You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவாகரத்து பெற்ற மகளை மேளதாளத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை - ஏன் அப்படி செய்தார்?
- எழுதியவர், ஆனந்த் தத்
- பதவி, பிபிசிக்காக
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசிக்கும் பிரேம் குப்தா, சில நாட்களுக்கு முன்பு திடீரென செய்திகளில் இடம்பிடித்தார்.
செங்கல் சூளை நடத்தி வரும் பிரேமின் படங்கள், காணொளிகள் போன்றவை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாயின. விவாகரத்து பெற்ற மகளை வீட்டிற்கு அவர் வரவேற்றதே இதற்குக் காரணம்.
பிரேம் குப்தாவின் ஒரே மகள் சாக்ஷி குப்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் சில காரணங்களால் திருமண பந்தத்தை தொடர முடியாததால் அதனை முறித்துக் கொள்ள முடிவு செய்தனர்.
இதை சாக்ஷி தன் தந்தையிடம் கூறியபோது, மகளின் முடிவை வரவேற்றது மட்டுமின்றி, மேள தாளத்துடன் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார் பிரேம்.
மகளை மேளதாளத்துடன் வீட்டிற்கு அழைத்துவந்தது ஏன்?
ராஞ்சியில் உள்ள கிஷோர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் பிரேம் குப்தா, சில நாட்களுக்கு முன்பு தனது மகளை மாமியார் வீட்டில் இருந்து அழைத்து வந்துள்ளார். திருமணம் முடிந்து எப்படி மேள தாளத்துடன் சாக்ஷி அவரது மாமியார் வீட்டுக்கு சென்றாரோ அதேபோல் ஆரவாரத்துடன் மகளை தன் வீட்டுக்கு பிரேம் அழைத்து வந்தார். மகளை இத்தகைய வரவேற்புடன் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்பது பிரேமின் முடிவு.
சமூகத்தை மனதில் வைத்து தான் இந்த முடிவை எடுத்ததாக பிரேம் குப்தா பிபிசியிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என் மகளின் திருமணத்தை நடத்தி முடிக்க நிறைய பணம் செலவழித்தோம். ஆனால் அவருக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து தெரியவந்ததும், அவர் மீது எவ்வித தவறும் இல்லை என்பதால் மரியாதையுடன் அவரை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்று நினைத்தேன். இதனால் பிரேம் குப்தாவின் மகள் மீது தவறு இருக்கிறது என்றும் அவரால் திருமண பந்தத்தில் இருக்க முடியவில்லை என்றும் இந்த சமூகத்தால் கூற முடியாது” என்றார்.
பிரேம் தனது முடிவைப் பற்றி பிபிசியிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, சாக்ஷி குப்தாவும் அங்கே இருந்தார்.
இசைக் குழுவுடன் தனது தந்தையை பார்த்த தருணங்களை அவர் பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார்.
“என் அப்பாவின் முகத்தில் சிரிப்பை பார்த்தேன்”
“அன்றைக்கு நவராத்திரியின் முதல் நாள். அன்றே லக்ஷ்மியை வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என்று அப்பா கூறினார். டிரம்ஸ் சத்தம் கேட்கும் போது நான் வீட்டுக்கு செல்வதற்காக என் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன் . ஏதோ கல்யாண ஊர்வலம் போகிறது என்று நினைத்தேன். ஆனால் நான் வெளியே வந்ததும்தான் என் தந்தை, குடும்பத்தினர் வந்திருப்பதை அறிந்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ”
சாக்ஷி மேலும் கூறும்போது, “என் கணவர் வீட்டை விட்டு வெளியேறும் முன் திருமணப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் படங்களைப் பார்த்ததும் மன வேதனை ஏற்பட்டது. கிளம்புவதற்கு முன்பாக அவற்றை கிழித்தெறிந்தேன். வெளியே வந்ததும் அப்பா என் தோளை கைகளால் அணைத்துக் கொண்டு சிரித்தார். என் அப்பா சோகமாக இல்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை அவரது முகத்தை பார்த்து உணர்ந்துகொண்டேன்” என்று குறிப்பிட்டார்.
சாக்ஷி, தன் தந்தை பெண்களை லட்சுமிதேவியாக கருதுவதாகவும், தன்னை மட்டுமல்ல, வீட்டில் உள்ள அனைத்துப் பெண்களையும் மிகவும் நேசிப்பதாகவும் கூறுகிறார்.
“என் தந்தை எடுத்த முடிவு ஒவ்வொரு தந்தையும் தன் மகளுக்காக எடுக்க வேண்டிய முடிவு” என்று அவர் கூறுகிறார்.
“கடந்த காலத்தை மறக்க முடியாது... ”
“அப்பா என்னை அங்கே விடும்போது அழுதுகொண்டே சென்றார், ஆனால், அழைத்துச் செல்வதற்கு சிரித்தபடியே வந்தார். இதைப் பார்த்தபோது விவகாரத்து தொடர்பான எனது சுமை கொஞ்சம் குறைந்துள்ளது” என்கிறார் சாக்ஷி.
“இன்று நான் எங்கு சென்றாலும் பெருமையாக உணர்கிறேன். எனது பெற்றோர் முன்பு போல் எனக்கு ஒரு சாதாரண வாழ்க்கையை தந்திருக்கிறார்கள். திருமண உறவில் என் தவறு எதுவும் இல்லை. கடந்த காலத்தை என்னால் மறக்க முடியாது. ஆனால் அந்த வலி மிக குறைவாகவே இருக்கிறது. அது முடிந்துபோன ஒன்று” என்றும் அவர் நம்மிடம் கூறினார்.
தனது எதிர்கால வாழ்க்கை குறித்த கேள்விக்கு, நிதி ரீதியாக யாரையும் சார்ந்திருக்காமல் சுதந்திரமாக செயல்பட விரும்புவதாக சாக்ஷி கூறுகிறார்.
“நான் பேஷன் டிசைனிங்கில் பட்டப் படிப்பு முடித்துள்ளேன். இப்போது மேற்படிப்பைத் தொடங்கப் போகிறேன். எனக்கு ஆடைகள் மீது ஆர்வம் அதிகம். பெண்களுக்கான துணிகள் போன்றவற்றை விற்கும் கடையை (boutique) திறக்க வேண்டும் என்ற சிறிய கனவு இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
“ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பல பெண்களிடமிருந்து எனக்கு மெசேஜ்கள் வருகின்றன. நான் பல பெண்களுக்கு வழி காட்டியிருக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன்” என்றும் சாக்ஷி கூறுகிறார்.
“இதுபோன்ற விஷயங்களை பெண்கள் தங்கள் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோரும் தங்கள் மகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் பிரேம் குப்தா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)