விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் நடந்த லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டில் விஜய் பேசிய பேச்சு, அவர் அரசியலுக்கு வரக்கூடுமா என்ற பேச்சுகளை மீண்டும் எழுப்பியிருக்கிறது. அரசியலுக்கு வந்தால் எம்.ஜி.ஆரைப் போலச் சாதிப்பாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பொதுவாக விஜய் நடிக்கும் படங்களுக்கு, அந்தப் படங்கள் ரிலீஸாவதற்கு முன்பாக நடக்கும் பாடல் வெளியீட்டு விழாக்களும் அதில் விஜய் பேசும் பேச்சுகளும் வெகுவாகக் கவனிக்கப்படும்.

ஆனால், லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை கடைசி நேரத்தில் தயாரிப்புத் தரப்பு ரத்து செய்வதாக அறிவித்தது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இப்போது லியோ திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் 540 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அறிவித்திருக்கும் நிலையில், உற்சாகமாக ஒரு சக்ஸஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதில் ஆளும் தரப்பினரின் பின்னணி இருந்ததாகவெல்லாம் கூறப்பட்ட நிலையில், அது குறித்து விஜய் பேசுவாரா என்பதெல்லாம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

விஜய் பேச்சின் முக்கியப் பகுதிகள்

இந்த விழாவில் விஜய் பேசியதில் சில பகுதிகள் கவனிக்கத்தக்கதாக இருந்தன.

ரசிகர்களைப் பற்றிப் பேசும்போது, "நீங்க எனக்கு காட்டுற அன்புக்கு, என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டாக் கூட பத்தாது.. நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்" என்றார்.

அடுத்ததாக குட்டிக் கதை ஒன்றைச் சொன்னார்:

"ஒரு காட்டுக்கு 2 பேர் வில், அம்பு சகிதமாக வேட்டைக்குச் சென்றார்கள். அந்தக் காட்டில் சிங்கம், புலி போன்ற மிருகங்களுடன் காக்கா, கழுகு போன்ற பறவைகளும் இருந்தன. ஒரு வேடன் தனது வில்லால் முயல் ஒன்றை அம்பெய்தி கொன்றான். மற்றொரு வேடனோ யானைக்கு குறி வைத்தான். ஆனாலும் அவனால் யானையை வீழ்த்த முடியவில்லை. ஆனாலும், இந்த இருவரில் முயலை வீழ்த்திவிட்டதாலேயே அந்த வேடன் சிறந்தவனாகி விட முடியாது."

"Small aim is crime என்று அப்துல் கலாமே கூறியிருக்கிறார். பாரதியார், பெரிதினும் பெரிது கேள் என்று கூறியுள்ளார். ஆகவே, பெரிய விஷயத்தையே குறிக்கோளாக கொள்ள வேண்டும்" என்றார்.

லியோ படம் தொடர்பாக பல பிரச்சனைகள் வந்த நிலையில், அதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபப்பட்டு பதிவிட்டிருந்ததைப் பற்றிப் பேசிய அவர், "நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்" என்றார்.

அதற்குப் பிறகு நடிகர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "புரட்சி தலைவர்-னா ஒருத்தர் தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருத்தர் தான். நடிகர் திலகம்-னா ஒருத்தர் தான். உலகநாயகன் என்றால் ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான். தல என்றால் ஒருத்தர் தான். தளபதி என்றால் உங்களுக்கு தெரியும். மன்னர்களுக்கு கீழ் அவங்க இருப்பாங்க. இங்கே மக்கள் தான் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்," என்றார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்வியெழுப்பியபோது, " 2026...2025க்கு அப்புறம் வர்ற வருஷம்." என்றார். "வேற எதாவது சீரிஸாக கேட்கிறோம் ணே...." என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டபோது, " 2026ல ஃபுட்பால் வொர்ல்ட் கப் வருது, நீ வேணா செக் பண்ணி பாரு ப்ரோ." என்று சொல்லிவிட்டு, " கப்பு முக்கியம் பிகிலு" என்றார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த விழாவில் விஜய் நேரடியாக அரசியலுக்கு வருவது குறித்து எதுவும் பேசவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவருடைய பேச்சிலிருந்து சில பகுதிகளைக் குறிப்பிட்டு அவர் அரசியலுக்கு வரலாமா என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, "நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கூறியது, முயலை வீழ்த்தியதைவிட யானையை வீழ்த்த வேண்டும் எனக் கூறியது, "இங்கே மக்கள்தான் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்," என்று பேசியது ஆகியவற்றை வைத்து அவர் அரசியலுக்கு வரவிருப்பதைத்தான் சூசகமாகச் சொல்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் அர்ஜுனும் "அரசியலுக்கு வருவதற்கான எல்லாத் தகுதியும் விஜய் கிட்ட இருக்கும். சீக்கரமே அவர் அரசியலுக்கு வருவார்" என்றும் குறிப்பிட்டார். அர்ஜுனின் இந்தப் பேச்சும் பலரது யூகங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

விஜய்யை முன்வைத்து எழுந்த அரசியல் சர்ச்சைகள்

விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சு எழுவது இது முதல்முறையில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் படங்கள் வெளியாகும்போதெல்லாம் இதுபோன்ற பேச்சுகள் எழுவது வாடிக்கையாகியிருக்கிறது.

2013ஆம் ஆண்டில் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் விஜய், சத்யராஜ் நடித்து உருவான படம் 'தலைவா'. இந்தப் படத்தின் டைட்டிலுக்குக் கீழே, "வழிநடத்திச் செல்வதற்கான நேரம்" என்பதைக் குறிக்கும் வகையில், Time to Lead என்ற வரிகள் எழுதப்பட்டிருந்தன. அப்போதைய ஆளும் கட்சி, இதனை விரும்பவில்லை எனக் கூறப்பட்டது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறி தமிழ்நாட்டில் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதற்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க படக்குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. பிறகு ஒரு வழியாக, ஆகஸ்ட் 20ஆம் தேதியே படம் வெளியானது. விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை இருப்பதாலேயே இத்தனை தடைகள் உருவானதாகவும், அவர் இத்தனை பிரச்சனைகளைத் தாண்டி அரசியலுக்கு வருவாரா என்ற விவாதமும் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு, 2017ல் வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றன. அதற்கு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்புத் தெரிவித்தார். எச். ராஜாவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். படம் வெளியிடுவதற்கு குறிக்கப்பட்ட தினத்திற்கு முதல் நாள்வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்து, பிறகு ஒரு வழியாக படம் வெளியானது. அப்போதும் இதேபோன்ற விவாதங்கள் எழுந்தன.

2018ல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "இந்தப் படத்தில் நான் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை. நிஜத்தில் நான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். தலைவன் நல்லவனாக இருந்தால் எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் ஒரு நல்ல தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார்" என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சுதான் விஜய் அரசியல் குறித்து நேரடியாகப் பேசிய முதல் பேச்சாக அமைந்தது.

இதற்கு அடுத்துவந்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ''எவனை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவனை அங்கே கரெக்டா உட்கார வைத்தீர்கள் எனில், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்,'' என்றார். அவருடைய இந்தப் பேச்சுக்கு அ.தி.மு.கவினரும் பா.ஜ.கவினரும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தொகுதி வாரியாக வாக்காளர்கள் பற்றிய புள்ளி விவரங்களை அனுப்பும்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்களுக்கு விஜய் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது. அதேபோல, நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கி சில இடங்களைப் பிடித்தது.

இந்தப் பின்னணியில்தான் விஜய் அரசியலுக்கு வருவாரா, வந்தால் யாரை எதிர்த்து அரசியல் செய்வார் என்பது குறித்த பேச்சுகள் தொடர்ந்து அடிபட்டு வருகின்றன.

எம்.ஜி.ஆரா, ரஜினியா?: விஜய் யார்?

தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றிபெற்றவர்கள் என ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயர்கள் பிரதானமாக இடம்பெறும். அடுத்ததாக விஜயகாந்தின் பெயரும் இடம்பெறும்.

ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக பேச்சு அடிபடும்போது, எம்.ஜி.ஆரை முன்னிறுத்தியே உதாரணம்காட்டப்படும்.

ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கும் தற்போது அரசியலுக்கு வரவிரும்பும் நடிகர்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

"ஒரு நடிகர் அரசியலுக்கு வர விரும்பினால், அவரது சினிமாவிலேயே அரசியல் உரையாடல் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆருக்கு அப்படித்தான் இருந்தது. 1949ல் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த எம்.ஜி.ஆர். 1952ல் தி.மு.கவில் இணைந்துவிட்டார். அதற்குப் பிறகு அவருடைய படங்கள், பாடல்கள் எல்லாம் பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டதாக இருக்கும். சொந்தப் படமாக இருந்தால் தி.மு.க. கொடியையே காட்டுவார். பாத்திரங்களுக்கு தி.மு.க சார்ந்த கதிரவன், உதயசூரியன் என்பது போன்ற பெயர்களை வைப்பார். விஜய் அதுபோல எதையும் செய்ததில்லை."

"சர்க்கார் படத்தில் மட்டும் ஏதோ சில அரசியல் விமர்சனங்களை வைத்தார் விஜய். அது போதவே போதாது. அவர் தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அவர் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகளாகியிருந்தன. தி.மு.கவின் ஊர்வலங்களில் அக்கட்சிக் கொடியை ஏந்தியபடி எம்.ஜி.ஆர் முன்னால் நடந்துசெல்வார். ஒரு மாபெரும் நடிகர் இதுபோல ஒரு கட்சிக் கொடியை ஏந்தியபடி நடந்து செல்வதை இப்போது நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால், விஜய் இதுபோல எதையும் செய்ததில்லை. நேரடியாக அரசியலுக்கு வந்தால் ஏதுவும் நடக்காது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

அரசியலில் இறங்க ஆசைப்படும் விஜய், சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலிலும் செயல்படலாம் எனக் கருதுகிறார்; அது சாத்தியமே இல்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

"விஜய்க்கு அரசியல் ஆசை நிச்சயமாக இருக்கிறது. அதனால்தான் 'கப்பு முக்கியம் பிகிலு' என்கிறார். ஆனால், இவரும் இன்னொரு ரஜினியாகத்தான் இருக்கப்போகிறாரா என்பதுதான் கேள்வி. விஜய்யைப் பொறுத்தவரை, சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலில் இறங்கிவிடலாம் எனக் கருதுவதைப் போலத் தெரிகிறது. ஆனால், அரசியல் என்பது கரடுமுரடான பாதை. சினிமாவில் இருந்துகொண்டே இதைச் செய்ய முடியாது. ரோட்டிற்கு வர வேண்டும். போராட வேண்டும். அதையெல்லாம் செய்ய விஜய் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார் என்பது தெரியவில்லை. வெறும் மன்றங்களை நம்பி அரசியலுக்கு வந்தால் வெற்றிபெற முடியாது" என்கிறார் அவர்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு, சினிமாவிலிருந்து நேரடியாக அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சாதித்தவர் விஜயகாந்த். "அவரது ஆரம்ப காலப் படங்களில் பொதுவுடமைக் கருத்துகள் இடம்பெற்றிருக்கும். அரசியலுக்கு வருவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை அரசியல் மயமாக்க ஆரம்பித்தார். தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார். மாநாடுகளை நடத்தினார். பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். என்றாலும் அவருடைய வாக்கு விகிதம் 10 சதவீதத்தைத் தாண்டவில்லை என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்" என்கிறார் ஷ்யாம்.

ஒருவர் அரசியலுக்கு வர வேண்டுமென்றால் தொடர்ந்து அரசியல் பேச வேண்டுமெனக் குறிப்பிடும் ஷ்யாம், எம்.ஜி.ஆர். தனது படங்களில் தொடர்ந்து இதைச் செய்ததைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும், மற்றொரு முக்கியப் பிரச்சனையையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "எம்.ஜி.ஆர். மன்றங்கள் எல்லாம் தி.மு.கவின் துணை அமைப்புகளாக இயங்கியவை. அவற்றுக்கு அரசியல் புரிதலும் பயிற்சியும் இருந்தன. அதனால்தான் அவர் கட்சி ஆரம்பித்தபோது, அவை எல்லாம் ஒரே இரவில் கட்சிக் கிளைகளாக மாறியவை.

ஆனால், தற்போது விஜய்யின் ரசிகர் மன்றங்களில் எல்லாக் கட்சியினரும் இருப்பார்கள். தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பிரதான கட்சியின் உள்ளூர் தலைவர்களின் வாரிசுகள் இந்த மன்றங்களில் இருப்பார்கள். விஜய் தனியாக கட்சி ஆரம்பித்தால், இவர்கள் எல்லாம் தத்தம் கட்சிக்குப் போய்விடுவார்கள். ஆகவே எம்.ஜி.ஆர். மன்றங்களையும் விஜய்யின் ரசிகர் மன்றங்களையும் ஒப்பிட முடியாது.

தவிர, சினிமாவில் இருந்துகொண்டு, ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றிக் கருத்துச் சொல்வது வேறு, அரசியலுக்கு வந்தால் தினமும் நான்கு பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்பார்கள். ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டும். அதற்கெல்லாம் அவர் தயாராக இருக்கிறாரா என்பது தெரியவில்லை" என்கிறார் ஷ்யாம்.

போராட்ட அரசியலிலேயே இருந்த பல அரசியல் தலைவர்கள் வெற்றிபெறாமலேயே போனதையும் சுட்டிக்காட்டுகிறார் குபேந்திரன். "1993ல் தமிழ்நாட்டில் வைகோவைப் போல ஒரு அரசியல் தலைவர் கிடையாது. தி.மு.கவை செங்குத்தாகப் பிளந்தார். நடைபயணங்களை மேற்கொண்டார். போராடினார். ஆனால், என்ன நடந்தது? 2009ஆம் ஆண்டிலிருந்து இயக்கம், அரசியல் கட்சி எனப் போராடிவருகிறார் சீமான். மெல்லமெல்லத்தான் அவரது வாக்கு வங்கி உயர்ந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளாக சீமான் தாக்குப் பிடிக்கிறார். அரசியல் செய்கிறார். இந்த அளவுக்கு விஜய் செயல்பட முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது" என்கிறார் அவர்.

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் தாண்டி, விஜய் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சாதித்ததைப் போல சில சதவீத வாக்குகளைப் பெறலாம். அது ஆட்சியைப் பிடிக்க உதவாது என்கிறார் ஷ்யாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)