விமானம் ஏறாமலேயே உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கால் பதித்த மனிதர். எப்படி சாதித்தார் தெரியுமா?

பட மூலாதாரம், THOR PEDERSEN
நீங்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யவேண்டும் என்று எப்போதாவது கனவு கண்டிருக்கிறீர்களா?
உலகம் முழுவதும் வெறும் 300க்கும் குறைவானவர்களே அது போன்ற கனவை நனவாக்கியுள்ளனர். அவர்களில் மூன்று பேர் மட்டுமே அனைத்து நாடுகளுக்கும் இருமுறை சென்றுள்ளனர்; இதே முயற்சியில் இடுபட்ட இரண்டு பேர் பின்னர் வீடு திரும்பவே இல்லை.
ஆனால் டென்மார்க்கைச் சேர்ந்த ஒருவர் மட்டும் ஒரு போதும் விமானத்தில் பறக்காமல் உலக நாடுகள் அனைத்துக்கும் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
"என் பெயர் டார்ப்ஜோர்ன் சி. பெடர்சன். ஒரு பயணியை இந்தப் பெயரைக் கொண்டு அழைப்பது ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும். அதனால் என்னை 'தார்' என்று அழைத்தால் போதும் என தமது தனது 'ஒன்ஸ் அபான் எ சாகா' (Once upon a saga) என்ற இணையதளத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார் அவர்.
மேலும் டென்மார்க் விஞ்ஞானி பியட் ஹெய்ன் கூறிய "உலகம் உருண்டையானது என்பதை புரிந்து கொள்ள ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும்," என்ற விஷயம் தான் தனக்குள் ஆர்வத்தைத் தூண்டியதாகவும் அவர் கூறுகிறார்.
வீட்டை விட்டு சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய அவர், தனது உலகப் பயணத்தை முடிக்காமல் வீடு திரும்பக் கூடாது என்ற நோக்கத்துடன் பயணத்தைத் தொடங்கினார்.
அப்போது அவர் தமது பயணத்துக்காக சில எளிய விதிகளை உருவாக்கிக் கொண்டார். எந்த ஒரு நாட்டுக்குச் சென்றாலும் குறைந்தது அந்நாட்டில் 24 மணிநேரம் தங்கவேண்டும் என்றும், எந்த காரணத்தைக் கொண்டும் விமானத்தில் ஏறக்கூடாது என்றும், தரை மற்றும் கடல் வழியாகவே தமது பயணத்தை நிறைவு செய்யவேண்டும் என்றும் அந்த விதிகள் கூறுகின்றன.
"ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல நான் ஒரு காரை வாங்கவோ, கடன் வாங்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ மாட்டேன். மேலும் நான் கண்டிப்பாக ஓட்டுனரைப் பயன்படுத்தக் கூடாது. அதனால், நான் உள்ளூர் மற்றும் பிற பயணிகளுடன் நிறைய நேரம் செலவிடுவதை உறுதி செய்வேன். உலகத்தைப் பார்க்க இது ஒரு அற்புதமான வழி!" என்று அவர் எழுதியுள்ளார்.
நடைபயணம், கார், பேருந்து, ரயில், படகு, கப்பல் என உலகின் அனைத்து நாடுகளிலும் பயணம் செய்ய அவருக்கு 3,512 நாட்கள் தேவைப்பட்டன .
ஐ.நா. அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 193 நாடுகள் மற்றும் அந்த அமைப்பில் சேர முயற்சிகளை மேற்கொண்டுள்ள இரண்டு நாடுகள் உள்பட 203 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அது மட்டுமின்றி, பல நாடுகள் உரிமை கொண்டாடும் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கும் சென்றுவந்ததாக தார் கூறுகிறார்.

பட மூலாதாரம், THOR PEDERSEN
இந்த சாகச பயணம் கடந்த 10/10/2013 அன்று காலை 10:10 மணிக்கு தொடங்கியது. இப்பயணம் 2018 இல் நிறைவடையும் என முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட 5 ஆண்டுகள் கழித்து தான் அந்த பயணம் நிறைவடையப் போகிறது.
கடைசியில் மே 2023இல், அவர் இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடான மாலத்தீவை அடைந்தார். கடைசியாக ஒரு புதிய நாட்டுக்குச் செல்லவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததாலேயே அங்கு அவர் சென்றார். வேறு எந்த நாடும் அவருடைய பட்டியலில் இருந்து விடுபடவில்லை.
ஜுன் மாதம், பிபிசி உலகச் சேவையின் பிபிசி ஓஎஸ் திட்டத்தில் அவர் பேசிய போது, குப்பைகளால் ஆன திலாஃபுஷி தீவில் அவர் இருந்தார்.
இப்பயணத்தின் போது உங்களை பாதித்த, உங்களால் மறக்க முடியாத விஷயம் என்ன?
பல விஷயங்கள்! இப்பயணத்தில் நான் செய்துகொண்ட முதல் திருமணம்... பின்னர் இரண்டாவது திருமணம்...
இந்த பூமியிலிருந்து வெளியில் கிளம்பிச் சென்ற ஒரு ராக்கெட்டைப் பார்த்தது... அது ஒரு மிகச்சிறந்த தருணம்...
புயலின் போது கன்டெய்னர் கப்பலில் பயணித்தது... திமிங்கலங்கள் குதித்ததைப் பார்த்தது... சூடானில் ஒரு திருமணத்திற்கு அழைக்கப்பட்டது... இன்னும் எத்தனையோ அனுபவங்கள்...
உங்கள் மனைவியை எப்படி பார்க்க முடிந்தது? அது எவ்வளவு சிரமமானதாக இருந்தது?
உலகம் முழுவதும் நான் பயணம் மேற்கொண்டிருந்த போது, 27 முறை அவர் என்னைப் பார்க்க வந்திருக்கிறாள். ஆனால் கொரோனா தொற்று பரவிய போது, நான் ஹாங்காங்கில் இரண்டு ஆண்டுகள் சிக்கிக்கொண்டேன். அப்போது அவரை வரவழைப்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது.
ஹாங்காங் மிகவும் கண்டிப்பு மிக்க நகரம். என்னால் அங்கிருந்து கிளம்பவும் முடியவில்லை. நான் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன.
எங்கள் இருவருக்கும் திருமணமாகாததாலும், நான் சீனக்குடிமகன் இல்லை என்பதாலும், ஹாங்காங்கில் என்னைப் பார்க்க என் மனைவியை வரவழைக்க முடியவில்லை. எனவே நான் அதற்கு ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது.
ஒரு தற்காலிக வேலையைத் தேடிக்கொண்ட நான், அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் எனது மனைவியை சட்டப்படி இணையதளம் மூலம் திருமணம் செய்துகொண்டேன். எனது தாய்நாடான டென்மார்க்கில் அந்த திருமணம் செல்லாது என்றாலும், ஹாங்காங்கில் அத்திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.
அதைவைத்து எனது மனைவிக்கு என்னால் விசா பெற முடிந்தது.
அதன் பின் ஹாங்காங் வந்த எனது மனையை மீண்டும் திருமணம் செய்துகொள்ள நான் முடிவெடுத்தேன். ஆனால், ஏற்கெனவே திருமணமானவர்கள் மீண்டும் திருமணம் செய்ய ஹாங்காங் சட்டங்கள் அனுமதிக்கவில்லை.
நுழைவதற்கு மிகவும் கடினமான நாடு எது?
ஆப்பிரிக்காவில் உள்ள ஈக்குவடோரியல் கினியா தான் மிகக்கடினமான அனுபவங்களை எனக்கு அளித்த நாடு. அந்த நாட்டுக்குச் செல்ல நான் விசா பெற முயன்ற போது, தூதரக அதிகாரிகள் என்னை கண்ணியமாகவும் நடத்தவில்லை. பல அலுவலகங்களில் முயற்சித்தும் எனக்கு மனநிறைவு அளிக்கும்படியான நடவடிக்கைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. ஈக்குவடோரியல் கினியாவுக்குச் செல்ல வெவ்வேறு இடங்களிலிருந்து 6 முறை விசா பெற முயன்றேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் அந்நாட்டை விட்டுவிடலாம் என முடிவெடுத்தேன். அது தான் உண்மையில் ஒரு கடினமான காலகட்டம்.

பட மூலாதாரம், ONCE UPON A SAGA
ஈக்குவடோரியல் கிணியாவிற்குள் நுழைய கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
அந்த அளவுக்கு அது ஒரு மதிப்பு மிக்க நாடா?
நிச்சயமாக. அது என்னோட 100 வது நாடு, எனவே எனது பயணத்தின் ஒரு முக்கிய கட்டம் அது. அந்த வகையில் அது ஒரு மதிப்பு மிக்க நாடு.
அது ஒரு அழகான நாடும் கூட. அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் அன்புடனும், நட்புணர்வுடனும் என்னிடம் பழகினர்.
இது போன்ற பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தால், பெரும்பாலும் நாம் அப்பயணத்தின் நினைவாக நினைவுப் பரிசுகளை வாங்கி வருவோம். அது போல் ஏதாவது நினைவுப் பரிசுகளை வாங்கி வீட்டுக்கு அனுப்பினீர்களா?
நான் எடுத்துச் சென்ற பொருட்களே மிகவும் அதிகம் என்பதால் அது போன்ற பொருட்களை வாங்க என்னால் முடியவில்லை.
பொதுவாக, நான் நினைவு பரிசுகளை வாங்குவதில்லை. ஏனென்றால் அடுத்த முறை என்னைப் பார்க்க என் மனைவி வரும் வரை அந்தப் பொருட்களை நான் தொடர்ந்து சுமந்துகொண்டிருக்கவேண்டிய நிலை இருந்தது.
ஆனால் நான் உலகம் முழுவதும் பயணித்து சில நினைவுப் பொருட்களை சேகரித்துள்ளேன். உலகம் முழுவதும் வசிக்கும் பொதுமக்கள் எனக்கு பல பரிசுகளையும் வழங்கியுள்ளனர். இந்த மக்கள் உண்மையிலேயே மிகவும் அன்பானவர்கள்.
இப்பயணத்தின் போது நான் டென்மார்க் செஞ்சிலுவைச் சங்கத்தின் நல்லெண்ணத் தூதராக இருப்பதால், சுமார் 190 நாடுகளில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களுக்குப் பயணம் மேற்கொண்டேன்.
அவர்கள் எனக்குப் பரிசாக காஃபி கப் கொடுக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். அதனால் 10 செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களில் நான் 10 காஃபி கோப்பைகளைப் பரிசாகப் பெற்றேன்.

பட மூலாதாரம், ONCE UPON A SAGA
விமானங்கள் மேலே பறப்பதைப் பார்க்கும்போது, "நாமும் இது போல் விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்தால் மிகவும் எளிமையாக இருந்திருக்குமே!" என்று நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?
கண்டிப்பாக... நான் எத்தனை கடினமான பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். அதிலும் பேருந்துப் பயணங்கள் எனக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தன. பலநேரங்களில் நீலவானத்தைப் பார்த்தும், அந்த வானத்தில் பறந்த விமானங்களைக் கண்டும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒரு முறை, நான் உண்மையிலுமே சரியான பாதையில் தான் பயணிக்கிறேனா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது.
ஒரு முறை அது எனது நீண்ட பேருந்து பயணமாக அமைந்தது. 54 மணிநேரம் தொடர்ந்து ஒரே பேருந்தில் பயணம் செய்தேன். அப்படி ஒரு பயணத்திற்குப் பின் ஒருவருக்கு என்ன மாதிரியான வேதனைகள் ஏற்படும் என உங்களால் கற்பனை செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
உங்களுடைய முழு பயண அனுபவத்தில், நீங்கள் எப்போதாவது சோர்வடைந்திருக்கிறீர்களா?
நிச்சயமாக பல முறை நான் சோர்வடைந்திருக்கிறேன்.
ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்கும் மேல் பயணம் செய்த பலரை நான் சந்தித்ததில்லை.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பயணம் மேற்கொண்ட ஒரு சிலரை எனக்குத் தெரியும். ஆனால், அது பெரும்பாலும் ஒரு யூனிகார்னைச் சந்திப்பதைப் போன்று அரிதானது.
உண்மையில் இரண்டு வருடங்களில் நான் பல நபர்களைச் சந்தித்தேன், பலவிதமான உணவுகளைச் சுவைத்துப் பார்த்தேன். போக்குவரத்து, விசா, ஆவணங்கள் மற்றும் இவை அனைத்தையும் நான் பார்த்துவிட்டேன்... அதனால் நான் வீட்டிற்குத் திரும்பத் தயாராக இருந்தேன்.
வெளிப்படையாகச் சொன்னால், நான் 2015ம் ஆண்டே டென்மார்க் திரும்ப விரும்பினேன்.
இருப்பினும், நான் எனக்கென்று ஒரு இலக்கை நிர்ணயித்து, இதுவரை யாரும் செய்யாத ஒன்றை நிறைவேற்றிக் காட்ட முயற்சித்தேன்.
அது போன்ற ஒரு சாதனைக்கு நிறைய மதிப்பு இருக்கிறது என்பதை நான் நன்றாகவே அறிந்திருந்தேன். மேலும், எனது செயலால், உலகம் முழுவதும் சாதனை படைக்க விரும்புபவர்கள் என்மூலம் உத்வேகத்தையும் ஊக்கத்தையும் பெற முடியும் என்று நம்பினேன்.
எனவே இலக்கை அடைய தொடர்ந்து போராடினேன்.
2019 ஆம் ஆண்டில் நான் மிகவும் சோர்வடைந்ததாக உணர்ந்தேன். மேலும் பல நாடுகளுக்குச் செல்லவேண்டிய தேவையும் அப்போது இல்லை.
மீதமுள்ள நாடுகள் வழியாக 10 மாதங்களில் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லமுடியும் என கப்பல் நிறுவனங்கள் என்னிடம் தெரிவித்தன.
ஏற்கெனவே கொரோனா தாக்கம் காரணமாக எனது பயணம் மேலும் 3 ஆண்டுகள் பின்தங்கியிருந்தது.
எனவே அப்போது நான் வீட்டிற்குத் திரும்பும் மனநிலைக்குச் சென்றேன்.

பட மூலாதாரம், THOR PEDERSEN
ஏறக்குறைய கடந்த பத்தாண்டுகளுக்கு முன் தார் தனது வீட்டை விட்டு வெளியேறியபோது, அவருடைய சாகச பயணத்தின் நோக்கம் என்னவென்று அவருக்குத் தெரியாது.
ஆனால் பயணத்தைத் தொடங்கிய பின் பயணத்திற்கான தேவைகள் ஏராளமான இருந்ததைக் கண்டுபிடித்தார். இதைப் பற்றி விரிவாக அவர் தமது இணையதளத்தில் கூறுகிறார்.
1. இதற்கு முன் இது போன்ற முயற்சியை யாரும் மேற்கொண்டதில்லை.
யாருமே செய்யாத புதிய செயலை நாம் மட்டுமே செய்வது உற்சாகமானது மட்டுமல்ல, மேலும் பலருக்கு உத்வேகம் மற்றும் உந்துதலை அளிக்கும் ஆதாரமாக இருக்கும்.
2. டேனிஷ் செஞ்சிலுவைச் சங்கத்தின் நல்லெண்ணத் தூதராக பயணம் செய்த பெருமை எனக்குக் கிடைத்தது .
பெரும்பாலான மக்களைப் போலவே, நானும் ஒரு தன்னார்வலரைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்தேன், ஆனால் உலகம் முழுவதும் தன்னார்வலர்களிடமிருந்து கிடைக்கும் சேவைகள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தின. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் மில்லியன் கணக்கான தன்னார்வலர்கள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன், நேசிக்கிறேன்.
3. நம்மில் பெரும்பாலோர் நம்புவது போல் உலகம் இல்லை.
முன்னணி ஊடகங்கள் நமக்கு உலகின் பரபரப்பான பகுதியை மட்டுமே காட்டுகின்றன. பயங்கரவாதம், ஊழல், மோதல்கள், இயற்கை பேரழிவுகள், இறப்புகள், தீவிரவாதிகள் என அவற்றைப் பற்றி அறிந்து உலகத்தைப் பற்றி நாம் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கிறோம்.
அதிர்ஷ்டவசமாக உலகம் அதுபோல் இல்ல என்பதை நான் எனது பயணத்தின் போது கண்டுபிடித்தேன். இந்த பூமியைப் பகிர்ந்து கொள்ளும் பெரும்பாலான மக்கள் நல்ல எண்ணம் கொண்டவர்கள் என்பதை மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதை நான் கண்டுபிடித்தேன்.
அரசியலும் மதமும் சிலருக்கு முக்கியம். ஆனால், குடும்ப உறவுகள், உணவு, இசை, விளையாட்டு மற்றும் வானிலை பற்றி பேசும் போது, இந்த ஐந்து விஷயங்கள் தான் மிக முக்கியமானவை என்பதை நான் அடிக்கடி கண்டேன்.
பூமியில் உள்ள ஒவ்வொரு நாடும் உலகின் சிறந்த நாடாகக் கருதப்படுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளன.
4. குறைந்த பொருட்செலவில் யாரும் பயணம் செய்யலாம் .
சில நேரங்களில் குறைந்த செலவில் நாம் ஏதாவது செயலைச் செய்தால், அதில் சில தொந்தரவுகளையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம். என்னைப் பொறுத்தளவில் சில நேரங்களில் எனக்கு சொகுசான ஒரு நல்ல படுக்கை, ஒரு பெரிய ஜூசி ஸ்டீக் (பழச்சாறுடன் கூடிய அசைவ உணவு) வேண்டும்.
இருப்பினும், நான் செலவுகளை ஒரு வரம்புக்குள் செய்யும் நிலையிலேயே நான் இருக்கிறேன். ஏனென்றால் பலரின் கூற்றுப்படி, அவர்களுடைய கனவுகள், நேரமின்மை அல்லது பணம் செலவழிக்க முடியாமையால் அல்லது இரண்டு காரணங்களாலும் தகர்க்கப்படுகின்றன.
நீங்கள் உங்கள் நேரத்தைச் செலவிட்டுத் தான் ஆக வேண்டும், ஆனால் பயணம் செய்வதற்கும், பல்வேறு கலாச்சாரங்களைக் கண்டறிவதற்கும், புதிய நண்பர்களை உருவாக்குவதற்கும் நீங்கள் கோடீஸ்வரராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை எனது இந்தப் பயணம் காட்டுகிறது.
உலகம் எவ்வளவு ஆச்சரியமான விஷயங்களைக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, அங்கே நாம் கற்றுக்கொள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்ற ஆர்வமே தாரைத் தூண்டியுள்ளது.
இதையெல்லாம் விட, எப்போதும் அவருடன் இருந்த ஒரு சொற்றொடரால் அவர் எப்போதும் உற்சாகமாகவே இருந்தார்: 'அந்நியர் என்பவர் யார் என்றால் நீங்கள் இதுவரை சந்தித்திராத ஒரு நண்பர்' என்பதே அது. "நாளை நான் யாரைச் சந்திக்க முடியும்? "
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












