You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேசும்போது வார்த்தையை மறந்து தவிக்கிறீர்களா? இதுதான் காரணம்
- எழுதியவர், கிரேக் டி ஜூபிகாரே
- பதவி, தி கன்சர்வேஷன்
நாம் பேசும்போது நாம் பயன்படுத்த விரும்பும் வார்த்தையை மறப்பதை நாம் அனைவரும் எதிர்கொண்டிருப்போம்.
உலகளாவிய இந்தப் பிரச்னை பேச்சாளர்களிடையே ஏன் ஏற்படுகிறது ?
அப்படி பேசும்போது நாம் வார்த்தைகளை மறப்பது உண்மையில் தீவிரமான ஒரு பிரச்னையா ?
எப்போதாவது இந்த சிக்கல் ஏற்பட்டால் அது மிகவும் இயல்பானது. ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள், பெயர்கள் மற்றும் எண்களை அடிக்கடி மறக்கிறோம் என்றால் அது ஒரு நரம்பியல் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம்.
வார்த்தை தேடலை என்ன பாதிக்கலாம்?
பேசும்போது வார்த்தைகளை மறப்பதும், அவற்றை கண்டுபிடிக்கும் சிரமமும் அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்றன. ஆனால். வயதாகும்போது அது அடிக்கடி ஏற்படுகிறது.
வயதானவர்களுக்கு இந்த சிக்கல் ஏற்படும்போது, இதனால் டிமென்ஷியா(Dementia) நோய் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இது குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.
வார்த்தைகளை நாம் ஏன் அடிக்கடி மறக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள, நாம் எவ்வளவு முறை அப்படி மறக்கிறோம், எந்த சூழலில் வார்த்தைகளை மறக்கிறோம் என நாம் கண்காணிக்க வேண்டும்.
மனிதர்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் தான் மக்கள் அதிகமாக மறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைவாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் அதிகம் நினைவில் இருக்காது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
குறைவாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் அர்த்தங்களுக்கும் ஒலி வடிவங்களுக்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பதாக கருதப்படுகிறது.
சமூக மன அழுத்தத்தின் காரணமாகவும் மறதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், இந்தப் பிரச்னை, பெரும்பாலும் புதிய வேலைக்காக நேர்காணலுக்கு செல்லும்போது இருந்ததாக ஆய்வில் பங்கேற்ற அனைத்து வயதினரும் தெரிவித்தனர்.
இதை எப்போது பிரச்னையாக கருத வேண்டும்?
பலவிதமான சொற்கள், பெயர்கள் மற்றும் எண்களை அடிக்கடி மறந்தால், இது மிகவும் தீவிரமான பிரச்னையாக கருதப்படுகிறது.
இந்த நிலை "அனோமியா" அல்லது "அனோமிக் அஃபாசியா " என்று அழைக்கப்படுகிறது. இது பக்கவாதம், கட்டிகள், தலையில் காயங்கள் அல்லது டிமென்ஷியா காரணமாக மூளை பாதிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
சமீபத்தில், பிரபல நடிகர் புரூஸ் வில்லிஸின் குடும்பத்தினர் அவருக்கு ஆரம்பக்கட்ட 'அஃபாசியா' எனப்படும் நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறினார்கள்.
இந்த நிலையின் முதல் அறிகுறிகளில் ஒன்று, நினைவாற்றல் இழப்பை விட வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல் மற்றும் வார்த்தைகளை மறப்பது.
அனோமிக் அஃபாசியா எனப்படும் நோய் நாம் பேசுவதற்கு தயாராகும் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படக்கூடியது.
ஒரு மருத்துவ நரம்பியல் நிபுணரால் மட்டுமே எந்தக் கட்டத்தில் அந்த பிரச்னை ஏற்படுகிறது என்பதை தெளிவுபடுத்த முடியும்.
எடுத்துக்காட்டாக, சுத்தியல் போன்ற பொதுவான பொருளுக்கு ஒருவரால் பெயரிட முடியாவிட்டால், ஒரு நரம்பியல் மருத்துவர் அந்த பொருள் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை விவரிக்கும்படி அவரிடம் கேட்பார். அவர் அதற்கு உரிய பதிலளிக்கலாம்.
அப்படி அவரால் உரிய பதிலை அளிக்க முடியாவிட்டால், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை சைகை மூலம் செய்து காண்பிக்க கேட்பார் மருத்துவர்.
நினைவு படுத்துவதற்காக அந்த வார்த்தையின் முதல் எழுத்தை அந்த நபருக்கு எடுத்துக்கூறுவார் மருத்துவர்.
அனோமிக் அஃபாசியா உள்ள பெரும்பாலான மக்கள் பெரும்பாலும் இப்படி முதல் வார்த்தை அல்லது எழுத்தை எடுத்துக்கூறினால் நினைவு படுத்திக்கொள்வார்கள். அவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும் அவர்களுக்கு தொடர்ந்து பேசும்போது தான் வார்த்தைகளை மறக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
ஆனால் அவர்களால் பொருளின் பயன்பாட்டை விவரிக்க முடியாவிட்டால், நாம் எடுத்துக்கூறியும் அவரால் நினைவுபடுத்த முடியாவிட்டால் அவர்கள் உண்மையாகவே அந்த வார்த்தையையும் அதன் அர்த்தத்தையும் மறந்துள்ளார்கள் என்று பொருள்.
இது ஆரம்பக்கட்ட அஃபாசியா நாேய்க்கான ஒரு தீவிரமான அறிகுறியாகும்.
ஆரம்பக்கட்ட அஃபாசியா நோயால் வார்த்தைகளின் அர்த்தத்தை செயலாக்கும் மூளைப் பகுதியில் உள்ள செல்கள் செயலிழப்பதாகவும், நரம்பு இணைப்புகள் செயலிழப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன
பக்கவாதத்திற்கு பிறகு மூளையின் இடது புறத்தில் பாதிப்பு ஏற்படுவதும், அனோமிக் அஃபாசியா பாதிப்பு ஏற்படுவது பொதுவானது தான் என்றாலும், வார்த்தைகளை மறப்பதற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அனோமிக் அஃபாசியாவுக்கு சிகிச்சைகள் உள்ளன.
பேச்சு நோயியல் வல்லுநர்களால் இந்த பாதிப்பில் உள்ளவர்களுக்கு பல்வேறு வகையான வார்த்தைகளை நியாபகப்படுத்தி உதவ முடியும்.
ஸ்மார்ட்ஃபோன் செயலிகளும் இதுபோன்ற பேச்சு ஆற்றல் சிகிச்சைக்கு பயன்படுத்த நம்பத் தகுந்தவையாக உள்ளன.
மக்களின் பேசும் ஆற்றலை அதிகரிக்கும் மூளைப் பகுதியின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்துதலே இந்த சிகிச்சையின் வெற்றியாக கருதப்படுகிறது.
ஆனால், ஆரம்பக்கட்ட அஃபாசியாவுக்கு உறுதியான சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும் சில ஆய்வுகள் பேச்சு ஆற்றலை வளர்க்கும் சிகிச்சை தற்காலிக பலன்களைத் தரக்கூடும் என்று பரிந்துரைத்துள்ளன.
*கிரேக் டி ஜூபிகாரே, குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நரம்பியல் உளவியல் பேராசிரியராக உள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)