You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளா: பாலத்தீன ஆதரவு பேரணியில் ஹமாஸ் தலைவர் உரை - என்ன பேசினார்? ஏன் சர்ச்சை?
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கேரளாவில் பாலத்தீனத்துக்கு ஆதரவாக ஜமாத் – இ – இஸ்லாமி அமைப்பின் ஒற்றுமை இளைஞர் இயக்கம் நடத்திய பேரணியில், ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் வீடியோ வாயிலாக பேசியது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் இடையே, கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவின் பல மாநிலங்களில் இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமின்றி பல அமைப்புகள் பாலத்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், கேரளாவின் ஜமாத் – இ – இஸ்லாமி ஹிந்த் (Jamaat – e- Islami Hind) அமைப்பின் கீழ் செயல்படும் ஒற்றுமை இளைஞர் இயக்கம் (Solidarity Youth Movement - SYM) நடத்திய பேரணியில், ஹமாஸ் ஆயுதக்குழுவின் முன்னாள் தலைவர் கலீத் மெஷால் வீடியோ வாயிலாக பேசியது, நாடு முழுவதிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். கேரளாவின் மலப்புரத்தில் என்ன பேரணி நடந்தது, அதில் கலீத் மெஷால் பேசியது என்ன? சர்ச்சைகளுக்கு பேரணி நடத்தியவர்கள் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் விளக்கம் என்ன?
கலீத் மெஷால் பேசியது என்ன?
கேரளாவின் ஜமாத் – இ – இஸ்லாமி ஹிந்த் (Jamaat – e- Islami Hind) அமைப்பின் கீழ் செயல்படும் ஒற்றுமை இளைஞர் இயக்கம் (Solidarity Youth Movement - SYM), கேரளாவின் பல பகுதிகளில் பாலத்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து, ‘இந்துத்துவா மற்றும் நிறவெறி சியோனிஸத்தை வேரோடு அகற்றுவோம்’ (UPROOT BULLDOZER HINDUTVA & APARTHEID ZIONISM) என்ற தலைப்பில் பேரணிகள் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 27ம் தேதி பேரணி ஒன்று நடைபெற்றது. இதில், பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த தலைவர்களான இஸ்மாயில் ஹனியா மற்றும் கலீத் மெஷால் பேசுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரணியின் போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த திரையில் வீடியோ வாயிலாக தோன்றிய, கலீத் மெஷால் அரபு மொழியில் பேசினார்.
‘அல் அக்ஸாவுக்காக போராட்டம்’
வீடியோவில் பேசிய கலீத் மெஷால், ‘‘இந்தியா மற்றும் கேரளா முழுவதிலும் இருந்து காஸாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் வணக்கம். 1967 முதல், அல் அக்ஸா (மசூதி) இடிந்து விழும் நிலையில் உள்ளது. நெதன்யாகுவின் நிழலில் ஆட்சி அமைத்ததில் இருந்து, தீவிர வலதுசாரிக்கட்சிகள், அல் அக்ஸாவை அழிக்க முயன்று வருகின்றனர். அக்ஸா மசூதியை இடித்துவிட்டு தாங்கள் கூறும் கோவிலைக் கட்டுவதற்கான ஆயத்தங்களை ஆரம்பித்திருந்தார்கள்."
"காஸாவிலுள்ள உங்கள் சகோதரர்கள் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் அக்ஸாவிற்காக போராடி வருகின்றனர். மூன்று வார ராணுவ தோல்வியை சந்தித்த இஸ்ரேல் எங்கள் குடியிருப்பாளர்களை பழிவாங்குகிறது. வீடுகள் இடிக்கப்படுகின்றன, காஸாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை அழித்துள்ளனர். தேவாலயங்கள், கோவில்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐ.நா நிறுவனங்களையும் கூட அவர்கள் அழித்து வருகின்றனர். இந்தத் தாக்குதல்களின் அர்த்தம் என்னவென்றால் காஸாவை காலி செய்ய வைப்பது தான்,’’ என்றார்.
‘ஆதரவும், நிதியும் தேவை’
மேலும் பேசிய கலீத் மெஷால், ‘‘ஒன்றாக நாங்கள் சியோனிஸ்டுகளை தோற்கடிப்போம், அல் அக்ஸா மசூதிக்காக போராடும் காஸாவுக்காக நாம் ஒன்றுபட்டு நிற்போம். இஸ்ரேல் சக்தியை வலுப்படுத்த அமெரிக்காவும் வேறு சில மேற்கத்திய நாடுகளும் கூட்டணி சேர்ந்துள்ளன,’’ என்றார்.
அதுமட்டுமின்றி, ‘‘நமது சமூகம் படையெடுப்பு, குடியேற்றம் மற்றும் வன்முறைகள் இல்லாமல் வாழ விரும்புகிறது. நாம் அனைவரும் தெருக்களில் இறங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எதிர்ப்பு அலைகளை எழுப்ப வேண்டும். அவர்கள் நமது சமூகத்தின் மீதான சியோனிச அட்டூழியங்களுக்கு உடந்தையாக உள்ளனர். காஸா உங்களுடையது, நம் சகோதரர்களுக்கு ஆழ்ந்த மனித ஆதரவும், நிதி உதவியும் தேவை,’’ எனப்பேசியிருந்தார்.
யார் இந்த கலீத் மெஷால்?
கலீத் மெஷால் என்ற 'அபு அல்-வலித்' 1956-ல் பாலத்தீனத்தின் சில்வாடில் பிறந்தவர். அவரும் அவரது குடும்பத்தினரும் குவைத்திற்கு குடிபெயர்வதற்கு முன், அவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை சில்வாடில் முடித்தார். ஹமாஸ் ஆயுதக்குழுவின் நிறுவனர்களில் ஒருவராக மெஷால் கருதப்படுகிறார்.
ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவிலும் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் 1996 மற்றும் 2017க்கு இடையில் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
ஷேக் அகமது யாசின் 2004-ல் இறந்த பிறகு, ஹமாஸின் தலைவராகவும் மெஷால் நியமிக்கப்பட்டார். 1997-ம் ஆண்டில், கலீத் மெஷாலை குறிவைத்து, அவரை படுகொலை செய்ய முயன்றது.
பத்து மொசாட் முகவர்கள் போலி கனேடிய கடவுச்சீட்டுகளுடன் ஜோர்டானுக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் ஜோர்டானிய குடியுரிமை பெற்ற காலீத் மெஷால், தலைநகர் அம்மானில் ஒரு தெருவில் நடந்து சென்றபோது விஷ ஊசியை அவர் மீது செலுத்தினார்.
கலீத் மெஷால் படுகொலை முயற்சியைக் கண்டுபிடித்த ஜோர்டானிய அதிகாரிகள் இரண்டு மொசாட் உறுப்பினர்களைக் கைது செய்தனர். ஜோர்டானின் மறைந்த மன்னர் ஹுசைன், மெஷால் ஊசி மூலம் செலுத்தப்பட்ட விஷப் பொருளுக்கான மாற்று மருந்தை இஸ்ரேலிய பிரதமரிடம் கேட்டார்.
ஆனால், நெதன்யாகு முதலில் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். பின்னர், அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலையிட்டு நெதன்யாகுவை மாற்று மருந்தை வழங்க நிர்ப்பந்தித்த பிறகு, அவரைக் கொல்லும் முயற்சி அரசியல் முக்கியத்துவம் பெற்றது.
11 வயதில் காஸாவை விட்டு வெளியேறிய கலீத் மெஷால், 2012இல் முதல் முறையாக காஸா பகுதிக்குச் சென்ற போது அவரை அங்குள்ள பலரும் வரவேற்றதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
பா.ஜ.க தலைவர்கள் கண்டனம்
இதனைத்தொடர்ந்து, பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள், இந்த பேரணியையும், கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கேரள பா.ஜ.க மாநிலத்தலைவர் கே.சுரேந்திரன், ‘‘மலப்புரத்தில் ஹமாஸ் தலைவர் உரையாற்றிய சம்பவம் கவலையளிக்கிறது. பாலத்தீனத்தை காப்பாற்றுங்கள் என்ற போர்வையில், ஹமாஸ் என்ற அமைப்பையும் அதன் தலைவர்களையும் போர்வீரர்கள் என்று போற்றுகின்றனர்; இது ஏற்றுக்கொள்ள முடியாதது,’’ எனப்பேசியிருந்தார்.
பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, ‘‘கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி, தீவிரவாத செயல்கள் மீது மெத்தனப்போக்கை கடைபிடிப்பதால், சட்டம் ஒழுங்கு சீர்குலைய காரணமாக உள்ளது,’’ என, பேசியிருந்தார்.
கேரளாவில் ஹமாஸ் தலைவர் பேசிய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, யூனியன் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கோரிக்கை விடுத்திருந்தார்.
பா.ஜ.க தேசிய செயலாளரான துஸ்யந்த் கெளவுதம், ‘‘அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக இந்திய அரசு உள்ளது. கேரளாவில் ஹமாஸ் தலைவர் பேசியது, தேச விரோத செயல்,’’ எனப்பேசியிருந்தார்.
கேரள முதல்வரின் விளக்கம் என்ன?
பா.ஜ.க தலைவர்களின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
கொச்சியில் நிருபர்களை சந்தித்த பினராயி விஜயன், ‘‘பா.ஜ.க கூறுவதைப்போல், பாலத்தீனத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியில் பங்கேற்றவர்களை கைது செய்வதெல்லாம் கேரளாவில் நடக்காத ஒன்று. நாங்கள் (கேரளா) எப்போதும் பாலத்தீனத்துக்கு ஆதரவாக நின்றோம். நாடும் பாலத்தீனத்துக்கு ஆதரவாக இருந்தது. இப்போது அந்த நிலைப்பாட்டில் சில விலகல் உள்ளது."
"கேரளாவில் அனைத்து அமைப்புகளுக்கும் போலீஸார் அனுமதி வழங்குகிறார்கள். ஜமாத் – இ – இஸ்லாமி கூட்டம் நடத்த அனுமதி கேட்டால், போலீஸ் அனுமதி தருவது வழக்கம். ஜமாத் – இ – இஸ்லாமி அமைப்பின் கூட்டத்தில், ஹமாஸ் தலைவர் பேசியது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோ. அவர் பேசியதை போலீஸார் முழுமையாக விசாரிக்கின்றனர், தவறு இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என விளக்கம் அளித்துள்ளார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சொல்வது என்ன?
பேரணியை ஏற்பாடு செய்திருந்த ஒற்றுமை இளைஞர் இயக்கத்தின் (Solidarity Youth Movement - SYM) மாநிலத்தலைவர் சி.டி.சுஹைப், பிபிசி தமிழுக்கு விளக்கமளித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய சுஹைப், ‘‘ஹமாஸ் ஒரு எதிர்ப்பு இயக்கம். இது பாலத்தீனிய பொதுத்தேர்தலில், 132 இடங்களில், 72 இடங்களில் வென்றுள்ளது. அதேபோல், ஹமாஸ் இந்தியாவில் தொடர்ந்து செயல்படும் அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல என்பதால், ஹமாஸ் தலைவர் பாலத்தீன ஒற்றுமை நிகழ்ச்சியில் பேசுவது சட்டப்படி குற்றம் அல்ல. அதேபோல், அவர் பேசியதால் அசாதாரண சூழல் எதுவும் ஏற்படப்போவதில்லை. இஸ்மாயில் ஹனியா வீடியோ வாயிலாக பங்கேற்க முடியாததால், கலீத் மெஷால் பதிவு செய்யப்பட்ட வீடியோ வாயிலாக பங்கேற்றார்,’’ என்றார்.
பாஜக மீது குற்றச்சாட்டு
மேலும் தொடர்ந்த சுஹைப், ‘‘சங் பரிவாரும் பா.ஜ.கவும் பாலத்தீனத்துக்கு ஆதரவாக உள்ளவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி, பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. இப்படிச்செய்து பாலத்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்போரை அடக்க நினைக்கிறது. இவர்களின் முயற்சிகள் வெற்றி பெறாது.
கேரளாவை பயங்கரவாதிகளின் மையமாக சித்தரிக்க பா.ஜ.க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த பொய்ப்பிரச்சாரத்தை பார்க்க வேண்டியுள்ளது.
ஹமாஸ் தலைவர் இந்தியா பற்றியோ, இங்குள்ள பிரச்சினைகள் பற்றியோ பேசவில்லை. எனவே பிரச்னை செய்ய வேண்டியதில் அவசியமில்லை. கேரளாவில் பயங்கரவாதம் வளர்ந்துவிட்டதாகவும் அதை கேரள அரசு தடுத்து நிறுத்தவில்லை என்று கூறுவது எல்லாம், பா.ஜ.கவின் சந்தர்ப்பவாத அரசியல் தான்,’’ என்கிறார் சுஹைப்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)