இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு அரசியல் தலையீடு காரணமா? திறமைக்கு மதிப்பு இல்லையா?

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் பின்னடைவு, உள்நாட்டில் தற்போது பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அமைப்பிற்குள் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமையே, இலங்கை கிரிக்கெட் அணி பின்னடைவை சந்திப்பதற்கான பிரதான காரணம் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை கிரிக்கெட்டிற்குள் அரசியல் தலையீடுகள் காணப்படக் கூடாது என்ற வகையிலான கடிதமொன்று, ஐ.சி.சி.யினால், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெப் எலடயிஸினால், இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷமி சில்வாவிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

‘தேர்தல் மூலம் நிர்வாகத்தை அமைக்க வேண்டும்’

2024-ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாநாடு மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு, இலங்கை கிரிக்கெட் தமது சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, 2026-ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் 2027-ஆம் ஆண்டு மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்றால், தேர்தலில் தெரிவு செய்யப்படும் நிர்வாகமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என சர்தேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

‘இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு’

இலங்கை கிரிக்கெட்டிற்குள் கடும் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக விளையாட்டு விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.

அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமையே, இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்திப்பதற்கான காரணமாக அமைந்துள்ளது என இலங்கையின் விளையாட்டு விமர்சகரும், விளையாட்டு ஊடகவியலாளருமான அப்துல் ரகுமான் தெரிவிக்கின்றார்.

“இலங்கை கிரிக்கெட்டிற்குள் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன. அதை ஐ.சி.சி சொல்ல வேண்டிய தேவையில்லை. இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவே மிகத் தெளிவாகச் சொல்கின்றார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள் நடைபெறக் கூடிய ஊழல்கள், கிரிக்கெட் எந்தளவிற்கு படுமோசமாகியுள்ளது போன்ற விஷயங்களை அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்தார்,” என்கிறார் அப்துல் ரகுமான்.

“எனவே நிச்சயமாக இலங்கை அணியின் இந்த பின்னடைவுக்கு, முகாமைத்துவ மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளே காரணம். யார் யாருடைய தேவைகளுக்காக வீரர்கள் தெரிவு செய்யப்படுகின்றமை போன்ற பல்வேறு காரணங்கள் இலங்கையில் கிரிக்கெட் இல்லாது போகின்றமைக்குப் பிரதான காரணமாகும்,” என்றார்.

உதாரணமாக அவர் ஜிம்பாப்வே அணியைச் சொல்கிறார். ஜிம்பாப்வே கிரிக்கெட் அடிமட்டத்திற்குப் போவதற்கு அரசியல்தான் காரணம் என சொல்லப்பட்டது, என்கிறார்.

“வெஸ்ட் இண்டீசிலும் அதே நிலைமை தான். நிச்சயமாக இலங்கை அணியில் அந்த பிரச்னைகள் இருப்பதன் காரணமாக தான், திறமையான வீரர்களுக்கு சரியான வாய்ப்புக்கள் கொடுக்கப்படுவதில்லை. பயிற்சி இல்லாத, தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக்கொள்வது போன்ற குற்றச்சாட்டுகள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். ஐ.சி.சி இவ்வாறான விடயங்களை மேலும் தீவிரமாக ஆராய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான் தெரிவிக்கின்றார்.

‘பாகிஸ்தானின் நிலைதான் இலங்கை அணிக்கும்’

இலங்கை கிரிக்கெட் அணியை தலைசிறந்த அணியாக கொண்டு சென்ற முன்னாள் வீரர்கள் கூட, தேசிய கிரிக்கெட் தொடர்பில் அவதானம் செலுத்தாமை குறித்தும் விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''முத்தையா முரளிதரன் ‘இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் கூட சில வேளை நான் வெற்றி பெறுவேன். ஆனால், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெறும் தேர்தலில் நான் ஜென்மத்திலும் வெற்றி பெற மாட்டேன்’ என்று மிக அழகாக அதனை சொல்லியுள்ளார். ஏனென்றால், இலங்கை கிரிக்கெட்டில் அவ்வளவு அரசியல் காணப்படுகின்றது,” என்கிறார் அப்துல் ரகுமான்.

மேலும், “ஒரே தரப்பினர் மாறிமாறி ஆசனங்களை பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் காணப்படுகின்றன. இதனால் இலங்கை அணியின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. இலங்கை வீரர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இப்படி இருந்தால், இலங்கை அணியின் எதிர்காலம் எப்படி ஒளிமயமாகும் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது,” என்கிறார் அவர்.

மாறாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தை எடுத்துக்கொண்டால், ராகுல் டிராவிட் இப்போது பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றார். பழைய வீரர்களின் முழுமையான ஒத்துழைப்பு அடிமட்டத்திலிருந்து அவருக்கு காணப்படுகின்றது, என்கிறார்.

“இந்திய தேசிய அணியை ஒரு பக்கம் வையுங்கள். இந்தியாவின் ஏ, பி, சி அணிகளும் முழுமையாக பயிற்சிகளில் இருக்கின்றார்கள். இந்தியாவின் சி அணி உலகக் கோப்பை போட்டிகளில் தற்போது களமிறங்கினால், தற்போது உலகக் கோப்பை போட்டிகளை எதிர்கொள்ளும் பல அணிகளை வெற்றிகொள்ளும் அளவிற்கு இந்தியாவின் கிரிக்கெட் தற்போது காணப்படுகின்றது. அந்தளவிற்கு ஒருமித்து செயற்படக்கூடிய அளவிற்கு இந்திய அணி காணப்படுகின்றது. காரணம், வீரர்களுக்கான சுதந்திரம் அங்கு காணப்படுகின்றது,” என்கிறார் அவர்.

இலங்கையைப் போலவே பாகிஸ்தானிலும் இதே பிரச்னை காணப்படுகின்றது என்கிறார் அவர். “பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குள் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெளிவாக கூறுகின்றன. அதே நிலைமையை தான் இலங்கை அணி தற்போது எதிர்கொண்டுள்ளது," என அவர் கூறினார்.

‘திறமைக்கு மதிப்பு இல்லை’

இந்த அரசியல் பிரச்னைகளுக்கு மேலாக, இலங்கை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமையே, இலங்கை அணி தோல்விகளை சந்திப்பதற்கு பிரதான காரணம் என விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான் தெரிவிக்கின்றார்.

“ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் அணியில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு வீரர். அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால், அண்மையில் அவர் இணைத்துக்கொள்ளப்பட்ட போட்டியில் திறமையாகச் செயல்பட்டார். அன்று இலங்கை அணிக்கு வெற்றி கிடைத்தது. இவ்வாறான குறைகளை இலங்கை கிரிக்கெட் நிவர்த்தி செய்யாத வரையில், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் சந்தேகத்திற்குரியதுதான்,” என அவர் கூறினார்.

உலகக்கோப்பையில் கேள்விக்குறியான நிலை

உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை அணி 7 போட்டிகளை எதிர்கொண்டு, இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளில் மாத்திரமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய ஐந்து அணிகளும் எதிராக இலங்கை அணி தோல்வியை தழுவியிருக்கிறது.

இந்நிலையில், இலங்கை அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

பங்களதேஷ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை அணி மோதவுள்ளது.

வியாழனன்று (நவம்பர் 2) இந்திய அணியுடனான படுதோல்விக்குப்பின் இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்குச் செல்வது மிகப்பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்?

இலங்கை கிரிக்கெட் அமைப்பிற்ற்குள் அரசியல் ரீதியில் தலையீடுகள் காணப்படுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஐ.சி.சி அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.சி.சியின் நற்பெயரை முன்னிலைப்படுத்தி, இலங்கை கிரிக்கெட் அமைப்பிலுள்ள ஊழல் அதிகாரிகள், தொடர்ந்தும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் நிதி மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் போன்றவை, கணக்காய்வு அறிக்கை ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அதன் பிரதிகளையும் ஐ.சி.சிக்கு அனுப்பி வைத்துள்ளதாக உள்ளுர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)