விளக்குகளை எரிய வைக்கும் பாறைகள் உண்மையா - நிபுணர்கள் கூறுவது என்ன?

- எழுதியவர், உண்மை சோதிக்கும் குழு
- பதவி, பிபிசி
விளக்குகளை எரிய வைக்கும் ஆற்றல் உடைய பாறைகள் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளை பெற்று வருகிறது.
சில பயனர்கள், ஆப்ரிக்க கண்டத்தின் எரிசத்தி பிரச்னைக்கு தீர்வாக இந்த பாறை இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒரு பெரிய கூற்று, எனவே, இந்த பாறை தொடர்பான காட்சிகளை நிபுணர்கள் சிலரிடம் காட்டியபோது இதுபோன்ற பண்புகள் ஏன் மிகவும் சாத்தியமில்லை என்பதை எங்களுக்கு விளக்கினர்.
வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன?
மிகவும் பரவலாகப் பகிரப்பட்ட வீடியோக்களில் ஒன்று, இரண்டு பாறைகளுக்கு இடையே மின்சாரத் தீப்பொறிகள் பறப்பதைக் காட்டுகின்றன. தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வர்த்தகரான டேனியல் மர்வின் என்பவரால் இந்த வீடியோ பகிரப்பட்டது. இவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். டேனியல் பதிவிட்ட இந்த வீடியோவை தற்போதுவரை 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அவரது பதிவில் பின்னோட்டம் இட்டுள்ள நபர் ஒருவர், பாறைகளில் கம்பிகளை வைப்பதன் மூலம் விளக்கு எரிவது போன்ற வீடியோவை இணைத்துள்ளார். இந்த வீடியோவையும் டேனியல் தனது தனிப் பதிவாக வெளியிட்டுள்ளார்.
இந்த இரண்டு வீடியோக்களையும் ஆப்ரிக்கன் ஆர்ச்சிவ்ஸ் என்ற புகழ்பெற்ற ட்விட்டர் பக்கம் தங்களது பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. இவையும் பல லட்சம் பார்வைகளை கடந்துள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த வீடியோக்கள் எங்கு எடுக்கப்பட்டவை?
பாறையைப் பயன்படுத்தி ஒரு நபர் மின்சார விளக்கை ஒளிரச் செய்யும் காட்சியில், காங்கோ ஜனநாயக குடியரசில் இருந்து சுவாஹிலி உச்சரிப்பில் பேசுவது போன்ற குரல் கேட்கிறது.
இரண்டு பாறைகளை உரசும்போது தீப்பொறி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் முறையில் ஆய்வு செய்தபோது, மொராக்கோவின் முகமது ஃபர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் முகநூல் பக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது தெரியவந்தது. உண்மையான வீடியோ அதற்கு முன்பாகவே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கலாம்.
அதில், லித்தியம் என்று மட்டும் தலைப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த தகவலும் இல்லை. இதைடுத்து அப்பல்கலைக்கழகத்தை பிபிசி தொடர்புகொண்டது. எனினும், இதுவரை பதில் கிடைக்கவில்லை

அதேவேளையில், இந்த பாறைகள் ஜிம்பாப்வேவில் கண்டறியப்பட்டது என்று மற்றொரு டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கண்டுபிடிப்பு "நம் நாட்டிற்கு... நிலையான ஆற்றலைப் பெற உதவும்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜிம்பாப்வே ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய லித்தியம் உற்பத்தியாளராக உள்ளது. மின்சார கார்கள் மற்றும் மொபைல் சாதனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு உலோகமாக லித்தியம் உள்ளது.
பாறைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமா?
“இந்த வீடியோக்கள் இலவச மின் ஆற்றலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது,” என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பள்ளியின் பேராசிரியர் ஸ்டூவர்ட் ஹாஸ்ஸெல்டின்.
“புவியியல் ரீதியாக இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை, மேலும், பாறைகளை மிக அருகில் வைத்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் பாறைகள் மின்சக்தியுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று நாம் கருதுகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
தீப்பொறி பாறைகளைக் காட்டும் வீடியோவின் கீழ் பகுதியில் கையுறை போன்ற தோற்றம் இருப்பது மிகவும் வெளிப்படுத்துவதாக அவர் கூறுகிறார்.
எனவே, பேட்டரியில் இருந்து பாறைக்குள் மின்சாரம் சென்றிருக்கலாம் என்றும், கையுறை அணிந்திருப்பதால் அதனுள் மின்சாரம் பாயவில்லை என்றும், இரண்டாவது பாறை வழியாக மின்சாரம் பூமிக்கு பாய்கிறது என்பதையும் காட்டுவதாக அவர் கூறுகிறார்.
உலோக தாதுக்கள் சிறந்த மின்சார கடத்திகள் ஆகும். கையுறை என்பது ஒரு மின்கடத்தி, இது நபரின் உடல் வழியாக நிலத்திற்கு செல்லும் மின்னோட்டத்தைத் தடுக்கிறது.
பாறையில் கம்பிகளை வைத்து விளக்கை எரியச் செய்யும் மற்றொரு வீடியோவை அவரிடம் காட்டியபோது, இது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்று தெரிவித்தார். “ஏனெனில் இந்த வீடியோவில் மூன்று கைகள்(இரண்டு நபர்கள்) உள்ளன ” என அவர் கூறினார்.
“இரண்டு கைகள் தொடும் போது மின்னோட்டம் பாய்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது, மேலும் கம்பிகள் பெரும்பாலும் மாயைதான். எனவே, இதில் தவறாக வழிநடத்தும் தந்திரங்கள் ஏதேனும் உள்ளதா என பார்க்கவேண்டும்” என்றார்
இரண்டு கம்பிகளில் ஒரு கம்பி பாறையில் தொடாத போதும் விளக்கு எரிவது வீடியோவில் தெரிகிறது. இது, பாறைக்கும் சுற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கான கூடுதல் அறிகுறியாகும்.

காங்கோவின் கனிமங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான சக்தி
காங்கோ ஜனநாயக குடியரசு கோல்டன் (கொலம்பைட்-டான்டலைட்) உட்பட மதிப்புமிக்க கனிம தாதுக்களை உற்பத்தி செய்கிறது. சுத்திகரிக்கப்பட்டால், கோல்டன், அதிக மின் சார்ஜை வைத்திருக்கக் கூடிய வெப்ப எதிர்ப்பு தூளான உலோக டான்டலத்தை அளிக்கிறது என இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தின் டாக்டர் முனிரா ராஜி கருத்து தெரிவிக்கிறார்.
இந்த பண்புகள் செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் கூறுகளின் தயாரிப்பில் அவற்றை விலைமதிப்பற்றவையாக மாற்றுகின்றன.
புவியியல் ஆய்வகத்தில் சோதனை செய்யாமல் வீடியோக்களில் காட்டப்பட்டுள்ள எந்த பாறைகளும் கோல்டன்தானா என்பதை உறுதிப்படுத்த முடியாது, ஆனால் அவை இருந்தாலும் கூட, அவை தானாகவே மின்சாரத்தை உருவாக்க முடியாது என்று டாக்டர் ராஜி கூறுகிறார்.
அந்த வகையில், இந்த பாறைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன என்ற கூற்று தவறானது என்றும் அவர் கூறினார்.
நைஜிரியா பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியரான இகென்னா ஒகோன்க்வோ, இந்த வீடியோவை பார்த்தார். இந்த பாறைகள் துத்தநாகம் அல்லது ஈயத் தாது போன்று இருப்பதாகவும், இவற்றுக்கு விளக்கை எரியச் செய்யும் ஆற்றல் இல்லை என்றும் அவர் கூறுகிறார். “சில துணிகளில் நிகழும் வகையான மின்சாரத்தை அவர்கள் வைத்திருக்கலாம். ஆனால், அது விளக்கை எரிய செய்யாது” என்று குறிப்பிட்ட அவர், இந்த வீடியோக்கள் தந்திரங்கள் நிறைந்ததாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












