இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளில் நடந்தது என்ன?

    • எழுதியவர், ரெஹான் ஃபஜல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திரா காந்தியின் நினைவுகள் புவனேஸ்வருடன் அதிகம் தொடர்புடையவை. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை இனிமையானவை அல்ல.

அவரது தந்தை ஜவஹர்லால் நேருவின் 1964 மே மாதம் உயிரிழப்பதற்குக் காரணமாக இருந்த நோய்க்கு அவர் ஆளானது இந்த நகரத்தில் தான். மேலும் இந்த நகரத்தில் 1967 தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திரா காந்தி மீது கல் எறியப்பட்டதால் அவரது மூக்கு எலும்பு உடைந்தது.

30 அக்டோபர் 1984 அன்று மதியம் இந்திரா காந்தியின் தேர்தல் உரை வழக்கம் போல் அவரது தகவல் ஆலோசகர் எச்ஒய் சாரதா பிரசாத் அவர்களால் தயாரிக்கப்பட்டது.

ஆனால் திடீரென்று தயாரிக்கப்பட்ட உரையில் இருந்து மாறித் தானாகப் பேச ஆரம்பித்தார். அவர் பேசும் முறையும் மாறியது.

இந்திரா காந்தி அன்று தனது உரையில், "இன்று நான் இங்கே இருக்கிறேன், நாளை நான் இங்கே இல்லாமல் போகலாம். நான் இருக்கிறேனா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் நீண்ட ஆயுள் வாழ்ந்து விட்டேன். அந்த வாழ்நாள் முழுவதையும் எனது மக்களின் சேவையில் செலவழித்ததில் பெருமைப்படுகிறேன். என் கடைசி மூச்சு வரை இதைச் செய்து கொண்டே இருப்பேன், நான் இறக்கும் போது எனது ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை வலுப்படுத்தப் பயன்படும்." என்று குறிப்பிட்டார்.

சில நேரங்களில் விதி வார்த்தைகளாக மாறி, வரவிருக்கும் நாட்களில் நடக்கவிருப்பதைக் கட்டியம் கூறும்.

உரை முடிந்து ராஜ்பவனுக்குத் திரும்பியபோது ஆளுநர் பீஷம்பர்நாத் பாண்டே, வன்முறையான மரணத்தைப் பற்றிக் குறிப்பிட்டு என்னை உலுக்கிவிட்டீர்கள் என்று கூறினார்.

அதற்கு இந்திரா காந்தி, நேர்மையான மற்றும் உண்மையான விஷயங்களைச் சொல்கிறேன் என்று பதிலளித்தார்.

உறக்கமற்ற இரவு

அன்று இரவு டெல்லி திரும்பிய இந்திரா மிகவும் சோர்வாக இருந்தார். அன்று இரவு அவர் உறக்கமின்றித் தவித்தார்.

முன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சோனியா காந்தி ஆஸ்துமா மருந்து சாப்பிடுவதற்காக அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளியலறைக்குச் சென்றபோது, அப்போது இந்திரா கண் விழித்திருந்தார்.

சோனியா காந்தி தனது 'ராஜீவ்' புத்தகத்தில் இந்திராவும் தன்னைத் தொடர்ந்து குளியலறைக்குச் சென்று மருந்தைத் தேட உதவத் தொடங்கினார் என்று எழுதியுள்ளார்.

மீண்டும் உடல்நிலை மோசமடைந்தால் குரல் கொடு. நான் விழித்திருக்கிறேன் என்றும் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மிதமான காலை உணவு

காலை 7:30 மணிக்கு, இந்திரா காந்தி தயாராக இருந்தார். அன்று அவர் கருப்பு பார்டருடன் கூடிய காவி நிறப் புடவை அணிந்திருந்தார்.

அன்றைய தினம் அவரது முதல் சந்திப்பு பீட்டர் உஸ்தினோவ் உடன் இருந்தது, அவர் இந்திரா காந்தி பற்றிய ஒரு ஆவணப்படத்தைத் தயாரித்துக்கொண்டிருந்தார். முந்தைய நாள் ஒரிசாவிற்கு பயணம் சென்றபோது அவரைப் படம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பிற்பகலில், அவர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஜேம்ஸ் கலாகன் மற்றும் மிசோரம் தலைவர் ஒருவரை சந்திக்க இருந்தார். மாலையில் அவர் பிரிட்டன் இளவரசி ஆனுக்கு விருந்து கொடுக்கவிருந்தார்.

காலை உணவுக்குப் பிறகு, மேக்கப் மேன்கள் அவர் முகத்தில் பவுடர் மற்றும் ப்ளஷர் தடவிக்கொண்டிருந்தபோது, அவளுடைய மருத்துவர் கே.பி.மாத்தூர் அங்கு வந்தார். அவர் தினமும் இந்த நேரத்தில் அவரைப் பார்க்க வருவது வழக்கம்.

டாக்டர் மாத்தூரையும் உள்ளே அழைத்து இருவரும் பேச ஆரம்பித்தனர்.

அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், அளவுக்கு அதிகமாக மேக்கப் போட்டு 80 வயதாகியும் இன்னும் கருமையான முடியுடன் இருப்பதாகவும் அவர் கேலி செய்தார்.

திடீர் துப்பாக்கிச் சூடு

காலை 9.10 மணிக்கு இந்திரா காந்தி வெளியே வந்தபோது வெயில் அதிகமாக இருந்தது.

வெயிலில் இருந்து அவரைப் பாதுகாக்க, நாராயண் சிங் என்ற பாதுகாவலர் அவருக்குப் பக்கத்தில் கருப்புக் குடையுடன் நடந்து வந்தார். அவருக்குச் சில படிகள் பின்னால் ஆர்.கே.தவானும் அவருக்குப் பின்னால் இந்திரா காந்தியின் தனிப்பட்ட ஊழியர் நாது ராமும் வந்தனர்.

பின்னால் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி சப் இன்ஸ்பெக்டர் ராமேஷ்வர் தயாள் இருந்தார். இதற்கிடையில், உஸ்தினோவுக்குத் தேநீர் வழங்க ஒரு டீ-செட்டுடன் ஒரு ஊழியர் கடந்து சென்றார். இந்திரா அவரை அழைத்து, உஸ்தினோவுக்கு வேறு ஒரு டீ-செட்டைப் பயன்படுத்துமாறு கூறினார்.

தவானுடன் பேசிக் கொண்டே, அக்பர் சாலையை இணைக்கும் விக்கெட் கேட்டை இந்திரா காந்தி அடைந்தார்.

ஏமன் சென்றிருந்த குடியரசுத் தலைவர் கியானி ஜைல் சிங்குக்கு, பிரிட்டன் இளவரசி ஆனுடனான விருந்தில் தான் கலந்து கொள்ளும் வகையில், பாலம் விமான நிலையத்தில் 7 மணிக்குத் தரையிறங்க வேண்டும் என்ற இந்திராவின் உத்தரவுக்கேற்ப, செய்தி அனுப்பியதாக அவரிடம் கூறிக்கொண்டிருந்தார்.

திடீரென அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பியாந்த் சிங், தனது ரிவால்வரை எடுத்து இந்திரா காந்தியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டான். தோட்டா அவரது வயிற்றில் தாக்கியது.

இந்திரா தனது முகத்தைப் பாதுகாக்க எண்ணித் தனது வலது கையை உயர்த்தினார், ஆனால் பியாந்த், பின்னர் நேருக்கு நேராக, மேலும் இரண்டு முறை சுட்டான். இந்தத் தோட்டாக்கள் அவரது பக்கவாட்டு, மார்பு மற்றும் இடுப்பில் நுழைந்தன.

துப்பாக்கியால் சுடு எனக் கத்தியவர்

அங்கிருந்து ஐந்து அடி தூரத்தில் தனது தாம்சன் தானியங்கி கார்பைனுடன் நின்றிருந்த சத்வந்த் சிங், இந்திரா காந்தி விழுவதைக் கண்டு அதிர்ந்து செயலற்று நின்று விட்டார். அப்போது பியாந்த் அவரை நோக்கி சுடு சுடு என்று கத்தினார்.

சத்வந்த் உடனடியாக தனது தானியங்கி கார்பைனின் இருபத்தைந்து தோட்டாக்களையும் இந்திரா காந்தியின் உடலுக்குள் பாய்ச்சினான்.

பியாந்த் சிங்கின் முதல் துப்பாக்கிச் சூட்டில் இருந்து இருபத்தைந்து விநாடிகள் கடந்தும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

சத்வந்த் சுடும்போது, முதலில் பின்னால் இருந்த ராமேஷ்வர் தயாள் முன்னோக்கி ஓடத் தொடங்கினார்.

ஆனால் அவர் இந்திரா காந்தியை நெருங்கும் நேரத்தில், சத்வந்த் சுட்ட தோட்டாக்கள் அவரது தொடை மற்றும் காலில் தாக்கி, அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

இந்திரா காந்தியின் உதவியாளர்கள் அவரது சிதைந்த உடலைப் பார்த்து ஒருவருக்கொருவர் கட்டளையிடத் தொடங்கினர். என்ன சத்தம் என்று பார்ப்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரி தினேஷ் குமார் பட் அக்பர் சாலையில் இருந்து வெளியே வந்தார்.

ஆம்புலன்ஸ் மாயம்

அதே நேரத்தில் பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் இருவரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டனர். பியாந்த் சிங், "நாங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்துவிட்டோம். இப்போது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்" என்றார்.

அப்போது நாராயண் சிங் முன்னோக்கிப் பாய்ந்து பியாந்த் சிங்கை தரையில் சாய்த்தார். ITBP வீரர்கள் அருகில் இருந்த காவலர் அறையிலிருந்து ஓடி வந்து சத்வந்த் சிங்கையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

ஆம்புலன்ஸ் ஒன்றும் எப்போதும் அங்கே நின்றுகொண்டிருக்கும். ஆனால் அன்று அதன் டிரைவரைக் காணவில்லை. இதற்குள், இந்திராவின் அரசியல் ஆலோசகர் மாகன்லால் போத்தேதார் சத்தம் போட்டுக் காரைக் கொண்டு வரச் சொன்னார்.

இந்திரா காந்தியை ஆர்.கே.தவான் மற்றும் பாதுகாவலர் தினேஷ் பட் ஆகியோர் மைதானத்தில் இருந்து அழைத்து வந்து வெள்ளை நிற அம்பாசிடர் காரின் பின் இருக்கையில் அமர வைத்தனர்.

தவான், போத்தேதார் மற்றும் டிரைவர் முன் இருக்கையில் அமர்ந்தனர். கார் நகரத் தொடங்கியதும், சோனியா காந்தி வெறுங்காலுடன், டிரஸ்ஸிங் கவுனில், அம்மா, அம்மா என்று அலறியபடி ஓடி வந்தார்.

இந்திரா காந்தியின் நிலையைப் பார்த்து, அதே நிலையில் காரின் பின் இருக்கையில் அமர்ந்தார். இந்திரா காந்தியின் இரத்தம் தோய்ந்த தலையை மடியில் கிடத்திக் கொண்டார்.

கார் மிக வேகமாக எய்ம்ஸ் நோக்கி நகர்ந்தது. நான்கு கிலோமீட்டர் பயணத்தின் போது யாரும் எதுவும் பேசவில்லை. சோனியாவின் கவுன் இந்திராவின் ரத்தத்தால் நனைந்திருந்தது.

ஸ்ட்ரெட்சர் கிடைக்கவில்லை

கார் காலை 9.32 மணிக்கு எய்ம்ஸ் சென்றடைந்தது. இந்திராவின் இரத்த வகையான O Rh நெகட்டிவ் போதுமான அளவு கையிருப்பில் இருந்தது.

ஆனால் சப்தர்ஜங் சாலையில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்திரா காந்தி படுகாயமடைந்த நிலையில் கொண்டு வரப்படுகிறார் என்று யாரும் தெரிவிக்கவில்லை.

எமர்ஜென்சி வார்டு கேட்டைத் திறந்து, இந்திராவை காரிலிருந்து இறக்க மூன்று நிமிடம் ஆனது. ஒரு ஸ்ட்ரெச்சர் கூட இல்லை.

எப்படியோ ஒரு சக்கரத்துடன் கூடிய ஸ்ட்ரெச்சர் ஏற்பாடு செய்யப்பட்டது. அவரை காரில் இருந்து இறக்கிய போது, இந்திராவை அந்த நிலையில் பார்த்து, அங்கிருந்த மருத்துவர்கள் அச்சமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக எய்ம்ஸ்-ன் மூத்த இருதயநோய் நிபுணரை அழைத்துத் தகவல் தெரிவித்தார். சில நிமிடங்களில் டாக்டர் குலேரியா, டாக்டர் எம்.எம்.கபூர் மற்றும் டாக்டர் எஸ்.பலராம் ஆகியோர் அங்கு வந்தனர்.

எலக்ட்ரோ கார்டியோகிராம் இந்திராவின் இதயத்தின் சிறிய அசைவைக் காட்டியது, ஆனால் துடிப்பு இல்லை.

அவரது கண்ணிமைகள் திறந்திருந்தன. இது அவரது மூளை சேதமடைந்திருப்பதற்கான அறிகுறியாகும்.

ஆக்சிஜன் நுரையீரலை அடைந்து மூளையை உயிர்ப்புடன் வைத்திருக்க ஒரு மருத்துவர் அவரது வாய் வழியாக ஒரு குழாயை அவரது மூச்சுக்குழாயில் செருகினார்.

இந்திராவுக்கு 80 பாட்டில் இரத்தம் செலுத்தப்பட்டது, இது அவரது உடலின் சாதாரண இரத்த அளவை விட ஐந்து மடங்கு அதிகம்.

டாக்டர் குலேரியா கூறுகிறார், "அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன்பிறகு அதை உறுதிசெய்ய ECG எடுத்தோம். பிறகு அங்கு இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் சங்கரானந்திடம் நான், இப்போது என்ன செய்வது? இறந்துவிட்டதாக அறிவிக்க முடியுமா? என்று கேட்டேன். அவர், வேண்டாம் என்றார். பிறகு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றோம்."

இதயம் மட்டுமே பாதுகாப்பாக இருந்தது

மருத்துவர்கள் அவரது உடலை இதயம் மற்றும் நுரையீரல் இயந்திரத்துடன் இணைத்தனர், இது அவரது இரத்தத்தை சுத்தம் செய்யத் தொடங்கியது, இதன் காரணமாக அவரது இரத்த வெப்பநிலை சாதாரண 37 டிகிரியில் இருந்து 31 டிகிரிக்கு குறைந்தது.

இந்திரா இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது, ஆனால் அப்போதும் அவர் எய்ம்ஸின் எட்டாவது மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது கல்லீரலின் வலது பக்கத்தில் தோட்டாக்கள் துளைத்திருப்பதையும், அவரது பெருங்குடலில் குறைந்தது பன்னிரண்டு துளைகள் செய்யப்பட்டிருப்பதையும், சிறுகுடலும் கடுமையாக சேதமடைந்ததையும் மருத்துவர்கள் கவனித்தனர்.

தோட்டாக்கள் தாக்கியதில் அவரது நுரையீரல் ஒன்றும் சுடப்பட்டு, முதுகுத் தண்டும் உடைந்தது. அவரது இதயம் மட்டும் அப்படியே இருந்தது.

ஒரே இடத்தில் பணிபுரிய நடந்த சதி

இந்திரா காந்தி தனது மெய்ப்பாதுகாவலர்களால் சுடப்பட்டு கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு பிற்பகல் 2:23 மணிக்கு அவர் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு சார்பு ஊடகங்கள், மாலை 6 மணி வரை அதை அறிவிக்கவில்லை.

இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இந்தர் மல்ஹோத்ரா, இந்திரா காந்தி மீது இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என்று உளவுத்துறையினர் அச்சம் தெரிவித்ததாகக் கூறினார்.

அனைத்து சீக்கிய பாதுகாப்புப் பணியாளர்களையும் அவரது இல்லத்தில் இருந்து அகற்றுமாறு அவர் பரிந்துரைத்தார்.

ஆனால் அந்தக் கோப்பு இந்திராவைச் சென்றடைந்ததும், "நாம் மதச்சார்பற்றவர்கள் இல்லையா? " என்று கோபத்துடன் மூன்று வார்த்தைகளை எழுதினார்.

அதன்பிறகு, அவருக்கு அருகில் ஒரே இடத்தில் இரண்டு சீக்கிய பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

அக்டோபர் 31 அன்று, சத்வந்த் சிங் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாகவும் கழிப்பறைக்கு அருகில் தனக்குப் பணி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அதனால் பியாந்த் மற்றும் சத்வந்த் இருவரும் ஒன்றாக நிறுத்தப்பட்டனர். அவர்கள் இந்திரா காந்தியை ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு பழிவாங்கினார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)