45 வயதில் வேலையை உதறிவிட்டு விரும்பியபடி வாழ விரும்பினால் இந்த ‘ஃபையர்’ உங்களுக்கு அவசியம்

    • எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா
    • பதவி, பிபிசிக்காக

கடந்த சில ஆண்டுகளாக நிதி சுதந்திரம் மற்றும் ஓய்வு பெறுதல் (Financial Independence and Retire Early - FIRE) இயக்கம் பெரியளவில் பிரபலமடைந்து வருகிறது.

பெரும்பாலான நாடுகளில், 55-60 வயது என்பது பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது என்பது பெரிய விஷயமில்லை. 40 - 45 வயதுக்குள் தேவையான பணத்தை சேமித்து நிதி சுதந்திரம் அடைவதும், பின்னர் வருமானத்திற்காக பணியைச் சார்ந்து இருக்காமல் சொந்த முதலீட்டின் மூலம் வாழ்க்கையை நடத்துவதே இந்த ஃபையர் கோட்பாட்டின் மையப்புள்ளி.

தனிப்பட்ட நிதித் திட்டமிடலை பொறுத்தவரை, வருமானத்தில் அதிகப்படியான தொகையை சேமித்து வைத்து செலவை குறைத்துக்கொண்டு வாழ்வது போன்ற யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஃபையர் கோட்பாட்டை பொறுத்தவரை எதிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வொரு செலவுக்கும் இப்போதே சேமித்து வைக்க வேண்டும்.

இந்த புரட்சிகரமான மாற்றத்திற்குக் காரணம் என்ன? சராசரியாக முதலீடு செய்பவர்களுக்கு இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

ஃபையர் இயக்கம் எப்போது தொடங்கியது?

இந்தக் கோட்பாட்டின் மீது 1980க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஜேக்கப் ஃபிஸ்கரின் ‘எர்லி ரிட்டயர்மென்ட் எக்ஸ்ட்ரீம்’ என்ற புத்தகம் ஃபையர் யோசனையின் மறுபரிசீலனையாகும்.

மேலும், விக்கி ராபின் எழுதிய 'உங்கள் பணம் உங்கள் வாழ்க்கை' புத்தகத்தில் இந்தக் கோட்பாடு குறித்து வலுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. புத்தகங்கள் தவிர, இந்தக் கோட்பாட்டுக்கு ஆதரவாகப் பலர் தங்கள் கருத்துகளை சமூக ஊடக வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக, இந்த கோட்பாட்டின்பால் ஈர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் 40 வயதுக்கு பிறகுதான் தொடங்குகிறது என்ற நம்பிக்கை வெளிநாட்டினர் மத்தியில் வலுவாக உள்ளது. இந்தக் கோட்பாடு அந்த நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்ப்பதாகப் பார்க்கப்படுகிறது.

பலரும் தங்களுக்குப் பிடித்த தொழிலைத் தொடர 45 வயதில் வேலையை விட்டுவிட விரும்புகிறார்கள். நாம் சம்பாதித்து வைத்திருக்கும், முதலீடு செய்திருக்கும் பணமே போதுமானதாக இருக்கும் என்பதால் அதுவரை கிடைத்து வந்த சம்பளம் வரவில்லையென்றாலும் பிரச்னையாக இருக்காது என்ற நம்பிக்கை பரவியது.

ஏனென்றால் பலர் தங்களுக்குப் பிடித்த தொழிலைத் தொடர 45 வயதில் வேலையை விட்டுவிட விரும்புகிறார்கள். அதனால், சம்பாதித்து முதலீடு செய்த தொகையே போதுமானது என்பதால், முந்தைய சம்பளம் வரவில்லை என்றாலும் பிரச்னை இருக்காது என்ற நம்பிக்கை பரவியது.

இந்தியாவில் இந்த கோட்பாட்டின் பிரபலத்துக்கு காரணம் என்ன?

முன்பே பலமுறை குறிப்பிட்டது போல, தற்போதைய உழைக்கும் தலைமுறையினர் தங்களுக்கு முந்தைய உழைக்கும் தலைமுறையினரிடம் இருந்து மிகவும் வேறுபட்டவர்கள்.

முன்பு, பலரும் பல ஆண்டுகளுக்கு ஒரே அரசாங்க வேலையில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால் தற்போதெல்லாம் ஒருவர் ஒரு அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவதே குறைவுதான்.

அதேபோல், முன்பு 60 வயதான நபர் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியம் பெறும் வசதி இருந்தது. தற்போது அப்படி எதுவும் கிடையாது. எனவே, வேலையில் இருக்கும்போதே முடிந்தவரை அதிக வருமானம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்ற யோசனையில் இருந்து இந்த ஃபையர் இயக்கம் உதித்தது.

தற்போதைய காலகட்டத்தில் வேலை நேரமும் முன்புபோல் சீராக இல்லாமல் ஷிஃப்ட் முறையில் உள்ளது. இதனாலேயே, வயதாகிவிட்டால், அதே வேலையைச் செய்ய முடியாது என்ற எண்ணம், தற்போதைய தலைமுறையினரிடம் அதிகமாக உள்ளது. எனவே, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை வலியுறுத்தும் இந்தக் கோட்பாடு அவர்களைக் கவர்ந்துள்ளது.

கூடுதலாக, இன்றைய காலகட்டத்தில் காப்பீடு முதல் ஓய்வூதியத் திட்டமிடல் வரை அனைத்து தகவல்களையும் உடனடியாக நம்மால் பெற முடிகிறது. தற்போது கிடைப்பதுபோல் இத்தகைய நிதி பற்றிய தகவல்கள் கடந்த காலங்களில் கிடைக்கவில்லை.

கடந்த காலங்களில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதற்கான முகவர்கள் மூலம் மட்டுமே செய்ய முடியும். தற்போது அப்படியில்லை, நிதி திட்டமிடல் தொடர்பாக எக்கச்சக்க தகவல்கள், தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கின்றன.

முன்னதாக, நிறுவனங்களின் முகவர்கள் மூலமாக மட்டுமே முதலீடுகள் செய்யப்பட்டன. ஆனால், இப்போது அப்படியில்லை. இணையத்தில் ஒவ்வொரு நிதி திட்டமிடல் தேவைக்கும் நிறைய தொழில்நுட்ப ஆதரவு உள்ளது. இதெல்லாம் தொழில்நுட்ப புரட்சியால் ஏற்பட்ட மாற்றம் என்று சொல்லலாம்.

ஃபயர் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

காப்பீடு: நாம் எடுத்துக்கொள்ளும் ஆயுள் காப்பீடு நமது ஆண்டு செலவினங்களைவிட குறைந்தது இருபது மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். இதேபோல் முழு குடும்பத்திற்கும் போதுமான மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி: ஒரு ஊழியர் 45 வயதை அடையும்போது, அவர்களது குடும்பத்தின் ஆண்டு செலவினத்தில் 25 மடங்கு வருங்கால வைப்பு நிதியாக இருப்பது மிகவும் முக்கியம். பணவீக்கத்தை முறியடிக்க அத்தகைய நிதியை உருவாக்குவது இந்தக் கோட்பாட்டிற்கு முக்கியமானது.

நிதி இலக்குகள்: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிதி இலக்கிற்கும் போதுமான அளவு முதலீடு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் விதிவிலக்கு அளிக்கக்கூடாது. அனைத்து நிதி இலக்குகளையும் சமமாக நடத்துவதே தனிநபர் நிதி மேம்பாட்டின் அடிப்படைக் கொள்கை.

செலவை கட்டுப்படுத்த வேண்டும்: ஃபையரின் முக்கியக் கொள்கையானது, அவ்வப்போது செலவுகளைக் கண்காணிப்பதன் மூலம் அதிகப்படியான செலவுகள் மற்றும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதாகும். மாதாந்திர சம்பளத்தில் சேமித்த பிறகு, மீதமுள்ள தொகையை செலவுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். ஆனால் இது எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை, எனவே செலவுகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்த கோட்பாட்டிற்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள்

எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிட உதவும் இந்தக் கோட்பாட்டுக்கு எதிராக வைக்கப்படும் முக்கிய விமர்சனம், சிக்கனமாக வாழ்வது என்பதன் மூலம் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதை இது கைவிடச் செய்கிறது என்பதாகும். எனினும், இந்த விமர்சனம் முற்றிலும் உண்மையல்ல. காரணம், இன்பம் என்பது உணர்வு சார்ந்த விஷயம். நிதி விஷயங்களில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை.

இந்தக் கோட்பாடு அதிக வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற விமர்சனமும் உள்ளது. இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், நாளைய தேவையை உணர்ந்து சேமிக்கத் தொடங்குபவர்களால் மட்டுமே நிதி ரீதியாக இன்னொரு அடி எடுத்து வைக்க முடியும்.

ஃபையர் இயக்கத்தின் விளைவுகள்: இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டதன் காரணமாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. தற்போது வளர்ந்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபியும் இந்த இயக்கத்தில் இருந்து பிறந்த யோசனைதான். பொதுவாக, முதலீட்டாளர்களின் அதிகரிப்பால்தான் பங்குச் சந்தை இயங்குகிறது.

முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக சமூக ஊடகங்களில் அதிகம் சம்பாதித்ததாக சிறு முதலீட்டாளர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: