You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்ட முதல் அரபு நாடு - எது? ஏன்?
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் சண்டையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும்போது அவர் கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு கூறினார்.
"ஒரு தற்காலிக சண்டை நிறுத்தம் தேவை என்று நான் நினைக்கிறேன். சண்டையை நிறுத்துவது என்றால், பணயக் கைதிகளை காப்பாற்ற நேரம் கொடுங்கள் என்கிறேன்," என்று அவர் கூறினார்.
மனிதாபிமான உதவி, ஹமாஸ் பிடியில் உள்ள 240 பணயக் கைதிகள் ஜோ பைடன் குறிப்பிட்டதாக வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் "இப்போது போர்நிறுத்தம்" என்று பாடிய பெண்ணை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். பின்னர் பேசிய பைடன், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்களுக்கு தற்போதைய நிலைமை "நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது" என்று கூறினார்.
"நான் இரு தனி நாடுகள் தீர்வை ஆதரித்தேன்; தொடக்கத்தில் இருந்தே அதுதான் என் நிலைப்பாடு" என்று பைடன் மேலும் கூறினார். "உண்மை என்னவென்றால், ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. ஒரு வெளிப்படையான பயங்கரவாத அமைப்பு." என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்ட பஹ்ரைன்
இந்நிலையில், காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்பப் பெறுவதாக பஹ்ரைன் கூறியுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடான பஹ்ரைன் சமீபத்தில்தான் இஸ்ரேலுடனான தனது உறவைச் சுமூகமாக்கியது குறிப்பிடத்தக்கது.
பஹ்ரைனுக்கான இஸ்ரேலிய தூதர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், இஸ்ரேலுடனான பஹ்ரைனின் பொருளாதார உறவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றம் கூறியிருக்கிறது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் போர் வெடித்த பிறகு, முதன்முதலாக ஒரு அரபு நாடு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
2020-ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலுடன் பொருளாதார ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நான்கு அரபு லீக் நாடுகளில் பஹ்ரைன் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலங்களில் பஹ்ரைன்-இஸ்ரேல் உறவுகள் கணிசமாக வளர்ந்து வந்துள்ளன.
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் அரபு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகிறது. அரபு நாடுகளில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் பஹ்ரைனின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
"காயமடைந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர்"
20,000 க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்கள் காஸா பகுதியில் இன்னும் சிக்கியுள்ளனர் என்று எல்லைகள் அற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக 335 வெளிநாட்டவர்கள், 76 படுகாயமடைந்த, நோய்வாய்ப்பட்டவர்கள் ரஃபா எல்லைப் பாதை வழியாக வெளியே கொண்டு வரப்பட்டதாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை எகிப்திய கள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதைக் கண்டதாக ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுமாறு எம்.எஸ்.எஃப். அழைப்பு விடுத்துள்ளது. சண்டையை நிறுத்துவதுடன், முக்கியமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
"காஸாவில் அனைவரும் உணவு கேட்கிறார்கள், தண்ணீர் கேட்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்தபோது அதிர்ச்சியடைந்தேன்" என்று போர் தொடங்கியதில் இருந்து காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஐ.நா அதிகாரி பிலிப் லாஸரினி கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)