில் உள்ளார். 

ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை பொறுத்துவரை ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 7 தொடர்களில் 5 முறை ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றுள்ளது. 1 முறை 2வது இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல், மகளிர் உலகக் கோப்பையின் 7 தொடர்களிலுமே அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 

அடுத்ததாக, இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி தலா ஒருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளன. இந்தியாவை பொருத்தவரை கடந்த 2020இல் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரில் 2வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக உள்ளது. 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: