You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
18 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்தப் ‘பறக்கும் பல்லி’ என்ன சாப்பிட்டது தெரியுமா?
வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்த பறக்கும் ஊர்வனங்கள் எதனை உண்டு உயிர் வாழ்ந்தன என்பது சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ‘டெரோசார்’ எனப்படும் இந்தப் பறக்கும் ஊர்வனங்கள், சிறிய மீன்கள் மற்றும் கணவாய் மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன என்று அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர் ராய் ஸ்மித், புதைபடிவங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த விலங்கினத்தின் வயிற்றுப் பகுதியின் எச்சங்கள், அவற்றின் உணவு முறைகளுக்கு உறுதியான சான்றாக விளங்குகிறது என்கிறார்.
இந்த ஆராய்ச்சியை, ஜெர்மனியில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள மாநில இயற்கை அருங்காட்சியகமும் இணைந்து நடத்தின. இதன் கண்டுபிடிப்புகள் ‘ஜர்னல் ஆஃப் வெர்டிபிரேட் பேலியோண்டாலஜி’ இதழில் வெளியிடப்பட்டது.
‘டெரோசார்’ (‘Pterosaurs’) 18.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம். அதன் இறக்கைகள் 39 அடி அகலம் கொண்டவை.
மீன்கள், கணவாய் மீன்கள்
‘டோரிக்னாதஸ்’ மற்றும் 'கேம்பிலோக்னாத்தாய்டுகள்’ (dorygnathus, campylognathoides) ஆகிய இரண்டு டெரோசர் இனங்களின் புதைபடிவங்களில் வயிற்றுப் பாகம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அவை ஆரம்பகால ஜுராசிக் காலத்தில் வாழ்ந்தவை. மேலும் நவீனகால தென்மேற்கு ஜெர்மனியில் இவற்றின் புதைபடிவங்கள் காணப்பட்டன. டோரிக்னாதஸின் புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்யப்பட்ட ‘டோரிக்னாதஸ்’ புதைபடிவத்தின் மூலம், அது தனது கடைசி உணவாகச் சிறிய மீன்களை சாப்பிட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதே சமயம் கேம்பிலோக்னாத்தாய்டுகள் வரலாற்றுக்கு முந்தைய கணவாய் மீன்களைச் (squid) சாப்பிட்டுள்ளன.
அரிய கண்டுபிடிப்பு
போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்மித் கூறுகையில், "18 கோடி ஆண்டுகள் பழமையான டெரோசார்கள், தங்கள் வயிற்றுப் பகுதிகளில் இருந்த உணவின் எச்சங்களுடன் பாதுகாக்கப்படுவது நம்பமுடியாத அளவிற்கு அரிதானது. மேலும், அவை உண்மையான ஆதரங்களை வழங்குகிறன,” என்றார்.
"இந்தக் கண்டுபிடிப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டப் பண்டைய உயிரினங்கள் எவ்வாறு வாழ்ந்தன, அவை என்ன உண்டன, பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு அவை செழித்து வளர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவற்றைப் பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்குகிறது," என்கிறார்.
புதிய தகவல்கள்
போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாமுவேல் கூப்பர், "வயிற்றுப் பகுதியின் எச்சங்கள் இந்த உயிரினங்கள் எவ்வாறு ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டன என்று எங்களுக்குச் சொல்கின்றன," என்கிறார்.
மேலும், "என்னைப் பொறுத்தவரை, கேம்பிலோக்னாத்தாய்டுகளின் வயிற்றில் கணவாய் மீன்கள் (Squid) இருப்பதற்கான இந்த ஆதாரம் எங்களை ஆச்சர்யப்படுத்தியது,” என்றார்.
"இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் வரை இந்த உயிரினங்கள், ‘டோரிக்னாதஸ்’ போலவே சிறிய மீன்களை உட்கொண்டு வாழ்ந்தன என்று கருதினோம். டோரிக்னாதஸ் வயிற்றுப் பகுதியில் சிறிய மீன் முற்களைக் கண்டோம்,” என்றார்.
"இந்த இரண்டு டெரோசர் இனங்கள் வெவ்வேறு இரையைச் சாப்பிட்டன என்பது அவை வெவ்வேறு உணவுகளில் நிபுணத்துவம் பெற்றவை என்பதைக் காட்டுகிறது. இந்தப் பண்பு டோரிக்னாதஸ் மற்றும் கேம்பிலோக்னாத்தாய்டுகள் ஆகிய இரண்டு இனங்களுக்கிடையில் உணவுக்காக அதிகப் போட்டி இல்லாமல் ஒரே வாழ்விடத்தில் இணைந்து வாழ அனுமதித்துள்ளது," என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)