You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மூட்டைப்பூச்சி பயத்தில் உறைந்து போயிருக்கும் பிரான்ஸ் – என்ன நடக்கிறது அங்கே?
- எழுதியவர், ஹ்யூ ஷோஃபீல்ட்
- பதவி, பிபிசி செய்திகள், பாரிஸ்
கடந்த சில வாரங்களாக, பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மூட்டைப்பூச்சியாகத் தெரிகிறது. வீட்டில், திரையரங்குகளில், மெட்ரோ ரயில்களில், தங்கள் கைபேசித் திரைகளில்...
இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரான்சில் ஒரு பரவலான அச்சம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கும் சமயத்தில், இந்த விஷயம் பிரான்ஸ் அரசுக்கு மிகப் பெரும் தலைவலியாகவும் மாறியிருக்கிறது.
என்ன நடக்கிறது பிரான்சில்?
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரத்திலும், அந்நாட்டின் பிற நகரங்களிலும் மூட்டைப்பூச்சிகள் அதிகளவில் படையெடுத்துள்ளன.
இது, பூச்சிகள் குறித்த பரவலான வெறுப்பையும் பயத்தையும் உருவாக்கியிருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் பிரெஞ்சு ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
ஆனால், இது பாதி உண்மை தான்.
விஷயம் என்னவெனில், கடந்த சில வாரங்களாக இந்த பூச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இந்தப் போக்கு பல ஆண்டுகளாக நடந்து வருவதுதான்.
ஒவ்வோர் ஆண்டும் கோடைகாலத்தின் பிற்பகுதியில், மூட்டைப்பூச்சிகள் பெருமளவில் அதிகரிப்பது காணப்படுவதாகக் கூறுகிறார் மார்செய் நகரத்தின் பிரதான மருத்துவமனையின் பூச்சியியல் நிபுணரான ழான்-மிஷெல் பெராஞ்ஜே. இவர் பிரான்சில் மூட்டைப்பூச்சிகள் குறித்த முன்னோடி வல்லுநர் ஆவார்.
"இது ஏனெனில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பொதுவாக மக்கள் பயணம் செய்கின்றனர். அவர்களது பைகள் மற்றும் பெட்டிகளில் மூட்டைப்பூச்சிகள் ஒட்டிக்கொண்டு பிரான்ஸ் நாட்டுக்குள் வருகின்றன. இப்படி வரும் பூச்சிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் இருந்ததைவிட அதிகமாக உள்ளது,” என்கிறார் பெராஞ்ஜே.
பாரிஸ் நகரத்தின் பிம்பத்தைக் காக்க நடவடிக்கை
பாரிஸ் நகரின் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருக்கும் 10 பேரில் ஒருவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் மூட்டைப் பூச்சிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் இந்தப் பரவலான அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
கடந்த சில வாரங்களில் திரையரங்குகளிலும் ரயில்களிலும் மூட்டைப்பூச்சிகள் காணப்பட்டதாக வெளியான செய்திகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் அவை கருத்தில் கொள்ளப்பட்டு, அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்திருக்கிறது.
இது, மூட்டைப்பூச்சி சிக்கலை பிரான்ஸ் அரசு எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டது என்பதைக் காட்டுகிறது. 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக பாரிஸ் நகரின் பிம்பத்தைக் காப்பதற்கான முயற்சியாகவும் இது உள்ளது.
அதனால் தான், பரவி வரும் இந்தப் பூச்சி பயத்தை வெறும் சமூக ஊடக நிகழ்வாக மட்டுமே பிரான்ஸ் அரசு ஒதுக்கிவிடவில்லை. ஏனெனில், சமூக ஊடகமும் இந்தக் கதையின் ஒரு பகுதியாக உள்ளது.
முன்னெப்போதும் இல்லாத பயம்
பிரான்சில் மூட்டைப்பூச்சிப் பரவல் குறித்த அச்சமூட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இதுவே இந்த விஷயத்தை ஒரு தேசிய அளவிலான பிரச்னையாகவும் மாற்றியிருக்கிறது.
மக்கள் வருகை குறைவது குறித்து ஏற்கெனவே கவலையில் இருக்கும் திரையரங்க உரிமையாளர்கள், மூட்டைப்பூச்சி வீடியோக்கள் பரவும்போது மேலும் அச்சத்திற்கு உள்ளாகிறார்கள். மெட்ரோ ரயில்களில் அமர்வதைத் தவிர்த்து சிலர் நிற்கத் துவங்கியுள்ளனர்.
பெராஞ்ஜே மேலும் கூறுகையில், முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டு பொதுமக்களிடையே அச்சம் அதிகமாகப் பரவியிருப்பதாகக் கூறுகிறார்.
"இதுவொரு வகையில் நல்ல விஷயம் தான். இது இந்தப் பிரச்னையைப் பற்றி மக்களுக்குத் விழிப்புணர்வை ஏற்படுத்தும். இப்பூச்சிகளுக்கு எதிராக நீங்கள் எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறீர்களோ அவ்வளவு நல்லது,” என்கிறார் அவர்.
ஆனால் இப்பிரச்னையில் பல விஷயங்கள் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன, என்றும் அவர் கூறுகிறார்.
உலகளவில் அதிகரிக்கும் மூட்டைப்பூச்சிப் பரவல்
ஆனால் கடந்த 20-30 ஆண்டுகளில் உலகளாவிய அளவில் மூட்டைப்பூச்சிப் பரவல் அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை.
உலகமயமாக்கல், அதன்மூலம் பெருகும் ஏற்றுமதி-இறக்குமதி, சுற்றுலா ஆகியவை இதற்கான காரணங்கள்.
மூட்டைப்பூச்சிகள் மனிதர்கள் இருக்கும் இடங்களில் மட்டுமே வாழக் கூடியவை.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் அதிகரித்த DDT போன்ற பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டினால், இவை பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டன. அதில் பிழைத்தவை பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியைப் பெற்றன. அவைதான் இன்றைய மூட்டைப்பூச்சிகளின் மூதாதையர்கள்.
மூட்டைப்பூச்சிகள் பரவ மற்றொரு காரணம், கரப்பான்பூச்சிகளின் மறைவு. கரப்பான்பூச்சிகள் மூட்டைப்பூச்சிகளை உண்பவை. ஆனால் நமது வீடுகள் பெரும்பாலும் சுத்தமாக இருப்பதால் கரப்பான்களும் குறைந்துவிட்டன.
மூட்டைப்பூச்சிகளால் உளவியல் ரீதியான பாதிப்பு
வல்லுநர்களின் கூற்றுப்படி, மூட்டைப்பூச்சிகளால உடலளவில் ஏற்படும் பாதிப்புகளைவிட உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் பெரியவை.
மூட்டைப்பூச்சிகள் வியாதிகளைப் பரப்புவதில்லை, அவற்றின் கடியும் அதிக நாள் வலிப்பதில்லை.
ஆனால், அவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலில் ஏற்படும் பாதிப்பு தீவிரமானது.
ஒருமுறை மூட்டைப்பூச்சி பாதித்த வீட்டை முழுவதுமாகச் சுத்தம் செய்த பின்னும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல்மீது மூட்டைப்பூச்சி ஊர்வதுபோல உணர்வதாகச் சொல்கிறார்கள்.
பெராஞ்ஜே மேலும் கூறுகையில், சமூக பொருளாதாரச் சூழ்நிலையில் பின்தங்கியிருப்போர் இவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)