இந்திய அணியை தோற்கடித்த ‘பவர் பிளே திகில்’

பட மூலாதாரம், sportzpics/BCCI
360 டிகிரி ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவ் ஒரு ஓவர் முழுவதும் கிரீஸில் நின்று ரன் எதுவும் எடுக்கவில்லை என்றால் நம்பமுடியவில்லை அல்லவா. இப்படி நம்ப முடியாத பலவும் நடந்தது நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா ஆடிய முதலாவது டி20 போட்டியில்.
சூர்யகுமார் யாதவ் அப்படி நின்றது பவர்பிளேயின் கடைசி ஓவரில். சான்ட்னர் வீசிய அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவின் 360 டிகிரி மாயாஜாலங்கள் எதையும் நிகழ்த்த முடியவில்லை.
ஆனால் அவரது பொறுமையையும் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் 177 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 15 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அளவுக்கு பவர் பிளேயில் மோசமாக ஆடினார்கள் இந்திய அணியின் தொடக்க வீரர்கள்.
சூர்யகுமார் யாதவும் ஹர்திக் பாண்ட்யாவும் ஓரளவு ரன்களைக் குவிக்க முயன்றாலும் அது நியூசிலாந்தை வீழ்த்தப் போதுமானதாக இல்லை. சூர்யகுமார் யாதவும் 47 ரன்களிலும் ஹர்திக் 21 ரன்களிலும் வெளியேறியபிறகு, இந்திய அணியின் தடுமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது.
வாஷிங்டன் சுந்தரைத் தவிர வேறு யாரும் நீடித்து நிற்கவில்லை.
இதைவிடவும் மோசமான ஒன்று இந்திய அணி பந்துவீசிய கடைசி ஓவரில் நடந்தது. அந்த ஓவரின் முதல் பந்து நோபாலாக வீச, அதில் மிட்சல் சிக்சர் அடித்தார். அதற்காகக் கொடுக்கப் பட்ட ப்ரீ ஹிட்டிலும் மிட்சல் சிக்சர் அடித்தார். அடுத்த பந்தும் சிக்சரானது. அதற்கடுத்த பந்தில் பவுண்டரியை விளாசினார் மிட்சல் . கடைசி ஓவரில் மட்டும் அர்ஷ்தீப் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் நியூஸிலாந்து அணி 176 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது.
இந்த ஓவரில் ரன்களைக் கட்டுப்படுத்தியிருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கவும் வாய்ப்பிருந்ததாகவே கருதலாம். ஏனென்றால் கடைசி ஓவர் வரை நின்று அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி 150 ரன்களைக் கடக்க உதவினார். ஆனால் அது வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.
இறுதியில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், BCCI/ Sportzpics
இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண அவர் தனது குடும்பத்துடன் வந்திருந்தார்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இரவு நேரம் செல்லச் செல்ல பனித்துளிகள் பட்டு களம் ஈரமாகிவிடும் என்பதால்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்வதாக அவர் கூறினார்.
ஆனால் முதல் ஓவரிலேயே ஹர்திக்கின் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகளை அடித்து அதிரடியாக பேட்டிங்கை தொடங்கினார் நியூஸிலாந்து தொடக்க ஆட்டக்காரரான ஆலன். இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப்பின் பந்துவீச்சையும் அவர் விட்டுவைக்கவில்லை. நான்காவது ஓவரிலும் ஐந்தாவது ஓவரிலும் சிக்சர் அடித்த ஆலனின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.
5-ஆவது ஓவரின் ஆறாவது பந்தை மார்க் சாப்மனுக்கு வீசினார் சுந்தர். ஸ்ட்ரைட் திசையில் தனக்கு வலக்கைப் பக்கமாக வந்த பந்தை பாய்ந்து சென்று ஒருகையால் பிடித்து சாப்மனை வெளியேற்றினார். பார்ப்பதற்கு ஏதோ மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டைப் போன்றே தோன்றியது. முதலில் கள நடுவர் ஆட்டமிழந்ததாகக் கூறினாலும், மூன்றாம் நடுவரின் ஆய்வுக்குப் பிறகே அது அவுட் எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரரான கான்வே மறுமுனையில் கணிசமாக ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்.
10 ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை எடுத்திருந்தது.

பட மூலாதாரம், BCCI/Sportzpics
18-ஆவது ஓவரில் அரைச் சதம் அடித்திருந்த கான்வே அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டு பந்துகளுக்குப் பிறகு அதிரடி ஆட்டக்காரரான பிரேஸ்வெல்லும் ரன் அவுட் ஆனார்.
19-ஆவது ஓவர் வரை இந்திய அணியின் பந்துவீச்சு ஓரளவு கட்டுப்பாடாகவே இருந்தது. ஆனால் 20-ஆவது ஓவரில் அது முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது. ஏற்கெனவே டி20 போட்டிகளில் நோபால்கள் அதிகம் வீசப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட அர்ஷ்தீப் சிங் இந்தப் போட்டியின் கடைசி ஓவரிலும் ஒரே பந்தில் 13 ரன்களைக் கொடுக்கும்படியாகிவிட்டது.
அந்த ஓவரின் முதல் பந்து நோபாலாக வீச, அதில் மிட்சல் சிக்சர் அடித்தார். அதற்காகக் கொடுக்கப் பட்ட ப்ரீ ஹிட்டிலும் மிட்சல் சிக்சர் அடித்தார். அடுத்த பந்தும் சிக்சரானது. அதற்கடுத்த பந்தில் பவுண்டரியை விளாசினார் மிட்சல் . கடைசி ஓவரில் மட்டும் அர்ஷ்தீப் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் நியூஸிலாந்து அணி 176 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது.

பட மூலாதாரம், BCCI/Sportzpics
பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறத் தொடங்கியது. இரண்டாவது ஓவரிலேயே பிரேஸ்வெல்லின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான் இஷான் கிஷன். அதன் பிறகு பந்த ராகுல் திரிபாதி ரன் ஏதும் எடுக்காமல் டஃப்பியின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சுப்மான் கில்லும் ஆட்டமிழந்தார். இந்திய அணி 15 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே முதல் 3 விக்கெட்டை இழந்துவிட்டது.
பின்னர் சூர்யகுமார் யாதவும் ஹர்திக் பாண்ட்யாவும் சற்று நீடித்து ஆடினார்கள்.
விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்ததால் ஆறாவது ஓவரில் பொறுமையாக ஆடிய சூர்யகுமார் ஆறு பந்துகளிலும் ரன் ஏதும் எடுக்கவில்லை.
இவ்விருவரும் ஆட்டமிழந்தபிறகு இந்திய அணியின் வெற்றி மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியது. கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தரின் அதிரடி ஆட்டமும் வெற்றியைப் பெறுவதற்குப் போதுமானதாக இல்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












