You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரு கைகளும் இல்லாமலே நீச்சல் அடிக்கும் கேரள சிறுவன் - உலக அளவில் சாதித்தது என்ன?
- எழுதியவர், ஹேமா ராகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
“ஒரு செயலை முடிக்க 100 முறை முயற்சி செய்து தோற்றுப்போனாலும் 101 வது முறை நிச்சயமாக நீங்கள் ஜெயிக்க முடியும். இங்கு முயற்சிகள் மிகமிக முக்கியம். நீங்கள் முயற்சிக்கவில்லை என்றால் உங்கள் வாழ்வில் எதுவும் கைகூடாது ” என தன்னம்பிக்கையோடு வார்த்தைகளால் நம்மை உற்சாகப்படுத்துகிறார் முகமது ஆசீம்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் முகமது ஆசீம். பிறந்ததில் இருந்தே இவருக்கு 2 கைகள் கிடையாது. ஒரு கால் உயரம் குறைவாக இருக்கும். ஆனால் கல்விக்காக இவர் எடுத்த முயற்சிகள் உலக அளவில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
“நான் என் குடும்பத்தில் முதல் குழந்தை. நான் பிறந்தவுடன் எனக்கு 2 கைகள் இல்லை. ஒரு காலின் உயரம் மிகவும் குறைவாக இருந்தது. என் பெற்றோர்கள் இடிந்து போனார்கள். நான் மாற்றுத்திறனாளியாக பிறந்ததால் அவர்கள் தினமும் மிகவும் சிரமப்பட்டார்கள். நான் 3 ஆம் வகுப்பு சேரும் வரையிலுமே வீட்டிற்கு உள்ளேயே தான் அடைந்து கிடந்தேன். பள்ளியில் படிக்க வேண்டும் என்ற என் எண்ணம் காரணமாக நான் வீட்டை விட்டு வெளியே வந்தேன் ” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ எங்கள் வெளிமன்னா பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு வரை படித்தேன். அதற்கு பிறகு அந்த பள்ளியில் அடுத்து படிக்க வசதி இல்லாமல் போனது. நான் மட்டுமல்ல அங்கு 4 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் 5 ஆம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் வேறு ஒரு பகுதிக்கு தான் சென்று படிக்க வேண்டும். அதனால் அந்த பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று அரசு தரப்பிற்கு பல்வேறு முறை கோரிக்கை வைத்ததும் அந்த பள்ளி உயர் தொடக்கப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் இங்கு 7 ஆம் வகுப்பு வரை படித்தேன். அதன் பின்னர் இப்போது இந்த பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன் ” என்கிறார் முகமது ஆசீம்.
வெளிமன்னா பகுதியில் இருக்கும் இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் முகமது ஆசிம், இதற்காக தன்னுடைய பள்ளியில் இருந்து திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் வரை 52 நாட்களில் 450 கிலோமீட்டர்களுக்கு மேல் சக்கர நாற்காலியில் பயணம் செய்து சுமார் 30000 கையெழுத்துகளை சேகரித்துள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
“ மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உத்வேகமாகவும், மற்றவர்களுக்கும் உதவியாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் "ஆசிம் வெளிமண்ணா அறக்கட்டளை" என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளேன். அறக்கட்டளையின் நோக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி மற்றும் விளையாட்டுகளை ஊக்குவிப்பதாகும். கோழிக்கோடு KMCT மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை, Aster Mims, Calicut உடன் இணைந்து குழந்தைப் பருவ புற்றுநோய் இலவச சிகிச்சை திட்டம், மற்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குடிசைப்பகுதிகளில் இருக்கும் 100 மக்களுக்கு தினமும் உணவு வழங்குவது, கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையுடன் இணைந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச கண் சிகிச்சையை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவுகளை செய்து வருகிறேன் ” என்கிறார் ஆசீம்.
நீச்சல் மூலம் சாதனை
மக்கள் நீச்சல் கற்றுக் கொள்வது குறித்தும் முகமது ஆசீம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் . கேரளாவில் உள்ள பெரியாறில் தினந்தோறும், நீச்சல் தெரியாமல் மூன்று பேர் மூழ்குவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது . மனிதனாய் பிறக்கக்கூடிய அனைவரும் நீச்சல் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நீச்சல் பயிற்சியை மேற்கொண்டதாக கூறும் ஆசிம் மிக குறுகிய காலத்தில் நீச்சல் கலையை கற்றுக்கொண்டு பெரியாறில் ஒரு மணி நேரம் ஒரு நிமிடத்தில் யாருடைய துணையும் இல்லாமல் 800 மீட்டர் தொலைவை தன் கால்களாலே நீந்தி கடந்திருக்கிறார் .
அவருடைய இந்த சாதனை 2022 ஆம் ஆண்டு ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட், இந்தியா புக் ஆஃப் ரெகார்ட், வேர்ல்ட்ஸ் ரெக்கார்டு யூனியன் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு
கத்தாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பு அழைப்பாளராகவும் ஆசிம் பங்கேற்றார்.
இது குறித்து அவர் கூறும்போது, “கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற்ற ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் நான் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை போன்ற மாற்றுத்திறனாளியான கனிம் அல் முஃப்தாவை(Ghanim AI Mufta) விளையாட்டு மைதானத்தில் நான் சந்தித்தேன் ”என்றார்.
மெஸ்ஸி போன்ற புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களை சந்தித்தது தன் வாழ்வின் மறக்கமுடியாத தருணம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
“ ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வ அலுவலர்கள் என்னை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கே அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிக்கு முன்பாக அந்தந்த நாடுகளின் விளையாட்டு வீரர்களோடு நான் கலந்துரையாடினேன். புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர்களான மெஸ்ஸி, பப்பே உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்களோடு கலந்துரையாடியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களை எல்லாம் பார்த்து எனக்கு மேலும் உத்வேகம் ஆகி பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக பின்னோக்கி நீந்தும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலும் ஏற்பட்டிருக்கிறது ” என்று தெரிவித்தார்.
17 வயதில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கின்ற முகமது ஆசிம் பல்வேறு உலக அளவிலான விருதுகளை வென்றுள்ளார். நெதர்லாந்து நாட்டில் உள்ள ‘கிட்ஸ் ரைட்ஸ் ’அறக்கட்டளையின் சார்பாக International Children's Peace Prize finalist 2021ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார. அதேபோல் நீச்சல் பயிற்சிக்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட், வேர்ல்ட் ரெக்கார்ட் தி யூனியன் ஆகிய புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார். கேரள அரசன் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பாக வழங்கப்படும் உஜ்வால பால்யம் விருதையும் வென்றிருக்கிறார். மாநிலத்தின் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு தூதராகவும் முகமது ஆசீம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மாற்றுத்திறனாளியாக பிறந்துவிட்டோம் என்று கவலைப்பட்டது கிடையாது என்றும் நம்மிடம் எது இருக்கிறதோ அதை வைத்து என்ன சாதிக்க வேண்டும் என்பதை தான் எப்போதும் சிந்திப்பேன் என்று ஆசிம் கூறுகிறார்.
“நான் இந்தியா மற்றும் உலக அளவில் இதுவரை 2500க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் பல ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து என்னுடைய வாழ்க்கை கதையை அவர்களிடம் நேரடியாக கூறுவேன். உங்களுக்கு விதிக்கப்பட்டது ஒரு வாழ்க்கை. அந்த ஒரு வாழ்க்கையில் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.
நீங்கள் சில முறை முயற்சி செய்யும்போது அது தோல்வியில் முடியலாம். ஆனால் விடாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் .100 முறை நீங்கள் முயற்சித்து அதில் தோல்வி கண்டாலும் 101 வது முறை மீண்டும் நீங்கள் முயற்சி செய்யும்போது அது உங்களுக்கு வெற்றியை அளிக்கும் . அதைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன். என்னால் என்ன முடியுமோ அதை நான் எனக்காகவும் என்னை நம்பி இருக்கக்கூடிய மக்களுக்காகவும் தொடர்ந்து செய்து வருகிறேன்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் முகமது ஆசீம்.
முகமது ஆசீமிற்கு ஒரு மிகப்பெரிய கனவு இருக்கிறது. அது, கேரளாவில் 10 ஏக்கரில் பாராலிம்பிக் கிராமத்தை உருவாக்க வேண்டும், அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் விரும்பக்கூடிய வகையிலும் திறமைக்கேற்ற வகையிலும் விளையாட்டு பயிற்சி மையத்தை அமைக்க வேண்டும் என்பது. அதேபோல் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று நினைக்கிறார்.
நம்பிக்கை தானே வாழ்க்கை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)