You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதீஷா பதிரணா: ஐபிஎல் போட்டிகளில் பட்டை தீட்டப்பட்ட வீரர் இலங்கையின் தோல்விக்கு காரணமானது எப்படி?
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில், பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் மற்றும் அந்த அணியின் அறிமுக வீரர் அப்துல்லா ஷஃபீக் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 345 ரன்களை சேஸிங் செய்து இலங்கை அணியை வீழ்த்தியது.
இலங்கை அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக தோனியால் பட்டை தீட்டப்பட்டதாக வர்ணிக்கப்பட்ட மதீஷா பதிரணாவின் பந்துவீச்சு உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகளிலுமே மோசமாக இருந்தது. இது இலங்கை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.
பதிரணா 9 ஓவர்கள் வீசி 90 ரன்களை வழங்கினார். அதாவது, ஓவருக்கு 9 ரன்களை வழங்கியுள்ளார். உதிரிகள் கணக்கில் பதீரணா மட்டும் 9 வைடுகளை வீசியுள்ளார். ஆக மொத்தம் பதிரணா வழங்கிய ரன்கள் மட்டும் 99. அவர் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி இதில் 50 ரன்களைக் குறைத்திருந்தாலே பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்று கருத முடிகிறது.
பதிரணா கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 57 வைடுகளை வீசியுள்ளார், வைடுகள் மூலம் மட்டும் 91 ரன்களை வழங்கியுள்ளார். இதுவரை எந்த நாட்டு வீரரும் இந்த அளவு வைடுகளை வீசவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியிலும் அவர் 9 ஓவர்களில் 95 ரன்களை விட்டுக் கொடுத்தார். 5 வைடுகளை வீசியிருந்தார்.
இந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் சேர்த்தது. 345 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி 10 பந்துகள் மீதம் இருக்கையில், 345 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது.
பாபர் ஆசம் சொன்னது என்ன?
பாகிஸ்தான் இந்த வரலாற்று சேஸிங்கைச் செய்தவுடன், கேப்டன் பாபர் ஆசம் மைதானத்துக்குள் ஓடிவந்து, ரிஸ்வானை கட்டி அணைத்துக்கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வெற்றிக்குப்பின் ஆசம் கூறுகையில், “ரிஸ்வான், அப்துல் இருவரும் விளையாடிய விதம், பார்ட்னர்ஷிப் அமைத்தது இலங்கை அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். முதல் உலகக் கோப்பையிலேயே ஷஃபீக் சிறப்பாக பேட் செய்திருக்கிறார். ரிஸ்வானும், அப்துலும் சேர்ந்து அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். நடுவரிசை வலுவடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் வரலாற்றுச் சாதனை
உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் 1992-ஆம் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் எடுத்திருந்த 262 ரன்கள்தான். ஆனால், 345 ரன்களைச் சேஸிங் செய்து, உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது. இது உலகக் கோப்பை வரலாற்றில் எந்த அணியும் இதுவரை சேஸிங் செய்யாத இலக்காகும்.
இதற்கு முன் 2011-ஆம் ஆண்டு, மார்ச் 2-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக 328 ரன்களை அயர்லாந்து அணி சேஸிங் செய்ததே உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக இருந்தது.
அதை இப்போது பாகிஸ்தான் அணி முறியடித்திருக்கிறது. இதன் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 8 முறை இலங்கை அணியுடன் மோதி அனைத்திலும் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச சேஸிங் என்பது, 2022-ஆம் ஆண்டு லாகூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 349 ரன்களை சேஸ் செய்ததுதான்.
நடப்பு ஆட்டத்தொடரில், பாகிஸ்தான் அணி இதுவரை 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளைப் பெற்றாலும், அதன் நிகர ரன்ரேட் 0.927 புள்ளிகள் என்ற அளவிலேயேதான் இருக்கிறது. இலங்கை அணி 2 ஆட்டங்களிலும் தோற்று, 8வது இடத்திலும் நிகர ரன்ரேட் மைனஸ் 1.161 என்று அளவில் பின்தங்கியுள்ளது.
ஒரே போட்டியில் 4 சதங்கள்
இந்த ஆட்டத்தில் மட்டும் 4 சதங்கள் அடிக்கப்பட்டன. இலங்கை தரப்பில் குஷால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, பாகிஸ்தான் தரப்பில் முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷஃபீக் ஆகியோர் சதம் அடித்தனர். உலகக் கோப்பைத் தொடரில் ஒரே போட்டியில் 4 வீரர்கள் சதம் அடித்தது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் ஒருநாள் போட்டியில் இருமுறை இதுபோன்று சம்பவம் நடந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு லாகூரில் ஆஸ்திரேலியாவோடு மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் 2 வீரர்களும், ஆஸ்திரேலியா தரப்பில் இரு வீரர்களும் சதம் கண்டனர். 2013-ஆம் ஆண்டு நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் இரு அணிகளிலும் சேர்த்து 4 பேட்டர்கள் சதம் அடித்தனர்.
கணிப்புகளைப் பொய்யாக்கிய ரிஸ்வான், ஷஃபீக்
“தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது, இதில் இலங்கை அணி நிர்ணயித்த 345 ரன்களை பாகிஸ்தான் எப்படி சேஸிங் செய்யப் போகிறது?” என்று சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் பறந்தன.
பாகிஸ்தான் வெற்றி பெறுவது கடினம் என்றே கணிப்புகள் வெளியாகின. இன்னிங்ஸின் முதல்பாதியில் இலங்கை அணியின் ஆதிக்கமே இருந்தது.
ஆனால், முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷஃபீக் ஆகியோரின் ஆட்டம் இந்தக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கியது.
ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 121 பந்துகளில் 131 ரன்களுடன்(8 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் முகமது ஷஃபீக் 103 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்து(10 பவுண்டரி, 3 சிக்ஸர்) ஆட்டமிழந்தார்.
இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு, 156 பந்துகளில் 176 ரன்களைச் சேர்த்துப் பிரிந்தனர். 4-வது விக்கெட்டுக்கு சவுத் ஷகீலுடன் இணைந்த ரிஸ்வான் 68 பந்துகளில் 95 ரன்களைச் சேர்த்தார். மற்ற வகையில் பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக்(12), கேப்டன் பாபர் ஆசம் (10), சவுத் ஷகீல் (31) ரன்களைச் சேர்த்தனர். இப்திகார் அகமது 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அறிமுகப் போட்டியிலேயே சதம்
இதில் அப்துல்லா ஷஃபீக் தனது உலகக் கோப்பை அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேய உலகக் கோப்பை அறிமுக ஆட்டத்திலேயே இதுவரை எந்த பேட்டரும் சதம் அடித்தது இல்லை. இதற்கு முன் உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் மோசின் கான் 1983-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 83 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆனால், சதம் அடித்தது இல்லை. முதல்முறையாகச் சதம் அடித்து வரலாற்றில் ஷஃபீக் பதிவு செய்தார்.
அதுமட்டுமல்லாமல், ஃபக்கர் ஜமானுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அப்துல்லா ஷஃபீக், இதுவரை 8 ஏ லிஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். பாகிஸ்தானின் முதல் தரப்பு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் உள்ளவர். ஆனால், தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஷஃபீக் இறுகப்பற்றி பக்கர் ஜமானுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளார்.
இலங்கை அணி எங்கே சறுக்கியது?
இலங்கை அணி மிகப்பெரிய ஸ்கோரை அடித்திருந்த போதிலும் வாய்ப்பைத் தக்கவைக்கத் தெரியாமல், தொடர்ந்து 2-வது தோல்வியைச் சந்தித்துள்ளது.
இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர். இலங்கை அணியில் குஷால் மெண்டிஸ் (122), சதீரா சமரவிக்ரமா (108) பதும் நிசாங்கா (51) ஆகியோரைத் தவிர மற்ற எந்த பேட்டர்களும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
இலங்கை அணி டெத் ஓவர்களையும் பயன்படுத்தத் தவறவிட்டது, இதனால் கூடுதலாக ரன் சேர்க்கும் வாய்ப்பை இழந்தது. டெத் ஓவர்களில் கடைசி 3 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே இலங்கை சேர்த்து, ஒட்டுமொத்தமாகக் கடைசி 10 ஓவர்களில் 61 ரன்களை மட்டுமே இலங்கை சேர்த்தது. ஆனால், பாகிஸ்தானோ 74 ரன்களைச் சேர்த்தது.
345 ரன்களைச் சேர்த்துவிட்டோம் எங்கே இந்த ஸ்கோரை பாகிஸ்தான் சேஸிங் செய்யப் போகிறது என்று குறைத்து மதிப்பிட்டு, கவனக்குறைவாகச் செயல்பட்டது வீரர்களின் பீல்டிங்கில் மெத்தனப் போக்கு, கேட்சுகளை நழுவவிட்டது தோல்விக்கான காரணமாகத் தெரிகிறது.
தொடக்கத்தில் பாகிஸ்தானின் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து பந்துவீச்சை மாற்றி விக்கெட் வீழ்த்தத் தவறிவிட்டனர், ரன்களைக் கட்டுப்படுத்தவும் தவறிவிட்டனர்.
ரிஸ்வான்-ஷஃபீக் கூட்டணி 10 முதல் 20 ஓவர்களில் 62 ரன்களையும், 20 முதல் 30 ஓவர்களில் 70 ரன்களையும், 30 முதல் 40 ஓவர்களில் 99 ரன்களையும் கடைசி 10 ஓவர்களில் 74 ரன்களையும் குவித்தனர். இதன் மூலம் ஒவ்வொரு 10 ஓவர்களுக்குப் பின்னும் இலங்கையின் அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் எந்த அளவு மோசமடைந்தது என்பது தெரிந்து கொள்ள முடியும்.
அது மட்டுமல்லாமல் இலங்கை அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. தீக்சனா ஓவரில் ரிஸ்வான், ஷகீலுக்கு இரு கேட்சுகளை பீல்டர்களை கோட்டைவிட்டனர். கேட்சு வாய்ப்புகளை மட்டும் இலங்கை அணி தவறவிடவில்லை, வெற்றி வாய்ப்பையும் சேர்த்து தவறவிட்டது.
மோசமான பீல்டிங், ஓடியே எடுத்த 179 ரன்கள்
இலங்கை பந்துவீச்சாளர்களால் விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியவில்லை, ரன்கள் செல்வதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 345 ரன்களை சேஸிங் செய்த பாகிஸ்தான் பேட்டர்கள் கணக்கில் மொத்தம் 26 பவுண்டரி, 6 சிக்ஸர்கள்தான். அதாவது, 140 ரன்கள்தான்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக மட்டும் இரு ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 750 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியுள்ளதன் மூலம் அணியின் பந்துவீச்சு, பீல்டிங் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது தெரிகிறது.
மீதமுள்ள 205 ரன்களில் 26 ரன்கள் உதரிகள் போக, 179 ரன்களை பாகிஸ்தான் பேட்டர்களான ரிஸ்வான், ஷஃபீக் இருவரும் பெரும்பாலும் ஒரு ரன், 2 ரன்கள் என விக்கெட்டுகளுக்கு இடையே ஓடியே சேர்த்துள்ளனர்.
இலங்கை அணியின் வீரர்கள் இந்த ரன்களைத் தடுக்கத் தவறியதுதான் தோல்விக்கான முக்கியக் காரணம்.
பதிரணாவின் அனுபவமற்ற ஆட்டம்
குறிப்பாக, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரணா, 9 ஓவர்கள் வீசி 90 ரன்களை வாரி வழங்கினார். அதாவது, ஓவருக்கு 9 ரன்களை வழங்கியுள்ளார். உதிரிகள் கணக்கில் பதீரணா மட்டும் 9 வைடுகளை வீசியுள்ளார். ஆக மொத்தம் பதிரணா வழங்கிய ரன்கள் மட்டும் 99.
பதிரணா கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 57 வைடுகளை வீசியுள்ளார், வைடுகள் மூலம் மட்டும் 91 ரன்களை வழங்கியுள்ளார். இதுவரை எந்த நாட்டு வீரரும் இந்த அளவு வைடுகளை வீசவில்லை.
பதிரணாவைத் தவிர இலங்கை அணியில் உள்ள மற்ற பந்துவீச்சாளர்கள் சராசரியாக 6 ரன்களைத்தான் விட்டுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் அனுபவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத பதிரணாவுக்கு வாய்ப்புக் கொடு்தது இலங்கை அணி கையைச் சுட்டுக்கொண்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
பதிரணா போன்ற அனுபவமற்ற பந்துவீச்சாளர்கள், அழுத்தம் நிறைந்த உலகக் கோப்பைத் தொடர்களில் நெருக்கடி தரக்கூடியவகையில் பந்துவீசுவது கடினம் என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது. பதிரணாவை சரியாகப் பயன்படுத்தக் கூடிய அளவில் தோனி போன்ற கேப்டன் இருக்க வேண்டும். இந்த இரண்டுமே இலங்கை அணியிடம் இல்லை என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.
இலங்கை அணி மட்டும் இந்த ஆட்டத்தில் 26 உதிரி ரன்களை வழங்கியுள்ளது. இதில் 25 வைடுகள், அதில் பதிரணா கணக்கில் மட்டும் 9 வைடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கூடுதலாக 4 ஓவர்களை வீசியிருக்கிறது இலங்கை. இந்த கூடுதல் ரன்களையும் பந்துகளையும் கட்டுப்படுத்தி இருந்தாலே பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கும்.
ஆக மொத்தம் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு அந்த அணியின் பேட்டர்களின் முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், இலங்கை அணியின் மோசமான பந்துவீச்சும், பீல்டிங்கும் மற்றொரு காரணமாக அமைந்துவிட்டது.
‘வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம்’
தோல்விக்குப்பின் இலங்கை கேப்டன் ஷனகா கூறுகையில், “மெண்டிஸ் அருமையான ஃபார்மில் இருக்கிறார். சதீராவின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது, டெத் ஓவர்களில் நாங்கள் இன்னும் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாகச் சேர்த்திருக்க வேண்டும்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஸ்லோவர் பந்துகள் சிறப்பாக வீசினர். எங்களுடைய பந்துவீச்சாளர்களிடம் இருந்து அதிகமாக ஏதும் எதிர்பார்க்க முடியாது. எளிமையான திட்டங்களுடன், களமிறங்கினோம், ஆனால் அதிகமான உதரிகளை வழங்கியிருக்கிறோம். துரதிர்ஷ்டமாக எங்களுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம்,” எனத் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)