கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று உயிரை விட்ட அமெரிக்கர் - என்ன நடந்தது?

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பாலம் இடிந்து விழுந்தது. ஆனால் அது அப்போதும் கூகுள் மேப்பில் சரியாகக் காட்டப்படாமல் பாலம் அப்படியே முழுமையாகத் தோன்றியது.

மேலும், கூகுள் தனது மேப்பைப் புதுப்பிக்காததால் தான், இடிந்து விழுந்த அந்த பாலத்தில் வாகனம் விழுந்து தண்ணீரில் மூழ்கி அமெரிக்கர் ஒருவர் இறந்துவிட்டதாக, அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்னோ க்ரீக் பாலம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விழுந்துவிட்டதைப் பற்றிக் குறிப்பிடாமல் கூகுள் நிறுவனம் அலட்சியம் காட்டியுள்ளது என, பிலிப் பாக்ஸன் என்ற அந்த அமெரிக்கரின் உறவினர்கள் கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

வடக்கு கரோலினாவின் சார்லோட்டிலிருந்து வடமேற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடிந்து விழுந்த பாலத்தை கடந்த போது செப்டம்பர் 2022 இல் பாக்ஸன் மரணமடைந்தார்.

இந்தப் புகார் குறித்து பரிசீலித்து வருவதாக கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த வழக்கு வேக் கவுன்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அன்றைய தினம் என்ன நடந்தது?

இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாக்ஸன், தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்காக நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மேலும் அவர் இறந்த நேரத்தில், அவருக்குச் சற்றும் அறிமுகமில்லாத ஒரு இடத்தில் அவர் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளளனர்.

அவரது மனைவி தனது இரண்டு மகள்களுடன் முன்பே வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆனால், பிறந்த நாள் விழா நடந்த பகுதியைச் சுத்தம் செய்வதற்கு உதவும் நோக்கில் பாக்ஸன் அங்கேயே இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

"உள்ளூர் சாலைகள் பற்றி அறிமுகமில்லாத அவர், முழுக்க ுழுக்க கூகுள் மேப்பை நம்பியிருந்தார். இந்த செயலி அவரை அழைத்துச் சென்று தனது மனைவி மற்றும் மகள்களுடன் சேர்க்கும் என்று நம்பினார்," என்று குடும்பத்தின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

"துரதிர்ஷ்டவசமாக, இருட்டிலும் மழையிலும் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டியபோது, ​​அவர் சிறிதும் சந்தேகப்படாமல் காலாவதியான கூகுள் மேப் வழிமுறைகளைப் பின்பற்றினார். பின்னர் அவரது குடும்பத்தினர் கற்றுக்கொண்டது என்னவென்றால், 'எந்த இடத்துக்கும் வழிகாட்டாத பாலம்' ஒன்று அங்கிருந்தது என்பது தான்," என்று அந்த வழக்கறிஞர்கள் மேலும் கூறுகிறார்கள்.

அந்த கூகுள் மேப்ஸ் காட்டிய பாதையில் சென்ற அந்த துரதிர்ஷ்டமான பயணத்தின் போதுதான் பாக்ஸனின் ஜீப், கிளாடியேட்டர் சாலையில் இருந்து 20 அடி ஆழத்தில் ஒரு சிற்றோடையில் விழுந்தது. அன்று இரவு பாக்ஸன் உயிரை விட்டார்.

2013 ஆம் ஆண்டு பாலம் இடிந்து விழுந்ததையடுத்து, அப்பகுதியில் உள்ள அக்கம்பக்கத்தினர் தங்கள் வரைபடங்களை மாற்ற கூகுள் நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொண்டதாகவும் இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நிறுவனமான சார்லோட் அப்சர்வரின் கூற்றுப்படி, ஓட்டுநர்கள் பாலத்தை கடப்பதைத் தடுக்க பொதுவாக தடைகள் வைக்கப்பட்டன என்றும், ஆனால் அவை பின்னர் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டன என்றும் பாக்ஸனின் விபத்து நேர்ந்த போது அவை இல்லை என்றும் தெரியவருகிறது.

கூகுளைத் தவிர, ஸ்னோ க்ரீக் பாலத்தை பராமரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருந்தும் அதைச் செய்யத் தவறிய மூன்று உள்ளூர் நிறுவனங்களுக்கு எதிராகவும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு வருடம் கழித்து, பாக்ஸன் இறந்தபோது பாலம் அதே நிலையில் இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

கூகுள் நிறுவனம் என்ன சொல்கிறது?

"எங்கள் மகள்கள் தங்கள் அப்பா எப்படி, ஏன் இறந்தார் என்று கேட்கிறார்கள். நான் அவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் தவிக்கிறேன். ஏனென்றால், ஒரு வயது வந்தவராக, ஜிபிஎஸ் மற்றும் பாலத்தைப் பராமரிப்பவர்கள் மனித வாழ்க்கையை எவ்வளவு குறைவாகக் கருதினார்கள் என்பதை என்னால் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை," என்று பாக்ஸனின் மனைவி அலிசியா பாக்ஸன் கூறினார்.

கூகுள் செய்தித் தொடர்பாளர் ஏபி ஏஜென்சியிடம் பேசிய போது, பாக்சன் குடும்பத்திற்கு தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்தார்.

"வரைபடத்தில் துல்லியமான வழித் தகவலை வழங்குவதே எங்கள் குறிக்கோள்" என்று அவர் மேலும் பேசிய போது கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: