தமிழ்நாட்டு புகைப்பட கலைஞருக்கு சர்வதேச விருது - யார் அவர்? எதை படம்பிடித்தார்?

ஒரு வினோதமான மற்றும் குதிரைலாட நண்டின் படம், லாரன்ட் பாலேஸ்டாவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனஉயிர் புகைப்படக் கலைஞர் (WPY) என்ற விருதைப் பெற்றுத்தந்துள்ளது.

தங்க நிறத்தில் உள்ள இந்த நண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் பங்கடாலன் தீவில் தண்ணீருக்குக் கீழ் பகுதியில் அடிமட்ட சேற்றுக்கு மிக அருகில் தவழ்ந்துகொண்டிருப்பதை நாம் காணலாம்.

இந்த நண்டுக்கு அருகே சிறிய மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. நண்டின் அசைவுகள் காரணமாக வண்டலில் உள்ள மண் அசைவதன் மூலம் ஏதாவது உணவு வெளிப்படலாம் என்ற எண்ணத்தில் அந்த மீன்கள் அங்கே காத்திருக்கின்றன.

இந்தப் புகைப்பட விருது வழங்கும் நிறுவனத்தின் 59 ஆண்டு வரலாற்றில் இரண்டு முறை போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது புகைப்படக் கலைஞர் என்ற பெருமையை பலேஸ்டா பெற்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டில், மீன்கள் முட்டையிடும் காட்சியை படம்பிடித்ததற்காக அவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

புகைப்படக் கலைஞரும் கடல் உயிரியலாளருமான லாரன்ட் பாலேஸ்டாவுக்கு லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இரவு விருந்தின் போது இந்த விருது அளிக்கப்பட்டது.

நடுவர் குழுவின் தலைவரான கேத்தி மோரன், வெற்றிபெறும் படத்திற்கு நான்கு குணாதிசயங்கள் தேவை என்று கூறினார். "அழகியல்", "கணம்", "விவரிப்பு" மற்றும் மிக அதிகமாகச் சொன்னால் "பாதுகாப்பு விளிம்பை" வெளிப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். பாலேஸ்டாவின் படத்தில் அந்த "ரகசியம்" இருந்தது.

"லாரன்ட்டின் படத்திற்கு ஒரு ஒளிர்வு உள்ளது," என மோரன் பிபிசி நியூஸிடம் கூறினார்.

"இது உண்மையில் ஒரு வேற்றுக்கிரகவாசி கடற்பரப்பில் மிதப்பது போன்ற காட்சியைக் காட்டுகிறது. ஆனால் நீங்கள் பின்வாங்கி, கடல் ஆரோக்கியத்திற்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இந்த உயிரினங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும்போது, ​​​​இந்தப் படம் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால், அதை எங்களால் கடந்து செல்ல முடியவில்லை."

ட்ரை-ஸ்பைன் குதிரைலாட நண்டு 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறது. ஆனால் இப்போது இந்த வகை நண்டுகளின் வசிப்பிடங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதுடன் உணவுக்காகவும், தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கு அதன் ரத்தம் பயன்படுத்தப்படுவதால் அதற்காகவும் இந்த வகை நண்டுகளைப் பிடிப்பது அதிகரித்துள்ளது. ஆனால் பங்கடாலன் தீவைச் சுற்றியுள்ள ஒரு சிறிய கடல் காப்பகத்தில், அதற்குத் தேவையான முழுபாதுகாப்பும் கிடைக்கிறது.

"இந்தப் படத்தை எடுப்பதில் உள்ள தொழில்நுட்ப ரீதியான சவால் என்னவென்றால், சரியான வேகத்தைக் கண்டறிவதாகும். ஏனெனில் அமைதியான குதிரைலாட நண்டை அப்படியே ஒரே இடத்தில் உறைய வைக்க வேண்டும். ஆனால் உற்சாகமாக இருந்த சிறிய மீன்கள் உறைந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதுடன் அந்தக் காட்சியைக் காட்டவேண்டும் என்பதால் இந்த படத்தை எடுத்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது," என்று பாலேஸ்டா கூறினார்.

"அவற்றிற்கிடையேயான இந்த வேறுபாட்டை நான் காட்ட விரும்பினேன் - ஒன்று சக்தி வாய்ந்தது என்ற அதே நேரம் மிகவும் மெதுவாக இருந்தது. மற்றவை வேகமாக இருந்தாலும் மிகவும் பலவீனமாக இருந்தன."

இந்த ஆண்டின் இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் என்ற பட்டத்தை இஸ்ரேலைச் சேர்ந்த கார்மல் பெச்லர் (17) பெற்றுள்ளார்.

பாழடைந்த கட்டிடம் ஒன்றின் ஜன்னலில் இரண்டு ஆந்தைகள் அமர்ந்திருந்த அவரது படம், அவரது தந்தையுன் காரில் சென்ற போது ஜன்னல் வழியாக படமாக்கப்பட்டது.

முன்புறத்தில் வேகமாக நகரும் வாகனத்தின் ஒளிக் கோடுகள் பறவைகளின் நிலையான பார்வைக்கு முரணாக உள்ளன.

"முதல் முயற்சியிலேயே இந்த காட்சி எனக்குக் கிடைத்துவிடவில்லை. ஒரு சில முயற்சிகளுக்குப் பின்னரே இந்த அழகான படம் கிடைத்தது," என பெச்லர் கூறினார். "விளக்குகளை சரியாகப் படமெடுப்பது மிகவும் கடினமான விஷயம். ஏனென்றால் அவை முழுக் காட்சியிலும் செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். அதே நேரம் அவை மிகவும் பிரகாசமாகவும் இருக்கக்கூடாது. அது மங்கலாக்கப்படாமலும் இருக்கவேண்டும். இதற்காக நான் டைமரைப் பயன்படுத்தினேன். பின்னர் அந்த தருணம் கிடைக்கும் வரை தொடர்ந்து படங்களை எடுத்துக்கொண்டே இருந்தேன்."

இந்த ஆண்டு புகைப்படப் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மற்ற வகை வெற்றியாளர்களில் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

விருந்துண்ணும் தலைப்பிரட்டைகளை ஜுவான் ஜெசஸ் கோன்சலஸ் அஹுமடா காட்சிப்படுத்தினார்.

ஜுவான் ஜேசுஸ் கோன்சலேஸ் அஹுமடா, இறந்த குருவி ஒன்றை விருந்தாக உண்ணும் தேரைக் குட்டிகளைப் (தலைப்பிரட்டைகளைப்) பார்த்தார். அவரது புகைப்படம், நீர்வாழ்வன மற்றும் ஊர்வன பிரிவில் விருது வென்றது.

தேரைக் குட்டிகள் (தலைப்பிரட்டைகள்) பொதுவாக பாசிகள், தாவரங்கள் மற்றும் சிறிய நீர்வாழ் முதுகெலும்புள்ள பிராணிகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அவை வளர வளர, பெரும்பாலும் மாமிசத்தை மட்டுமே சார்ந்திருக்கும் வகையில் மாறுகின்றன. எனவே இதுபோன்ற ஒரு விருந்து வரும்போது, ​​அவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

பெர்டி கிரிகோரி, பிபிசியின் ஒன் தொடரான ​​ஃப்ரோஸன் பிளானட் II-க்காக சில காட்சிகளைப் படம்பிடித்தார். அண்டார்டிக் கடலில் பனிக்கட்டிகளுக்கு இடையே பதுங்கியிருக்கும் சீல்களை வெளியில் வரச்செய்ய ஓர்கா திமிங்கலங்கள் முயன்ற காட்சிகளைப் படம் பிடித்தார். இந்தப் படம் பாலூட்டிகள் பிரிவில் விருது வென்றது.

கடல்-பனியின் பாதுகாப்பில் இருந்து அகற்றுவதற்காக,

"ஒவ்வொரு கடல் யானையைக் காணும் போதும் வித்தியாசமான உத்தியைப் பயன்படுத்தி பல ஓர்கா திமிங்கலங்கள் ஒன்றிணைந்து தண்ணீரில் பெரிய அலையை உருவாக்கி அந்த சீல்களை இடம் மாற்றம் செய்யும் முயற்சியை மேற்கொள்ளும். அதில் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட வகை அலையை உருவாக்க அவை வெவ்வேறு தந்திரங்களைக் கையாளுகின்றன. அதைக் காண்பதே எலும்பை உறையவைக்கும் அச்சத்தை ஏற்படுத்தும்," என்று கிரிகோரி பிபிசி செய்தியிடம் கூறினார்.

இஸ்ரேலின் ஜின் பாலைவனத்தில் இரண்டு ஆண் மலையாடுகளுக்கு இடையிலான இந்த சண்டையை அமித் எஷெல் பார்த்தார். அந்த சண்டை சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அவற்றில் ஒரு ஆடு பணிந்தது. இந்த மலையாடுகள் இரண்டும் இலேசான காயங்களுடன் பின்னர் பிரிந்து சென்றன. எஷெலின் இந்த புகைப்படம் விலங்குகள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் பிரிவில் விருது வென்றது.

லெனார்ட் வெர்ஹூவெல் கடற்பிரதேசங்களைப் பற்றிய படப்பிரிவில் விருது பெற்றார். அவரது படம் ஒரு துன்பகரமான காட்சியைக் காட்டுகிறது. நெதர்லாந்து-பெல்ஜிய நாடுகளின் எல்லையில் உள்ள காட்ஸான் கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்ட அவரது படத்தில் இறந்து கிடக்கும் ஓர்கா திமிங்கலம் இடம்பெற்றுள்ளது. அதன் உடலைப் பரிசோதனை செய்த போது, அது கடுமையான ஊட்டச் சத்து குறைவாடு மற்றும் நோய் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இந்தியாவின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் காடுகளில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த குறிப்பிடத்தக்க படம், மின்மினிப் பூச்சியைக் காட்டுகிறது. ஸ்ரீராம் முரளி என்பவர், பல்வேறு ஃபோக்கல் பாய்ன்ட்களுடன் 16 நிமிடங்களுக்கு மேல் மின்மினிப் பூச்சியின் காட்சிகளை படம்பிடித்தார். அவருடைய இந்தப் படம் முதுகெலும்பற்றவை பற்றிய படப் பிரிவில் விருது வென்றுள்ளது.

பிரான்சின் வெர்கோர்ஸ் பிராந்திய இயற்கை பூங்காவில் உள்ள மலை வழிகாட்டியான லூகா மெல்கார்ன், ஒரு தற்காலிக தங்குமிடத்தில் கடுமையான குளிர் நிறைந்த இரவைக் கழித்த பிறகு, மலையாட்டைப் படம்பிடித்தார். அவர் முதலில் தனது கேமராவில் படிந்துள்ள பனிப்படலத்தை மூச்சுக்காற்றின் மூலம் கரைத்து விட்டுத் தான் ஒவ்வொரு முறையும் படம் பிடிக்கமுடியும். அவரது முயற்சியும் திறமையும் அவருக்கு ரைசிங் ஸ்டார் பிரிவில் விருதைப் பெற்றுத் தந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)