தமிழ்நாட்டில் பாஜகவுக்கு முகம் தந்த இல.கணேசனின் பின்னணியும் முக்கிய செயல்பாடுகளும்

இல கணேசன், தமிழ்நாடு, பாஜக, நாகாலாந்து ஆளுநர்

பட மூலாதாரம், X/ Temjen Imna Along

படக்குறிப்பு, 1945ஆம் ஆண்டு தஞ்சாவூரில் லக்ஷ்மி ராகவ ஐயர் - அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார்.
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நாகாலாந்து மாநில ஆளுநரும் தமிழ்நாடு மாநில பா.ஜ.கவின் முன்னாள் தலைவருமான இல. கணேசன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 80. நீரிழிவு நோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்த அவர் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி மயங்கி கீழே விழுந்தார்.

ஆகஸ்ட் எட்டாம் தேதி உடல்நிலை மோசமான நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி உயிரிழந்தார்.

இல.கணேசனின் பின்னணி

இல கணேசன், தமிழ்நாடு, பாஜக, நாகாலாந்து ஆளுநர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இல. கணேசன், பாஜகவை மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் எடுத்துச் செல்ல பாடுபட்டவர்.

நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்துவந்த இல. கணேசன், தமிழ்நாடு பா.ஜ.கவில் செயல்பட்ட காலத்தில், கட்சியை மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் எடுத்துச் செல்ல பாடுபட்டவர்.

இல. கணேசன் 1945ஆம் ஆண்டு தஞ்சாவூரில் லக்ஷ்மி ராகவ ஐயர் - அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு வருவாய்த் துறையில் ஆய்வாளர் பணி கிடைத்தது. அதில் சில ஆண்டுகள் பணியாற்றியவர், ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முழு நேரத் தொண்டரானார்.

"அவசர நிலை கால கட்டத்தில் அதனை தீவிரமாக எதிர்த்தார். 90களின் இறுதியில் அவர் தமிழக பா.ஜ.கவின் அமைப்புப் பொதுச் செயலாளரானார். தமிழ்நாடு பா.ஜ.கவில் இன்றிருக்கக்கூடிய பல நிர்வாகிகள் அவருடைய வளர்ப்பில் வந்தவர்கள்தான். பத்து வருடங்களுக்கும் மேலாக பா.ஜ.கவின் கிளை அமைப்புகளை, கட்டமைப்பை உருவாக்குவதில் தீவிரப் பங்காற்றினார். இதற்காக பட்டிதொட்டியெங்கும் அவர் பயணம் செய்தார்" என நினைவுகூர்கிறார் பா.ஜ.கவின் தலைமை செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி.

இல கணேசன், தமிழ்நாடு, பாஜக, நாகாலாந்து ஆளுநர்

பட மூலாதாரம், X/Narendra Modi Tamil

பா.ஜ.கவின் தேசிய செயலராகவும் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றிய பிறகு, 2006ஆம் ஆண்டில் தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

"இப்போது பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் கட்சியில் இணைந்து அதனை வளர்ப்பதாக, வளர்த்ததாகச் சொல்லலாம். ஆனால், எல். கணேசன் பா.ஜ.க. தமிழ்நாட்டில் மிகச் சிறிய கட்சியாக இருந்தபோது, அவர் அதன் முகமாக இருந்தார். அதுதான் மிக முக்கியமானது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.

பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பு ஒன்றை வைத்திருந்த எல். கணேசன், அதன் மூலம் மாதந்திரக் கூட்டங்களை நடத்தினார்.

"தமிழின் மீது அவருக்கு இருந்த பற்று பாராட்டத்தக்கது. எந்த ஒரு விஷயத்தையும் புரிந்துகொண்டு, அதை நகைச்சுவையாக எடுத்துச் சொல்லக்கூடியவர்" என்கிறார் நாராயணன் திருப்பதி.

இதே கருத்தை எதிரொலிக்கிறார் டி. ராமகிருஷ்ணன். "இல. கணேசன் மிகச் சிறப்பாக உரையாடலை நிகழ்த்தக் கூடியவர். சிலர் தனிபர்களோடு நன்றாக பேசுவார்கள். ஆனால், மேடையில் அவர்களால் சிறப்பாக பேச முடியாது. ஆனால், இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். அவருடைய தமிழ் மிக இனிமையாக இருக்கும்" என்கிறார் அவர்.

இல கணேசன், தமிழ்நாடு, பாஜக, நாகாலாந்து ஆளுநர்

பட மூலாதாரம், X/Raj Bhavan, Nagaland

"பா.ஜ.கவினர் எல்லோரோடும் உறவு பாராட்ட வேண்டும் என நினைக்கக்கூடியவர்" என்கிறார் நாராயணன். ஆனால், அதற்காக தன் நிலைப்பாட்டை விட்டுக்கொடுப்பவராக அவர் இருக்கவில்லை. "2004ஆம் ஆண்டில் ஜெயேந்திர சரஸ்வதி கைதானபோது, தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் அதனை வரவேற்றன. ஆனால், இல. கணேசன் அந்தக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தார்" என்கிறார் ராமகிருஷ்ணன்.

2016 - 2018 காலகட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் எல். கணேசன் செயல்பட்டார். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட எல். கணேசன், 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்டார்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன்களை எடுப்பதற்கான திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தபோது, இல. கணேசன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முழு நேர ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக இருந்த எல். கணேசன் திருமணம் செய்துகொள்ளவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு