மதராஸ் vs சென்னை: முதலில் வந்த பெயர் எது? வரலாற்று பார்வை

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்

"மெட்ராஸை சுத்திப் பார்க்க போறேன்" என்பதில் தொடங்கி "சென்னை போல வேற ஊரே இல்லை" என்பது வரை பல்வேறு பாடல்கள் சென்னையை மையப்படுத்தி உள்ளன.

நவீன சென்னைக்கு நாளை (ஆகஸ்ட் 22) 386-வது பிறந்தநாள், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் நாயக்க மன்னர்களிடமிருந்து நிலம் வாங்கப்பட்ட நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நகரத்திற்கு சென்னை எனப் பெயர் வந்ததன் பின்னணி என்ன, மதராஸ் என்பது எப்போது சென்னையாக மாறியது. அப்போது நடந்தவை என்ன?

சென்னை என்பது தமிழ்ப்பெயர், மதராஸ் என்பது பிரிட்டிஷ் வழங்கிய பெயர் என்கிற ஒரு கருத்து உள்ள நிலையில் பிரிட்டிஷ் இங்கு வருவதற்கு முன்பே மதராஸ் என்கிற பெயர் வழக்கத்தில் இருந்ததாகக் கூறுகிறார் வரலாற்று ஆய்வாளரான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.

சென்னப்பட்டனம், மதராசப்பட்டனம்

மதராஸ், சென்னை இதில் எந்தப் பெயர் முதன்மையானது என்பதில் வரலாற்று ரீதியாகவே பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஒரு காலகட்டத்தில் மதராஸ், சென்னை என்கிற இரண்டு பெயர்களுமே ஒரே நேரத்தில் தற்போது சென்னையாக உள்ள பகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

"ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசு இந்தப் பகுதியை பிளாக் டவுன் என அழைத்தது. பிற்காலத்தில் மதராஸ் என்கிற பெயரே நிலைத்துப்போனது. மதராஸ் என்பது பிரிட்டிஷ் வழங்கிய பெயர் என்கிற ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்தப் பகுதியில் பிரிட்டிஷ் வருவதற்கு முன்பே இரண்டு பெயர்களும் இருந்துள்ளன." என்கிறார் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.

இந்த கருத்தோடு உடன்படுகிறார் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ். மதராஸ் பற்றிய பழமையான குறிப்பு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைப்பதாகக் கூறுகிறார்.

இவர் 'வட சென்னை வரலாறும் வாழ்வியலும்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

"14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் தொண்டை மண்டலம் என்று கூறப்பட்ட பகுதியில் மாதரசன்பட்டனம் என்கிற ஊர் இருந்ததற்கான குறிப்பு உள்ளது. மதராஸ், சென்னை என்கிற இரண்டில் எது பழமையானது என்கிற விவாதத்தை தாண்டி இரண்டுமே சரி சமமாக பயன்படுத்தப்பட்டு வந்த பெயர்கள் தான்." என்றார் நிவேதிதா

விஜயநகர பேரரசின் ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு பகுதியையும் நிர்வாகம் செய்வதற்கு நாயக் என்று அழைக்கப்பட்டவர்கள் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள். மூன்றாம் வெங்கடா என்பவர் விஜயநகர மன்னராக இருந்தபோது தர்மலா வேங்கடபதி நாயக் என்பவர் தற்போதைய சென்னை நகரத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தார். இவரின் தந்தை சென்னப்ப நாயக், சென்னை வடக்கே பழவேற்காட்டிலிருந்து சாந்தோம் வரையிலான கடற்கரை பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

வேங்கடபதி பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் தான் 1639ஆம் ஆண்டு கூவம் நதிக்கரையின் கழிமுகத்தை (நதி கடலில் கலக்கும் இடம்) ஒட்டிய பகுதி கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது. இந்த இடத்தில் தான் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ளது. சென்னப்ப நாயக்கிற்கு மரியாதை செய்யும் விதமான புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள பகுதிக்குச் சென்னப்பட்டனம் எனப் பெயரிடப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆண்ட்ரே கோகன் மற்றும் பிரான்சிஸ் டே என்கிற இருவர் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளின் ஆட்சேபனையையும் மீறி இந்த இடத்தை வாங்கியதாக எழுத்தாளர் எஸ்.முத்தையா தனது மெட்ராஸ் ரீடிஸ்கவர்ட் (Madras Rediscovered) என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பாளரும் இடைத்தரகருமான பேரி திம்மன்னா நாயக்கிற்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே விற்பனை இறுதியாக உதவி செய்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார்

"கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட நிலம் அப்போதே மதராசப்பட்டனம் என அழைக்கப்பட்ட சிறிய கிராமத்திற்கு தெற்குப் பகுதியில் அமைந்திருந்தது" என அவரின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கிராமத்திற்கு மதராஸ் எனப் பெயர் வந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று அப்போது சாந்தோமில் இருந்த 'மத்ரே தி தியஸ் சர்ச்' தேவாலயத்தை மீனவ மக்கள் பின்பற்றியதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சாந்தோம் பகுதியில் வசித்த செல்வாக்கு மிகுந்த போர்ச்சுகீசிய குடும்பமான மத்ரா குடும்பத்தினாலும் அந்த பெயர் வந்திருக்கலாம்.

இரண்டாவது அப்போது அந்தப் பகுதியில் அமைந்திருந்த மதராஸா (பாரசீன மொழியில் இஸ்லாமியப் பள்ளியை குறிப்பிடும் பெயர்) ஒன்றை அடிப்படையாக வைத்தும் அமைந்திருக்கலாம் எனக் குறிப்பிடும் முத்தையா, பல்வேறு காரணங்கள் இருப்பதால் இது ஒன்று தான் உறுதியாக காரணமாக இருக்கும் எனக்கூறி விட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு வடக்கே அமைந்திருந்த பழைய பகுதிகள் அப்போது மதராசப்பட்டனம் என அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பகுதிகளும் தனித்தனி கிராமங்களாக இருந்ததாக சென்னை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதராசப்பட்டனத்திற்கும் சென்னப்பட்டனத்திற்கும் இடையே குடியேற்றங்கள் அதிகரிக்க ஒரு கட்டத்தில் இரு கிராமங்கள் ஒரே நகரமாக மாறின. பிரிட்டிஷார் சென்னப்பட்டனம் என்பதை தவிர்த்து ஒருங்கிணைந்த நகரை மதராசப்பட்டனம் என்றே அழைக்கத் தொடங்கினர்.

மதராஸ் டூ தமிழ்நாடு

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மதராஸ் மாகாணம் இப்போதைய ஆந்திரா, கேரளா கர்நாடகா பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தற்போதைய தமிழ்நாடு எல்லைப்பகுதியானது வரையறுக்கப்பட்டு மதராஸ் என்றே தொடர்ந்தது.

மதராஸ் என்கிற பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமும் அப்போது வலுவாக இருந்ததாகக் கூறுகிறார் வெங்கடேஷ்.

"மதராஸ் மாகாணமாக இருந்தபோதே காங்கிரஸ் கட்சியில் ஆந்திரா, மலபார், தமிழ்நாடு என மூன்று பிரிவுகள் இருந்தன." என்று தெரிவித்தார்.

1967-இல் திமுக வென்று அண்ணாதுரை முதலமைச்சரான பிறகு மதராஸ் என்கிற பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டது. ஆனால் தலைநகருக்கு மதராஸ் என்கிற பெயர் தொடர்ந்தது.

மதராஸ் டூ சென்னை

மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்கிற அளவுக்கு தலைநகரின் பெயரை மாற்ற வேண்டும் என்கிற உணர்ச்சிப்பூர்வமான கோரிக்கையோ, வெகு மக்கள் இயக்கமோ இல்லை என்கிறார் வெங்கடேஷ். மதராஸ் என்கிற பெயரை பிரபலப்படுத்தியதில் திரைத்துரைக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.

"மதராஸ் என அழைக்கப்பட்டாலும் தமிழ் உணர்வாளர்கள் சென்னை என்றே பயன்படுத்தி வந்தனர். தமிழில் எழுதுகின்றபோது சென்னை என்று எழுதுகின்ற வழக்கமும் இருந்தது. ஒரு கட்டத்தில் சென்னை தான் தமிழ்பெயர் என்கிற உணர்வு மேலோங்கி இருந்ததால், 1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம், திமுக ஆட்சியில் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தலைநகரின் பெயர் சென்னை என மாற்றப்பட்டது.'' என்கிறார் வெங்கடேஷ்.

"மதராஸ் இனி அதன் பழைய பெயரான சென்னை என்றே அழைக்கப்படும்" என சட்டமன்றத்தில் கூறினார் கருணாநிதி.

இரண்டுமே பழமையான பெயர்கள் தான் - நிவேதா

இரண்டுமே பழமையான பெயர்கள் தான் என்கிறார் நிவேதிதா.

''பிரிட்டிஷின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருந்ததால் மதராஸ் என்பது பிரிட்டிஷ் வைத்த பெயர் எனப் புரிந்துகொள்ளப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனிக்கு நிலம் விற்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் மதராஸ் என்கிற பெயர் உள்ளது. சென்னை என்கிற குறிப்பு இல்லை. தற்போது உயர்நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தில் முன்பிருந்த சன்ன கேசவ பெருமாள் கோவிலை ஒட்டியும் சென்னை என்கிற பெயர் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது."

"1644 ஆம் ஆண்டுடைய பட்டயம் ஒன்றில் சென்னை என்கிற குறிப்பு இல்லை. 19 ஆம் நூற்றாண்டின் வள்ளலார் குறிப்பில் சென்னை என்கிற பெயர் உள்ளது. எனவே மதராஸ் பிரிட்டிஷ் வழங்கிய பெயர், சென்னை தான் தூய்மையான தமிழ் பெயர் என நிறுவ போதிய ஆதாரங்கள் இல்லை. இரண்டு பெயர்களும் வரலாற்றில் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

பெயர் மாற்றத்திற்கு ஆகும் செலவுகள் என்ன?

நகரத்தின் பெயர் மாற்றம் என்பது சட்டத்தை நிறைவேற்றுவதோடு முடிந்துவிடாது என்கிறார் வெங்கடேஷ்.

"பெயர் மாற்றம் செய்யப்படுகிறபோது அனைத்து துறை சார்ந்த ஆவணங்கள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், சட்ட ஆவணங்கள் என அனைத்திலும் பெயரை மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு மிகப்பெரிய பொருட்செலவு என்பது உண்டு. இன்றைய மதிப்பில் பெயர் மாற்றத்திற்கு பல நூறு கோடிகள் செல்வாகும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு