சிறுமிகளைக் குறிவைக்கும் பாலியல் குற்றவாளிகளை தப்ப விடுவது யார்? தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களை எதிர்கொள்ளும் போக்சோ சட்டம் மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவும் அதிகரித்துள்ளது. ஆனால், குற்றங்களை நிரூபிக்க முடியாமல் நீதி விசாரணையில் குற்றமிழைத்தோர் தப்பித்து விடுவதாக குழந்தை நல செயற்பாட்டாளர்கள் வேதனை‌ தெரிவிக்கின்றனர்.

பாலியல் குற்றவாளிகளைத் தப்ப விடுவது யார்? முறைகேடுகள் நடக்கின்றனவா? சட்ட நுணுக்கங்களில் காவலர்களுக்கு பயிற்சி தேவையா?

தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் , தனக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்1 மாணவி அம்பிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2022இல் மே மாதம் ஒரு மாலைப்பொழுதில் வீட்டின் மாடியில் துவைத்த துணிகளை உலர வைத்துக் கொண்டிருந்தபோது, ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த அம்பிகா திரும்பிப் பார்த்தபோது, அவரின் வாயையும், கண்ணையும் பொத்தியுள்ளார் ஒரு நபர்.

தனது கண்ணிலிருந்த அந்த நபரின் கை சற்று விலகியதும், அவரின் முகத்தைப் பார்த்த அம்பிகாவுக்கு பேரதிச்சி. ஏனெனில் அந்த நபர் தனது குடும்பத்தில் ஒருவராக அண்ணாகப் பழகிய பக்கத்து வீட்டுக்காரரான ஜெயபிரகாஷ்.

‘அண்ணா என்ன செய்றீங்க, என்ன விடுங்க’ என, அம்பிகா கதறியும் அவரை விடாமல் ஆடைகளைக் களைந்து பாலியல் வல்லுறவு செய்ய முயன்றார் ஜெய்பிரகாஷ். அவரின் பிடியில் இருந்து தப்பிய அம்பிகா அங்கிருந்து தப்பியோடி தாயிடம் நடந்ததைக் கூறி, பிறகு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்து சிறையைில் அடைத்தனர்.

இது எங்கோ ஏதோ ஒரு அம்பிகாவுக்கு நடப்பதாகக் கடந்து சென்றாலும், நம் குழந்தைகள் பள்ளி, விளையாடும் இடங்கள், ஏன் சொந்த வீடு என, பல இடங்களில் சிறுமிகள் பாலியல் ரீதியில் பாதிக்கப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளன. இதற்கு தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தரவுகளே சாட்சியாக உள்ளன.

தமிழகத்தில் பதிவான போக்சோ வழக்குகள்

தேசிய குற்ற ஆணவங்கள் காப்பகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழகத்தில், பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல் உள்பட பல்வேறு போக்சோ குற்றங்களில், 2015இல் 1,064 வழக்குகளில், 0 – 18 வயது வரையுள்ள 1,080 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2018இல், 1,458 வழக்குகளில், 1,466 குழந்தைகளும், 2019இல் 1,747 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா பரவல் தொடங்கிய, 2020இல் தமிழகத்தில், 3,143 வழக்குகளில், 3,145 குழந்தைகள் மற்றும் 2021இல் 4,415 வழக்குகளில், 4,416 குழந்தைகள் பாலியல் ரீதியிலான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டை கொரோனாவுக்கு முந்தைய 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழகத்தில் இரண்டு மடங்கு வழக்குகள் அதிகரித்துள்ளன. பதிவான வழக்குகளிலேயே இத்தனை குழந்தைகள் என்றால், நடந்ததை வெளியில் சொல்லாமல் அல்லது வழக்குப் பதிவு செய்யாமல் விட்டதில் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

போக்சோ சட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் 2012-இல்தான் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது.

பாலியல் வல்லுறவு, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது, ஆபாசப் படம் எடுப்பது போன்றவை இந்த குற்றங்களின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவனோ, சிறுமியோ இத்தகைய பாலியல் தொடர்புடைய பிரச்னைகளை மற்றவர்களிடம் இருந்து எதிர்கொண்டாலோ அதனால் மன ரீதியாக, உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டாலோ இந்த சட்டம் பாதுகாப்பு அளிக்கும். பாலியல் செயல்களுக்காக சிறார்களை கடத்தும் நபர்கள் மீதும் இந்த சட்டம் பாயும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனை வரை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் நடப்பது தெரிந்தும் அது பற்றி புகார் தெரிவிக்காமல் மறைத்தால்கூட அந்த செயலுக்கு ஆறு மாத சிறை தண்டனை அல்லது சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படலாம்.

சட்டம் இவ்வளவு பாதுகாப்புகளை அளித்திருந்தாலும், குற்றவாளிகள் பல நேரங்களில் தண்டிக்கப்படுவதில்லை.

2021ல் தண்டனை பெற்றோர் எவ்வளவு?

தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு மொத்தம் 1,690 வழக்குகள் பதிவானதில், 1,768 பேர் கைது செய்யப்பட்டு, 1,629 வழக்குகள் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் மீதான விசாரணை நடத்தியதில், 164 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இதுவே, 2021ம் ஆண்டில் 4,415 வழக்குகளில், 4,000 பேர் கைது செய்யப்பட்டு, 3,338 வழக்குகள் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் மீதான விசாரணை நடத்தியதில், 256 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

‘தண்டனை விகிதம் குறைவு’

தமிழகத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்வது மட்டுமே நடக்கிறது, அதன்பின் வழக்கு விசாரணை எந்த நிலைக்கு செல்கிறது என எந்த அமைப்பும் முழுமையாக கண்காணிப்பதில்லை என குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளரும் ‘தோழமை’ அமைப்பின் இயக்குநருமான தேவநேயன் தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி தமிழகத்தில் பதிவான போக்சோ வழக்குகளில் ஆண்டுக்கு, 14 – 18 சதவீதம் மட்டுமே தண்டனை விகிதமாக உள்ளது. இது மிகவும் மோசமான நிலை.

SC, ST வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் நோடல் அதிகாரிகள் உள்ளதைப்போல, டி.எஸ்.பி தலைமையில் மாவட்டம் தோறும் இதற்கும் தனியாக அதிகாரிகள் வேண்டும்,’’ என்கிறார்.

அ.தி.மு.கவோ, தி.மு.கவோ யார் ஆட்சிக்கு வந்தாலும், போக்சோ வழக்கில் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்குவது தாமதமாகிறது எனவும், 2014 – 2015ல் பாதித்தோருக்கு அப்போதைய அ.தி.மு.க அரசு வழங்காத நிவாரணத்தை, 2021 – 2022ல் தான் தி.மு.க வழங்கியுள்ளது என்கிறார் தேவநேயன்.

போக்சோ வழக்குகளில் இதுவரை பாதித்தோருக்கு வெறும் 2 சதவீத நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, குழந்தைகள் நலனுக்காக பட்ஜெட்டிலும் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டுகிறார் தேவநேயன்.

தண்டனை விகிதம் குறைவது ஏன்?

வழக்கு விசாரணயில் ஏற்படும் தாமதம், தண்டனை விகிதம் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் என சுட்டிக் காட்டுகிறார் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் முன்னாள் மாநில அமைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ்.

பிபிசி தமிழிடம் பேசிய ஆண்ரூ சேசுராஜ், ‘‘அரசு இயந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து பெற்றோர், குழந்தைகள் புகாரளிப்பதால் தான் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. ஆனால், காவல் நிலையத்தில் வழக்கு பதிவாவது முதல் நீதிமன்றத்தில் விசாரணை முடியும் வரையில் ஏற்படும் பல தாமதத்தால் குற்றவாளிகள் பல வகைகளில் தப்பி விடுகின்றனர். வழக்கு பதிவு செய்யும் போது பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும் கோபம், சில நாட்களில் தணியும். இதை குற்றவாளிகள் பயன்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இதனால், சம்பவம் நடந்து 15 – 30 நாட்களில் வழக்கை பதிவு செய்து அதிதீவிரமாக நடத்தினால் மட்டுமே தண்டனை விகிதம் அதிகரிக்கும்,’’ என்கிறார் அவர்.

மேலும் தொடர்ந்த ஆண்ரூ சேசுராஜ், ‘‘போக்சோ வழக்கில் 95 சதவீதத்துக்கும் மேலான குற்றவாளிகள், பாதிக்கப்பட்டோருக்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதனால், வழக்கு விசாரணை அதிக நாட்கள் நடக்கும் போது, பாதிக்கப்பட்டோர் குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க நினைத்து பிறழ் சாட்சியாக மாறும் வாய்ப்புள்ளது. போக்சோ வழக்குகள் மீது அரசும், அரசு அதிகாரிகளும் தீவிரத்தை காட்டாத வரையில், தண்டனை விகிதம் அதிகரிக்காது,’’ என்றார்.

‘குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள்’

பல்வேறு காரணங்களால் போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள், வழக்கு நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறுகிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தென்பாண்டியன்.

பிபிசி தமிழிடம் பேசிய வழக்குரைஞர் தென்பாண்டியன், ‘‘போக்சோ வழக்குகளை பொறுத்தவரையில், வன்புணர்வு, தொல்லை, சீண்டல், ஆபாச படங்கள் காண்பித்தல் போன்ற பல வகை குற்றங்கள் உள்ளன. போலீஸார் வன்புணர்வு பிரிவின் கீழ் வரும், பாலியல் வல்லுறவு போன்ற வழக்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மற்ற பிரிவுகளை, இது சாதாரண வழக்கு தானே இதில் என்ன பெரிதாக தண்டனை கிடைக்கப்போகிறது என்ற தவறான மனநிலையில், வழக்கு பதிவு செய்வது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது, மருத்துவ அறிக்கை பெறுவது போன்றவற்றில் தாமதம் செய்கின்றனர்."

"இதனால் குற்றவாளி சாட்சியம் அளிப்பவரை மிரட்டியோ அல்லது பணம் கொடுத்தோ சாட்சியங்களை மாற்றி அவர்களை பிறழ் சாட்சியாக மாற்றும் நிலை ஏற்படுகிறது. பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதுடன், குற்றவாளி தப்பும் நிலை ஏற்படுகிறது,’’ என்றார்.

‘தனியாக கமிட்டி வேண்டும்’

மேலும் தொடர்ந்த தென்பாண்டியன், ‘‘போக்சோ வழக்குகளை நடத்தும் அரசு தரப்பு வழக்குரைஞர்களே, வன்புணர்வு பிரிவின் கீழ் வரும் வழக்குகளை தவிர்த்த மற்றவற்றை சாதாரணமாக நினைத்து கையாள்கின்றனர். இது ஆபத்தான போக்கு; எவ்வகை போக்சோ வழக்காக இருந்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவர்களுடைய நியாயத்தை பெற்றுத்தர வேண்டும், அதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்ற மனநிலையில் செயல்பட வேண்டும்.

காவல் நிலையம் துவங்கி, நீதிமன்றம், அரசு நிதி ஒதுக்கீடு என அனைத்து நிலைகளிலும் நிர்வாக சிக்கலால் தாமதம் ஏற்படுவதால், நிவாரணம் வழங்க தாமதம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் 12,500 கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உள்ளது. இதற்கு தலைமை வகிக்கும் ஊராட்சித்தலைவர் தலைவர், வி.ஏ.ஓ கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், ஆனால், இது பெயரளவில் கூட நடப்பதில்லை. அனைத்து நிலைகளிலும் உள்ள சிக்கல்களை தீர்க்க தனியாக கமிட்டி அமைத்து அரசு செயல்பட்டால் ஒழிய இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது,’’ என்றார் வழக்குரைஞர் தென்பாண்டியன்.

‘குழந்தைகள் ஆணையமே பூட்டிக்கிடக்கிறது’

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மட்டுமன்றி குழந்தைகள் நலன் சார்ந்த அனைத்தையும் கண்காணிக்க, சென்னையில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளது. அதன் தலைவர் பொறுப்பு பல காலமாக காலியாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறார் தேவநேயன்.

“அ.தி.மு.க ஆட்சியில் குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அக்கட்சியை சேர்ந்தவர் பெயரளவுக்கு நியமிக்கப்பட்டனர்.

தற்போது, புதிய தலைவர் நியமிக்கப்படாமல், இந்த ஆணையம் செயல்படாமல் அலுவலகமே பூட்டப்பட்டு கிடக்கிறது. குழந்தைகளை காப்பதற்கான ஆணையமே பூட்டிக்கிடப்பதே, தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பில் அரசின் பங்கு என்ன என்பதற்கு எடுத்துக்காட்டு. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் குழந்தைகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை,’’ என, காட்டமாக தெரிவிக்கிறார் அவர்.

தமிழக அரசு போக்சோ வழக்குகளை சரியாக கையாள்கிறது- அமைச்சர் கீதா ஜீவன்

இந்த பிரச்சினைகள் தொடர்பாக பிபிசி தமிழுக்கு விளக்கமளித்த, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ‘‘தி.மு.க ஆட்சி அமைந்த பின், போக்சோ வழக்குகளை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, அதிக விழிப்புணர்வுகள் ஏற்படுத்துவதால் தான், பாதிக்கப்பட்ட பலரும் முன்வந்து போக்சோ வழக்குகளை பதிவு செய்கின்றனர். பதிவு செய்ததில் இருந்து தீர்ப்பு வரும் வரையில், அரசு துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்படுகின்றனர்.

இதுவரை நடந்த போக்சோ வழக்குகளில் இருந்து பல பாடங்களை கற்றுள்ளோம். குறிப்பாக 14 – 18 வயதுள்ளவர்கள் குழந்தை திருமணம் செய்து, அது போக்சோ வழக்காக மாறுவது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதை தடுக்க அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மேலும், தன்னார்வ அமைப்புகளை பயன்படுத்தி, போக்சோ வழக்குகளை வகைப்படுத்தி Case Studyகள் செய்து, தீர்வு காண்கிறோம்.

போக்சோ வழக்குகளை அரசும், அரசு துறைகளும் முறையாக கையாள்கிறது, எல்லாம் சரியாக நடக்கிறது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், அரசால் ஏதும் செய்ய முடியவில்லை,’’ என்றார் அமைச்சர் கீதா ஜீவன்.

விரைவில் எல்லாம் சரியாகும் - அதிகாரிகள் உறுதி

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழ் விளக்கம் கேட்ட போது, தமிழக அரசின் சமூக பாதுகாப்பு இயக்குநர் அமர் குஷ்வாஹா விளக்கம் அளித்துள்ளார்.

‘‘தமிழக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழக அரசு சார்பில், பதில் மனு பதிவு செய்யப்பட்டுள்ளது, வழக்கு முடிந்ததும் விரைவில் ஆணையம் செயல்பாட்டுக்கு வரும்.

தமிழகத்தில் SC, ST வழக்குக்கு உள்ளதைப்போல பிரத்தியேக நோடல் அதிகாரி இல்லாதது பின்னடைவு தான். ஆனால், இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வழக்கு பதிவு செய்வது முதல் இறுதியாக நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில், வழக்கை கவனிக்க அனைத்து துறைகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நோடல் அதிகாரி போன்ற தனி அலுவலர் மாவட்ட வாரியாக போக்சோ வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட உள்ளனர்,’’ என்றார் சமூக பாதுகாப்பு இயக்குநர் அமர் குஷ்வாஹா.

மேலும் அமர் குஷ்வாஹா, ‘‘போக்சோ வழக்குகளின் விபரங்கள், தரவுகள் போலீஸாரிடம் மட்டுமே உள்ளது. மற்ற துறைகளிடம் இந்த துல்லியமான விபரங்கள் இல்லை. இதை சரிசெய்ய பிரத்தியேக இணையதளம் மற்றும் பிரத்தியேக அமைப்பு உருவாக்கி, போக்சோ வழக்குகள் அதிதீவிரமாக விசாரிக்கப்படும். இவை அனைத்தும் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்,’’ என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)